ஒரு வனத்திலே ஜன்னு என்ற முனிவர் தன் மனைவி சாத்தகி என்பவளுடன் வசித்து வந்தார். அவர்களுக்கு ஒரு மகன் இருந்தான். புண்டரீகன் என்பது அவன் பெயர். முனிவருக்கே உரிய நற்குணங்கள் ஏதுமின்றி மிகவும் கீழ்த்தரமான பண்புகளோடு வாழ்ந்து வந்தான். திருமணமானால் திருந்திவிடுவான் என்று எண்ணி ஒரு அழகிய பெண்ணை மணமுடித்து வைத்தனர். அப்போதும் திருந்தாமல் இருந்ததால் பெற்றோர் அறிவுரை கூறித் திருத்த முயற்ச்சித்தனர்.
அதனால் பெற்றோரிடம் வெறுப்புக் கொண்ட புண்டரீகன் தன் மனைவியை அழைத்துக் கொண்டு தனியே சென்று குடியேறினான்.இதனால் மனம் வருந்திய முனிவரும் அவரது மனைவியும் அந்த வழியாகச் சென்ற காசியாத்திரை கோஷ்டியோடு சேர்ந்து காசிக்குப் புறப்பட்டனர்.
இதை அறிந்த புண்டரீகனும் அவன் மனைவியும் தாங்களும் காசிக்குச் செல்லப் புறப்பட்டனர். இருவரும் ஒரு குதிரைமீது ஏறிச் சென்றனர். வழியில் தள்ளாடியபடியே செல்லும் பெற்றோரைத் தாண்டிச் சென்றனர்.' கிழங்கள் எப்படிப் போனால் என்ன' என்று நினைத்தபடியே குதிரையில் வேகமாகப் போனான் புண்டரீகன்.அத்தனை பாவி அவன்.
நெடுநேரம் பயணப் பட்டபின் ஒரு ஆசிரமத்திற்கு அருகே வந்து சேர்ந்தனர். அப்போது அங்கே வந்த குக்குட முனிவர் என்பவரைப் பார்த்து' காசி இன்னும் எவ்வளவு தூரம் உள்ளது?' என்று கேட்டான். அதற்கு முனிவர் "காசியா? அது எங்கே உள்ளது என்று எனக்குத் தெரியாது" என்று பதிலளித்தார். அவரை ஏளனமாகப் பார்த்த புண்டரீகன்' காசியைப் பற்றித் தெரியாமல் இருக்கிறீரே' என்று இகழ்வாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.அன்று இரவு அருகே உள்ள சத்திரத்தில் தன் மனைவியுடன் தங்கினான் புண்டரீகன்..
அதிகாலை நேரம். தூக்கம் வராமல் உட்கார்ந்திருந்தான் புண்டரீகன். அந்த அதிகாலை வேளையில் மூன்று இளம் பெண்கள் குக்குட முனிவரின் குடிலின் வாசலைப் பெருக்கிச் சுத்தம் செய்தனர். அந்தப் பெண்கள் மிகவும் குரூபிகளாக இருந்ததைப் பார்த்தான் புண்டரீகன். அவர்கள் வேலை முடித்து விட்டு மகிழ்ச்சியுடன் சிரித்தபடியே வந்தனர். அப்போது அவர்களைப் பார்த்து ஆச்சரியப் பட்டான். அந்த அளவுக்கு அவர்கள் அழகுள்ளவர்களாக மாறியிருந்தனர். ஆச்சரியத்துடன் அவர்களை நெருங்கியவன் அவர்கள் முன் சென்று" நீங்கள் யார்? உங்கள் உருவம் இப்படி மாறக் காரணம் என்ன?" என்று அடக்க இயலாத ஆவலுடன் கேட்டான்.
"நாங்கள் கங்கை,காவேரி, சரஸ்வதி இன்னும் மூன்று நதிகளாவோம். பாவம் செய்த மக்கள் எங்களில் மூழ்கி அவர்கள் பாவங்களை எங்களிடம் விட்டுச் செல்கின்றனர்.அதனால் நாங்கள் குரூபிகளானோம். இங்கிருக்கும் குக்குட முனிவரின் ஆசிரத்தில் சேவை செய்து எங்கள் பாவத்தைத் தொலைத்து நல்லுருவம் பெற்றோம். நீ பெரும் பாவியாக இருந்தாலும் சென்ற பிறவியில் புண்ணியம் செய்திருக்கிறாய். அதனால்தான் இந்த முனிவரின் தரிசனம் உனக்குக் கிடைத்தது."
"அந்த முனிவர் அப்படி என்ன தவம் செய்தார்?"
"அவர் தன் தாய் தந்தையரைக் கண் போலக் காப்பாற்றி வந்தார்."
"அது அவ்வளவு பெரிய புண்ணியமா என்ன?"
"அந்தப் புண்ணியம் ஒன்றே யாகம் யக்ஞம் தானம் தவம் தீர்த்தாடனம் க்ஷேத்ராடனம் இவைகளால்அடையும் பயனை விட பெரும் பயனை அளித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் இறக்கும் பாவச் சுமையை நாங்கள் இவருக்குப் பணிவிடை செய்வதன் மூலம் போக்கிக் கொள்கிறோம்." என்று சொல்லி மூவரும் மறைந்தனர்.
இதைக் கேட்ட புண்டரீகனின் மனம் மாறியது. பெற்றோரின் பெருமையை உணர்ந்தான். உடனே ஓடிச் சென்று பெற்றோரின் பாதங்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். அவர்களைத் தெய்வம் போல எண்ணிப் பணிவிடை செய்யத் தொடங்கினான்.
அவர்களை அழைத்துக் கொண்டு ஒவ்வொரு ஊராக யாத்திரை செய்தான். எல்லா இடங்களிலும் பூஜையும் நடைபெற்றது. இப்போது திண்டிரவனத்துக்கும் சந்திரபாகா நதிக்கும் இடையே உள்ள பகுதியில் தங்கித் தன் தாய் தந்தையற்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான் புண்டரீகன்.
இவனது பணிவிடைகள் ஸ்ரீமன் நாராயணனையே உருகச் செய்தது. சங்கு சக்ர கதா தாரியாய் புண்டரீகன் முன் தோன்றி நின்றான் அந்தக் கண்ணன்.
இறைவன் வந்திருப்பதை அறிந்தபின்னரும் தன் பெற்றோரின் சேவையை நிறுத்தவில்லை புண்டரீகன். அருகே இருந்த ஒரு செங்கல்லை எடுத்துப் போட்டு அதில் அமர்ந்திருக்கும் படி கேட்டுக் கொண்டான். கடமை தவறாத ஒரு மகனின் சொல்லுக்குக் கட்டுப் பட்டு இறைவன் அந்தச் செங்கல்லின் மேலேயே நின்றிருந்தான். தன் பணிகள் முடிந்ததும் கண்களில் கண்ணீர் மல்க நாரணனின் பாதம் பணிந்தான் புண்டரீகன். அவன் நாத் தழுதழுக்கப் பேசமுடியாமல் கரம் கூப்பி நின்றான்.
"குழந்தாய்!உனக்கு என்ன வரம் வேண்டும்?"
"இறைவா!அக்ஞானிகள் சுலபமாக உன்னைத் தரிசிக்குமாறு நீ இங்கேயே விட்டலனாக இருந்து அருள்பாலிக்க வேண்டும். இங்கிருக்கும் நதி கங்கையினும் சிறந்ததாகக் கருதப்பட வேண்டும். இந்நகரம் என் வரலாற்றை நினைவு கூறும் வண்ணம் என் பெயராலேயே வழங்கப் படவேண்டும்."
"ததாஸ்து"
நாளடைவில் புண்டரீபுரம் என்பது பண்டரிபுரம் என ஆயிற்று. பக்தர் கூட்டம்எப்போதும் விட்டல விட்டல ஜெய் ஜெய் விட்டல எனப் பாடுவதைக் கேட்டுப் பரவசமடையலாம்.
பெற்றோருக்குச் செய்யும் தொண்டே பெரும் தொண்டு. அதில்தான் இறைவனும் மகிழ்கிறான் என்பதை நாம் ஒருநாளும் மறக்கலாகாது என்பதை புண்டரீகன் வாழ்க்கை நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ?