மஹாகவி சுப்பிரமணிய பாரதியார் நமது நாட்டுக்குக் கிடைத்த பெரும் செல்வம் ஆவார். அந்த மஹாகவி சொல்வது போலவே வாழ்ந்து காட்டியவர்.
இவர் தன்னை அழகு படுத்திக் கொள்வதில் பெரும் விருப்பம் உடையவர். காசியில் வாழ்ந்து வந்தபோது வடநாட்டவர்போல் உடையையும் உருவத்தையும் மாற்றிக் கொண்டு கம்பீரமாகத் திகழ்ந்தார். "ஜாதி மதங்களைப் பாரோம்" என்று பாடியபடியே இவர் எல்லாஜாதியாருடனும் கை கோர்த்து நடப்பார். இவரது முறுக்கிய மீசையையும் முண்டாசுக் கட்டையும் இவரது அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன் வெறுத்தார்.வைதீக ஆசாரத்தில் ஊறிய பலருக்கும் இது பிடிக்கவில்லை.ஆனாலும் அதை வெளியில் சொல்லாமல் இருந்தனர். பாரதியும் அதிகம் அவர் கண்ணில் படாமலே இருந்தார்.
அந்தணர் பந்தியில் அமர்ந்து சாப்பிடுவதையும் அவரது அத்தையின் கணவர் விரும்பவில்லை.பாரதியிடம் கடுமையாகக கூறினார்."நீ என்றைக்கு உன் கிராப்பையும் மீசையையும் எடுத்துவிட்டு குடுமி வைத்துக் கொண்டு வருகிறாயோ அன்றுதான் எங்களுடன் பந்தியில் அமர்ந்து சாப்பிடலாம்" என்று கூறிவிட்டார்.
இதைக் கேட்டு அத்தை மிகவும் வருத்தப் பட்டார். ஆனால் பாரதி சற்றும் வருந்தவில்லை.நாட்கள் ஓடின. அவ்வூரில் ஒரு சிவமடம் இருந்தது. அங்குள்ள கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் திருவாதிரை உற்சவம் சிறப்பாகக் கொண்டாடப் படும். அதேபோல் அந்த ஆண்டும் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப் பட்டிருந்தது.அந்தக் கோயிலுக்கு பாரதியின் அத்தையின் கணவர் கிருஷ்ணசிவன் தான் தலைவர். திருவாதிரைத திருநாள் அன்று ஏராளமான பக்தர்கள் கூடியிருந்தார்கள்.பூஜை எல்லாம் முடிந்தது. தீபாராதனை நேரம் வந்தது. மார்கழிமாதம் திருவாதிரை நாளன்று திருவெம்பாவை பாடாமல் தீபாராதனை எப்படிச் செய்வது. அன்று பார்த்து ஓதுவார் வரவில்லை . அவர் வேறு காரியமாகச் சென்று விட்டார். தலைவராக இருப்பதனால் பொறுப்பு அதிகம் அல்லவா. தீபாராதனை செய்ய இயலாமல் தவித்தார்.
யாருக்கும் மனப் பாடமாக திருவெம்பாவை சொல்ல வராது. அனைவரும் கச முசவென்று பேசிக்கொண்டு நின்றிருந்தனர்.
அவ்விடத்தில் உற்சவத்தின்போது பெண்கள் வந்து பாடுவதும் முறையல்ல.எனவே பதை பதைத்து நின்றிருந்தார்.
அப்போது பாரதியின் அத்தை பாரதிக்குக் கிராப்புத்தலை மறைய முண்டாசு கட்டி நெற்றியில் விபூதிப் பட்டையிட்டு ருத்திராக்ஷ மாலை ஒன்றை கழுத்தில் அணிவித்து மெதுவாக அங்கே அவரை அழைத்து வந்தார். மறைவான இடத்தில் நின்றபடி மெதுவாக "நம்ம சுப்பையா இல்லையா. நன்னா ச்பஷ்டமாப பாடுவானே." என்றார். தலைவரான
கிருஷ்ணசிவன் பாரதி பாடுவதற்கு வேறு வழியில்லாமல் சம்மதித்தார்.
திருவெம்பாவை பாடல் அனைத்தையும் மிகத் திருத்தமாகவும் இனிமையாகவும் பாரதி பாடி முடித்தார்.அதன்பின் முறைப்படி தீபாராதனை முடிந்தது.
திடீரென பாரதி மிகக் கம்பீரமான குரலில் பக்திப் பெருக்கோடு "பார்க்கப் பார்க்கத் திகட்டுமோ உந்தன் பாத தரிசனம் "
என்ற நந்தனார் சரித்திரக் கீர்த்தனை ஒன்றை உள்ளம் உருகப் பாடினார்.கேட்டிருந்த அத்துணை பெரும் உள்ளம் நெகிழ்ந்து பரவசமானார்கள்.
அங்கு கூடியிருந்த அந்தணர்கள் அனைவரும் பாரதியின் உள்ளார்ந்த பக்தியையும் ஞானத்தையும் அறிந்து கொண்டனர்.அவரது பக்திக்குத் தலைவணங்கினர். கிருஷ்ணசிவன் பாரதியைத் தழுவிக் கொண்டார். சிறுவயதிலேயே மிகுந்த ஞானத்துடன் விளங்கியபாரதியின் பக்தியையும் இப்போது உணர்ந்து கொண்டார்.
"பாரதி, குடுமியும் பூணூலும் எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்குத்தான் தேவை. நீ மகா ஞானி. உன்னைப் போன்ற மனம் படைத்தவருக்கு இந்த வேஷங்கள் தேவையில்லைஅப்பா." என்று உள்ளம் உருகிக் கூறினார் பாரதியைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசிவன். மீண்டும் பாரதி பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் என்று சொல்லவும் வேண்டுமா?
"பாரதி, குடுமியும் பூணூலும் எங்களைப் போன்ற சாதாரண மனிதருக்குத்தான் தேவை. நீ மகா ஞானி. உன்னைப் போன்ற மனம் படைத்தவருக்கு இந்த வேஷங்கள் தேவையில்லைஅப்பா." என்று உள்ளம் உருகிக் கூறினார் பாரதியைப் புரிந்து கொண்ட கிருஷ்ணசிவன். மீண்டும் பாரதி பந்தியில் அமர்ந்து சாப்பிடத் தொடங்கினார் என்று சொல்லவும் வேண்டுமா?
தெய்வத்தையும் தேசத்தையும் இரண்டு கண்களாகப் பார்த்தவர் பாரதி. தெய்வம் உண்டென்று தானறிதல் வேண்டும்
என்றும், தெய்வம் நமக்குத் துணை என்றும்,பாடிய பாரதியின் பக்தியின் பெருமையை அளவிட முடியாது.
செப்டம்பர் 11 ம் நாள் புகழுடம்பு எய்திய பாரதியாரை நம்மால் மறக்க இயலுமோ?