செவ்வாய், 30 அக்டோபர், 2018

மானும் காகமும்

              ஒரு காட்டில் ஒரு மானும் காகமும் நண்பர்களாய் வசித்து வந்தன.அந்த மானைத் தின்ன ஒரு நரி விரும்பியது.
அதனால் நரி மானிடம் தந்திரமாக,"நான் உன் நண்பனாக இருக்க விரும்புகிறேன்.உனக்கு உதவி செய்துகொண்டு உன்னுடன் இருக்கிறேன் "என்றது.மானும் நரியின் வார்த்தையை நம்பி அதை நண்பனாக ஏற்றுக் கொண்டது.
              தினமும் ஒரு மரத்தடியில் நண்பர்கள் கூடுவது வழக்கம்.அப்போது காகம் சேரக்கூடாத நரியுடன் நட்பு வேண்டாம் என்றது. அதை மான் ஏற்கவில்லை.ஒருநாள் நரி  "உனக்கு நிறைய புல்  இருக்கும் இடத்தைக் காட்டுகிறேன் வா."என்று வயல்வெளிக்கு அழைத்துச் சென்றது.அங்கு நிறைய பயிர் விளைந்திருப்பதைப் பார்த்த மான் தினமும் அதைப் புசித்து வந்தது.பயிர் குறைந்து வருவதை அதன் சொந்தக்காரன் கவனித்தான்.மறுநாள் ஒரு வலையை அங்கு விரித்து வைத்தான்.வழக்கம்போல அங்கு மேய வந்த மான் வலையில் மாட்டிக் கொண்டது.ஒளிந்திருந்த    நரிக்குக் கொண்டாட்டம். இரவு அந்த மானைத் தின்னலாம் என்று காத்திருந்தது.மான் பயந்து நடுங்கியபடி அந்த வலைக்குள் அமர்ந்திருந்தது.
              நண்பனான மானைக் காணாமல் காகம் தேடிக் கொண்டே வந்தது.வயலில் வலைக்குள் மான் அகப்பட்டிருப்பதைப் பார்த்தது.
"நண்பா, பயப்படாதே. நான் உன்னைக் காப்பாற்றுகிறேன்.நான் சொல்வது போல் செய்.நீ செத்தது போல  கிட.நான் உன் கண்ணைக்  கொத்துவது போல நடிக்கிறேன் காவலாளி வலையை எடுத்துவிடுவான். நான் குரல் கொடுத்ததும் எழுந்து ஓடிவிடு."என்றது. மானும் அதேபோல செத்தது போலக்  கிடந்தது.
            சற்று நேரத்தில் தோட்டக்காரனும் வந்தான்.மான் செத்துக் கிடப்பதைப் பார்த்தான். ஹய்யோ செத்துவிட்டதே எனது தனக்குள் பேசியவன் வலையைச் சுருட்டி மரத்தடியில் வைத்துவிட்டு மானை எடுக்க வந்தான்.அதே சமயம் காகம் கா,...கா,,எனக் குரல் எழுப்பியதும் மான் ஒரே ஓட்டமாக ஓடி மறைந்தது.தோட்டக்காரன் ஏமாந்து விட்ட கோபத்தில் கையிலிருந்த கம்பை ஓங்கி வீசினான்.
அந்தக் கொம்பு மறைந்திருந்த நரியின் தலையில் படீரென்று விழுந்தது.நரியும் செத்து விழுந்தது.
காகமும் மானும் மகிழ்ச்சியுடன்  மரத்தடியில் சந்தித்தன..
அப்போது காகம்" சேரக்கூடாதவருடன் சேரக்கூடாது என்று இப்போதாவது புரிந்ததா "என்றது.மானும்,
      மானும், " நன்றாகக் புரிந்தது. என் உயிரைக் காப்பாற்றிய உனக்கு மிகவும் நன்றி."என்று மகிழச்சியுடன் கூறியது.
--------------------------------------------------------------------------------------------------------------







ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com