திங்கள், 6 மே, 2019

.paatti sonna kadhaigal. kettikkaarak kurangu.

                       15.கெட்டிக்காரக் குரங்கு.
                      ஒரு பெரிய காடு இருந்தது.அந்தக்காட்டில் நிறைய்ய பெரிய பெரிய மரங்கள் இருந்தன.அந்தக் காட்டின் நடுவே ஒரு பெரிய ஆறு ஓடிக்கொண்டிருந்தது.அந்த ஆறு ஆழமானது. நிறைய மீன்கள்  வசித்து வந்தன.அந்த ஆற்றில் பெரிய முதலைகளும் வாழ்ந்து வந்தன.
                     அந்தப் பெரிய ஆற்றின் கரையில் ஒரு பெரிய நாவல் மரம் இருந்தது. மரம் நிறைய கிளைகளுடன் பறந்து விரிந்திருந்தது.அந்த மரத்தில் கொத்துக் கொத்தாய்  பழங்களும் பழுத்திருந்தன.மரத்தின் கிளைகளில் நிறையாக குரங்குகளும் மகிழ்ச்சியாக ஆடிக் களித்தபடி வாழ்ந்துவந்தன.
                  அந்த மரத்தில் இருந்த ஒரு குரங்கிற்கும் ஆற்றில் வாழ்ந்து வந்த ஒரு முதலைக்கும்  நட்பு ஏற்பட்டது.  தினமும் முதலை ஆற்றின் கரைக்கருகில் வந்து நிற்கும் குரங்கு நிறைய நாவல் பழங்களை  முதலைக் காக   போடும் முதலையும் அதைத் தின்று விட்டு குரங்குடன் பேசிவிட்டுச் செல்லும் 
                   ஒருநாள் மழைக்காலம் மழைபெயது ஆற்றில் வெள்ளம்போல் நீர் ஓடிக் கொண்டிருந்தது.நாவல் மரத்தில் பழங்கள் பழுத்துக் குலுங்கின.நிறைய பழங்களை  குரங்கு  தன நண்பனுக்காகப் பறித்துக் கொடுத்தது.அந்த முதலை தான் தின்றது போக மீதிப் பழங்களைத் தன மனைவிமுதலைக்காகக் கொண்டு சென்றது.
                    இரண்டு நாட்களாகத் தினமும் முதலை தன்மனைவிக்கும் நாவல் பழங்களைக் கொண்டு சென்றது.அன்றும் வழக்கம்போல் கரையில் வந்து நின்றது 
அதை வரவேற்ற குரங்கு பழங்களை பறித்துப் போட்டது அவற்றை எடுத்துக் கொண்ட முதலை நண்பனைப் பார்த்து,
" நண்பா, தினமும் இனிய கனிகளைத் தரும் உனக்கு விருந்து வைக்க ஆசைப் படுகிறாள் என் மனைவி.உன்னை என்னுடன் அழைத்து வருமாறு கூறினாள் என்னுடன் வா ."என்றது.
முதலையின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ச்சியடைந்து குரங்கு.
"நண்பா நான் எப்படி ஆற்றுக்குள் வருவேன்.உன்னைப்போல ஆற்றில் என்னால் நீந்த முடியாதே"என்றது.
                       முதலையும் "கவலைப் படாதே, என் முதுகில் ஏறிக் கொள் நான் உன்னைச் சுமந்து செல்கிறேன்." என்றது.குரங்கும் முதலையின் முதுகில் ஏறிக் கொண்டது.முதலையின் முதுகில் ஆனந்தமாய் ஆற்றில் மிதந்து செல்வது குரங்குக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.அதன் மகிழ்ச்சியைப் பார்த்து முதலை சிரித்தது.இப்போது முதலை நடு ஆற்றில் நீந்திக் கொண்டிருந்தது.அதன் மனதில் இனி இந்தக் குரங்கு நம்மிடமிருந்து தப்ப முடியாது எனத்  தெரிந்து கொண்டது.
உடனே அது,"நண்பா, மிகவும் மகிழ்ச்சியோடு இருக்கிறாய் போலத்  தெரிகிறது. உன் மகிழ்ச்சியெல்லாம் இன்னும் சிறிது நேரம்தான்"என்றது.
அதைக் கேட்ட குரங்கு சற்றே திடுக்கிட்டது.பிறகு சமாளித்து,
"விளையாடாதே நண்பா, நடு ஆற்றில் இருக்கிறேன்  என்று 
கிண்டல் செயகிறாயா?"என்றது 
அதற்கு முதலை,"அடமுட்டாள் குரங்கே நீ கொடுத்த பழங்களை என் மனைவிக்கு கொடுத்தேன் இல்லையா.., அவள் அதைத் தின்று விட்டு தினமும் இந்தப் பழங்களை சாப்பிடும் உன் இதயம் எவ்வளவு ருசியாக இருக்கும் அதனால் அந்தக் குரங்கை எப்படியாவது இங்கே அழைத்து வாருங்கள் உண்ணவேண்டும் என்றாள் அதனால்தான் உன்னை விருந்தாக்க தூக்கிச் செல்கிறேன்" என்றது.
இதைக் கேட்ட குரங்கிற்கு எப்படியிருக்கும்?நண்பனைப் போல் நடித்து நயவஞ்சகம் புரிந்த முதலையிடமிருந்து முதலில் தப்ப வேண்டுமே என்று சிந்தித்தது.
குரங்கு மெளனமாக இருப்பதைப் பார்த்த முதலை,"என்ன மௌனமாகிவிட்டாய்?பயம் வந்துவிட்டதா?எல்லாம் கொஞ்ச நேரந்தான் உன் இதயத்தைப் பிளந்து அதை ருசிக்கும் என் மனைவி மிகவும் மகிழ்ச்சியடைவாள்"என்று வஞ்சகமாகச் சிரித்தது..
அதைக் கேட்ட குரங்கு பெரிதாகச் சிரித்தது.
"என்..ஏன் சிரிக்கிறாய்?"
"பின்னே என்ன, இதை நீ கரையிலே சொல்லியிருக்கலாம்.அங்கேயே கொடுத்திருப்பேன்."
"என்ன?..உண்மையாகவா?"
"ஆமாம் நண்பா, என் இதயத்தைத் துவைத்துக் காய போட்டிருக்கிறேன். மரத்தில் தொங்குவதைப் பார்க்கவில்லையா நீ  என் நண்பன் நீ கேட்டால் தரமாட்டேனா என்ன"
"அப்படியானால் உன்னைக் கரைக்கு கொண்டு விடுகிறேன் நீ உன் இதயத்தை எடுத்துக் கொடு.என் மனைவியிடம் கொடுத்துவிடுகிறேன் "
"சீக்கிரம் கரைக்குச் செல்."
முதலையும் வேகமாக கரைக்குச் சென்றது.கரைக்கு அருகில் வந்தவுடன் பயந்து மரத்தின் மீது ஏறிக் கொண்ட குரங்கு, 
"முட்டாள் முதலையே இனி என் முகத்தில் முழிக்காதே இனி நீ என் நண்பனே அல்ல."என்றது.
"அப்படியானால் இதயம் இல்லையா "
"இதயத்தை யாராவது எடுக்கமுடியுமா, எடுத்தால் உயிரோடு இருக்க முடியுமா?முதலைகள் முட்டாள்கள் என்பது சரியாக இருக்கிறது ஓடிப்போ.இனி இங்கு வராதே"
என்று சொல்லியபடி மேல்கிளைக்குத் தாவிய குரங்கு நல்லவேளை தப்பித்தேன்.இனி மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று சொல்லிக் கொண்ட குரங்கு நாவல் பழங்களை பறித்து உண்ணத் தொடங்கியது மகிழ்ச்சியாக.
----------------------------------------------------------------------------------------------------------


















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com