வியாழன், 5 நவம்பர், 2015

மந்திராலய மகான்.

               


           "பூஜ்யாய  ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச  
            பஜதாம் கல்பவ்ருட்சாய நமதாம் காமதேனவே
            துர்வாதித்வாந்தரவே வைஷ்ணவே தீவரேந்தவே
            ஸ்ரீராகவேந்தர குருவே நமோ அத்யந்த தயாளவே  
           மூகோபியத் பிரசாதேனா முகுந்த சயனாயதே   
            ராஜராஜாயதே ரிக்தோ ராகவேந்தரம் தமாஸ்ரையே".
      
என்று அந்த ராகவேந்திர சுவாமிகளை வேண்டிக்கொண்டோமானால் கலியுக கல்பகவிருட்சமாகவும் காமதேனுவாகவும் விளங்கிவரும் அந்தமகான் நமக்கு ஓடோடி வந்து அருள் புரிவார்.அப்பேற்பட்ட மகான் நம் ராகவேந்திர ஸ்வாமிகள்.இவரது வரலாற்றையே நாம் இங்கு சுருக்கமாகக் காண்போம்.
            
            துஷ்ட நிக்ரஹம் செய்து சிஷ்ட பரிபாலனம் செய்யவும் தர்மத்தை நிலைநாட்டவும்  .பகவான் எடுத்த அவதாரங்கள் பலப்பல.அவற்றுள் ஒன்று    நரசிம்மாவதாரம்.இந்த அவதாரத்திற்குக் காரணமானவரும் இறைவனின் அருளுக்குப் பாத்திரமானவருமாகிய ஸ்ரீ பிரஹ்லாத ராஜரின் மறுபிறவியே ஸ்ரீ வ்யாசராஜர். அன்னாரின் மறுபிறவியே ஸ்ரீ ராகவேந்திரர். இந்த மகானின் ஜீவசமாதி இருக்கும் இடமான மந்த்ராலயம்  ஒரு புண்ய க்ஷேத்ரம்..இந்த மந்த்ராலயத்தில் ஜீவசமாதியில் இருக்கும் மந்த்ராலய மகான் என போற்றப்படும்   ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் வரலாற்றைக் கேட்டு நாமும் புனிதமடைவோம்.

       இவரது வம்சபரம்பரை.:     சீரும் சிறப்புமாக விளங்கிய விஜயநகர சாம்ராஜ்யத்தில் ஆஸ்தான வித்வானாக விளங்கியவர் கிருஷ்ண பட்டர்.வீணா வித்வானாகவும் சிறந்த கவிஞராகவும் விளங்கியவர்.கர்நாடக மாநிலத்து வைஷ்ணவர். மாத்வ பிராமணர். இவரது மகன் கனகாசலபட்டரும் 
தந்தையைப் போன்றே சங்கீதத்திலும் சாஸ்திர ஞானங்களிலும் சிறந்து விளங்கினார்.தந்தையாருக்குப் பிறகு இவரும் விஜயநகரத்து ஆஸ்தானவித்வானாக விளங்கி சுகபோகத்துடன் வாழ்ந்து  வந்தார்.

   கனகாசல பட்டர் தம்பதிகளுக்குப் பிற ந்தவரே  திம்மண்ண  பட்டர். கல்வி கேள்விகளிலும்  வீணை வாசிப்பதிலும் தன் மூதாதையரைப் போலவே சிறந்து விளங்கினார்.உரிய வயதில் கோபிகாம்பாள் என்ற பெண்ணை மணமுடித்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தார்.கனகாசலபட்டார் மறைந்ததும் திம்மண்ண பட்டர் அரசவையில்  சிலகாலமே இருக்க முடிந்தது. 1565-ல் நிகழ்ந்த தலைக்கோட்டைப் போரினால் விஜயநகரம் கடும் துன்பத்துக் குள்ளாகியது. அந்த ராஜ்ஜியம் அழிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்ததால் திம்மண்ண பட்டர் குடும்பத்துடன் நகரத்தை விட்டு வெளியேறினார்.
      நேராக கும்பகோணத்திலிருந்த ஸ்ரீமடத்திற்கு வந்து சேர்ந்தார்.  ஸ்ரீமடத்தை நடத்திவந்த ஸ்ரீ விஜயீந்தர தீர்த்தர் இவரைத் தம் மடத்தில் சேர்த்துக் கொண்டார்.  சிலகாலம் அங்கிருந்த திம்மண்ண பட்டர் தன் மகள் வேங்கடாம்பாளுக்குத் திருமணம் செய்ய எண்ணம் கொண்டு அங்கிருந்து புவனகிரிக்கு வந்து சேர்ந்தார்.                            

      அங்கு மதுரை லக்ஷ்மி நரசிம்மாச்சாரியாருக்கு மகளை மணம் செய்து கொடுத்து அவளை மதுரைக்குக் கணவனுடன் அனுப்பிவைத்தார். தன்   மகன் குருராஜனுக்கும் உபநயனம் முடித்து அவனையும் குருகுலவாசம் செய்ய அனுப்பினார். இப்போது  தம்பதிகள் இருவரும் தனிமையில் தவித்தனர்.

                                                                                                                   (தொடரும் )








--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com