வியாழன், 18 பிப்ரவரி, 2010

மனக்கோயில்


 பல்லவநாட்டை ராஜசிம்ம பல்லவன் ஆண்டுவந்தான். காஞ்சீபுரம் அவனது தலைநகராக இருந்தது. அந்நகரத்தில் ஒரு பெரும் சிவன்கோயில் கட்ட வேண்டும் என்று மன்னன் விரும்பினான். பெரும் பல்லவ நாட்டு மன்னன் விரும்பினால் நடக்காத காரியமும் உண்டா?உடனே அதற்கான முயற்சியில் இறங்கினான். கோயில் உருவாகத் தொடங்கியது.


அந்தப் பல்லவ நாட்டில் திருநின்றவூர் என்ற ஒரு சிற்றூர் இருந்தது. அந்த ஊரில் பூசலார் என்ற ஒரு துறவி வாழ்ந்து வந்தார். நமச்சிவாயம் என்ற இறைவனின் நாமத்தைத் தம் உயிர் மூச்சாகக் கொண்டிருந்தார். அவரது உள்ளத்திலும் திருநின்றவூரில் ஒரு சிவாலயம் கட்டவேண்டும் எனும் எண்ணம் தோன்றியது.முற்றும் துறந்த துறவிக்கும் உள்ளத்தில் ஆசை தோன்றியது.அதற்கான முயற்சியாகப் பல தனவந்தர்களை நாடினார்.அவருக்குக் கிடைத்ததெல்லாம் பரிகாசம் மட்டுமே. மனம் வருந்தியவாறு இறைவனின் திருப்பெயரை தியானித்தவாறு தமது இருப்பிடத்தில் வந்து அமர்ந்தார்.

நாட்கள் மாதங்கள் கடந்தன. ராஜசிம்மன் தாம் கட்டும் கோயிலின் வளர்ச்சியைக் கண்டு பெருமிதம் கொண்டான். என்னாட்டில் இதுபோன்ற கோயில் இனி யாரும் கட்ட இயலாது என்று கர்வம் கொண்டான்.மிக விரைவிலேயே கோயில் கட்டி முடிக்கப்பட்டது. அன்று மன்னன் ராஜசிம்மன் தன் மந்திரி பிரதானியருடன் கோயில் முடிக்கப்பட்டதைப் பார்வையிட்டான். மந்திரியாருடன் ஆலோசனை செய்து அக்கோயிலின் கும்பாபிஷேகத்திற்கு நல்ல நாள் குறிக்கச் சொல்லி ஆணையிட்டான்.

மன்னரின் ஆணைப்படியே மந்திரியாரும் அரண்மனை சோதிடர்களைக் கேட்டு நல்ல நாள் ஒன்றைக் குறித்துக் கொடுத்தார். மன்னரும் அந்த நாளில் தான் கட்டிய கைலாசநாதர் கோயிலுக்கு கும்பாபிஷேகம்  என்று மக்களுக்கு                                          அறிவித்தார்.அந்த நாளும் வந்தது. எல்லா ஏற்பாடுகளையும் பார்த்து முடித்த மன்னன் அரண்மனை திரும்பினான். பொழுது விடிந்தால் கோயில் கும்பாபிஷேகம் என்று ஊரே கோலாகலமாக இருந்தது.இரவு நேரம் மன்னன் படுத்து உறங்கினான். நள்ளிரவு. மன்னனுக்குக் கனவு. இறைவன் காட்சி கொடுத்தார்.மன்னன் அவரிடம் கேட்டான்.
"இறைவா! நாளை உன் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் வைத்துள்ளேன். கோயிலில் குடிகொண்டு  எம்மையும் இந்நாட்டு மக்களையும் வாழ்த்தியருள வேண்டும்."                                                                                                                                

இறைவன் புன்னகைத்தார்."ராஜசிம்மா! நீ  குறித்துள்ள அதே நாளில் வேறு ஒரு கோயிலுக்கு நான் செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறு ஒரு நாளில் உன் கோயில் கும்பாபிஷேகத்தை வைத்துக் கொள்."

இப்படிக் கூறிவிட்டு இறைவன் மறைந்தார். விழித்தெழுந்த ராஜசிம்மன் உடனே சபை கூட்டினான். தன் நாட்டில் தனக்குத் தெரியாமலேயே ஒரு கோயில் கட்டப் பட்டுள்ளது. அந்தக்கோயில் எங்கே உள்ளது என அறிந்து வரவேண்டும். என்று கூறியபோது அனைவரும் திகைத்தனர்.யாருக்கும் அப்படி ஒரு கோயில் கட்டப்பட்டதாகவேதெரியவில்லை. எனவே மன்னன் தானே புறப்படுவதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டான்.

வெகு தூரம் கடந்தும் எந்தக் கோயிலும் தென்படவில்லை.கடைசியாகத் திருநின்றவூர் என்ற ஊரை அடைந்தான்.

அவ்வூரிலும் கோயில் பற்றி யாருக்கும் தெரிய வில்லை.ஆனால் அவ்வூரில் பூசலார் என்ற ஒரு சிவனடியார் இருப்பதாகவும் அவருக்குக் கோயில் பற்றித் தெரிந்திருக்கலாம் என்றும் கூறவே பூசலாரை நாடி மன்னனும் மற்றவர்களும் சென்றனர். மன்னன் ராஜசிம்மன் அடிகளாரை வணங்கினான்.

கண்களை மூடி அமர்ந்திருந்த பூசலார் "வருக மன்னா! கும்பாபிஷேகம் இனிதே நடந்தது மன்னா.இவ்விழாவிற்கு மக்கள் புடைசூழ மன்னர் வந்துள்ளது குறித்து மிக்க மகிழ்ச்சி.என் இறைவன் தன் நல்லாசிகளை வழங்குவான்."
என்று வரவேற்றதை அறிந்து திகைத்தான் மன்னன்.

தயங்கியவாறே கேட்டான் மன்னன்."சுவாமி தாங்கள் எந்தக் கோயில் கும்பாபிஷேகத்தைப் பற்றிக் கூறுகிறீர்கள் என நான் அறியலாமா?இங்கு எங்கும் கோயில் தென்படவில்லையே?"
பூசலார் புன்னகைத்தார்."மன்னா, மனதுக்குள் கட்டியுள்ள கோயிலை வெளியே எப்படிக் காண இயலும்? ஆம் மன்னா .இது என் மனதுக்குள் தினமும் கொஞ்சமாகக் கட்டிவந்துள்ளேன்.இன்றுதான் கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது.நீயும் வந்துள்ளாய்.ஆனால் உனக்கெப்படித் தெரிந்தது என்பதுதான் அதிசயமாக உள்ளது."

ராஜசிம்மன் இறைவன் அவரது மனக் கோயிலுக்கே  முதலிடம் கொடுத்து வந்துள்ளது புரிந்தது.பூசலாரின் பாதங்களைப் பணிந்தான் மன்னன்.அவனது கர்வமும் மறைந்தது.

இறைவன் தன்  கனவில் தோன்றி தான் கட்டியுள்ள கோயிலின் கும்பாபிஷேகத்தை வேறு ஒரு நாளைக்கு மாற்றச் சொன்னதையும் பூசலாரின் மனக் கோயிலுக்கே தான் செல்ல வேண்டும் எனக் கூறியதையும் கூறினான்.அதனால்தான் அக்கோயிலை தேடி புறப்பட்டதாகவும் கூறினான். அவரது இறை பக்திக்கு முன் அடிபணிவதாகவும் கூறி வணங்கினான் மன்னன். பூசலாரின் மனக் கோயிலைப் பற்றி நாடே வியந்து போற்றியது. அன்றுமுதல் பூசலார் அறுபத்து மூன்று  நாயன்மார்களின் வரிசையில் வைத்துப் போற்றப் படுகிறார்.