எந்த எல்லையும் இல்லாதவரான ஸ்ரீ ராகவேந்திரர் புன்னகையோடு நவாபுக்கு பதிலளித்தார்.
"என் பிருந்தாவனத்தின் கர்ப்பகிரகத்தின் மேல் ஒரு சிறிய கோபுரம் அமைக்கச் சொல்லியிருக்கிறேன்.
அதிலும் நான் பிரசன்னமாகியிருப்பேன்.அதைத் தரிசித்தாலே என்னைத் தரிசித்தது போலத்தான்."என்ற போது
அதிலும் நான் பிரசன்னமாகியிருப்பேன்.அதைத் தரிசித்தாலே என்னைத் தரிசித்தது போலத்தான்."என்ற போது
நவாப் மகிழ்ச்சியுடன் நன்றி கூறி பிரசாதம் பெற்றுக் கொண்டு வணங்கிச் சென்றார்.
இப்போது அனைத்துப் பணிகளும் முடிவுற்று பிரவேசம் செய்ய வேண்டியது தான் பாக்கி.
ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போகிறார் என்ற செய்தி காட்டுத் தீ போல எல்லா இடங்களுக்கும் பரவ பல பாகங்களிலிருந்தும் மக்கள் மாஞ்சால கிராமம் நோக்கி திரள் திரளாக வர ஆரம்பித்தனர்.
கி.பி.1671 விரோதிகிருது வருஷம் சிராவண மாதம் கிருஷ்ண பக்ஷம் துவிதீயை திதி வியாழக்கிழமை. அதிகாலை நேரம் அந்த அதிகாலை நேரத்தில் துங்கபத்திரையில் வெள்ளமா மக்கள் வெள்ளமா என திகைக்கும் அளவிற்கு மக்கள் நிறைந்திருந்தனர்.
எல்லார் மனத்திலும் துக்கம்.யார் முகத்திலும் மகிழ்ச்சியில்லை.நம் கண்முன் நடமாடிக்கொண்டிருக்கும் கலியுகத் தெய்வம் காமதேனு கற்பகவிருட்சம் குணக்குன்று வைதீக சிரோன்மணி நம் கண்களை விட்டு மறையப் போகிறார்.நம்மை விட்டுப் பிரியப் போகிறார் என்ற செய்தி அனைவர் கண்களிலும் நீரை நிரப்பியிருந்தது.ஸ்ரீ ராகவேந்திரரையே மக்கள் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்.திவ்யமான ஸ்ரீ மூலராமரின் பூஜையை முடித்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கினார் ராகவேந்திரர்.பின்னர் எழுந்து நடந்தார் பிருந்த மந்திரம் நோக்கி.மக்களெல்லாம் ராகவேந்திரா, குருவே எனக் கூவிய வண்ணம் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர்.
சுவாமிகள் பிருந்தாவனத்தின் முன் அமர்ந்து கொண்டார்.அவர் எதிரே கமண்டலம் துளசிமாலை பிரம்மதண்டம் வைக்கப் பட்டிருந்தன.மக்களை நோக்கித் திரும்பி அனைவரையும் அன்புடன் பார்த்தார்.
"நான் 700 ஆண்டுகள் இந்த இருந்தாவனத்தில் ஜீவனோடு வாழப் போகிறேன்.என்னை நாடி வருவோருக்கு அவர்கள் துன்பத்தைப் போக்குவேன்.நீங்கள் அன்பும் பக்தியும் நல்ல பண்புகளும் கொண்டு வாழ வேண்டும்.
ஸ்ரீஹரி உங்களுக்கு நன்மையே செய்வார்.என்று கூறியவர் இறைவனைப் பார்த்து தன குற்றங்களை மன்னித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என வேண்டிக்கொண்டார்.
பின்னர் மக்களிடம் யாரும் சோகமாக இருக்கக் கூடாது. தான் பிருந்தாவனப் பிரவேசமான இந்த நாளை சந்தோஷமாக சமாராதனை போல் வயிறார போஜனம் செய்து கொண்டாட வேண்டும் என்று கூறினார்.பின்னர் வெங்கண்ணா வை அழைத்து தனது பிரவேசம் முடிந்தபிறகு என்னென்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கமாகக் கூற கண்ணீரோடு அதைக் கேட்டுக் கொண்டார் வெங்கண்ணா.பின் அருகிருந்த சீடரைத் தம் வீணையைக் கொணருமாறு பணித்தார்.அந்த வாத்தியத்தை சுருதி மீட்டிப் பாடத் தொடங்கினார்.
அவர் பாடிய ஒரே பாடல்
"இந்து எனகே கோவிந்தா நின்ன பாதாரவிந்தவ தோரோமுகுந்தா "என்பதுதான்.இறைவனிடம் உன்பாத தரிசனத்தைக் கொடு. நந்தகோபன் மகனே திருமகளின் மணாளனே கோவிந்தா கோகுலத்தின் ஆனந்தமாய்த் திகழ்ந்தவனே.
உலகப் பற்றுகளில் மூழ்கி நல்வழி அறியாமல் இவ்வுலகில் வாழ்ந்துவிட்டேன்.பாலகன் இவன் என்று என் குற்றங்களை எண்ணாமல் என் தந்தையே என்னைக் காப்பாய்
மூடனாக இருந்து அற்ப ஜீவனான நான் ஆழ்ந்த பக்தி செய்யவில்லை உன்னைக் காண எங்கும் வரவில்லை.உன்னைப் பற்றிப் புகழ்ந்து பாடவுமில்லை.அருள்புரியும் கண்ணா உன்னை வேண்டிக் கொள்கிறேன். காப்பாயாக.
இந்தத் தரணியில் பூவுலகிற்குப் பாரமாக வாழ்ந்ததோடு சரியில்லாத வழிகளில் நடந்தேன் யாரும் என்னைக் காப்பவரில்என்று பொருள் படும் கன்னடப் பாடலைப் லை.உன்னையே நம்பிச் சேர்ந்துவிட்டேன். அய்யனே வேணு கோபாலா கைகொடுத்துக் காப்பாய் ஸ்ரீ ஹரியே "என்னும் பொருள் பொதிந்த கன்னடத்தில் அமைந்த
இந்தப் பாடலை மனமுருகப் பாட அனைவர் கண்களிலும் நீர். இறைவனிடம் நாம் எப்படி வேண்டிக் கொள்ளவேண்டும் என்பதையே பாடிக் காட்டிவிட்டார் சுவாமிகள்.அதே சமயம் பூஜையில் இருந்த சந்தான கோபாலன் நர்த்தனமாடியதை அனைவரும் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினர்.
வேதபாராயணம் பிராம்மணோத்தமர்களால் நடைபெற்றுக் கொண்டிருக்க ஸ்ரீஸ்வாமிகள் ஸ்தோத்திரம் சொல்லியவாறே நடந்தார்.மேள தாள வாத்தியங்கள் முழங்க பிருந்தாவனத்தின் அருகில் சென்று நின்றார். மக்களை அன்புடன் நோக்கி ஆசீர்வதித்தார்.
சிஷ்யர்களை பிருந்தாவனத்திற்கு பூஜை செய்யச் சொன்னார்.பின்னர் பிரம்மதண்டத்தையும் துளசி மாலையையும் வலது கையிலும் கமண்டலத்தை இடது கையிலும் எடுத்துக் கொண்டு நடந்தார்.
ஓம் நமோ நாராயணாய என்று எங்கும் குரல்கள் ஒலித்தன.மீண்டும் மக்களை நோக்கி ஆசீர்வதித்துவிட்டு பிருந்தாவனத்தை நோக்கி நடந்தார். அருகே நின்ற யோகீந்திரரின் உதவியுடன் ப்ருந்தாவனத்துள் பிரவேசித்து யோகமுத்திரையுடன் பத்மாசனமிட்டு அமர்ந்தார்.அவரது வலது கையில் துளசி மாலை ஜபம் செய்தபடி உருட்டிக் கொண்டிருதார்.பக்தர்கள் அனைவரும் அந்தத் துளசிமாலையைப் பார்த்தபடி ஓம் நமோ நாராயணாயா என்று உரத்த குரலில் கூறியபடியே கண்களில் நீர் சொரிய நின்றிருந்தனர்.
சற்று நேரத்தில் சுவாமிகள் கையிலிருந்த துளசிமாலை அசைவற்று நின்று விட்டது. அதைக் கண்ட வெங்கண்ணா சுறுசுறுப்பானார்.
ஸ்ரீராகவேந்திரர் கூறியிருந்தபடி 1200 சாலிக்ராம கற்களால் பிருந்தாவனம் நிரப்பப்பட்டு மாதாவரத்திலிருந்து கொண்டு வரப்பட்ட விசேஷமான கல்லினால் பிருந்தாவனம் மூடப்பட்டது.வெங்கண்ணா விக்கி விக்கி அழுதார்.சீடர்களும் அழுதார்கள்.ம்ரித்திகை என்று சொல்லப்படும் மண்ணை பிருந்தாவனத்தின் மேல் பரப்பினார்கள்.ஸ்ரீயோகீந்திரர் தீபாராதனை காட்டினார். அனைவரும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்கினர்.
ஸ்ரீயோகீந்திரர் ஸ்ரீகுருகளின் விருப்பப் படியே பிருந்தாவனத்துக்கு எதிரே ஆஞ்சநேயரைப் பிரதிஷ்டை செய்தார்.
ஸ்ரீராகவேந்திரரின் முக்கிய சீடர்களில் ஒருவர் அப்பண்ணாச்சார் இவரைப் பற்றிச் சொல்லாமல் ராகவேந்திர சரிதம் முற்றுப் பெறாது.ஏனெனில் இன்று நாம் சொல்லிக் கொண்டிருக்கும் ராகவேந்திர ஸ்தோத்திரத்தை இயற்றியவரே இவர்தான்.
துங்கபத்திரா நதியின் மறுகரையில் இருக்கும் பிக்ஷாலையா என்னும் கிராமத்திற்கு மடத்து வேலையாக இவரை அனுப்பியிருந்தார் சுவாமிகள்.பிருந்தாவனப் பிரவேசத்திற்குள் வந்துவிடலாமென எண்ணியிருந்தார் அப்பண்ணா.ஆனால் வேலை முடிய சற்று காலதாமதமாகிவிட்டது. அன்று காலை வேகவேகமாக ஓடிவந்தார் மாஞ்சாலம் நோக்கி.துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது அதைக் கடக்க இயலாமல் கலக்கத்துடன் நின்றார்."ஹே ராகவேந்திரா, கடைசியாக உம்மைக் கண்ணாரக் காணும் பாக்கியம் இந்த அடியேனுக்குக் கிடைக்காதா " என்று தேம்பித் தேம்பி அழுதபடி நின்றார்.பின்னர் துணிந்து ஆற்றில் இறங்கினார்.அவரின் வாய் ராகவேந்திரரின் மகிமையை "ஸ்ரீபூர்ண போத குருதீர்த்த "என்று பாடிக்கொண்டே இருக்க துங்கபத்திரையைக் கடந்து விட்டார்.இவரது பக்தியிலும் பாடல் சிறப்பிலும் கட்டுண்ட துங்கபத்திரையே இவருக்கு வழிவிட்டாள் எனலாம்
மாஞ்சாலத்தை அடைந்து ராகவேந்திரர் ஜீவசமாதியாகிவிட்ட பிருந்தாவனத்தின் முன் வீழ்ந்து கதறினார்.
அதனால் இவரது ராகவேந்திர ஸ்தோத்திரத்தின் கடைசி அடிகள் முடிக்கப்படாமல் அப்படியே நின்றிருந்தது.
அதை பிருந்தாவனத்தின் உள்ளிருந்து "சாக்ஷி ஹயா ஸ்தோத்ரஹி" என்ற ஸ்ரீராகவேந்திரரின் குரல் முடித்து வைத்தது.
அப்பண்ணா ச்சாரியார் இயற்றிய ராகவேந்திர ஸ் தோத்திரத்தின் 31வது ஸ்லோகத்தின் கடைசி வரிகள் ராகவேந்திரரின் வாய்மொழியாக பிருந்தாவனத்தின் உள்ளிருந்து வந்தவையே.பின்னர்
பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயச
பஜதாம் கல்ப விருக்ஷாய நமதாம் காமதேனவே."
என்ற ஸ்லோகத்தையும் இயற்றினார் அப்பண்ணா. இவ்விரு வரிகளைக் கூறி ஸ்ரீராகவேந்திரரை எங்கிருந்து நினைத்தாலும் அருள் புரியும் கலியுக கற்பகவிருக்ஷம் நம் ராகவேந்திரர்.அவரை வணங்கி என்றும் நன்மைகளை அடைவோமாக.
"ஓம் ஸ்ரீ ராகவேந்த்ராய நமஹ."
--
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com