நமது நாட்டு வரலாற்றில் பல வம்சத்தவரின் ஆட்சிமுறையைப் பார்க்கலாம். அவற்றுள் மௌரியர்வம்சம் மிகச் சிறப்புடன் பாரத நாட்டை ஆண்டது. இந்த மௌரிய வம்சம் தொடங்கிய கதை மிகவும் சுவாரசியமானது.
நந்த வம்சத்தின் கடைசி அரசன் தனனந்தன். இவனது சபைக்கு கௌடில்யர் என்ற அந்தணர் வ்ந்தார். அவரை ஏளனம் செய்து அவையிலிருந்து வெளியேற்றினான் மன்னன்.
விருந்தினருடன் உணவு அருந்த அமர்ந்த கௌடில்யரை யாசகம் கேட்க வந்தவன் என்று கூறி மண் சட்டியில் உணவு உண்ணக் கொடுத்தான்.அவமானமும் கோபமும் அடைந்த கௌடில்யர் "இதேபோல் நந்த அரசனை மண் சட்டியில் உணவு உண்ண வைப்பேன் அதுவரை என் குடுமியை முடிய மாட்டேன்." என்று சபதம் செய்தார்.
கோபமாக வெளியேறிய கௌடில்யரைப் பார்த்து நவநந்தர்களும் கைகொட்டி நகைத்தனர்.
கௌடில்யர் மிகவும் திறமைசாலி. அத்துடன் சிறந்த ராஜதந்திரம் அறிந்தவர். அதனால் அவருக்கு சாணக்யர் என்ற பெயர் நிலைத்தது. மிகவும் சிந்தனையுடன் நடந்தவர் ஒரு காட்டுப் பகுதிக்குள் நுழைந்தார்..நல்ல வெய்யில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது.
திடீரென அவரது காலை ஒரு புல் கற்றை தடுக்கிவிட்டது. அதைப் பார்த்தவர் அந்தப் புல்லைப் பிடுங்கித் தூரப் போட்டார். சற்று தூரம் நடந்ததும் மீண்டும் அந்தப் புல்லைப் பார்த்தார். அருகே வந்தவர் அந்தப் புல்லைப் பறித்தார். அதைத் தீயிட்டுக் கொளுத்தினார். அந்த சாம்பலைத் தன் வாயில் போட்டு நீரைக் குடித்தார். பின் புன்னகையுடன் நடந்தார்.
இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான் ஒரு சிறுவன். ஓடி வந்து அவர் காலில் பணிந்தான். இளம் பாலகனின் முகத்தைப் பார்த்த சாணக்யர் அவனது அறிவாற்றலைப் புரிந்து கொண்டார். அந்தச் சிறுவன் தனக்கு அடைக்கலம் அளிக்கவேண்டுமென்று கேட்டுக் கொண்டான்.
"உன் பெயர் என்ன?"
"சந்திரகுப்தன். நான் நந்த அரசனின் குமாரன். என் தாயார் மூரா அரண்மனை பணிப்பெண்ணாக இருந்ததால் நந்தர்கள் என்னை அரசகுமாரனாக ஏற்காமல் கொல்லத் திட்டமிட்டனர். நான் தப்பிவந்து இங்கு மறைந்து கொண்டுள்ளேன். எனக்கு இனி தாங்கள்தான் துணை."
சாணக்யர் தனக்குள் புன்னகைத்துக் கொண்டார். பொருத்தமானவன்தான் தன்னிடம் வந்து சேர்ந்துள்ளான் எனத் தெரிந்து கொண்டார்.
அன்று முதல் சந்திரகுப்தனுக்கு ஆசிரியராகவும் ஆலோசகராகவும் விளங்கிய சாணக்யர் அவனுக்குத் தாயாகவும் இருந்து பேணிக் காத்தார்.
அரசருக்குரிய போர்ப்பயிற்சியையும் அரசாட்சி முறையையும் கற்பித்தார்.
அவற்றையெல்லாம் கவனத்துடன் கற்றுக்கொண்டான் சந்திரகுப்தன். நந்தர்களின் மீது படையெடுக்கக் காலம் பார்த்துக் கொண்டிருந்தனர்.
போதிய படைவீரர்கள் சேர்ப்பதற்காக ரகசியமாக பணியாற்றினார் சாணக்யர்.
ஒருநாள் இருவரும் ஆலோசனை செய்தவாறே காட்டின் நடுவே நடந்து கொண்டிருந்தனர். ஒரு இடத்திற்கு வந்தவுடன் சாணக்யர் திடீரென நின்றார்.
அந்த இடத்தில் ஏதோ வித்தியாசமாக சத்தம் வருவதைக் கவனித்தார்.
உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தார். என்ன ஆச்சரியம். பூமிக்குக் கீழே ஒரு சுரங்கப் பாதை போவது தெரிந்தது.அதன் வழியே கவனமாக அடி வைத்துச் சென்றார் சாணக்யர்.
ஒரு பெரும் அறைபோலிருந்த இடத்தில் பெரும் புதையல் இருப்பதைப் பார்த்துப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடினார் சாணக்யர்.
செல்வத்தைக் காட்டி இனி படையை எளிதாகத திரட்டலாம் என மகிழ்ந்தார்.
அவரது எண்ணம் போலவே விரைவில் பெரும் படை திரண்டது. பெரும் கேளிக்கைகளில் மூழ்கியிருந்த நந்தர்களை சந்திரகுப்தன் எளிதாக வென்று நாட்டைக் கைப் பற்றினான். விரைவில் மன்னனாக முடிசூடிக் கொண்டான். சாணக்யர் அவனது ராஜகுருவாகவும் மந்திரியாகவும் ஆலோசகராகவும் இருந்து பணியாற்றினார்.
சிறையில் அடைபட்டிருந்த நவ நந்தர்கள் கையில் ஒவ்வொரு மண் சட்டியைக் கொடுத்து உணவு அருந்தக் கொடுத்தார். பசியுடன் இருந்த அவர்களும் அந்த உணவை ஆவலுடன் உண்ணும் போது சாணக்யர் உள்ளே நுழைந்தார்.
"தனனந்தா ! உணவு போதுமா? இன்னும் வேண்டுமா? சட்டியில் உண்ணும் உணவு தங்கப் பாத்திரத்தில் உண்பதற்கு ஒப்பாக உள்ளதா? அறிவாளிகளை அறிந்துகொள்ளாத மூடனே, நீ அரசனாக இருக்கவே தகுதியற்றவன். அடிமையாக இருக்கவே தகுதியானவன். இதோ என் சபதப்படி உன்னைப் பழைய சட்டியில் உணவருந்த வைத்துவிட்டேன் என் குடுமியை இப்போது முடிந்துகொள்கிறேன்."
குடுமியை முடிந்து கொண்ட கௌடில்யர் அரண்மனை வந்தடைந்தார். சந்திரகுப்தனின் பேரரசின் புகழுக்கு முக்கிய காரணமானவர் இந்த கௌடில்யர் என்னும் சாணக்யரே. விஷ்ணுவர்த்தனர் என்றும் இவருக்கு வேறு பெயர் உண்டு. இவரே அர்த்தசாஸ்திரம் என்னும் நூலை எழுதியவர்.
சந்த்ரகுப்தமௌரியர்தான் நந்த வம்சத்தை அழித்து மௌரிய வம்சத்தைத தொடங்கியவர். தமிழகம் தவிர பாரதநாடு முழுவதையும் ஆட்சிசெய்தவர்.
நம் இந்திய வரலாற்றில் சாணக்யர் முக்கிய இடம் பெற்றுள்ளார்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com