புதன், 22 ஜூலை, 2009

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - இரண்டாம் பகுதி

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

தன் கலயத்தைக் குழாயடியில் கழுவிக்கொண்ட முருகன் நீரைப் பிடித்துக் குடித்தான். மீண்டும் பசிக்கும் போது குடிக்கலாமே என்று கலயத்தில் நீரை நிரப்பிக் கொண்டான். அதனைச் சுமந்து கொண்டு அடுத்த ஊர் நோக்கி நடந்தான். அந்த ஊரிலாவது வேலை கிடைக்க வேண்டுமென்று வேண்டிக்கொண்டே நடந்தான். உச்சி வேளை நல்ல வெய்யில் நேரம். உச்சி வெய்யில் தலையைப் பிளந்தது. வயல் வெளியைத்தாண்டி நடந்தான். பசுமையான மரங்கள் தெரிந்தன. அதனிடையே பெரிய கட்டடம் ஒன்று தெரிந்தது. நிறைய மக்கள் அங்கும் இங்குமாகச் செல்வதை கேசவன் பார்த்தான். சற்று இளைப்பாறுவதற்காக அங்கே ஒரு மரத்தடியில் அமர்ந்தான். களைப்பால் கண்கள் மூடியிருந்தன.

"தம்பி!" யாரோ அழைக்கவே கண்களைத் திறந்து பார்த்தான்.
" தம்பி, ரொம்ப தாகமாயிருக்கு. கொண்டாந்த தண்ணி காலியாயிடுச்சு . இந்தத் தண்ணி நல்ல தண்ணிதானே! கொஞ்சம் தரியா?"
வயதான கிழவர் பரிதாபமாகக் கேட்டார். கொஞ்ச நேரம் யோசித்தவன், சரியென்று அவரிடம் கலயத்தை நீட்டினான்.அதை வாங்கி மடமடவெனக் குடித்தவர் " அப்பாடா! அமிர்தமா ஜில்லுனு இருக்கு" என்றவாறு கேசவனைப் பார்த்துப் புன்னகைத்தார். கேசவன் கலயத்தைப் பார்த்தான். நீர் முழுவதும் காலியாகி இருந்தது. அவன் முகம் ஏமாற்றத்தால் வாடியதைக் கண்டார் பெரியவர்.

"தம்பி! இந்தச் சுற்று வட்டாரத்திலே கொஞ்சம் தண்ணி கஷ்டம். உப்புத் தண்ணிதான் கிடைக்கும். நல்ல தண்ணிக்கு கொஞ்ச தூரம் போகணும். இங்கே தாசில்தார் ஆபீசுக்கு வாரவங்க எல்லோரும் தாகத்திலே தவிக்கிறோம். நல்லவேளையா நீ தண்ணி கொண்டாந்தே. இந்தா இதை வாங்கிக்க ஏதாவது வாங்கிச் சாப்பிடு." என்றவாறே ஒரு இரண்டு ரூபாய்த் தாளை அவனிடம் கொடுத்தார். ஏதும் பதில் சொல்லத் தோன்றாமல் அந்த ரூபாயைப் பெற்றுக்கொண்டான் கேசவன். அவன் உள்ளம் ' குடிதண்ணீருக்கு இவ்வளவு கஷ்டமா இங்கு...' என்று எண்ணிப்பார்த்தது.

மறுநாள் காலை பத்து மணி. வெய்யில் தொடங்கி விட்டது. தலையில் பானையில் நல்ல நீரும் கையில் அலுமினிய தம்ளரும் வைத்துக் கொண்டு அதே இடத்துக்கு வந்தான். அவனைப் பார்த்தவர்கள் நாலைந்து பேர் அவனிடம் வந்து "என்ன அது?" என்றனர். " குடிதண்ணீர் " என்றபோது "எனக்கு, எனக்கு" எனக் கை நீட்டினர். ஒவ்வொருவருக்கும் நீர் கொடுத்தவன் "அய்யா! உங்களுக்கு விருப்பமானதைக் கொடுங்கள் " என்று கேட்டுப்பெற்றான். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று முறை வெகு தொலைவு நடந்து சென்று நீர் கொண்டு வந்து பலரின் தாகத்தைத் தணித்தான். மாலையில் காசுகளை எண்ணிப்பார்த்த பொழுது அவனால் நம்பமுடியாத அளவுக்குக் காசு சேர்ந்திருந்தது. வயிறு நிறைய சாப்பிட்டான்.

கேசவனது இந்தத் தொழில் தொடர்ந்தது. சில நாட்கள் சென்ற பின்னர் ஒரு பானை இரண்டு பானை ஆனது. நீர் நீர்மோரானது. அத்துடன் கடலை பிஸ்கட் மிட்டாய் வெற்றிலை பாக்கு என்று வாங்கிச் சென்று விற்று வர நல்ல காசு கிடைத்தது.

ஓராண்டு கழிந்தது. நகரத்தார் பலரது பழக்கம் ஏற்பட சிறியதாக ஒரு பெட்டிக்கடை போட்டு அங்கேயே தங்கிக் கொண்டான். முதல் நாள் மாலையே ஊருக்குள் சென்று பால் தயிர் நீர் தின்பண்டங்கள் என்று வாங்கி வந்து விடுவான். மறுநாள் காலை முதல் வியாபாரம் நடக்கும்.

இப்படியே வருடங்கள் உருண்டோட அங்கேயே சிற்றுண்டிச் சாலை வைத்தான். பல ஆண்டுகளாக கேசவனை அறிந்தவர்கள் அவனுக்கு உதவி புரிந்தனர். கடையில் நல்ல வருமானம் வந்தது. கையில் கொஞ்சம் காசு சேர்ந்தவுடன் தன் தந்தையைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தம்பி தங்கையர் நினைவு வந்தது. ஒரு விடுமுறை நாளாகப் பார்த்துப புறப்பட்டான். அனைவருக்கும் புதுத் துணி மணிகள் இனிப்புகள் பலகாரங்கள் பழங்கள் என வாங்கிக் கொண்டு ஊருக்குச் சென்றான்.

வயதாகிவிட்ட தன் தந்தை இன்னமும் வயலில் வேலை செய்வதையும் தன் பெரிய தம்பி அவருடன் நடவு செய்து கொண்டிருப்பதையும் பார்த்தான். அவர் முன் சென்று வணங்கி நின்றான். அடையாளம் தெரிந்து கொள்ளாத முருகன் திகைத்தார். தன் மகன் கேசவன் என்பதைத் தெரிந்து கொண்டபின் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டார். மகிழ்ச்சியில் அவர் கண்கள் நீரைச் சொரிந்தன.

"அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்" அன்றோ?

அனைவரும் அவனைத் தழுவி மகிழ்ந்தனர். அவர்களுக் கெல்லாம் கேசவன் வளமுடன் வந்ததில் மிக்க மகிழ்சசி.

" அப்பா! எல்லாரும் என்கூட வந்திடுங்க. உங்களை உக்கார வச்சு சோறு போடறேன். தம்பி தங்கச்சியைப் படிக்க வைக்கிறேன். இன்னும் ஏனப்பா கஷ்டப் படுறீங்க?" என்ற கேசவனைப் புன்னகையுடன் பார்த்தார் முருகன்.

" இந்த உடம்பு உழைச்சுச் சாப்பிடற உடம்புப்பா .உக்கார இன்னும் காலம் வரலே. அந்தக் காலம் வரும்போதும் நீ என்னைக் காப்பாத்து. நாங்க சேத்திலே காலை வச்சாத்தாம்பா பட்டணத்துக்காரங்க

சோத்திலே கையை வைக்க முடியும். நீ நல்லா இருக்கே அதுபோதும் எனக்கு. உன் பெரிய தம்பியைக் கூட்டிக் கிட்டுப்போ . நல்லா வளமா இருங்கப்பா." என்றபடியே பேச்சை முடித்துக்கொண்டார்.

இரண்டு நாட்கள் மகிழ்ச்சியுடன் தீபாவளிப் பண்டிகை கொண்டாடி விட்டுத் தன் தம்பியுடன் ஊர் திரும்பினான் கேசவன். மறக்காமல் அடுத்த தம்பி தங்கைகளைப் பள்ளியில் சேர்த்து விட்டுத்தான் வந்தான்.

வீட்டுக்குள் வந்தவுடன் சாமி படத்தின் முன் ஒரு கலயம் இருப்பதைப் பார்த்து "என்ன அண்ணே இது?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் தம்பி.

" இதுவா? வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்பதை நினைவு படுத்தத்தான் இந்தக் கலயத்தை வைத்திருக்கிறேன். என் ஆரம்ப நாட்களின் நினைவுச் சின்னம் இது " என்று சொன்ன அண்ணனைப் புரியாத புன்னகையுடன் பார்த்தான் தம்பி.

செவ்வாய், 21 ஜூலை, 2009

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் - முதல் பகுதி

பொன்வயல் ஒரு கிராமம். அந்தக் கிராமத்தில் முருகன் வயலில் நாற்று நாடும் வேலை செய்து பிழைத்து வந்தான். அவனுக்கு கேசவன் என்ற ஒரு மகன் இருந்தான். அவன் ஒரு வயதாக இருக்கும்போதே அவனது தாயார் இறந்து விட்டார். குழந்தை கேசவனை வளர்க்க இயலாமல் முருகன் இரண்டாம் முறை மணந்து கொண்டார். கேசவன் ஐந்து வயது முதலே தந்தையுடன் வயலுக்குச் சென்று நாற்று நடும் வேலை செய்து வந்தான்.

அவனுக்குப் பின்னால் தம்பி தங்கை என்று நான்கு பேர் பிறந்தனர். அதனால் கேசவனுக்கு வீட்டில் வேலை அதிகமானது. சுதந்திரமாக சுவாசிக்க முடியாமல் அந்தச் சின்ன குடிசைக் குள்ளே அவன் வாழ்வு முடங்கிப் போனது. அத்துடன் அவன் சின்னம்மாவின் கடுஞ் சொற்கள் வேறு. சிறுவனான அவனுக்கு வாழ்வே வெறுத்து விட்டது.

ஒரு நாள் நல்ல வெய்யில் நேரம். கஞ்சி எடுத்துக் கொண்டு தந்தையைத் தேடி வயலுக்குச் சென்றான் கேசவன். அவன் தந்தைக்குக் கஞ்சியைக் கொடுத்து விட்டு அந்த கலயத்தைக் கழுவி கையில் எடுத்துக் கொண்டு நடந்தான். தன் தந்தையை ஒரு முறை திரும்பிப் பார்த்தான். பின்னர் வேகமாக நடந்தான். அருகே உள்ள நகரத்தை நோக்கி அவன் கால்கள் நடந்தன. அவன் கண்கள் பாதை நோக்கி இருந்தன. உள்ளமோ சுதந்திரத்தை நாடித் துடித்துக் கொண்டிருந்தது. எப்படியேனும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற துடிப்பு அவன் முகத்தில் தெரிந்தது.

இருள் சேரும் நேரம். ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கினான். விடியும் முன்னரே எழுந்து நடக்கத் தொடங்கினான். பட்டணம் சென்று விட வேண்டும். ஏதேனும் வேலை செய்து பணம் சம்பாதித்துக் கொண்டு வந்து கஷ்டப்படும் தந்தைக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவன் உள்ளம் முழுவதும் நிறைந்திருந்தது. பன்னிரண்டு வயது பாலகன் அழுக்குப் பனியன் மட்டுமே அணிந்து கையில் சிறு கலயத்துடன் நகரை அடைந்தான்.

அவன் நகரத்துள் நுழைந்து ஏதோ ஒரு தெருவை அடைந்து பசியுடன் ஒரு வீட்டின் முன் நின்றான். பிச்சை எடுக்க மனமில்லை.பசியோ வயிற்றைப் புரட்டியது. அப்படியே சாய்ந்து அமர்ந்தான். அந்த வீட்டிலிருந்த ஒரு அம்மாள் கையில் பாத்திரத்துடன் வெளியே வந்தாள்.

"இந்தாப்பா தம்பி இந்த மோரைக் குடிக்கிறயா?" என்றபடியே மோரை அவன் கலயத்தில் இட்டாள். அந்த மோர் அவனின் சிறிய வயிற்றுக்குப் போதுமானதாக இருந்தது. மடமடவெனக் குடித்தான். புளித்த மோராக இருந்தாலும் வயிற்றின் பசி எரிச்சலுக்கு அந்தப் புளித்த மோர் உகந்த மருந்தாக இருந்தது. மோரைக் குடித்தவன் " அம்மா! ஏதாவது வேலை இருந்தாக் குடுங்கம்மா! " என்றான். அதற்கு அந்த அம்மாள், "வேலையெல்லாம் ஒன்றுமில்லையப்பா. ஏற்கெனவே வேலையில்லாமே ரெண்டு பசங்க உட்கர்ந்திருக்குங்க " என்று முணுமுணுத்து விட்டுச் சென்றாள்.

திங்கள், 20 ஜூலை, 2009

பொறுமையின் பரிசு

ஓர் ஊரில் அரசனுக்கு இணையான செல்வம் படைத்த செல்வந்தர் இருந்தார். அவருக்குக்குழந்தைகள் கிடையாது. ஆனால் குழந்தைகளைக் கண்டால் மிகவும் பிடிக்கும். அவர் தனக்குப்பிறகு தன சொத்துக்களுக்கு ஒரு வாரிசு வேண்டும் என விரும்பினார். பல இடங்களுக்குப்போய்ப் பார்த்தார்.ஒரு குழந்தையும் அவருக்குக் கிடைக்கவில்லை. யாரையும் அவருக்குப்பிடிக்கவில்லை. தான் வாரிசாக ஏற்றுக்கொள்ளும் சிறுவன் நல்ல பண்புள்ளவனாக இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் அவர் பல ஊர்களுக்கும் போய் அங்கங்கே இருக்கும் குழந்தைகளைப் பார்த்துப் பழகி வந்தார்.

ஒரு நாள் ஒரு சிறு கிராமத்துக்கு வந்தார்.அந்த கிராமம் மிகவும் அழகாக இருந்தது.ஊருக்குள் நுழையும் போதே பச்சைபசேல் என்று வயல்களும் மாந்தோப்பும் தென்னந்தோப்பும் மனதுக்கு மகிழ்ச்சியையும் குளிர்ச்சியையும் தந்தன. ஊருக்கு எல்லையாக சிலு சிலுவென்று பளிங்கு போன்ற நீரை உடைய ஆறு ஓடிக்கொண்டிருந்தது. சிறிய அம்மன் கோயிலும் பிள்ளையார் கோயிலும் அவ்வூர் மக்களின் பக்தியைப் பறை சாற்றிக்கொண்டிருந்தன. செல்வந்தர் அவ்வூரில் தனது வீட்டை அடைந்தார்.அந்த ஊரிலுள்ள சில தனவந்தர்கள் அவரைத்தேடி வந்து மரியாதை செலுத்திவிட்டுச் சென்றனர். செல்வந்தர் அவர்களிடம் " இவ்வூரில் உள்ள குழந்தைகளுக்கு நான் இனிப்பும் பரிசும் வழங்கப்போகிறேன். மாலை நான்கு மணிக்கு குழந்தைகள் அனைவரையும் எங்கள் வீட்டுத்தோட்டத்தில் கூடச்சொல்லுங்கள்." என்றார்.
நிறைய விளையாட்டுச் சாமான்களும் இனிப்புகளும் வீடு நிறைய குவித்திருந்தார்.

அந்த ஊரில் அமிர்தம் என்ற ஒரு பெண்மணி வசித்து வந்தாள். அவள் கணவன் தோட்டவேலை செய்து வந்தான். அவர்களுக்கு ஒரே மகன். கண்ணன் என்று அவனைச் செல்லமாக அழைத்து வந்தனர். கண்ணன் நல்லவனாக இருந்தாலும் பொறுமை என்பதே அவனிடம் இல்லை இதனால் அவன் என்ன நல்லதைச்செய்தாலும் அது தவறாக முடியும் அல்லது கெட்ட பெயரை த்தரும்.அவன் அம்மா பொறுமையாக இருக்கும்படி பல முறை சொல்லியும் அவன் கேட்கவில்லை. பொறுமையாக இருந்த பலரது வரலாறுகளைச் சொல்லியும் அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை.

அத்துடன் "ஏம்மா நான் நல்லா படிக்கிறேன். ஒழுங்காக பள்ளிக்கூடம் போகிறேன். நீயும் அப்பாவும் சொன்னபடி கேட்கிறேன்.பொறுமை இல்லாததால் சில சமயம் தவறு நேர்ந்து விடும். அதனால் என்ன குறைந்து விடப்போகிறது." என்று வாதாடுவான்.
அமிர்தமும் " பொறுத்தார் பூமியாள்வார் போகாதவர் காடாள்வார் என்ற பழமொழி தெரியாதா உனக்கு? நீ பொறுமையைக் கடைப்பிடித்தால் இன்னும் சிறப்பாக ப்போற்றப்படுவாய்."என்று சொல்லிப்பார்த்தாள் ஆனால் கண்ணன் பொறுமையில்லாமல் எல்லாவற்றிலும் அவசரம் காட்டினான். அவனது அவசர புத்தியைப் பார்த்து மிகவும் வருத்தப் பட்டாள் அவனைத்திருத்த வழி தெரியவில்லையே என ஏங்கினாள்.

அன்று பள்ளிசெல்ல அவசரமாக ஓடி வந்து சாப்பிட அமர்ந்தான். தன்னுடைய தட்டை வைத்துக்கொண்டு " அம்மா! அம்மா!" என்று அழைத்தான். அம்மா வரத்தாமதமாகவே தானே சாதம் போட்டுக்கொண்டு குழம்பை எடுத்து வேகமாக ஊற்றிக்கொண்டான். பாத்திரம் கீழே விழுந்து அத்தனை குழம்பும் கொட்டிவிட்டது. அமிர்தத்துக்கு கோபத்தை விட அழுகையும் வருத்தமும்தான் ஏற்பட்டது.குற்றம் செய்த கண்ணன் தலை குனிந்து கொண்டான்.

அவன் அம்மா "கண்ணா எனக்காக என்று ஒரு நாள் மட்டும் இரவு வரை பொறுமையாக இருந்து பார்.அது உனக்கு எத்தனை நன்மைகளைச்செய்யும் என்பதை அனுபவ பூர்வமாக நீ அறிவாய்..அப்போதுதான் பொறுமையின் பெருமை உனக்குப்புரியும். என்று மட்டுமாவது நீ பொறுமையாக இருப்பதாக இருந்தால் என்னுடன் பேசு இல்லாவிட்டால் அம்மா என்று கூப்பிடாதே." என்று வருத்தத்துடன் சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.

கண்ணன் சிந்தித்தான்." அம்மா சொல்வதுபோல் இன்று ஒரு நாள் மட்டும் பொறுமையாக இருந்து பார்ப்போமே என்ன நன்மையெல்லாம் ஏற்படுகின்றன என்பதைத்தெரிந்து கொள்வோமே " என முடிவு செய்து கொண்டான்.

பாத்திரத்தில் மீதியிருந்த குழம்பைத் தட்டில் ஊற்றிக்கொண்டு கொஞ்சமாக சாப்பிட்டு விட்டு நிதானமாக எழுந்து கையைக் கழுவிக்கொண்டு செம்பைக்கீழே வைத்தான்.அம்மாவின் புடவைத்தலைப்பில் கையைத் துடைக்காமல் துண்டைத் தேடி எடுத்துத் தன கையைத் துடைத்துக்கொண்டு மெதுவாக அம்மாவிடம் வந்தான்.

"அம்மா! நான் பள்ளிக்குப்போய் வருகிறேன். நீ சொன்னது போல் இன்று முழுவதும் பொறுமையாக இருப்பேன்." என்று சொன்னபோது அமிர்தம் மகிழ்ச்சியுடன் தலை அசைத்து விடை கொடுத்தாள். அவன் செல்வதைப்பார்த்துக்கொண்டே நின்றுகொண்டு இருந்தாள். அவசரமாக ஓடும் தன மகன் இன்று நிதானமாக நடந்து செல்வதைப் பார்க்க அவளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. திருப்தியாகவும் இருந்தது.

தெருமுனையில் கன்னக் நிதானமாக வந்து கொண்டிருந்த போது ஒரு லாரி வேகமாக வந்தது.நிதானமாக நடந்து சென்றவன் சட்டென ஒதுங்கி நின்றான். அந்த லாரி வேகமாக கண்ணனைக்கடந்து சென்று மறைந்தது. அங்கு நின்ற ஒரு பெரியவர் கண்ணனைப் பார்த்து ' தம்பி! நல்லவேளை நீ தப்பினாய். நீ நிதானமாக பொறுமையாக வந்ததால் பிழைத்தாய் இல்லாவிட்டால் அந்த வண்டியில் அடிபட்டு உயிரை இழந்திருப்பாய்." என்றபோது அச்சத்தால் ஒரு கணம் அவன் உடல் நடுங்கியது. பள்ளியில் அவன் மிகவும் பொறுமையாக நடந்து கொண்டான்.

பொறுமையைக் கடைப் பிடித்த சிறிது நேரத்திலேயே தனக்கு எப்பேர்ப்பட்ட அனுபவம் ஏற்ப்பட்டு விட்டது. என நினைத்துக்கொண்டான்.
தான் உயிர் பிழைத்த நிகழ்ச்சி அவன் உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்டது.

அன்று மாலை நான்கு மணிக்கு ஒரு செல்வந்தர் பரிசுகளும் இனிப்பும் வழங்கப் போகிறார். எல்லாச்சிறுவர்களையும் வரச் சொல்லியிருக்கிறார். என்று அவன் நண்பர்கள் சொன்னபோது வழக்கம்போல் அவசரம் அவன் மனதில் துளிர் விட்டது. ஆனால் அவன் தாயாரிடம் சொன்னசொல்லைத் தவறக்கூடாது என்று எண்ணிப பொறுமையாக இருக்கலானான்.

பள்ளி விட்டவுடன் எல்லா சிறுவர்களும் அந்த செல்வந்தர் வீட்டை நோக்கி ஓடினார்கள். இப்போதும் கண்ணன் பொறுமையாக நடந்தபடியே செல்வந்தர் வீட்டுத்தோட்டத்தில் போய் நின்றான். அங்கே நிறைய விளையாட்டுப் பொருள்களும் பொம்மைகளும் வைக்கப்பட்டிருந்தன. பெரிய கூடையில் இனிப்புப் பொட்டலங்கள் இருந்தன. செல்வந்தர் நாற்காலியில் அமர்ந்திருந்தார். சிறுவர்கள் அத்தனை பேரையும் கூர்ந்து கவனித்தபடி இருந்தார். எல்லாச் சிறுவர்களும் முண்டியடித்துக்கொண்டு நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் செல்வந்தர் எழுந்து நின்றார். " சிறுவர்களே இந்த விளையாட்டுப் பொருள்களும் இனிப்புகளும் உங்களுக்காகவே வைக்கப் பட்டுள்ளன.ஒவ்வொருவராக வந்து ஒரு விளையாட்டுப் பொருளையும் இனிப்புப்பொட்டலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். " என்று சொன்னவுடன் அத்தனை சிறுவர்களும் அவரவருக்குப் பிடித்த பொருளை பொறுக்கிக் கொள்ள ஆரம்பித்தனர்.கொஞ்ச நேரம் ஒரே அமர்க்களமாக இருந்தது அந்த இடம். கண்ணனுக்குக் கையும் காலும் பரபரத்தன. ஆனாலும் பல்லைக்கடித்துக்கொண்டு பொறுமையாக நின்றிருந்தான். அனைவரும் எல்லாப் பொருள்களையும் எடுத்துச் சென்ற பிறகு நிதானமாக மீதி இருந்த இனிப்பையும் இருந்த பொருள்களில் உடையாததாகப் பார்த்து ஒன்றைப் பொறுக்கி எடுத்துக்கொண்டான். இவனையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்த ஏல்வந்தருக்கு நன்றி சொல்லிவிட்டுச் சென்றான்.

அவனை அருகே அழைத்த செல்வந்தர் அவனைப்பற்றி விசாரித்தார். அவனுடைய பொறுமையான பண்பைப் பார்த்து ஆச்சரியப்பட்டார். அவனுடன் அவன் வீட்டுக்கு வந்த செல்வந்தர் அமிர்தத்திடம் கண்ணனை தனக்கு வாரிசாகக்கொள்ள நினைத்திருப்பதாகச் சொன்னபோது அவனால் நம்பவே முடியவில்லை. ஒரே ஒரு நாள் பொறுமையாக இருந்ததற்கு எப்பேர்ப்பட்ட பரிசு!.

மெதுவாகத் தாயாரிடம்" அம்மா! இனி என் வாழ்நாள் முழுவதும் நான் பொறுமையுடன் இருப்பேனம்மா. பொறுமையின் பெருமையை உணர்ந்து கொண்டேன்." என்று சொன்னபோது அமிர்தம் மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.

என்ன! நீங்களும் இனி பொறுமையாக இருப்பீர்கள் அல்லவா?