திங்கள், 4 மே, 2015

பெரிய தாசர்.

சோழநாட்டின் தலைநகர் தஞ்சையில் ஒரு சிற்றரசன் ஆண்டு வந்தான். அவன் பெயர் மன்னார் நாயுடு.கல்விகேள்விகளில் சிறந்திராவிட்டாலும் தெய்வபக்தி உடையவனாக இருந்தான்.அவ்வூரில் இருந்த அரசாங்க அதிகாரியின் மகன் பெரியசாமி.அவன் சிறந்த அறிவாளியாகவும் தெய்வபக்தி உள்ளவனாகவும் விளங்கினான்.

                         இவன்தந்தை இவனை அரசாங்க வேலையில் அமர்த்த எண்ணினார். ஆனால் பெரியசாமியோ சுதந்திரமாக தொழில் செய்யவே  விரும்பினான். அதனால் அவன் தந்தை தங்களின் குலத் தொழிலாகிய வளையல் வியாபாரத்தை ஆரம்பித்துக் கொடுத்தார்.ஏற்கனவே இறைபக்தியில் மூழ்கியிருந்த பெரியசாமி கடையில் அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபடலானார்.அத்துடன் கடைக்கு வரும் பெண்களுக்கு அவர்களை ஈஸ்வர ஸ்வரூபமாக எண்ணி வளையல் குங்குமம் மஞ்சள் கண்ணாடி என அனைத்து மங்கலப் பொருள்களையும் இலவசமாகவே கொடுத்து அனுப்பினார்.
அதனால் விரைவில் கடையை மூடும்படி ஆயிற்று.உலக இச்சையை விடுத்து எப்போதும் கோயிலே கதியென்று இருக்கத் தொடங்கினார். மக்கள் அவரை பெரியதாசர் என்று அழைக்கத் தொடங்கினர்.
                   ஒருநாள் அவ்வூர் அரசனுக்கு திடீரென ஒரு சந்தேகம் வந்தது."இங்கிருந்து வைகுண்டம் எவ்வளவு தூரம் இருக்கும்?"
இந்த சந்தேகத்தைத் தீர்த்து வைக்கும்படி அரசவைக் கவிஞர்களைக் கேட்டார். அவர்கள் அளித்த பதில் அவருக்குத் திருப்தியாக இல்லை.எனவே கோவிலில் இருக்கும் பெரியதாசரை  அழைத்து வரச் செய்தான் .அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்டான் .
               பெரியதாசர் புன்னகையுடன் பதிலளித்தார்."அரசே ஆதிமூலமே என்று யானை அழைக்க அந்த நாரணன் வரவில்லையா?கோவிந்தா என திரௌபதி அழைக்க அந்தக் கண்ணனின் காதுகளில் அவள் குரல்  விழவில்லையா? அவன் புடவை கொடுத்து அருளவில்லையா. எனவே வைகுண்டம் நமக்குக் கூப்பிடும் தூரத்தில்தான் இருக்கிறது." 
இந்த பதில் அரசனுக்கு மிகவும் திருப்தியளித்தது.அவருக்குப் பொன்னும் பொருளும் தந்து சிவிகையில் ஏற்றி அனுப்பினான் .இதனால் அந்தப் புலவர்களுக்குப் பொறாமை ஏற்பட்டது. அவர்கள் அரசனைத் தூண்டிவிட்டு அவர்மீது பாடல் பாடும்படி கேட்கச் சொன்னார்கள்.மன்னனும் ஆசை காரணமாக பெரியதாசரிடம் தன்மீது பாடல் பாடும்படி கேட்டான் . ஆனால் "இறைவனையன்றி மனிதனைப் பாட இயலாது. நரசிங்கனைப் பாடும் வாயால் நரனைப் பாடமாட்டேன்" என்று மறுக்கவே அரசனுக்குக் கோபம் உண்டாயிற்று.
            பொறாமைக்காரர்களும் அவனுக்குத் தூபம் போட்டார்கள்.அவ்வளவுதான். பெரியதாசர் மீது அரசதண்டனை பாய்ந்தது.வீரர்களின் ஆயுதங்கள் அவர்மீது பாய்ந்தன.ஹிரண்யகசிபு பிரகலாதனுக்குச் செய்த கொடுமையைச் செய்தார்கள் சேவகர்கள். அவரோ ஒரு நிலைப்பட்ட மனதோடு நரசிம்மரையே தியானித்தபடி நின்றார்.ஆயுதங்கள் கூர்மழுங்கின.சூட்டுக்கோலால் சுட அதுவும் குளிர்ந்து போயிற்று. பிறகு நஞ்சினை இட்டார்கள்.நஞ்சே அமுதாகியது.யானையை இடறும்படி ஏவினார்.யானையின்முன் நரசிம்மமாகக் காட்சியளிக்கவே யானை சுருண்டு விழுந்து மாண்டது.
             இன்னும் அரசனது பிடிவாதம் அதிகரித்தது.என்மீது பாடல் பாட ஒப்புக் கொள்ளும்வரை விடாதீர்கள் என்று கூறி  பலவிதத்திலும் துன்புறுத்தக்  கட்டளையிட்டான். பெரியதாசரைக் கல்லிலே கட்டிக் கடலிலே இட்டார்கள். இத்தனைக்கும் இவன் தப்பிவருவது என்றால் இவன் பெரிய மந்திரவாதி.இவனால் உங்கள் ஆட்சிக்குக் கேடு வரும் இவனை அழிப்பதே நாட்டுக்கு நல்லது எனத் தூபம் போடவே கோபத்தின் உச்சியில் இருந்த அரசனுக்கும் அவரை  எப்படியாவது கொல்ல வேண்டும் என்னும் வெறி அதிகமாயிற்று. 
பொறாமைக்காரர்களின் துர்ப்போதனையால் பெரியதாசரைக் கழுவில் ஏற்றும்படி கட்டளையிட்டான் .அப்போதும் எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இறைவனான நரசிங்கப்பெருமானையே சிந்தித்தபடி தெருவில் நடந்தார். அவரைச் சுற்றி சேவகர் சூழ்ந்து நின்று  கழுமரம் நோக்கி அவரை இழுத்துச்  சென்றனர்.ஊர்மக்கள் கண்ணீருடன் பார்த்து நின்றனர்.
          அரசன் பெரியதாசரைக் கொன்றுவிட்ட பெருமிதத்தோடு கொலு வீற்றிருந்தான்.அப்போது 'திசைதிறந்து அண்டங் கீறிச் சிரித்தது செங்கட்சீயம்' என்று ஹிரண்யவதைப் படலத்தில் தோன்றியதுபோல் இடியோசை கேட்டது.மாபெரும் கர்ஜனையோடு அரசன்முன் தோன்றினார் நரசிம்ம மூர்த்தி.பயத்தில் நடுங்கிய அரசன் குப்புற விழுந்தான்.அவன் முதுகில் சுளீர், சுளீர் எனச் சாட்டையடிகள் விழுந்தன."ஐயோ, அப்பா,"  என அலறினான்  அரசன் ."பெரியதாசன் என்ன குற்றம் செய்தான்? சொல், சொல்."எனக் கேட்டு மேலும் மேலும் அடிகள் விழவே அரசன்  துடித்துப் போனான்.. தன தவறு புரிந்தது. 
"சுவாமி என்னை மன்னித்துவிடுங்கள். தெரியாமல் தவறு செய்துவிட்டேன்."
"ஓடு பெரியதாசரிடம் சென்று மன்னிப்புக்கேள்."என்று சாட்டையால் அடித்துவிட்டு மறைந்தார் நரசிம்மமூர்த்தி.
 அரசனின் உடல் நடுங்கியது. அடிபட்ட முதுகு எரிந்தது. ஓடினார் கழுமேட்டை நோக்கி.
அங்கே மக்கள் கண்ணீருடன் ஏதும் விளங்காதபடி நின்றிருந்தனர்.கழுமரம் பிரகாசமாக இருக்க அதன் அருகே பரம சாந்தமான முகத்துடன் 
நின்றிருந்தார் பெரியதாசர். அங்கு ஓடிவந்த அரசன் பெரியதாசரின் கால்களில் விழுந்தான்.தான் செய்த மாபெரும் குற்றங்களை மன்னிக்கும்படி வேண்டினான் தாசரின் பாதங்களைக் கண்ணீரால் கழுவினான். நரசிம்மம் தன்  முன் தோன்றி தன்  குற்றத்தை உணர்த்தியதோடு தண்டனையையும் அளித்ததைக் கூறிக் கதறினான்.
பெரியதாசர் அவனை வாரியெடுத்தார். "அரசே நீர் பாக்யசாலி.எனக்குக் காட்சி தராத நரசிம்ம மூர்த்தி உனக்குக் காட்ச் தந்தாரே. நீரே பாக்யவான் என அரசனைப் பணிந்தார். பின்னர் வெகு காலம் இறைப்பணியில் ஈடுபட்டு பின்னர் இறைவனடியில் சேர்ந்தார். இவரது உறுதியான தளராத பக்தி இறை அடியார்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாகவே திகழ்கிறது.






































ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

ஞாயிறு, 3 மே, 2015

அன்புடன் பாட்டி


                               மீண்டும் வருகிறேன்.

அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்.சில மாதங்களாக என்னால் எழுத இயலாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தற்போது மீண்டும் தொடர்ந்து எழுதத் தொடங்கிவிட்டேன். உங்கள் அனைவரின் ஆதரவும் கருத்துகளும் எனக்கு உற்சாகமூட்டுபவை. தவறாமல் பின்னூட்டமிட்டு என்னை உற்சாகப் படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அன்புப் பாட்டி 
ருக்மணி சேஷசாயி.
--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com