வளமையான ஒரு சிற்றூர். அந்த ஊரில் சாந்தோபா என்ற ஒரு பெரியார் வாழ்ந்து வந்தார்.அவர் ஒரு முறை துக்காராம் மகாராஜ் அவர்களின் சரித்திரத்தைக் கேட்டார். அவரைப் போலவே தாமும் பற்றற்று வாழ வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இந்த எண்ணம் நாளும் வளரலாயிற்று.எனவே தன செல்வம் அனைத்தையும் ஏழைகளுக்குத் தானம் செய்து விட்டுக் காட்டை நோக்கிச் சென்று தவம் செய்யத் தொடங்கினார்.இவரது தாயாரும் மனைவியும் எவ்வளவு தடுத்தும் இவர் கேட்கவில்லை.
சிலநாட்கள் சென்றன.ஒருநாள் உறவினன் ஒருவன் சாந்தோபா காட்டில் இருக்கும் இடத்தைக் கண்டு வந்து சொன்னான்.உடனே சாந்தோபாவின் தாய் தன மருமகள் யசோதாவிடம் கணவன் மனதை மாற்றி அழைத்து வருமாறு கூறினாள். யசோதாவும் கணவனைத் தேடிக் காட்டுக்கு வந்தாள்.
நிஷ்டையில் இருக்கும் கணவர் முன் அமர்ந்து கொண்டு அவர் கண் திறக்கும் வரை காத்திருந்தாள் யசோதா.கண் திறந்த சாந்தோபா தன மனைவியைப் பார்த்துத் திகைத்தார்.
அவளிடம் நீ ஏன் இங்கு வந்தாய்?திரும்பிப் போ"என்றார்.
அவளோ "ராமன் இருக்குமிடமே அயோத்தி.நான் தங்களை விட்டுப் போகப் போவதில்லை "என்றாள் பிடிவாதமாக.
அவளது சொற்களைக் கேட்டு மகிழ்ந்த சாந்தோபா "என்னைப் போலவே பற்றுகளை விட்டு என்னுடன் இருக்கவேண்டும்" என்றார். யசோதாவும் அவருக்குப் பணிவிடைகள் செய்து கொண்டு வாழ்ந்து வரலானாள்.
தினமும் ஊருக்குள் சென்று பிக்ஷை ஏற்றுக் கொண்டு வந்து தன கணவருக்குப் பணிவிடைகள் செய்து வரலானாள்.அந்த ஊரிலேயே சாந்தோபாவின் சகோதரி வாழ்ந்து வந்தாள்.அவள் இல்லத்திற்குப் பிக்ஷைக்குப் போனாள் யசோதா. தன அண்ணன் மனைவியை உள்ளே அழைத்து நெய், சர்க்கரை சேர்த்துச் செய்த அடைகளைக் கொடுத்தாள் அவற்றை வாங்க யசோதா மறுத்த போதும் பிடிவாதமாக அவள் புடவையில் வைத்துக் கட்டி அனுப்பிவிட்டாள்
தங்கள் இருப்பிடம் வந்த யசோதா கணவரிடம் நடந்ததைக் கூறி அடைகளைக் காட்டினாள் .அவளிடம்," நீ உடனே இவைகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டு வா" என்று கூறவே யசோதா அப்படியே தன் நாத்தியிடம் அவைகளைக் கொடுத்துவிட்டுத் திரும்பினாள்.வரும் வழியில் மழையும் காற்றும் பலமாக வீசியது. நதியில் வெள்ளம் அதிகரிக்கவே அதைக் கடக்க இயலாமல் யசோதா திகைத்து நின்றாள்.அவள் மனம் இறைவனை வேண்டியது.
அப்போது ஓர் ஓடக்காரன் அங்கு வந்தான். கவலையுடன் நிற்கும் யசோதையிடம் வந்தான். "அம்மா, அக்கரைக்குப் போகவேண்டுமா?நான் கொண்டுபோய் விடுகிறேன்.வாருங்கள்" என்று அழைத்தான்."பாண்டுரங்கா," என்று இறைவன் நாமத்தைச் சொல்லியவாறே அவனுடைய ஓடத்தில் ஏறினாள் யசோதா.அக்கரை வந்து சேர்ந்தவுடன் கரை இறங்கிய யசோதா ஓடக்காரனைக் காணாது திகைத்தாள்.ஓடம் நின்ற இடத்தில் ஒரு மயிலிறகு கிடந்தது.அதை மிகுந்த பக்தியுடன் எடுத்துக் கண்களில் ஒத்திக் கொண்டாள்.வந்தவன் அந்தப் பாண்டுரங்கனே என்று புரிந்து கொண்டாள்.இந்த அற்புதத்தைக் கணவனிடம் சொன்ன போது சாந்தோபா கண்ணீர் விட்டான். தன மனைவி செய்த புண்ணியம் தான் செய்யவில்லையே.என்று மிகவும் வருந்தினான்.
தனக்கும் அவன் காட்சி தரும் வரை உணவு உண்பதில்லை என்று நோன்பிருக்கத் தீர்மானித்தான்.அதேபோல் கண்களை மூடி அமர்ந்துகொண்டான்.நாட்கள் கடந்தன. சாந்தோபாவின் உடல் வாடியது.இளைத்துத் துரும்பாகிவிட்டான். ஒருநாள் பாண்டுரங்கன் சங்கு சக்ர கதா தாரியாய் இவன் முன் தரிசனம் தந்து"அன்பனே நான் என்றும் உன்னுடனேயே இருக்கிறேன்.வருந்தாதே"என்று ஆசி கூறி மறைந்தார்.மனம் மகிழ்ந்த சாந்தோபா தன மனைவியுடன் மீண்டும் பிக்ஷை எடுப்பதும் தவம் செய்வதும் இறைவன் நாமத்தைப் பாடுவதுமாக வாழ்ந்து வரலானார்.
அத்துடன் மக்களின் துயர் துடைப்பதும் அவர்களை நல்வழிப் படுத்துவதுமாகக் காலம் கழித்துப் பின் பேரின்பப் பெருவீட்டை அடைந்தார். இத்தகைய பெரியவர்களின் வாழ்க்கைத் தத்துவம் நமக்கெல்லாம் கடவுளை நம்பினோர் ஒருக்காலும் கைவிடப்படார் என்ற உண்மையை விளக்குகிறது.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com