சனி, 14 நவம்பர், 2015

மந்த்ராலய மகான்.

(பகுதி-2
                வேண்டுதல்;  வறுமையிலும் தனிமையிலும்  வாடிய தம்பதிகள்  ஸ்ரீனிவாசனை தரிசிக்க விரும்பி திருமலை நோக்கிச் சென்றனர்.திருப்பதி க்ஷேத்ரத்தில் அந்த ஸ்ரீனிவாசனைக் கண்டு தங்கள் துயர் நீக்க ஒரு சத்புத்திரன் வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தித்தனர்.
இவர்களின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தான் அந்த மலையப்பன்.  இரவில் கனவில் தோன்றி "கவலைப் படாதீர்கள் .உலகமே போற்றும் உத்தமனே உங்களின் மகனாகப் பிறப்பான்"என்று வரமருள , மகிழ்ச்சியுடன் புவனகிரிக்கே வந்து   சேர்ந்தனர் தம்பதிகள். 

பிறப்பு;  கோபிகாம்பாள் கர்ப்பவதியானாள்.தனக்குப் பிறக்கப்போகும் சத்புத்திரனுக்காகத் தவமிருந்தாள். கணவரிடம் தெய்வீகக் கதைகளைக் கேட்டாள் .தெய்வீக விஷயங்களிலேயே மனதைச் செலுத்திவந்தாள்.கி.பி.1595ஆம் ஆண்டு பால்குன சுத்த பஞ்சமி திதியில் சிறந்த குருவாரத்தில்பவித்த்ரமான மிருகசிரா நட்சத்திரத்தில் தேஜஸ்வியான ஒரு ஆண்குழந்தையைப் பெற்றெடுத்தார் கோபிகாம்பாள். வேங்கடவனின் அருளால் பிறந்த அந்தக் குழந்தைக்கு வேங்கடநாதன் எனப் பெயரிட்டு  மகிழ்ந்தனர் பெற்றோர்.குழந்தையின் முகப் பொலிவு கண்டு இது தெய்வீகக் குழந்தை எனவும் இப்படி ஒரு குழந்தையா என ஊர்மக்கள் பிரமிக்க பெற்றோர் மனம் மகிழ்ந்தனர்.இந்த புனிதரைப்பெற்ற புனித நகரமாக புவனகிரியும் புனிதமடைந்தது.

வித்யாப்யாசம்;  காலக்கிரமத்தில் குழந்தைக்கு அன்னப்பிராசனம் செய்துவைத்து மூன்று வயதில் அக்ஷராப்யாஸம் செய்துவைத்தார் திம்மண்ண  பட்டர்.பிரஹ்லாத அவதாரத்தில் தாயின் கருப்பைக்குள்ளி ருந்து நாரதரின் உபதேச மொழிகளைக் கேட்டதுபோல் தந்தையார் பாராயணம் செய்வதையும் தாயாரின் ஹரிகீர்த்தனைகளையும் கேட்டுக் கொண்டே வளர்ந்தான் வேங்கடநாதன். 
வறுமை வாட்டிய நிலையில் சுசீந்திரரின் கட்டளையின் பேரில் மீண்டும் கும்பகோணம் வந்து சேர்ந்தார்.திம்மண்ண பட்டர் ஸ்ரீமடத்தில் வித்வத்சபையில் கலந்துகொள்ளும்போது வேங்கடநாதனையும் உடன் அழைத்துச் செல்வார்.சிறுவனின் தேஜஸைக் கண்டு சுசீந்திரர் அவர் மீது  மிகுந்த பற்றுக் கொண்டிருந்தார். திம்மண்ணரின் இறுதிக் காலத்தில் வேங்கடநாதன் தமையன் குருராஜனிடம் ஒப்படைக்கப் பட்டான்.
தந்தையாரின் மறைவுக்குப் பிறகு தமையன்  குருராஜன் தந்தையாரின் ஸ்தானத்தில் இருந்து இவருக்கு உபநயனம் செய்வித்து வித்யாப்யாசத்தின் பொருட்டு மதுரை லக்ஷமி நரசிம்மாச்சாரிடம் அனுப்பிவைத்தார்.அவரிடம் வேங்கடநாதன் வேதாந்த தர்க்க வியாகரணம் சாஹித்யம் மீமாம்சை முதலிய சாஸ்திரங்களைக் கற்றார். அத்துடன் வீணா கானத்திலும் சிறந்து விளங்கினார்.
பரிமளாச்சார்;

                                                                                                                                                           (தொடரும்)
                                                                      




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspo 
t.com  :: http://rukmaniseshasayee.blogspot.com