வியாழன், 23 டிசம்பர், 2010

55th story சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.

                          சூடிக் கொடுத்த சுடர்க்கொடி.
ஒன்பதாம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்னும் ஊரில் பெரியாழ்வார் என்று பெயர் பெற்ற பெரியார் ஒருவர்  வாழ்ந்து வந்தார். இளமையில் இவர் பெற்றோர் இவருக்கு விஷ்ணுசித்தர் என்று பெயரிட்டு தக்க வயதில் கல்வி கற்பித்தனர்.

இளம் வயதிலேயே திருமாலிடம் பேரன்பு கொண்ட விஷ்ணு சித்தர் தமக்கென ஒரு இடத்தைத் தேர்ந்தெடுத்து அதில் நல்ல மலர்களையும் துளசியையும் பயிரிட்டு தினமும் மாலை கட்டி அவ்வூரில்  உள்ள திருமாலுக்குச் சார்த்தி வந்தார்.


தினமும் தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதும் அதைப் பராமரிப்பதும் பின் புத்தம் புது மலர்களால் பெருமானுக்கு மாலை
கட்டிக் கொடுப்பதுமாகத் தெய்வத்திற்குப் பெரும் தொண்டாற்றிவந்தார்.

பூமாலைதொடுத்துவந்த விஷ்ணுசித்தர் இறைவனுக்குப் பாமாலையும் பாடிவந்தார். இவர் திருமாலைப் பல்லாண்டு பாடி வாழ்த்தியமையால் 'பெரியாழ்வார்' என்று வைணவர்கள் இவரைக் கூறலானார்கள்.

ஒருநாள் மலர்பறிக்கும்போது துளசிச் செடியருகே ஒரு குழந்தையின் அழுகுரலைக் கேட்டார்.ஓடிச் சென்று பார்த்தபோது அங்கே அழகே உருவான ஒரு பெண்குழந்தையைக் கண்டார்.களிப்பு மிகக் கொண்டார். அன்று ஆடிமாதம் வளர்பிறை சதுர்த்தசி திதி பூரம் நட்சத்திரம்.

அக்குழந்தையைத் தனது மகளாகப் பாவித்து  கோதை எனப் பெயரிட்டு சீரோடும் சிறப்போடும் வளர்த்து வரலானார். கோதைக்கு உணவூட்டும் போதே அந்த ரங்கமன்னாரிடத்தில் பக்தியையும் சேர்த்தே ஊட்டினார் பெரியாழ்வார். அதனால் கோதையும் அந்தக் கண்ணனே தனக்கு மணாளன் என்று எண்ணி அவனையே சதா சர்வ காலமும் எண்ணியும் பாடியும் வந்தாள்..

அரங்கன் மீது கொண்ட பேரன்பினால் சதாசர்வமும் அவனையே  நினைந்து பக்திப் பரவசத்துடன் தொண்டு செய்து வாழ்ந்து வந்தாள் கோதை. பக்தி மேலீட்டினால் நாள்தோறும் விஷ்ணுசித்தர் அரங்கனுக்காகக் கட்டிவைத்திருக்கும் மலர்மாலையை  அவர் அறியாவண்ணம் எடுத்துத் தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்து என் இறைவனுக்கு நான் இணையாக உள்ளேனா எனத் தனக்குள் சிந்திப்பாள்.

அந்த கண்ணனுக்கு இணையாகத் தானும் அணிகலன் அணிந்து தன்னை அழகு படுத்திப் பார்ப்பாள்.பின்னர் தந்தையார் அறியாவண்ணம் மாலையைக் களைந்து முன்போலவே வைத்து விடுவாள்.

இதனை அறியாத பெரியாழ்வாரும் அம்மாலையை இறைவனுக்கு சமர்ப்பித்து வ்ந்தார். மனமகிழ்வுடன் இறைவனும் அம்மாலையை ஏற்றுக்கொண்டார்.

இவ்வாறு பலநாட்கள் கழிந்தன. ஒருநாள்  மாலைகட்டி வைத்துவிட்டு வெளியே சென்றார் பெரியாழ்வார். வழக்கம்போல அம்மாலையை எடுத்துத் தன் கழுத்தில் அணிந்துகொண்ட கோதை கண்ணாடியின்முன் நின்று தன் அழகினைக் கண்டு பெருமானுக்கு  இந்த அழகு ஈடாமோ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருந்தாள்.

அன்று விரைவிலேயே இல்லம் திரும்பிய பெரியாழ்வார் கழுத்தில் மாலையுடன் ஆடியின்முன் நின்று அழகு பார்த்துக் கொண்டிருக்கும் தன் மகள் கோதையைப் பார்த்துத் திடுக்கிட்டார்.

பாசம் மிகுந்த மகளாயினும் பரமனுக்கு உரியதைப் பாழ்படுத்தி விட்டாளே என்று பதைபதைத்தார். மகளைக் கடிந்துகொண்ட
வர் இறைவனுக்குச் செய்யும் பணிக்கு ஊறு நேர்ந்ததே என வருந்தியிருந்தார்.

அன்றிரவு இறைவன் ஆழ்வாரின் கனவில் தோன்றினார்."அன்பினால் நம்மை ஆண்டவளான- கோதை சூடிக்கொடுத்த பூமாலையே நமக்குப் பெருவிருப்பமானது. அத்தகைய  மாலையையே கொணர்க" எனக் கூறி மறைந்தார்.

துயில் நீங்கிய விஷ்ணுசித்தர் தமது மகள் கோதை ஒரு அவதார மங்கை என உணர்ந்து கொண்டார்.அன்பால் ஆண்டவனையே ஆண்டவளானதால்  அவளை ஆண்டாள் எனவும் மலரைச் சூடிப் பின் இறைவனுக்கு அளித்ததால் சூடிக்கொடுத்த நாச்சியார் எனவும் அழைக்கலானார்.

பருவ வயதை அடைந்த கோதை அந்தக் கண்ணனின் பிரிவைத் தாங்க மாட்டாதவளாய் அவனை அடையும் வழியைச் சிந்தித்தாள். ஆயர் குல மங்கையர் போல இறைவனை அடைய பாவைநோன்பு நோற்றாள். இறைவனுக்கு உகந்த மாதமாகிய மார்கழிமாதத்தில்  அதிகாலை  எழுந்து குளிர்ந்த நீரில் நீராடி தன் அன்பை திருப்பாவை, நாச்சியார் திருமொழி என்னும் பாடல் மூலமாக வெளிப்படுத்தி மகிழ்ந்திருந்தாள்.

தன் மகளுக்கு மணமுடிக்கும் விதமாக விஷ்ணுசித்தர் ஆண்டாளுக்கேற்ற மணமகனைத் தேடலானார்.ஆனால் ஆண்டாளோ நான் அந்த திருமாலுக்கே உரியவள்.மானிடர் யாரையும் மணந்து வாழமாட்டேன் என்று உரைத்துவிட்டாள்.

பின்னர் அந்தத் திருமாலின் பெருமைகளைப் பற்றிக் கூறும்படி கேட்க தந்தையாராகிய பெரியாழ்வாரும் இறையனாரின் பெருமைகளை விவரித்துக் கூறினார்.தந்தையார் கூறுவதைக் கேட்கக் கேட்க ஆண்டாள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தாள்.அவற்றில் அரங்கநாதனின் பெருமையைக் கேட்டு அவருக்கே தான் மனையாளாக ஆகவேண்டும் என்னும் பெரு விருப்புக் கொண்டாள்.


நாளாக நாளாக திருவரங்கன் இவளை மணமுடிக்கக் கூடுமோ?இது நடக்கும் செயலோ? என மிகவும் கவலை கொண்டார் பெரியாழ்வார்.

அன்றிரவு  அரங்கன் அவரது கனவில் தோன்றி " ஆண்டாளை கோவிலுக்கு அழைத்து வாரும் யாம் அவளை ஏற்போம்" எனக்கூறி மறைந்தார்.

அதேபோல் அந்நாட்டு மன்னனான பாண்டியனின் கனவிலும் தோன்றி "நீ பரிவாரங்களுடன் ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்று பெரியாழ்வார் மகளான கோதையை திருவரங்கத்திற்கு அழைத்து வருவாயாக.அவளை முத்துப் பல்லக்கில் ஏற்றி பரிவாரங்களுடன் அழைத்து  வருவாயாக." எனவும் கூறினார்.

அதே சமயம் கோதை நாச்சியாரும் "மைத்துனன் நம்பி மதுசூதன் வந்தென்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழி நான்"எனத் தான் கண்ட கனவினை பத்துப் பாடல்களில் பாடி அந்த அரங்கனின் அழைப்புக்காகக் காத்திருந்தாள்.

இறைவன் கட்டளைப் படி மன்னனும் மற்றையோரும் ஸ்ரீவில்லிப்புத்தூருக்கும் திருவரங்கத்துக்கும் இடையிலுள்ள பாதையை முத்துப் பந்தர் அமைத்து அழகு படுத்தி  பெரியாழ்வாரின் இல்லம் சென்று வணங்கி ஆண்டவனின் கட்டளையை எடுத்து இயம்பினர்.

ஆண்டாளை ஏற்றிக்கொண்டு முத்துப் பல்லக்கு புறப்பட்டது வழிநெடுகிலும் மக்கள் "ஆண்டாள் வந்தாள். சூடிக் கொடுத்த சுடர்க்கொடி வந்தாள்" என முழங்கினர்.

திருவரங்கம் கோயிலுக்குள் நுழைந்த கோதை இறைவனை கண்ணாரக் கண்டு மெய் சிலிர்த்தாள்.அந்த  அழகும் அன்பும்  ஈர்க்க கோதை சிலம்பு ஒலிக்க பாம்பணைமேல் பள்ளி கொண்ட பெருமானிடம் ஓடினாள். அப்படியே மறைந்தாள். ஆண்டாள் இறைவனால் ஆட்கொள்ளப் பட்டாள்.

அரங்கன் அர்ச்சகர் மூலமாக "பெரியாழ்வாரே நீர் எனக்கு மாமனாராகிவிட்டீர். ஸ்ரீவில்லிப்புத்தூருக்கே சென்று அங்கே உமது தொண்டினைச் செய்து கொண்டிரும்" எனக் கூறி வழியனுப்பி வைத்தார்.

மார்கழியில் பாவைநோன்பிருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்கு ஆண்டாளின் வரலாறு இன்றும் சான்றாக நிற்கிறது.இன்றும்  மார்கழி மாதத்தின் சிறப்பை அவளது   முப்பது திருப்பாவைப் பாடல்கள் இயம்பி
நிற்கின்றன.
















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com