மங்களபுரி மன்னன் மகேந்திரன் இறைவனைப் பற்றிய எண்ணமே இல்லாதவன். எல்லாக் காரியங்களும் தன்னைப் போன்ற மன்னர்களால்தான் நடக்கிறதே அன்றி இறைவனால் அல்ல என்று எண்ணம் கொண்டவன்.மன்னன் எவ்வழியோ மக்களும் அவ்வழிதானே.எனவே ஒரு சிலரைத் தவிர மற்றையோர் மன்னனின் வழியிலேயே நடந்து வந்தனர்.
ஒருநாள் மன்னன் சபையில் அமர்ந்திருக்கும் வேளையில் காட்டின் அருகே வசிக்கும் மக்கள் கூட்டமாக மன்னனைக் காண வந்தனர்.
"மன்னர் பெருமானே! எங்கள் வயலில் விளைந்த கரும்பு நெல் போன்ற தானியங்களைஎல்லாம் காட்டு மிருகங்கள் அழிக்கின்றன. அவற்றைத் தாங்கள்தான் தடுக்கவேண்டும்" என வேண்டினர்.
அருகே நின்றிருந்த மெய்க்காப்பாளன் மெதுவாக "எல்லாம் ஈசன் கருணை.." என்று முணு முணுத்தான்.
மன்னர் கோபமாக அவனைப் பார்த்தார்."என்ன சொன்னாய்? எல்லாம் ஈசன் கருணையா ? வனவிலங்குகளை ஏவிவிட்டு மக்களைத் துன்புறுத்துவதுதான் ஈசன் கருணையா?"
மெய்க்காப்பாளன் தலையைக் குனிந்து கொண்டான்.
அன்று காலையிலேயே மன்னன் சில வீரர்களை அழைத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விலங்குகளை வேட்டையாடத் தொடங்கினான். அவனது உண்மையான மெய்க்காப்பாளனான சித்திரசேனன் மன்னனை நிழல் போலப் பின்தொடர்ந்து வந்தான்.
வெகுநேரம் வேட்டையாடிக் களைத்துப் போன மன்னன் ஒரு மரத்தின் நிழலில் கூடாரம் அடித்துத் தங்கினான்.
அவனுடன் வந்த வீரர்களும் இளைப்பாறினர். ஆனால் சித்திரசேனன் மட்டும் கண்ணும் கருத்துமாக மன்னனைப் பாதுகாத்தான்.
கூடாரத்தைச் சுற்றிவந்துகொண்டிருந்த சித்திரசேனன் ஏதோ சத்தம் கேட்டுத் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டான். சற்றுத் தொலைவிலிருந்து யாரோ இருவர் மறைந்து கொண்டு தன்னைக் கண்காணிப்பதைக் கண்டான்.
அவர்களைக் கவனியாதவன்போல் நடித்தவன் தன் உடன் இருக்கும் படைவீரருக்கு ஜாடை காட்டினான்.அதைப் புரிந்து கொண்ட படைவீரர்களும் ஒளிந்திருந்த இருவரையும் பிடிக்க விரைந்தனர். ஆனால் அதற்குள் அவர்கள் எங்கோ மறைந்து விட்டனர்.
சத்தம் கேட்டு மன்னன் கூடாரத்தினின்றும் வெளியே வந்தான்.
செய்தியைக் கேட்டு மிகுந்த கோபமடைந்தான் மகேந்திரன்.
" எல்லாம் ஈசன் கருணை " என்று கூறியபடியே மன்னன் முன் கைகட்டி நின்றான் சித்திரசேனன்.
"பகைவன் நம்மை உளவு பார்த்துச் சென்றிருக்கிறான் இதையா ஈசன் கருணை என்கிறாய்?"
"மன்னர்மன்னா, கோபம் வேண்டாம். எந்தச் செயலும் அவனது கருணையாலேயே நடக்கிறது. இதை நம்புங்கள். நல்லதே நடக்கும்"
ம்... என உறுமிய மன்னன் தன் படைவீரருக்குக் கட்டளை பிறப்பித்தான் "என்னுடன் வந்திருப்பவர் அனைவரும் இந்தக் காட்டிலிருக்கும் அந்த பகைவர்களைப் பிடித்தபின்தான் நாடு திரும்ப வேண்டும்."
வீரர்கள் ஒற்றர்களாக மாறி காட்டில் அலைந்து தேடினர்.
மறுநாளே இரண்டு வீரர்கள் மன்னனை அணுகி காட்டின் நடுவே மறைந்துகொண்டிருக்கும் பகை மன்னனின் படைகளைப் பற்றிய செய்தியைச் சொன்னபோது மகேந்திரன் திடுக்கிட்டான். நமது நாட்டைப் பிடிக்க அண்டைநாட்டான் செய்துள்ள சூழ்ச்சி தெரிந்தது.
சற்றும் தாமதியாது காட்டில் மறைந்து படையெடுக்கக் காலம் பார்த்திருந்த பகைவனை வென்று பகை முடித்தான் மகேந்திரன்.
வெற்றிவிழாவின்போது சரியான சமயத்தில் மறைந்தவிரோதிகளைக் கண்டுபிடித்த சித்ரசெனனுக்குப் பரிசளித்தான் மன்னன். "இறைவனின் கருணையே" என்றபடியே வணங்கினான் சித்திரசேனன்.
"இதுகூடவா ஈசன் கருணை?"
"ஆம் மன்னா. விலங்குகள் பயிரை அழித்ததால் வேட்டைக்குச் சென்றீர்கள். அதனால்தான் பகைவரைக் காணமுடிந்தது. பகையும் முடிந்தது.ஈசனின் கருணையன்றி வேறு எதுவும் இல்லை மன்னா."
ஆனாலும் அவனை இகழ்ச்சியாகப் பார்த்துச் சிரித்தான் மன்னன் மகேந்திரன்.
நாட்கள் கழிந்தன. வசந்த காலம் வந்தது. மன்னன் மன மகிழ்ச்சிக்காக காட்டில் வேட்டைக்குப் புறப்பட்டான். மெய்க் காப்பாளனான சித்திரசேனனும் உடன் சென்றான்.
மகேந்திரனும் சித்திரசெனனும் வேட்டையாடிக் களைத்தனர். வேட்டையாடும் மகிழ்ச்சியில் காட்டுக்குள் வெகு தொலைவு வந்ததையே இருவரும் அறியவில்லை.வெகு நேரம் வேட்டையாடியும் விலங்குகளும் ஒன்றும் கிட்டவில்லை.மாலைநேரம் நெருங்கிக் கொண்டிருந்தது.மன்னனுக்கோ நல்ல பசி.
"சித்ரசேனா, என்னால் பசிதாள முடியவில்லை."
"இறைவன் கருணையால் விரைவில் உங்கள் பசி நீங்கும் மன்னா.
, இந்த மரத்தடியில் ஓய்வெடுங்கள் உங்களுக்கு கனிகளைத் தேடிக்கொண்டு வருகிறேன்."
"இந்த பசி நேரத்திலும் இறைவனின் கருணை என்றுபேசுகிறாயே . இங்கேயே அமர்ந்திருந்தால் உன் இறைவனின் கருணை உணவளிக்குமா?"
"ஈசனின் கருணை இருந்தால் எதுவும் நடக்கும்"
"அப்படியானால் நீ இங்கேயே இரு. நான் கனிகளைத் தேடிச் சென்று புசித்துவிட்டு வருகிறேன். உன் ஈசன் உனக்குக் கருணை புரிகிறானா பார்ப்போம்."
"இதுவும் ஈசன் கருணையே" என்றபடியே மரத்தின் அடியில் அமர்ந்து கொண்டான் சித்திரசேனன்.
மிகுந்த களைப்பால் அப்படியே தூங்கி விட்டான். யாரோ அவனைத் தட்டி எழுப்புவதை அறிந்து கண் விழித்தான் சித்திரசேனன்.
கையில் வில்லும் அம்புமாய் ஒரு வேடன் நின்றிருந்தான்.அவனது கையில் இருந்த மான் இருவருக்கும் உணவானது.
வெகு நேரம் கழித்து மன்னன் மிகுந்த களைப்போடு தள்ளாடியபடி அங்கு வந்தான். தான் இருந்த இடத்திலேயே மானைச் சமைத்துச் சாப்பிட்ட சித்திரசேனன் மன்னனின் பசியை முதலில் தணித்தான்.
"சித்ரசேனா, இது வசந்த காலம் என்பதை நீயும் மறந்தாய். நானும் மறந்தேன்.எல்லா மரங்களும் பூக்களைச் சுமந்து கொண்டுள்ளன. எனவே எனக்கு கனிகளோ காய்களோ கிட்டவில்லை."
"இதைத்தான் ஈசனின் கருணை என்று சொன்னேன் மன்னா. மனதில் நாம் கொள்ளும் நம்பிக்கையே இறைவனின் கருணையாக நமக்கு நல்ல பலனைத் தருகிறது. நம்பிக்கை இருக்கும் உள்ளத்துக்குள்ளேதான் ஈசன் குடியிருக்கிறான் ".
"உண்மைதான் சித்ரசேனா. ஈசனின் கருணையை நானும் நம்புகிறேன்."
இருவரும் மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை நோக்கி குதிரையைச் செலுத்தினர். இறைவனின் கருணையைப் புரிந்துகொண்ட மன்னன் மகேந்திரன் புது மனிதனாகத் திரும்பினான்.
அந்த மன்னனைப் போலவே நாமும் இறைவனின் கருணையை எண்ணி நம் வாழ்வில் பல வெற்றிகளைப் பெறுவோம்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com