வெள்ளி, 18 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் --8

                           ஸ்ரீ ராகவேந்தரரின் பெயருக்கு மட்டுமல்ல அவரது கையிலிருந்து பெற்ற மிருத்திகைக்கும் மகிமை உண்டு என்பதை மற்றொரு சம்பவத்தால் அறியலாம்.ஸ்ரீமடத்தில் சேவை செய்து வந்த ஒரு சிஷ்யருக்கு வெகு நாட்களாகத் திருமணம் ஆகாமல் இருந்தது.காரணம் செல்வம் ஏதும் இல்லாமைதான்.ஒருநாள் ஸ்ரீ ராகவேந்திரர் காவிரியில் ஸ்நானம் செய்யும்போது அவருக்கு சேவை செய்யும் சிஷ்யன் அருகே நின்றிருந்தான்.அவனிடம் கேட்டார்
 "என்னப்பா, என்னிடம் ஏதோ கேட்கவேண்டுமென்று நினைக்கிறாய் இல்லையா?"
"ஆம் சுவாமி"
"கேளேன். தயக்கம் எதற்கு?" என்றபடியே காவிரியின் வண்டல் மண் எடுத்து உடலில் தேய்த்துக் குளித்துக் கொண்டிருந்தார்.
"ஸ்வாமீ , திருமணம் செய்து கொள்ளவேண்டுமென எண்ணியுள்ளேன்."
"அதற்கென்ன?பேஷாகச் செய்து கொள்"
"ஸ்வாமீ ,நான் பீஜாபூர் செல்லவேண்டும். மேலும்......."தயங்கியவனை இடைமறித்தார் ஸ்வாமிகள்.
"விவாகத்திற்குப் பொன்னும் பொருளும் வேண்டும்.அதுதானே ?"
சிஷ்யன் மகிழ்ச்சியுடன் "ஆம் ஸ்வாமி " என்று சொன்னவுடன் ஸ்ரீ ராகவேந்திரர் அவனிடம் "இந்தா இதைப் பிடி.
இதை வைத்து உன் விவாகத்தை முடித்துக் கொண்டு வா. என் ஆசிகள் உனக்கு." என்று கூறியபடியே காவிரியிலிருந்து ஒரு பிடி மண் எடுத்து அவனிடம் கொடுத்தார்.
'பொன்னைக் கேட்டால் மண்ணைக் கொடுக்கிறாரே ' என்று நினைக்காமல் அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டு ஒரு சம்புடத்தில் வைத்து இடுப்பில் வைத்துக் கொண்டான் சிஷ்யன் 
                     
                     ஸ்வாமிகளிடம்  ஆசிபெற்றவன் அன்றே சொந்த ஊரைப் பார்க்கப் புறப்பட்டான்.கால்நடையாகவே கும்பகோணத்தை விட்டுப் புறப்பட்டவன் இரவு வந்ததும் ஓய்வு எடுத்தபின் விடிந்ததும் செல்லலாமென எண்ணி ஒரு வீட்டின் திண்ணையில் படுத்துக் கொண்டான்.நடு இரவில் நல்ல உறக்கத்தில் இருந்தவனை யாரோ எழுப்பவே எழுந்து உட்கார்ந்தான்.அப்போது வீட்டின் உள்ளேயிருந்து குழந்தையின் அழுகுரல் கேட்டது.
தன எதிரே  பெரிய பூதம் ஒன்று நிற்பதைப் பார்த்த  சிஷ்யன்  திடுக்கிட்டான்.
உடனே  ஸ்ரீ ராகவேந்திரரை மனதில் தியானித்துக் கொண்டு தைரியத்தை வரவழைத்துக் கொண்டான்.
ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ என்று ஒரு முறை சொல்லிக் கொண்டான்.பின் அந்த பூதத்தைப் பார்த்து 
"
"ஏய்  பூதமே, யார் நீ? என்னை ஏன் எழுப்பினாய்?" என்றான் 

"ஐயா, நான் ஒரு பிரம்மராக்ஷசன். உங்களை ஒன்றும் செய்யமாட்டேன்.எனக்கு நீங்கள் ஒரு உதவி செய்ய வேண்டும்.அப்படிச் செய்தால் நிறைய பொன் தருகிறேன்."

"நான் உனக்கு உதவி செய்வதா? ஒன்றும் புரியவில்லையே?"

"சொல்கிறேன் ஐயா. இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு படுபாவி.போன ஜென்மத்தில் இவன் என் குழந்தைகளையெல்லாம்  கொன்று விட்டான்.அதனால் இந்த ஜென்மத்தில் இவன் குழந்தைகளை நான் கொன்று வருகிறேன்.ஏழு குழந்தைகளைக் கொன்று விட்டேன். இப்போது பிறந்திருப்பது எட்டாவது குழந்தை.இதை நான் கொல்ல .வேண்டும். ஆனால் உள்ளே செல்லவிடாமல் உங்களிடமிருந்து வரும் ஜ்வாலை  தடுக்கிறது. தயவு செய்து நீங்கள் தள்ளிச் செல்லுங்கள். உங்களுக்கு நிறைய பொன் தருகிறேன்."

"குருகளவரின் ம்ருத்திகையல்லவா என்னிடம் இருப்பது! இதற்கு இத்தனை சக்தியா? என வியந்து மனதில் அவரை வணங்கிக் கொண்டிருந்தவன் முன் ஒரு குடம் நிறைய பொன்னைக் கொண்டு வந்து வைத்தது அந்த பிரம்மராக்ஷஸ்.அவர் நகரமாட்டாரா எனக் காத்துக் கொண்டு நின்றிருந்தது அது.

ம்ருத்திகை தடுக்கிறது என்றால் பிரம்மராக்ஷசம் உள்ளே போகக் கூடாது என்றுதானே பொருள். அத்துடன் எனக்கு இத்தனை பொன்னைக் கொடுத்து உதவிய இதற்கு நானும் ஏதேனும் நன்மை செய்ய வேண்டும் என 
எண்ணியவனாய் ம்ருத்திகையைக் கையில் எடுத்து 'ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய' என்று ஜெபித்தான்.

"சுவாமி, இந்த பிரம்மராக்ஷசத்திற்கு சாப  விமோசனம் அளியுங்கள் " என்று மனதார வேண்டிக்கொண்டு ம்ருத்திகையை அந்த பிரம்மராக்ஷசத்தின் மீது வீசினார்.அவ்வளவுதான். சுடர் ஒன்று தோன்றி அதைச் சுட்டெரித்தது.ஜகஜ்ஜோதியான உருவம் பெற்று நற்கதி அடைந்து மறைந்தது பிரம்மராக்ஷசம். 

                              வீட்டிற்கு வெளியே வரப் பயந்துகொண்டு வீட்டிற்குள்ளேயே முடங்கியிருந்தவர்கள் பிரம்மாண்ட சத்தமும் வெளிச்சமும் வந்ததை அறிந்து ஓடிவந்தனர்.அக்கம்பக்கம் அனைவரும் கூடிவிட்டனர்.நடந்ததை அனைவரும் அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்.மிருத்திகையின் பெருமையை எண்ணி வியந்தனர்.
அந்த வீட்டின் எஜமானன் தன குழந்தை பிழைத்ததை எண்ணி நன்றி தெரிவித்துக் கொண்டதுடன் தன சகோதரியின் மகளை  அவனுக்குத் திருமணமும் செய்து வைத்தார். அந்த சிஷ்யன் மனைவியுடன் கும்பகோணம் வந்து நடந்ததைக் கூறி சுவாமிஜியின் முன் வணங்கி நின்றான்.
ஸ்ரீ ராகவேந்திரரின் மிருத்திகைக்கு இன்றும் பெருமை உண்டு. என்றும் பெருமை உண்டு. 












.
 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

புதன், 16 டிசம்பர், 2015

மந்த்ராலய மகான் -7

               ஸ்ரீ ராகவேந்திரரின் புகழின் மீது அசூயை கொண்ட சிலர் இவரது புகழுக்குக் களங்கம் கற்பிக்க முடிவு செய்தனர்.அதன்படி ஒரு திட்டம் தீட்டினர்.ராகவேந்திரர் வரும் வழியில் ஒரு சிறுவனை இறந்தவன் போல் படுக்கச் சொல்லி போலியாக அழுது கொண்டே அவனைச் சுற்றி அமர்ந்து கொண்டனர்.அவ்வழியே வந்த ராகவேந்திரர் அருகே வந்து "என்னப்பா, ஏன் அழுகிறீர்கள்?என்ன நடந்தது?" என்று கேட்க அவர்களில் ஒருவன்,
"ஐயா ,  சாமி எங்க புள்ள திடீர்னு செத்துப் போனானுங்க. நீங்கதான் அவனை எப்படியாச்சும் காப்பாத்திக் கொடுக்கணுமுங்க." என்று குறும்பாகப் பார்த்துக் கொண்டே கேட்டான்.மற்றவர்களும் ஆமாம்சாமி என்றபடியே நின்றனர்.

               உண்மையான சோகத்துடன் "அப்பா, இந்தச் சிறுவன் இறந்துவிட்டானே. இறந்தவனை நான் எப்படியப்பா  உயிர்ப்பிக்க முடியும்? மனதைத் தேற்றிக்கொள்."என்றார்.அந்த மூடர்கள் "நாங்க எழுப்பறோம். பாக்கறீங்களா?" என்றபடியே, "டேய் எழுந்திரிடா.எழுந்து வாடா."என்றனர். 
           "இத்தனை நாளா செத்தவனை உயிர்ப்பிக்கறதா இவரு நாடகமாடிக்கிட்டிருந்தாரு.இன்னிக்கி முடியாதுன்னு ஒத்துகிட்டாரு."என்று எள்ளி நகையாடினர்.ராகவேந்திரர் புன்னகையுடன் அங்கிருந்து நடக்கத் தொடங்கினார்.இறந்தவனை எழுந்திரு என்று சொல்லி வெகு நேரமாகியும் எழுந்திருக்காததைப் பார்த்தவர்கள் அச்சத்துடன் அவனை நெருங்கித் தொட்டுப் பார்த்தபோதுதான் அவன் உண்மையாகவே இறந்து விட்டதைக் கண்டார்கள்.ராகவேந்திரரைத் தொடர்ந்து ஓடினார்கள். அவர் காலில் விழுந்தார்கள்.
"சாமி, உங்களை சோதிக்க நினச்சது தப்புதாங்க. எங்கள மன்னிச்சுடுங்க சாமி. எங்க புள்ளைய காப்பாத்துங்க சாமி"
காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு மன்றாடினார்.
"அப்பா, அவன் விதி முடிந்து விட்டது.உண்மையிலேயே இறந்துவிட்டான்.மனதை சமாதானப் படுத்திக் கொள்ளுங்கள்."ஆறுதல் கூறியபடியே அங்கிருந்து அகன்றார் ராகவேந்திரர்.இவரது தெய்வாம்சத்தை
நம்பாதவர்களையும் நம்பும்படி செய்து  அவர்களுக்கும் அனுக்ரஹம் செய்தார்.
                  ஒருமுறை தஞ்சை நகரம் பஞ்சத்தால் பீடிக்கப் பட்டிருந்தது.அந்நாட்டில் மழை பொழியாது பயிர்களும் விளையாது மக்கள் அவதிப் பட்டனர். மன்னர் ரகுநாதபூபதி ராகவேந்திரரிடம் நாட்டில் மழை பொழியவேண்டும் என வேண்டிக் கொண்டார்.தாமே நேரில் சென்று ராகவேந்திரரைத் தன நாட்டிற்கு அழைத்து வந்தார்.
                      ராகவேந்திரர் தாம் பட்டமேற்ற அந்த நகரின் வீதிகளில் நடந்து சென்றார் அந்நாட்டில் நிலவியிருந்த பஞ்சத்தைக் கண்டு மனம் கனிந்தார். மன்னரின் தானியக் கிடங்கில் பீஜாக்ஷரத்தை எழுதிவைத்து  யாகங்கள் ஹோமங்கள் நடத்தி அந்நாட்டில் நிலவி வந்த பல ஆண்டுகால பஞ்சத்தைப் போக்கினார். மன்னன் ரகுநாத பூபதி மனம் மகிழ்ந்து நன்றியறிதலோடு ஒரு உயர்ந்த வைரமாலையை அளித்தான்.அதைப் பெற்றுக் கொண்ட ஸ்ரீ ராகவேந்திரர் அதை யாகத் தீயில் இட்டார்.அதைப் பார்த்த மன்னன் திடுக்கிட்டான்.
"எவ்வளவு விலையுயர்ந்த மாலை. இதைத் தீயில் இட்டுவிட்டாரே என்று கலங்கினான்.அவன் அகத்தின் அழகு முகத்தில் தெரிவதைக்  கண்டு புன்னகை புரிந்த ராகவேந்திரர் ,மன்னனை அருகே அழைத்தார்.
"ஹே  ராஜன்! கலங்காதே உன் மாலையை உனக்கு மீண்டும் வரவழைத்துக் கொடுக்கிறேன்"என்றவர் அக்னி பகவானிடம் வேண்ட அந்த ஹோமகுண்டத்திலிருந்து வைரமாலை பிரகாசத்துடன் வெளியே வந்தது.
அதை எடுத்து மன்னனிடம் கொடுத்தார். மன்னனோ அவரது கால்களில் விழுந்தான்."சுவாமி, நான் தானமாகக் கொடுத்ததைத் தாங்கள் என்ன செய்தாலும் அதைப் பற்றி நான் கவலைப் படக் கூடாது.மறந்துவிட வேண்டும்.ஆனால் நான் தவறாக எண்ணிவிட்டேன் என்னை மன்னியுங்கள் என்று அடிபணிந்து வேண்டி நின்றான். அத்துடன் இந்த வைர மாலையைத்  தாங்கள் ஸ்வீகரிக்கவேண்டும் எனவும் வேண்டிக் கொண்டான்.
புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்ட ராகவேந்திரர் இதை என் மூலராமனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியவாறு பெற்றுக் கொண்டார்.

                    இத்தகைய அதிசயங்களை நிகழ்த்தியவர் கல்வி அறிவே சிறிதும் இல்லாதவனுக்கு பெரும் பதவி 
கிட்டும்படி செய்த அதிசயமும் உண்டு.அதை அடுத்து காண்போம்.
                                                                              
                                                                                   (தொடரும்)










 






















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee

பாட்டி சொன்ன கதைகள்

அன்பு நேயர்களே,

சில வருடங்களுக்கு முன்பு இத்தளத்தில் “பாட்டி சொன்ன கதைகள்” (Grandma Tales Tamil) என்ற தலைப்பில் Apple iOS App Storeல் App பற்றி சொல்லி இருந்தேன். இது Haviga (http://www.haviga.com) என்ற நிருவனம் என்னுடைய சிறுவர் கதைகளை, என் குரலில், அழகான சித்திரங்களுடன் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் வெளியிட்டு உள்ளது. இதை இப்பொழுது இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் முதல் கதையை இலவசமாக உங்கள் குழந்தைகளுடன் ரசிக்கலாம். மற்றும் 6 கதைகளை 2 பாகங்களாக சிறிய தொகை கொடுத்து ரசிக்கலாம். 

நீங்களும் இந்த படிக்கேற்றத்தை (App) பதிவிறக்கம் செய்து தங்களின் கருத்தை இங்கும், iOS App Storeல் விமர்சனத்தின் மூலமும் தெரிவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.

"பாட்டி சொன்ன கதைகள்" பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்: http://itunes.apple.com/us/app/grandma-tales-tamil/id556775899?mt=8

நன்றி,
ருக்மணி சேஷசாயி