சனி, 5 ஜூன், 2010

33rd story. kannappanaana thinnappan.

கண்ணப்பனான திண்ணப்பன்.
குடுமியாமலை என்று ஒரு மலை இருந்தது. அந்த மலையில் அடர்ந்த காடுகளும் அந்தக் காட்டில் மிகுந்த மிருகங்களும் இருந்தன. அந்த மிருகங்களை வேட்டையாடியபடி வாழ்ந்து வந்த வேடுவர் கூட்டமும் இருந்தது. அந்த வேடுவர் கூட்டத்துக்கு ஒரு தலைவனும் இருந்தான்.அந்த வேடுவர் தலைவனுக்கு பல ஆண்டுகள் குழந்தை இல்லாதிருந்தது. அவன் இறைவனை வேண்டி ஒரு மகனைப்பெற்றான்
அந்தக் குழந்தை பிறந்தபோது மிகுந்த பலசாலியாக திண்ணென்று இருந்ததால் குழந்தைக்கு திண்ணன் என்று பெயர் சூட்டினான் வேடர் தலைவன். திண்ணன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான்.வாலிப வயதை அடைந்தான். வேட்டையாடும் திறமையை வளர்த்துக் கொண்டிருந்தான். வில் வித்தை வாள்வித்தை ஆகியவற்றை நன்கு கற்றுத் தேர்ந்தான். தன் நண்பர்களுடன் தனியே சென்று வேட்டையாடும் திறமை பெற்றான்.
அவன் தந்தை தன் மகனை நண்பர்களுடன் தனியே வேட்டையாட அனுப்பத் தொடங்கினான்.
திண்ணனும் மகிழ்ச்சியுடன் தன் நண்பர்கள் புடைசூழ் வேட்டைக்குச் செல்லத் தொடங்கினான்.
                  வழக்கம்போல் அன்றும் திண்ணன் வேட்டைக்குப் புறப்பட்டான்.அன்று எந்த விலங்கும் அவன் கண்ணில் படவில்லை. காட்டுக்குள் வெகு தூரம் சென்று விட்டான். அவன் நண்பர்களும் வேறு வேறு திசையில் சென்று விட்டதால் திண்ணன் தனிமையில் விடப்பட்டான். ஆனாலும் ஒரு விலங்கையாவது வேட்டையாடியே தீருவது என்ற எண்ணத்தில் அலைந்தபடியே மலையின் உச்சிவரை சென்று விட்டான் திண்ணன்.
அந்த உச்சியில் ஒரு இடத்தில் சிவ லிங்கம் ஒன்று இருப்பதைக் கண்டான்.அவனது உள்ளத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அந்த சிவலிங்கத்தின் மீது மாறாத அன்பு மேலிட்டது.அதைக் கட்டித்தழுவினான். ஆடினான் பாடினான். 
 "ஐய்யா,, இங்கு தனியாக இருக்கிறாயா? உனக்கு உணவு கொடுப்பவர் யார்,உனக்குத் துணையாக இருப்பவர் யார், இனி அஞ்சாதே நான் இருக்கிறேன்.உன்னை விட்டுப் பிரியேன்." எனப் பலவாறு பேசியவன் இறைவனுக்குப் பசிக்குமே உணவு வேண்டுமே என எண்ணிக் காட்டினுள் ஓடினான்.
 திண்ணன் காட்டினுள் ஓடி வேட்டையாடிக் கொண்டிருக்கும் போது குடுமியாமலையின் மறுபுறத்திலிருந்து ஒரு அந்தணர் வந்து இறைவனைப் பூஜித்துவிட்டுச் சென்றார்.சற்று நேரம் கழித்து நமது திண்ணன் அவ்விடம் வந்தான்.
அவன் வரும்போதே இறைவனின் அபிஷேகத்திற்காக நீரை வாயில் நிரப்பிக் கொண்டு வந்து அதை சிவ லிங்கத்தின் தலையில் உமிழ்ந்தான்.தலையில் அந்தணர் வைத்துச் சென்ற மலர்களைத் தன் செருப்புக் கால்களால் தள்ளிவிட்டான்.தன் கையில் வைத்திருந்த மாமிசத்தை இறைவன் முன் வைத்தான்.தன் தலையில் சூட்டிவந்த மலர்களை இறைவனுக்கு வைத்தான்.அவன் முன் அமர்ந்து உண்ணுமாறு வேண்டினான்.
"அய்யா, இது இளம் பன்றியின் மாமிசம் மிகவும் சுவையாக இருக்கும். நானே சாப்பிட்டுப் பார்த்துக் கொண்டுவந்தேன். சாப்பிடு சாமி."என்று கெஞ்சிக்கொண்டே இருந்தான். 
மறுநாள் விடிந்தது. மீண்டும் திண்ணன் வேட்டைக்குக் கிளம்பினான்.அதே நேரம் அந்தணர் அங்கு வந்தார்.அந்த இடத்தில் இறைச்சி இறைந்து கிடப்பதைப் பார்த்து மிகுந்த அருவருப்பும் வருத்தமும் அடைந்தார். இறைவா, இது என்ன சோதனை. யார் இப்படிச் செய்வது. என்று புலம்பியவாறு அந்த இடத்தைச் சுத்தம் செய்துவிட்டுப் பின் பூஜையை முடித்து விட்டுப் போய்விட்டார். அவர் போனபின்னர் திண்ணன் வாயில் நீருடனும் கையில் ருசிபார்த்து எடுத்துவைத்த எச்சில் மாமிசத்துடனும் தலையில் காட்டுப் புஷ்பங்களுடனும் அங்கு வந்து சேர்ந்தான்.
வழக்கம்போல் செருப்பணிந்த காலால்  லிங்கத்தின் மேலிருந்த புஷ்பங்களைத் தள்ளிவிட்டுத் தன் வாயிலிருந்த நீரை உமிழ்ந்தான். தன் தலையிலிருந்த காட்டுப் புஷ்பங்களைச சூட்டி மாமிசத்தையும் படைத்தான்.
"குடுமிச் சாமி ரெண்டு நாளா பட்டினியாக இருக்கிறாயே உனக்குப் பசிக்கலையா, உனக்கு என்ன மாமிசம் வேண்டுமோ கேள் கொண்டுவந்து தருகிறேன். பட்டினியாக இராதே" என்று வேண்டினான். இப்படியே திண்ணன் பூஜிப்பதும் பிறகு அந்தணர் வருவதுமாக நான்கு நாட்கள் ஓடிவிட்டன. அன்று அந்தணர் மனம் வருந்தி இறைவனிடம் வேண்டிக்கொண்டார். இந்த பொல்லாச் செயலைச் செய்பவரைத் தண்டித்தல் ஆகாதா.என்று.
அன்று இரவு கனவில் அந்தணரிடம் "நீ பூஜையை முடித்து விட்டு அங்கேயே இரு. என்ன நடக்கிறது என்று பார்."என்று கூறி மறைந்தார்.
அதே போல் திண்ணன் வேட்டைக்குச் சென்ற பின் அந்தணர் வந்து அந்த இடத்தைச் சுத்தம்  செய்து தன் பூஜையை முடித்தார்.பின்னர் இறைவன் கூறியது போல மறைந்திருந்தார். 
வழக்கம்போல திண்ணன் வந்தான் அவன் செய்யும் பூஜையைச் செய்தான்.அவனைச் சோதிக்கும் பொருட்டு சிவ லிங்கத்தின் ஒரு கண்ணிலிருந்து ரத்தம் பெருக்கெடுத்தது. திண்ணன் தவித்தான் பச்சிலைகளைப் பறித்துவந்து கண்ணில் தடவினான்.என்ன செய்தும் உதிரம் வடிவது நிற்கவில்லை.திண்ணன் சிந்தித்தான்.என்ன
செய்து இந்த உதிரத்தை நிறுத்துவது. ஊனுக்கு ஊனே சரி என முடிவு செய்தான்.தன் கண்ணைத் தோண்டி சிவனுக்கு  வைத்தான்.உதிரம் நின்றது. மகிழ்ச்சியில் ஆடினான் திண்ணன்..
திடீரென அடுத்த கண்ணில் இருந்தும் உதிரம் வரவே திண்ணன் சற்றும் கலங்கவில்லை.அடையாளமாகத் தன் காலை இறைவன் கண்ணில் வைத்துக் கொண்டு மற்றொரு கண்ணையும் பிடுங்கப் போனான்.அப்போது இறைவனின் கை கண்ணப்பனின் கையைப் பிடித்து நிறுத்தியது. சிவலிங்கத்தின்  உள்ளிருந்து ஒரு கை வெளிவந்து கண்ணப்பனைப் பற்றி நிறுத்தியது."கண்ணப்ப,நில். உனது பக்தியை உலகுக்குத் தெரிவிக்கவே இந்த நாடகம் ஆடினோம்" எனக் கூறி மறைவிலிருந்த அந்தணருக்கும் காட்சி கொடுத்தார் சிவபெருமான்.."கண் கொடுத்த நீ இன்று முதல் கண்ணப்பன் எனப் படுவாய். அத்துடன் எனது அடியார்கள் வரிசையில் நீயும் வைத்து வணங்கப்பெருவாய் " என ஆசி கூறி மறைந்தார் இறைவன்.அன்று முதல் அறுபத்துமுன்று நாயன்மார்களுள் ஒருவராக கண்ணப்ப நாயனாரும் வைத்து வணங்கப் பெறுகிறார்.
கண் தானம் கொடுப்பதை எந்தக் காலத்திலோ நம் முன்னோர் எடுத்துக் காட்டியுள்ளனர் என்பதைக் கண்ணப்ப நாயனார் வாழ்க்கை வரலாற்றின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம் அல்லவா.