ஞாயிறு, 7 ஜூலை, 2013

108-பழமொழிக்கதைகள் -கைக்கு எட்டியது

                                                  ஒரு ஊரின் அருகே பெரிய காடு ஒன்று  இருந்தது.அந்தக் காட்டில் பலவித மரங்கள் நன்கு 
    1.                செழித்து வளர்ந்திருந்தன.  
    அந்த மரங்களை நாடி பலவிதமான பறவைகளும்   வந்து 
      1. மகிழ்ச்சியோடு தங்கிச் செல்லும். இவற்றை வேட்டையாட வேட்டைக்காரர்களும் வருவார்கள்.
            
            ஒருநாள் இந்தக் காட்டுக்கு ஒரு வேட்டைக்காரன் வந்தான். வெகுநேரமாகியும் அவனுக்கு எந்தப் பறவையோ விலங்கோ அகப்படவே இல்லை.மிகவும் களைத்துப்போனவன் ஒரு மரத்தடியில் சற்றே ஓய்வெடுக்கலாம் என அமர்ந்திருந்தான்.திடீரென இனிமையான குரல் கேட்டது.அந்த மனிதன் சுற்றிச் சுற்றிப் பார்த்தான்.சற்றே தலையைத் தூக்கி மரத்தின்மேல் பார்த்தான். ஆச்சரியப் பட்டுப்போனான்.
            மரத்தின்மேல் அவன் கண்டது தங்கமயமான அழகிய பறவை. அதைப் பிடிக்க விரும்பியவன் தன கையிலிருந்த வில்லில் அம்பு தொடுத்தான்.அப்போது அந்தப் பறவை ஒரு தங்கச் சிறகை அவன்மீது உதிர்த்தது.அந்தச்சிறகை எடுத்துச் சென்றவன் அதைவிற்று நல்ல உடை உணவு பெற்று நிம்மதியாக இருந்தான்.
ஆனால் பேராசை அவனை விடவில்லை.மீண்டும் காட்டுக்குச்சென்றான். அதே மரத்தடியில் வெகுநேரம் காத்திருந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அந்தத் தங்கப் பறவை அங்கு பறந்து வந்து ஒரு கிளையில் அமர்ந்தது. வேடன் சட்டென அம்பை எடுத்து அந்தப் பறவையைக் குறி பார்த்து அடித்தான். அடிபட்ட பறவை வேடனின் காலடியில் விழுந்தது.சட்டென அதைப் பிடித்துக் கொண்ட வேடன் அதன் காயத்திற்கு காட்டிலிருந்து ஒரு பச்சிலையைப் பறித்துக் கட்டுப் போட்டான்.சற்று நேரத்தில் அந்த வேடன் அந்தப் பறவையுடன் தன வீடு நோக்கி நடந்தான்.
  அவன் வீட்டைச் சென்று அடைந்தவுடன் அந்தத் தங்கப் பறவை ஒரு சிறகை உதிர்த்தது. அந்தச்சிறகை விற்று  தங்கப் பறவைக்கு ஒரு கூண்டும் தன்குடும்பத்திற்கு வேண்டிய பொருள்களையும் வாங்கி வந்தான்.

             அன்று இரவு படுத்துக் கொண்டிருந்த அந்த வேடனுக்கு திடீரென்று ஒரு சந்தேகம் முளைத்தது.நம் நாட்டு அரசனுக்கு இந்தஅரிய  பறவையைப் பற்றித் தெரிந்தால் நான் மறைத்து வைத்தது குற்றம் என்று என்னைத் தண்டித்து விடுவாரே. இந்த அபூர்வப் பறவை மன்னருக்குத்தான் சொந்தம் நாளையே இதை மன்னரிடம் சேர்த்து விடுவோம் என்று முடிவு செய்தான்.
               மறுநாள் காலையில் அந்த அதிசயப் பறவையைக் கூண்டுடன் எடுத்துக கொண்டு அரச சபைக்குச் சென்றான். வழியெங்கும் மக்கள் அந்த அழகிய தங்கப் பறவையைப்  பார்த்து அதிசயப் பட்டு நின்றனர். சிலர் அவனுடன் சென்று சபையில் நடப்பதைக் காணவேண்டும் என்னும் ஆவலுடன் சென்றனர். 
மன்னன் முன் சென்று அந்தப் பறவையை வைத்து வணங்கினான் வேடன். அப்போது மன்னனின் முன்பாகவே ஒரு தங்கச் சிறகை உதிர்த்தது அந்தப் பறவை.அதைக் கண்டு மன்னன் மிகவும் ஆச்சரியப் பட்டான். சேவகரிடம் அந்தப் பறவையைக்  கவனமாகப் பார்த்துக்கொள்ளும்படி ஆணையிட்டான்.வேடனுக்கு மிகுந்த பொன்னும் பொருளும் கொடுத்தனுப்பினான்.வேடனும் மகிழ்ச்சியுடன் தன இருப்பிடம் சென்றான்.
           மந்திரியார் மெதுவாக மன்னனிடம் பேசினார்."மன்னா, இது ஏதோ மந்திரப் பறவை போலத் தோன்றுகிறது.இது அரசரின் அரண்மனையில் இருந்தால் அதனால் அரசருக்கும் இந்நாட்டுக்கும் ஏதேனும் தீங்கு விளைந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் மன்னா,"
அரசனும் சிதித்தான்."உண்மைதான் நீங்கள் சொல்வதும் சிந்திக்கவேண்டிய விஷயம்தான்.நானும் இதுவரை இதுபோன்ற பறவையைப் பார்த்ததில்லை.என்ன செய்யலாம் என்று நீங்களே கூறுங்கள் மந்திரியாரே."
சற்றும் தாமதியாது," விட்டு விடுங்கள். அது எங்கேயானும் போய்த் தொலையட்டும்."என்றார்.
மன்னனும் சிந்தித்தான்."ஆம் மந்திரியாரே, எனக்கும் அச்சமாகத்தான் உள்ளது.நீங்கள் சொல்வதுபோல் இதைவெளியே விட்டு விடுவதே நல்லது."
            உடனே காவலனை அழைத்து, "அந்தப் பறவையைக் கூண்டைத் திறந்து வானில் பறக்க விட்டு விடுங்கள்." என்று ஆணையிட்டான் மன்னன். கூண்டு திறக்கப் பட்டது பறவை ஆனந்தமாக விண்ணில் பறந்தது.காட்டை நோக்கி அது பறக்குமுன் அது  தனக்குள் கூறிக்கொண்டது.சரியான முட்டாள் மக்கள்.
இவர்களுக்கு கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே. என்னைப் பிடித்தவேடனுக்கு என் சிறப்பை நான் காட்டியும் அவன் அதைப் பயன்படுத்திக் கொள்ளாதது  முட்டாள்தனம்.என்னைப் பிடித்த வேடன் அதை மன்னனிடம் கொடுத்தது முட்டாள்தனம். அந்த மன்னன் முன் நான் தங்கச் சிறகை உதிர்த்தும் என் சிறப்பைப் புரிந்து கொள்ளாமல் என்னை ஏதோ தீய சக்தி என நினைத்தது பெரிய முட்டாள்தனம்.
அத்துடன் மந்திரியின் அர்த்தமற்ற பேச்சைக் கேட்டு என்னை விரட்டிவிட்டது பெரிய முட்டாள்தனம்.இத்தகையவர்களுக்கு எத்தகைய சந்தர்ப்பம் வாய்த்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ளத்  தெரியாது. இவர்கள் தங்களின் கைக்கு எட்டியதை வாய்க்கெட்டவிடாது செய்து கொண்டனர்.
                  ஆனாலும் என்ன! இவர்கள் முட்டாள்தனம் எனக்கு விடுதலை கிடைத்துவிட்டது. என்று சொல்லிக் கொண்டே மகிழ்ச்சியுடன் பறந்து சென்றது அந்தப் பறவை.
எனவே வாழ்க்கையில் நமக்குக் கிடைக்கும் சந்தர்ப்பத்தைப பயன் படுத்திக் கொள்ளும் அறிவை நாம் பெற்றிருக்கவேண்டும்  
கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்பவனே வாழ்க்கையில் வெற்றி பெறுவான். மகிழ்ச்சியாகவும் வாழ்வான்.
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com