சனி, 12 அக்டோபர், 2013

111 பழமொழிக் கதைகள்.--துணையோடல்லது நெடுவழி போகேல்.-

துணையோடல்லது நெடுவழி போகேல்.

              ராசம்மாவுக்கு இரண்டுபிள்ளைகள் இருந்தார்கள்.அவர்களை மிகவும் அன்புடனும் பாசத்துடனும் வளர்த்து வந்தாள்.
இரண்டு சகோதரர்களும் ஒற்றுமையாகவும் பிரியமாகவும் வளரவேண்டும் என்று ராசம்மா ஆசைப் பட்டாள்.அதனால் அவர்கள் எங்கு சென்றாலும் ஒன்றாகச் செல்லவேண்டும் ஒன்றாகசாப்பிடவேண்டும் விளையாடவேண்டும் என  விரும்பி அப்படியே வளர்த்தாள்.
அண்ணன் விநாயகம்,தம்பி வேலனை  விட்டு விட்டு ஓடிவிடுவான். ஆனால் ராசம்மா அவனைத் தேடிவந்து தம்பியை அவனிடம் விட்டு வருவாள். அத்துடன் தனியாகப் போகாதே என்று அறிவுரை சொல்லி வருவாள்.
நாட்கள் செல்லச் செல்ல விநாயகத்துக்கு யார் துணையும் இன்றி எங்கும் தனியாகப் போவதுதான் பிடித்திருந்தது. அதனால் அவன் எங்கும் தனியாகச் சென்று வருவான்.
            ஒருமுறை அவன் அம்மாவுக்கு உடல் நலமில்லாமல் போகவே மருந்து வாங்கிவர வைத்தியர் வீட்டுக்குச் செல்லவேண்டியிருந்தது.தம்பி வேலனை  அம்மாவுக்கு உதவியாக வைத்துவிட்டு வைத்தியர் வீட்டுக்குப் புறப்பட்டான் 
அப்போது ராசம்மா "ஐயா விநாயகம் ,யாரையாச்சும் துணைக்கு அழைச்சுக்கிட்டுப் போப்பா,தனியாப் போகாதே" என்றாள் 
 ஆனால் விநாயகமோ"போம்மா, நான் இப்போ பெரியவனாயிட்டேன்.தனியாவே போறேன்.நீயேன் பயப்படுறே?" என்றான் கோபத்தோடு.
      அப்போது ராசம்மா, "அப்படியில்லேப்பா, தொலைவாப் போறதுன்னா, யாரோடாவதுசேர்ந்துபோப்பா.துணையில்லாமல்  நெடுவழி போகக் கூடாதுன்னு சொல்லியிருக்காங்கப்பா" என்று கவலையோடு சொல்லிப் பார்த்தாள் .
ஆனால் கேட்காத விநாயகம் இப்போ யாரைத் துணையா அழைத்துப் போறது?தனியாப் போனா ஒண்ணும் ஆயிடாது. நீ பயப்படாதே."என்றான் வீராப்போடு.
"என் ராசா. வழியில ஒரு பூனையோ  நாயோ கிடைச்சா அதையாவது கூட்டிப்போ. அதுவே உனக்குத் துணையாயிருக்கும்.என்று மீண்டும் சொல்லவே அம்மாவின் சொற்படியே எதையாவது எடுத்துச் செல்வதாகக் கூறினான் விநாயகம்.
"இருட்டும் முன் வந்துவிடப்பா" என்றவள் கண்களை மூடிப் படுத்து விட்டாள்.
                   வினாயகம்வேகமாக நடந்தான். வழியில் பெரிய குளம் ஒன்று இருந்தது.அதன் கரையில் சென்று நின்றான்.குளத்து நண்டு ஒன்று கரை ஓரமாக நடந்து கொண்டிருந்தது.அதைப் பிடித்துத் தன்னிடமிருந்த பையில் போட்டுக் கொண்டான். வைத்தியர் வீடு வெகு தொலைவில் இருந்தது.அவர் வரும்வரை காத்திருந்து மருந்து வாங்கிக் கொண்டு மீண்டும் தன வீடு நோக்கி நடந்தான் விநாயகம்.
சற்று நேரத்தில் நல்ல மழை பிடித்துக் கொண்டது.வழியில் தெரிந்த ஒரு பாழ் மண்டபத்தில் சென்று ஒதுங்கினான்.
                 சூரியன் மறையும் நேரம் வரவே வினாயகத்திற்கு பயம் பிடித்துக் கொண்டது.யாரேனும் வருகிறார்களா என சுற்றிலும் பார்த்தான்.தனியாக இருக்கப் பயமாக இருக்கவே தன பையில் இருந்த நண்டை வெளியே எடுத்து அதன் காலில் கீழே கிடந்த ஒரு கயிற்றால் கட்டினான்.அங்கேயே அமர்ந்து கொண்டான். அவன் கையிலிருந்த நண்டு அவனைச் சுற்றிச் சுற்றி வந்தது. அவனுக்கு அது வேடிக்கையாக இருந்தது.சற்றுநேரம்தான்.மீண்டும் பயம் பிடிக்கவே எழுந்து நின்றான். அந்த நண்டு அவனது பின் பக்கமாகச் சென்றுஎதையொ பிடித்துக் கொண்டு போராடியது.திடுக்கிட்டுத் திரும்பியவன் "ஐயோ" என்று அலறிவிட்டான். 
                   அவன் பின்னால் ஒரு பாம்பின் கழுத்தைப் பிடித்துக் கொண்டிருந்தது அந்த நண்டு.இருட்டையும் மழையையும் லட்சியம் செய்யாமல் அந்த இடத்திலிருந்து வீட்டை நோக்கி ஓடினான் விநாயகம்.வீட்டை அடைந்தபின்னர்தான் அவன் ஓட்டம் நின்றது.
உள்ளே நுழைந்தவுடன் ராசம்மா வந்திட்டயாப்பா.என்றபோது அம்மாவிடம் மருந்தைக் கொடுத்துவிட்டு "அம்மா, நான் உன் சொல்படி ஒரு துணையோடுதான் போனேம்மா. இனியும் நான் எங்கே போனாலும் தம்பியோடு போவேனம்மா."என்றான்.
துணையில்லாமல் அவன் தனியாகச் சென்றிருந்தால் இப்போது உயிரோடு இருந்திருக்க முடியுமா. அம்மா பழமொழியாக துணையோடல்லது நெடுவழி போகேல் என்று சொன்னதன் பொருளை இப்போது புரிந்து கொண்டான் விநாயகம்.
ராசம்மாவும் மகனின் மாற்றத்தை அறிந்து மனம் மகிழ்ந்தாள்.




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com