செவ்வாய், 22 மார்ச், 2011

63rd story அன்பால் வென்ற அரசன்.

அன்பால் வென்ற அரசன்.

ஒரு சிற்றரசன் தனக்குரிய சிறிய நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான். அந்நாட்டு மக்களும் தங்களின் மன்னனின் அன்புள்ளத்தைப் புரிந்து கொண்டு அவனைத தங்களின் தந்தையாகவே எண்ணி வாழ்ந்து வந்தனர்.

சுதர்மன் என்ற அந்த மன்னன் பெயருக்கேற்ப தர்ம சிந்தையும் பிறருக்கு உதவும் நற்பண்பும் பெற்றிருந்தான். இவனது பெருமையைக் கேள்விப் பட்ட சோழநாட்டை ஆண்டு வந்த சோழச் சக்ரவர்த்தியானவர் தனக்கில்லாத பெருமையும் புகழும் ஒரு சிற்றரசனுக்கு இருப்பதா எனப் பொறாமை கொண்டார்.

மனதில் பொறாமை எழுந்த காரணத்தால் சுதர்மனின் நாட்டின் மேல் படைஎடுத்தான். அந்த நாட்டைத் தன் நாட்டுடன் இணைத்துக் கொள்ள விரும்பினான்.

வீரமும் விவேகமும் நிறைந்தவன் சுதர்மன். அவனால் சோழ மன்னனை எதிர்த்துப் போரிட்டு வெற்றி பெற இயலாது எனப் புரிந்து கொண்டவன்.சோழனின் பொறாமையே தன்மீது அவன் படையெடுக்கக் காரணம் என்பதையும் தெரிந்து கொண்டான்.

ஒரு பேரரசனின் சுயநலனுக்காகத் தன் நாட்டு மக்களைத் துன்புறுத்துவதா என சுதர்மன் எண்ணினான். ஆனாலும் மக்களும் மற்ற அரண்மனை அதிகாரிகளும் சோழ மன்னனை எதிர்த்துப் போராடியே தீரவேண்டும் என்று கூறவே சுதர்மனும் படை திரட்டிப் போருக்குப் புறப்பட்டான்.

அவன் நினைத்தது போலவே போரில் தோற்று விடும் நிலை வந்தது. சுதர்மனின் உண்மை ஊழியர்களான மெய்க்காப்பாளர்கள் சுதர்மன் தப்பிப் போக வழி வகுத்துக் கொடுக்க காட்டில் மறைந்து கொண்டான் சுதர்மன். அவனைத் தேடிக்கொண்டு சோழ வீரர்கள் காட்டில் அலைந்து திரிந்தனர்.

சோழ மன்னனால் சுதர்மனைக் கண்டு பிடிக்க முடியவில்லை. சுதர்மனைப் பற்றிய உண்மையை அவன் நாட்டு மக்கள் வெளியிடவே இல்லை.காட்டிலே அலையும் சுதர்மனைப் பிடிக்க ஒரு படையை அனுப்பினான் மன்னன்.சோழவீரர்கள் காடு மேடு எங்கும் தேடினர்.

ஒருநாள் சுதர்மன் ஒரு குகையினுள்ளே படுத்து உறங்கிக் கொண்டிருந்தான்.அந்தக் குகை வாயிலுக்கு வந்த சோழவீரர்கள் உள்ளே எட்டிப்பார்த்தவாறு பேசிக் கொண்டனர்.

"இந்தக் குகைக்குள்ளே மன்னர் இருக்கமாட்டார்."

"எப்படிக் கூறுகிறாய்?"

"வாயிலை மூடிக் கொண்டு ஒரு சிலந்தி வலை பின்னியிருக்கிறதே. மன்னர் உள்ளே சென்றிருந்தால் அந்த வலை அறுந்திருக்குமே?" 

"உண்மைதான். நாம் வேறு இடங்களில் தேடலாம்" வீரர்கள் பேசியபடியே நடந்து சென்றனர்.

வீரர்கள் உரையாடலும் கடந்து செல்லும் ஒலியும் மன்னனின் காதுகளில் விழுந்தது. பெருமூச்சுடன் இறைவனுக்கு நன்றி சொன்னான் சுதர்மன். வெளிப் பக்கம் வந்து தான் மறைந்திருந்த குகை வாயிலில் வலை பின்னி அதில் உறங்கிக்  கொண்டிருந்த சிலந்திக்கும் கரம் குவித்து நன்றி கூறினான்.

சிறிய நாடாக இருந்தாலும் மன்னன் மீது மக்கள் மிகுந்த அன்பு வைத்திருந்த காரணத்தால் தங்கள் மன்னன் பகைவன் கைகளில் பிடிபடாமல் காத்து வருவதை சோழன் அறிந்து கொண்டான். இத்தனை அன்புள்ளம் கொண்டவனா இந்த சுதர்மன்?அவனை அழித்தால்தான் தன் புகழ் ஓங்கும் என எண்ணினான்.

ஒருபக்கம் சோழ வீரர்கள் சுதர்மனைத் தேடிக்கொண்டிருக்க மறுபக்கம் சுதர்மன் காட்டில் மறைந்து வாழ்ந்து வந்தான். ஒருநாள் மழை பெய்து ஓய்ந்த நேரம் மாலை மயங்கி இருட்டு படரும் வேளை. ஒரு குகையின் வாயிலில் அமர்ந்து மீண்டும் படை திரட்டுவது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தான்.

திடீரென்று ஒரு சிங்கம் கர்ஜனை செய்யும் ஒலி மிக அருகில் கேட்டது. திடுக்கிட்டு எழுந்த சுதர்மன் தன் கையில் குறுவாளை ஓங்கிக் கொண்டு மெதுவாக ஒலி வந்த திசையில் நடந்தான்.சற்றுத் தொலைவு நடந்ததும் அங்கு ஒரு பெரிய சிங்கம் அமர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்தான் சுதர்மன்.

மெதுவாக அதன் அருகே சென்று பார்த்தான். அதன் கண்களில் ஏதோ வேதனை தெரிந்தது.சற்று அருகே சென்றான். சிங்கம் வலியில் கர்ஜித்தது.
அதன் அருகே சென்று அமர்ந்து கொண்ட சுதர்மன் அதன் பிடரியைத் தடவிக் கொடுத்தான். தாயின் அரவணைப்பில் இருக்கும் சேயைப் போல் சிங்கம் அமைதியாக அமர்ந்திருந்தது.

அதன் உடல் முழுவதும் தடவிக் கொடுத்தபோது காலில்  பெரிய முள் ஒன்று ஆழமாகத் தைத்திருப்பதைப் பார்த்தான்.அக்காலைத் தன் மடிமீது வைத்துக் கொண்டான். பின்னர் பக்குவமாக அந்த முள்ளைக் காலிலிருந்து பிடுங்கி எடுத்தான். தன் கையிலிருந்த துணியைக் கிழித்து அதன் காலில் ரத்தம் வராமல் கட்டுப் போட்டான்.

இப்போது சிங்கத்தின் வலி நீங்கியது. நன்றியுடன் மன்னனைப் பார்த்துவிட்டுத் தன் வழியே நடந்து சென்று காட்டினுள் மறைந்தது அச் சிங்கம்.சில நாட்களில் மன்னன் சுதர்மன் இந்த நிகழ்ச்சியை மறந்து விட்டான்.அவன் எண்ணமெல்லாம் மீண்டும் படைதிரட்டுவதிலேயே இருந்தது.

ஒருநாள் அதிகாலை.குளிர் அதிகமாக இருக்கும் ஒரு பனி நாள்.ஒரு பாறைமீது நல்ல வெய்யிலில் படுத்திருந்தான் சுதர்மன். சற்றேகண் அயர்ந்தவன்  பெரும் கூச்சல் கேட்டுக் கண்களைத் திறந்து பார்த்தான். அவனைச் சுற்றி சோழவீரர்கள் நின்றிருந்தனர்.பல நாட்களாகக் கிடைக்காத பகை அரசர் கிடைத்துவிட்ட மகிழ்ச்சியில் வீரர்கள் ஆரவாரம் செய்தனர். அவர்கள் சுதர்மனைச் சங்கிலியால் கட்டி இழுத்துச் சென்றனர்.

சிறையில் அடைக்கப்பட்ட சுதர்மன் பல கொடுமைகளுக்கு ஆளானான். மாபெரும் மன்னனான சோழச் சக்கரவர்த்திகளை எதிர்த்துப் போரிட்டமைக்காக பல நாட்கள் சிறையில் அடைக்கப் பட்டிருந்தான்.

மன்னன் சபைகூட்டி மன்னிப்பு வேண்டுமாறு கூறியபோதும் மறுத்து விட்ட சுதர்மனுக்கு மரண தண்டனை விதித்தான் சோழன் .மறுநாள் சிங்கக் கூண்டினுள் தள்ளப் பட்டு சிங்கத்திற்கு இரையாகவேண்டும் எனத் தீர்ப்பு வழங்கப் பட்டது.

பொழுது விடிந்தது.தங்களின் மன்னனின் நிலையைக் கேள்விப்பட்ட மக்கள் துயரத்துடன் கூடினர். சோழமன்னனும் மற்றயோரும் வந்து அமர்ந்தனர். சிங்கம் ஒன்று கூண்டினுள் பசியுடன் அலைந்துகொண்டு கர்ஜனை புரிந்தபடி இருந்தது.

அந்தப் பெரும் பள்ளத்தில் சுதர்மனைத் தள்ளிவிட்டு சிங்கத்தின் கூண்டையும் திறந்து விட்டார்கள் காவலர்கள்.
அனைவரும் கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.வீரசிங்கத்திற்கும்  காட்டு சிங்கத்திற்கும் பெரும் சண்டை தொடங்கப் போகிறது.

 பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சிங்கம் வெல்லுமா?பலநாட்களாகப் பட்டினியாக இருக்கும் சுதர்மன் வெல்வானா? அனைவரின் கண்களும் இமைப்பதை மறந்தன.

கூண்டைத் திறந்து விட்டவுடனேயே சிங்கம் பாய்ந்து வந்தது. சுதர்மனின் இரண்டு கரங்களிலும் தன் முன்னங்கால்களை வைத்து தன் பெரிய வாயைத் திறந்து பெரும் கர்ஜனை செய்தது. அதைக் கேட்ட மக்கள் அனைவரும் நடுநடுங்கினர்.

மன்னன் மாய்ந்தான் என சிலர் கண்களை மூடிக் கொண்டனர். சிலர் அவரவர் இறைவனை வேண்டிக்கொண்டனர்.வேறு சிலர் இந்தக் கொடூரக் காட்சியை ரசிக்கக் காத்திருக்கும் சோழனை வெறுப்போடு பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆனால் நடந்தது என்ன.ஒரு ஆச்சரியம் நடந்தது அங்கே.ஆம்.சீறி வந்த சிங்கம் சிறு நாயக் குட்டிபோல சுதர்மனின் அருகே மண்டியிட்டு அமர்ந்தது. அவனது காலை நக்கிக் கொடுத்தது.அன்போடு அவன் மடியில் தன் தலையைச் சாய்த்துக் கொண்டது.

இக்காட்சியைக் கண்ட மக்கள் பெரும் ஆரவாரம் செய்தனர். சுதர்மர் வாழ்க. அன்புள்ளம் கொண்ட பண்பாளர் வாழ்க.
என்ற மக்களின் குரல் ஓங்கி ஒலித்தது. சோழன் தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து சுதர்மனை  அணைத்துக் கொண்டான்.

"சுதர்மரே! உமது அன்புள்ளத்திற்கு நான் அடிபணிகிறேன். அன்பால் யாரையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இந்த சிங்கத்திடம் நீர் என்ன கூறினீர் என்பதை  மக்கள் அறியக் கூறுங்கள் "என்றார்.

"அரசே! நான் காட்டில் அலையும் போது ஒரு  சிங்கத்தின் காலில் தைத்த முள்ளை நீக்கி அதன் வேதனையை நீக்கினேன். அது இந்தச் சிங்கம்தான். நன்றி மறவாத சிங்கம் என்னையும் நான் செய்த உதவியையும் நினைவில் வைத்துக் கொண்டு என்னிடம் அன்புடன் நடந்து கொண்டது."

"நண்பரே! அன்பால் மனிதரை மட்டுமின்றி விலங்குகளையும் வெல்லலாம் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். இனி நீர் சுதந்திரமாக உமது நாட்டுக்குச் செல்லலாம். நாம் இனி நண்பர்களாக இருப்போம்.
இந்தச் சிங்கம் உமக்கு நான் அளிக்கும் பரிசு." 

சுதர்மன் மகிழ்ச்சியுடன் தன் நாடு திரும்பினான். மக்கள் அவனை அன்பால் வென்ற அரசன் என்று போற்றினர். 
நாமும் அன்பை கைக் கொள்வோம் அன்பால் உலகை வெல்வோம்.
 



ருக்மணி சேஷசாயி 





Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com