திங்கள், 25 ஏப்ரல், 2011

66th story அடியார்க்கு எளியன்.

                                                    அடியார்க்கு எளியன்.

நமது பாரத நாடு தெய்வீகத் திருத் தலங்களைக் கொண்ட நாடு என்பது அனைவரும் அறிந்ததே.வடக்கே ஹரித்வாரும்,தெற்கே பண்டரீபுரமும், மேற்கே த்வாரகையும் கிழக்கே பூரிஜகன்னாதரும் அருள் பாலிக்கும் அற்புத நாடு என்று பெருமை படைத்தது நம் பாரதத் திருநாடு. க்ஷேத்திரங்களாக விளங்கும் இத்திருத் தலங்களுக்கு சிறப்பான  வரலாறு உண்டு.வடக்குப் பகுதியிலுள்ள ஹரித்வாரின் வரலாறு ஒரு கிருஷ்ண பக்தரோடு பின்னிப் பிணைந்தது. அந்த மாயக் கண்ணனின் அன்பையும் அவன் அடியவர்க்கு அருளும் பண்பாளன் என்பதையும் விளக்கும் அற்புதக் கதை நிகழ்ந்த இடமே ஹரித்வார் என்பதை அறியும்போது நமது உடல் சிலிர்க்கிறதல்லவா?

ஹரித்வார் என்று தற்போது வழங்கப்படும் ஊரில் கல்யாண கோஸ்வாமி என்பவர் ஒருவர் வாழ்ந்து வ்ந்தார். அவருக்கு வடமதுரை சென்று கண்ணபெருமானைக் கண்குளிர தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆசை மிக அதிகமாக இருந்தது. ஆனால் சம்சாரபந்தத்தில் உழலும் அவரால் இயலவில்லை. ஒருநாள் எப்படியோ மனைவியிடமும் தன் மக்களிடமும் அனுமதி பெற்று வடமதுரை செல்லப் புறப்பட்டு விட்டார் கோஸ்வாமி.

அவரைப் போலவே வடமதுரை செல்ல விரும்பியஸ்ரீவத்சன் என்ற  ஒரு இளைஞன் அவருடன் சேர்ந்து புறப்பட்டான். மகிழ்ச்சியுடன் இருவரும் பல தலங்களைத் தரிசித்துப பின்  வடமதுரை அடைந்தனர். அங்கே யமுனையில் நீராடி கண்ணனைத் தரிசித்து மகிழ்ந்தனர். இருவரும் சில நாட்கள் அந்தப் புனிதத் தலத்தில் தங்க வேண்டுமென விரும்பினர்.

திடீரென்று கல்யாண கோஸ்வாமி நோய்வாய்ப் பட்டார். குளிர் வெடவெடவென நடுக்க அப்படியே வீழ்ந்துவிட்டார்.அவருடன் வந்திருந்த ஸ்ரீவத்சன் அவரை படுக்கையில் படுக்கவைத்து வைத்தியரையும் அழைத்து வந்து காட்டினான்.அவருக்கு கடுமையான முறைக் காய்ச்சல் என்று அறிந்து முறைப்படி அவருக்கு மருந்தும் ஆகாரமும் தரவேண்டுமென்றும் கவனமாகப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டுச் சென்றார் வைத்தியர்.

கையில் பணமில்லாதபோதும் ஸ்ரீவத்சன் எப்படியோ சமாளித்து இரவு பகல் கண்விழித்து அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தான்.இரண்டு மூன்று மாதங்கள் கழித்தே கோஸ்வாமியின் நோய் நீங்கியது.ஸ்ரீவத்சன் சிறிதும் முகம் கோணாது தனக்கு பணிவிடை செய்து தன்னை ஒரு மகனை விட மேலாகப் பாதுகாத்ததை எண்ணிக் கண்கலங்கி அவனுக்கு நன்றி சொன்னார் கோஸ்வாமி.

ஆயினும் அவருக்கு மனம் திருப்தியாகவில்லை.யாத்திரை வந்த இடத்தில் இத்தனை அன்போடு தன்னைக் கவனித்துக் கொள்ளவில்லையெனில் என் நிலை என்னவாகியிருக்கும்.எனவே என் நன்றியை வாயால் சொன்னால் போதாது என எண்ணியவர் ஸ்ரீவத்சனைப்  பார்த்து
 "அப்பா, நீ செய்த பேருதவிக்கு நான் வாய் வார்த்தையில் நன்றி சொன்னால் போதாது.என் மகளை உனக்கு மணம் செய்து கொடுப்பதன் மூலம் என் நன்றியைக காட்ட எண்ணுகிறேன்" என்றார்.
 ஸ்ரீவத்சன் தடுத்தும் அவர் கேட்கவில்லை. சத்தியம் செய்து" யார் தடுத்தாலும் கேளேன் என்மகளை உனக்கு மணமுடித்தே தீருவேன். இது இந்த வடமதுரையில் குடியிருக்கும் கண்ணபிரான் மீது ஆணை."
என்று கூறி அவனை அழைத்துக் கொண்டு கோவிலுக்கு வ்ந்தார்.

அங்கே இறைவன் மந்தஹாசப் புன்னகையுடன் நின்றிருந்தான். அவன் முன் வணங்கி"ஏ கண்ணா, நீ சத்யஸ்வரூபி.உன்னை  சாட்சியாக வைத்துச் சொல்கிறேன். என்மனைவி மகன் யார் தடுத்தாலும் இந்த பரோபகாரிக்கே என் மகளை மணம் செய்து கொடுப்பேன்.உன் பாதசாட்சியாக இந்த வார்த்தையை மாற்றமாட்டேன். இதற்கேற்ற மன உறுதியைத்  தந்தருள்வாய் கண்ணா." என்று வேண்டிக் கொண்டார்.

பின் இறைவன் முன்னிலையில் ஸ்ரீவத்சனின் கரங்களில் "என்மகள் உனக்குத்தான்" என்று கூறி தாரை வார்த்துக் கொடுத்தார்.கண்ணன் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் இருவரும் ஹரித்வார் நோக்கிப் புறப்பட்டனர்.

பல மாதங்கள் கழித்து ஊர் வந்து சேர்ந்த கோஸ்வாமியிடம் அவரது குடும்பத்திலுள்ளோர் அலட்சியமாக நடந்து கொண்டனர்.அவரது மனைவியும் மகனும் மிகுந்த கோபத்தைக் காட்டினர்.கோஸ்வாமியோ  மிகவும் வருந்தினார். தன்னை அலட்சியம் செய்ததை விடத் தன் உயிர் காத்த ஸ்ரீவத்சனை அவர்கள் அலட்சியம் செய்தது அவரால் பொறுக்க இயலவில்லை.

அவர்களிடம் ஸ்ரீவத்சன் செய்தபேருதவியையும்  தான் இருந்த நிலையையும் எடுத்துக் கூறி அதற்குப் பிரதியாகத் தன் மகளை அவனுக்கு மணமுடிப்பதாக வாக்குக் கொடுத்ததையும் கூறினார். அதைக்கேட்ட அவரது மனைவி வெகுண்டு எழுந்தாள்."முன்பின் தெரியாத தெருவோடு போகிற ஒருவனுக்கு என் மகளைத் தர நான் சம்மதிக்க மாட்டேன்."

கோஸ்வாமியோ "நான் வாக்களித்துவிட்டேன். அது தப்பாதபடி அனைவரும் சம்மதிக்கவேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினார்.ஆனால் அவர் மனைவி காளியானாள். "நீர் என்ன சொன்னாலும் சரி. இந்தப் பையனுக்கு என் மகளைத் தருவதைவிட அவளைக் கிணற்றில் தள்ளி விடுவேன்." எனக் கூச்சலிட்டாள்.

கோஸ்வாமி மிகுந்த மன வருத்தத்துடன் ஸ்ரீவத்சனை அழைத்துக் கொண்டு அரசனிடம் சென்றார்.நடந்தவை அனைத்தையும் மன்னர் பொறுமையுடன் கேட்டார்.பின் அவர்கள் குடும்பவிஷயத்தில் தான் எப்படித் தீர்ப்பளிப்பது என்று சிந்தித்தார .தனக்கு ஆலோசனை சொல்லும் உரிமை மட்டுமே உண்டு என நினைத்தார்.அவர் கோஸ்வாமியைப்  பார்த்து "நீர் தாரை வார்த்துக் கொடுத்ததைப் பார்த்த சாட்சிகள் யாரேனும் உண்டா?" எனக் கேட்டார்.

அப்போது ஸ்ரீவத்சன் "அந்தக் கண்ணபிரான் அன்றி வேறு யாரும் சாட்சியில்லை."என்றான்.

"அப்படியானால் அந்தக் கண்ணனையே சாட்சியாக அழைத்து வா."என்றவுடன் ஸ்ரீவத்சன் அப்படியே செய்வதாகக் கூறி வடமதுரை நோக்கிப் புறப்பட்டான்.

எம்பிரான் ஆலயத்தை அடைந்த ஸ்ரீவத்சன் கண்ணனிடம் மனமுருக வேண்டினான். "தன்னிடம் அன்பு கொண்ட ஒருவர் வாக்குத் தவறலாகாது. கண்ணா,உன்னையே சாட்சியாக வைத்து அவர் தாரை வார்த்துக் கொடுத்தது பொய்யாகிப் போகக் கூடாது.நீயே சாட்சியாகவந்து அவர் வாக்கை நிறைவேற்றித் தரவேண்டும்."என்று கண்களில் நீர் மல்க வேண்டிக்கொண்டான்.பின் அங்கேயே அமர்ந்து தியானம் செய்யலானான்.இரவு வந்தபின்னரும் அவன் இடத்தை விட்டு அசையவில்லை. அர்ச்சகர் கதவைப் பூட்டிக் கொண்டு சென்று விட்டார்.

நடுநிசியில்" ஸ்ரீவத்சா! "என்று அழைக்கும் குரல் அமுதமென காதில் விழ கண் விழித்தான் ஸ்ரீவத்சன். இறைவன் பாதங்களில் பணிந்தான்.கண்ணனின் கண்களில் பரிவும் அன்பும் ஒளி வீசின.

"பெருமானே, தங்கள் அருள் மட்டும் எனக்குப் போதாது. தங்களின் சாட்சியமும் இப்போது வேண்டும்.தாங்களே வந்திருந்து சாட்சி சொன்னால்தான் மன்னர் ஏற்றுக் கொள்வார்." என அழுது கெஞ்சினான்.

பகவான் இளமுறுவல் காட்டினார்."உன் விருப்பப்படியே வருகிறேன். நீ முன்னே செல். உன் பின்னே நான் வருவேன்.எக்காரணத்தைக் கொண்டும் நீ திரும்பிப் பார்க்கலாகாது. அப்படிப் பார்த்து விட்டால் நான் அதன் பின் ஒரு அடி கூட வைக்க மாட்டேன். அங்கேயே நின்று விடுவேன்" என்றார் பெருமான்..

அப்படியே சம்மதித்த ஸ்ரீவத்சன் முன்னே நடக்க கண்ணபிரான் பின்னே நடந்தார்.நடந்துகொண்டிருந்த ஸ்ரீவத்சனின் காதுகளில் பகவானின் வீரக்கழல் ஒலி கேட்டுக் கொண்டே இருந்தது.இருவரும் நடந்து நடந்து ஹரித்வாரை நெருங்கினர். ஆயிற்று. இன்னும் மூன்று காத தூரம் இருக்கையில் கண்ணனின் கழல் ஒலி கேட்காததால் ஸ்ரீவத்சன் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.

பீதாம்பரமும் மயிற்பீலியும் கழுத்தில் வைஜயந்தி மாலையும்  கையில் குழலையும் பிடித்து சர்வாலங்கார பூஷிதனாய் நின்ற கண்ணன் புன்னகை புரிந்தான்."
"வத்ச,உன் வாக்கைத் தவறவிட்டுத்  திரும்பிப் பார்த்துவிட்டாய்.இனி நான் நகர மாட்டேன் மன்னரிடம் சொல்லி அவரையே இங்கு அழைத்துவா" எனக் கூறவே ஸ்ரீவத்சன் தன் தவறை உணர்ந்து பலமுறை மன்னிப்புக் கேட்டான். பின்னர் கண்ணனின் ஆணைப்படி மன்னனை அழைத்து வந்தான்.

ஒரு நாழிகைப் பொழுதுக்குள் ஹரித்வார் நகரமே திரண்டு காட்டுக்குள் பிரவேசித்தது. அங்கே தன்னுடன் உரையாடிவந்த வடமதுரை நாயகனான கண்ணன் அர்ச்சாவதார மூர்த்தியாய் நிற்கக் கண்டான். மன்னரும் தாம் வடமதுரையில் பார்த்த அதே மூர்த்திதான் அது எனக் கண்டு கண்களில் நீர் மல்க இறைவனை வணங்கினார்..தன் அடியவருக்காக சாட்சி சொல்ல வந்த அந்த எளியவனான கண்ணனை உள்ளம் உருகி வேண்டினார்..அங்கேயே ஒரு கோவிலையும் கட்டுவித்தார்  மன்னர்.

இறைவனின் முன்னாலேயே ஸ்ரீவத்சனின் திருமணத்தையும் முடித்துவைத்தார் மன்னர்.கோஸ்வாமியின் பக்தியையும் ஸ்ரீவத்சனின் அன்புள்ளத்தையும் இறைவனின் அடியார்க்கு அருளும் பண்பையும் மக்கள் புகழ்ந்தவாறு இருந்தனர். கடவுளை நம்பினோர் ஒருபோதும் கைவிடப் படார் எனத் தெரிகிறதல்லவா?
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com