ஏமாற்றாதே ஏமாறாதே
ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான். அவன் உப்பு வியாபாரம் செய்து வந்தான்.அருகில் உள்ள நகரத்திற்குச் சென்று மூட்டையில் உப்பு வாங்கிவந்து அந்த கிராமத்தில் விற்று வந்தான்.அந்த கிராமத்திற்கு செல்ல வேண்டுமெனில் இடையில் ஒரு ஆற்றைக் கடந்துதான் செல்ல வேண்டும்.வாரம் ஒரு முறை அந்த வியாபாரி நகருக்குச் சென்று உப்பு வாங்கி வருவா ன்.அவனிடம் ஒரு கழுதை இருந்தது அந்தக் கழுதையின் முதுகில் உப்பு மூட்டையை ஏற்றிக் கொண்டு கிராமத்திற்கு வருவான்அவன்.
ஒரு முறை அந்த உப்புவியாபாரி நகருக்குச் சென்று உப்பு வாங்கிக்கொண்டு அந்த மூட்டையை வழக்கம்போல் கழுதையின் முதுகில் ஏற்றிக் கொண்டு கிராமத்தை நோக்கி நடந்தான்.அன்று ஆற்றில் நீர் கொஞ்சம் அதிகமாக இருந்தது.மெதுவாக கழுதையை ஒட்டிக் கொண்டு ஆற்றைக் கடக்கத் தொடங்கினான் அந்த வியாபாரி.
திடீரென்று கழுதையின் கால் மடங்கி கீழே விழுந்தது ஆற்று நீரில் தத்தளித்து எழுந்தது. அந்தக் கழுதையைப் படாத பாடு பட்டு எழுப்பி நிற்க வைத்தான் வியாபாரி.ஆனால் அதற்குள் உப்பு மூட்டை பாதி கரைந்து போனது.உப்பு குறைந்ததும் மூட்டையின் கனம் குறைந்தது.வெகு சுலபமாக கழுதை இப்போது நடந்தது.
வீடு சென்று சேர்ந்ததும் கழுதை யோசித்தது.ஆற்றில் விழுந்து எழுந்தால் கனம் குறைந்து விடுகிறது.இனி வரும்போதெல்லாம் ஆற்றில் விழுந்து வரலாம் என நினைத்தது.அடுத்தமுறை வியாபாரி வழக்கம்போல் உப்பு வாங்கி மூட்டையைக் கழுதையின் முதுகில் ஏற்றி ஆற்றின் அருகே வந்தான்.மூட்டையை இறுகக் கட்டிவிட்டு ஆற்றில் இறங்கினான்.
நடு ஆற்றில் கழுதை கால் மடங்கி விழுவதுபோல் நீரில் விழுந்தது.
இந்த முறை உப்பு கரைந்து நஷ்டமாகி விட்டதே என்ற கோபத்தில் கழுதையை நன்கு அடித்து எழுப்பினான் வியாபாரி
கழுதைக்கு அடி தெரியவில்லை. முதுகில் கனம் குறைந்ததே என்று மகிழ்ந்தது.இதேபோல் நீரில் வழக்கமாக கழுதை விழுவது கண்டு வியாபாரி புரிந்து கொண்டான். இது வேண்டுமென்றே நீரில் விழுகிறது முதுகின் கனம் குறைக்கவே அப்படிச் செய்கிறது எனத் தெரிந்து கொண்டான்.கழுதைக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என முடிவு செய்தான்.
அன்றும் வழக்கம்போல் கழுதையின் முதுகில் மூட்டையை ஏற்றி கொண்டு வந்தான் வியாபாரி.இம்முறை மூட்டை எப்போதும் இருப்பதை விடப பெரிதாக இருப்பதைக் கண்டு கழுதை திகைத்தது.ஆனால் முதுகில் சுமந்ததும் மகிழ்ந்தது ஏன் தெரியுமா?வழக்கம்போல் உப்பு முட்டையின் கனத்தை விட இது குறைவாக இருந்தது.
கழுதையுடன் ஆற்றில் இறங்கினான் வியாபாரி.நடு ஆற்றில் வந்தவுடன் வழக்கம் போல் நீரில் விழுந்தது கழுதை.அது தானாக எழுந்து வரட்டும் என்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் வியாபாரி.நீரில் விழுந்த கழுதையால் எழுந்து நிற்கவே முடியவில்லை. ஏனெனில் முதுகில் மூட்டை முன்னை விடப் பலமடங்கு கனத்தது. கழுதை பெரிதாக சத்தமிட்டது தான் செய்த தவறை உணர்ந்து கொண்டது.
இந்தமுறை வியாபாரி கழுதையின் முதுகில் பஞ்சு மூட்டையை ஏற்றியிருந்தான்.கனம் குறைவாக இருந்தும் அது இன்னும் குறையும் என்று எண்ணி நீரில் விழுந்தது ஆனால் நீரில் நனைந்த பஞ்சு மூட்டை நீரைஉறிஞ்சி மேலும் கனமாகி விட்டது.வெகுநேரம் தடுமாறிய கழுதை எழுந்திருக்க முடியாமல் அப்படியே சோர்ந்து அமர்ந்திருந்தது.வியாபாரி மூட்டையை எடுத்துக் கழுதையை எழுப்பினான். வீடு வந்து சேர்ந்த கழுதை
நினைத்தது.
கனம் குறைந்த மூட்டை என்று தெரிந்தும் மேலும் கனத்தைக் குறைக்க ஆசைப் பட்டேன் .நான் ஏமாற்ற நினைத்தேன் ஆனால் ஏமாந்தேன்.எஜமானுக்குத் துரோகம் நினைத்தது பெரும் தவறு. இனி ஒழுங்காக இருக்க வேண்டும்
இப்போது கழுதைக்கு நல்ல புத்தி வந்தது.
---------------------------------------------------------------------------------------------------------------------
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com