வெள்ளி, 2 ஜூன், 2017

கனிமொழிக் கதைகள்--பதறாத காரியம் சிதறாது.


.                          களத்தூர் சிறுகிராமம். அந்த கிராமத்தில் விவசாயம் செய்து பிழைக்கும்   குடும்பங்கள் தான் அதிகம்.    அந்த   ஊரில் வாழும் பல குடும்பங்களில் கனகாவின் குடும்பமும் ஒன்று. 
                           கனகாவுக்கு இரண்டு பெண்கள்.அவர்களில் பெரியவள்       சுதா.  இளையவள் லதா. சுதா  பெரியவளானாலும் பொறுமையே இல்லாதவள். அவசரக் குடுக்கை. எப்போதும் பதற்றமாகவே ஒரு காரியம் செய்வாள்.அவளது அவசரமான காரியத்தால் பல பொருட்கள் கெட்டுப்  போயிருக்கின்றன.அம்மாவிடம் சுதா அடியும் வாங்கியிருக்கிறாள். ஆனாலும் அவளது பதறும் குணம் மாறவேயில்லை.எவ்வளவோ முறை எடுத்துச் சொல்லியும் சுதா திருந்தவேயில்லை.
                         ஆனால் லதா அப்படியில்லை. அக்காவுக்கு நேர் எதிரானவள்.அம்மாவுக்குத் துணையாக எல்லாவேலைகளையும் செய்வாள். அம்மாவுக்குத் துணையாக எப்போதும் இருப்பாள். 
தினமும் பள்ளிக்கும் தவறாமல் சென்று வருவாள் லதா.ஆனால் சுதா அடிக்கடி பள்ளிக்குச் செல்லாமல் விளையாட்டில் கவனம் செலுத்துவாள். யாரும் துணையில்லை என்றாலும் தான் மட்டுமே விளையாடிக் கொண்டிருப்பாள்.
                     ஒருநாள் இரவு சாப்பிடும்போது கனகா தன பிள்ளைகளிடம் சொன்னாள்.
" சுதா, லதா இந்த வருஷம் பொங்கலுக்கு நாம மாமா வூட்டுக்கு போவலாம் அதுக்கு துட்டு சேக்கோணுமுன்னா நாம எதுனாச்சும் யாவாரம் செய்யோணும் என்னா செய்யலாம் நீங்களே சொல்லுங்க "

"யம்மா மிட்டாய் யாவாரம் செய்யலாம்மா "
"பத்து பைசா இருவது பைசாவா எத்தனை நாளு  சேக்கறது?"

"அப்போ நீயே சொல்லும்மா."என்றபடியே  அம்மாவைப்பார்த்தாள் லதா. 

"எனக்குத் தெரிஞ்ச   யாவா ரம் களையெடுக்கறதும்  கஞ்சி காச்சறதும்தான். இத்தினி நாலு களையெடுத்து என்னாத்த சேக்க முடிஞ்சுது?"

"அதால என்ன செய்யப்போற?"பொறுமையிழந்த சுதா அவசர அவசரமாகக் கேட்டாள் 

"பொறுடி அம்மாவே யோசிச்சுச்சொல்லட்டும். ஏண்டி அவசரப்படுற?" அவளை அடக்கினாள்  இரண்டே வயது சிரியவளான லதா.
அவளை முறைத்துப் பார்த்துவிட்டு அமைதியானாள் சுதா.
தலையை வாரி முடித்தவாறே எழுந்த கனகா "அடியே பொண்ணுங்களா நானு செட்டியார் வீட்டு வரைக்கும் போயிட்டு அந்தம்மாகிட்ட ஏதாச்சும் காசு கடனா வாங்கிட்டு வாறன்.
இட்டலி சுட்டு வித்தால் நல்ல லாபம் கிடைக்கும்னு செட்டியாரம்மா சொல்லியிருக்காங்க நீங்க பத்திரமா வூட்டாண்டையே இருங்க.".
  
என்றபடியே புடவையைஉருவித் தட்டிக் கொண்டு புறப்பட்டாள் கனகா..
நானுவாரதுக்குள்ளாற   இந்த எடத்தைச்சுத்தப்படுத்தி கடைபோட ஏத்தமாரி செஞ்சு வையிங்கடீ போகிறபோக்கில் பெண்களிடம் சொல்லிவிட்டுப் போனாள் தங்களுக்கென கொடுத்த வேலை  பங்களிப்பில் மகிழ்ந்து போனார் கள்  சுதாவும் லதாவும்.பரபரவென காரியத்தில் இறங்கினார்கள். ஒருமணிநேரத்திற்குள் வீட்டு வாசல் பத்துபேர் உட்காரும் அளவிற்கு சமன் படுத்தப் பட்டு சீராகவும் அழகாவும் காட்சியளித்தது.வேலை முடித்து சகோதரியர் அமரவும் கனகம் கையில் பெரிய பையுடன் வரவும் சரியாக இருந்தது. 
மளமளவென காரியத்தில் இறங்கினாள்  கனகம்.மாலைக்குள் மாவு தயார்.செட்டியாரம்மாவே பழைய இட்டலி  பாத்திரங்களைக் கொடுத்திருந்தார்.அதையெல்லாம் சுதாவும் லதாவும் தேய்த்துவைப்பதில் உதவினார். 
          இரவு வெகுநேரம் தூக்கம் வரவில்லை சிறுமிகளுக்கு. அன்று பள்ளிவேறு  விடுமுறையானதால் நான் தெருவில் சென்று விற்று வருவேன். இந்தத் தெருவிற்கு நான் அடுத்த தெருவிற்கு நீ என்றெல்லாம் பேசிக் கொண்டே தூங்கினர் 
மறுநாள் வேகமாக எழுந்து பார்த்தபோது அம்மா கடையில் சுறுசுறுப்பாக இருந்தார். 
"என்னம்மா எங்களை எழுப்பக் கூடாதா?"கண்களைக் கசக்கியவாறே நின்றாள் சுதா.
"சரிசரி , பல்லத் தேச்சுட்டு  ரெண்டு இட்டலி தின்னுட்டு மேலத்தெருவுக்குப் போ."
"ம்..லதா எங்கம்மா?"அப்போது லதா காலியான பாத்திரத்துடன் வந்து அம்மாவிடம் பணத்தை எண்ணிக் கொடுத்தாள் .சுதாவிற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"அவளைமட்டும் மொதல்ல அனுப்பிட்டு என்னை ஏன் எழுப்பல?"
"நீயாத்தாண்டீ எழுந்திருக்கனும் அவளை  யார் எழுப்பினா?என் கூடவே அவளே எழுந்து ஒத்தாசையா இருந்தா. நீமட்டும் ஏன் தூங்கினே?"
சுதாவின் கோபம் அழுகையாய் மாறியது. ஓ..வெனக்  கூச்சலிட்டு அழுதாள். வியாபாரத்தைக் கவனிக்க முடியாமல் போகவே 
அவளை அடிக்கக் கையை ஓங்கினாள் கனகா.அவளை அணைத்து சமாதானப் படுத்தினாள்  லதா. முகம் கழுவி சாப்பிடவைத்து அவளை வியாபாரத்துக்குச் செல்லத தயார்படுத்தினாள் .அதற்குள் தன குணம் மேலோங்க அவளைத் தள்ளிவிட்டு அவசர அவசரமாகத் தானே தலையை வாரிக் கட்டினாள்சுதா. லதா இரண்டாம் முறை இட்டிலி வியாபாரம் செய்யப் புறப்படுமுன் அவளை முந்திக் கொண்டு அம்மாவின்முன்  பாய்ந்து சென்று நின்றாள்.கனகம் அப்போதுதான் தட்டுகளில் மாவை ஊற்றிக் கொண்டிருந்தாள். ஒரு பக்கம் வாளித் தண்ணீர் மறுபக்கம் பெரிய தூக்குப் பாத்திரத்தில் இட்டலிமாவு.இவற்றுக்கிடையே எரியும் அடுப்பு. அருகே வந்து நின்ற தங்கையைத் தள்ளிவிட்டு தானே முன்னாள் வந்து நின்றாள் சுதா .
நிலமையைத் தாங்க முடியாமல் கனகா "போங்கடீ தள்ளி.அடுப்புல விழுந்து வக்காதீங்கடீ"
சுதா இரண்டு கைகளையும் நீட்டிக் கொண்டு நின்றாள்.கனகா "அடியேய், எதையானும் உருட்டிடப் போறே. ஒண்ணுமில்லாமப் போகப் போகுது. பதறாம உக்காருடீ."சொல்லக் சொல்ல சுதா பதற்றமாகவே நின்றாள் அங்கும் இங்கும் சுற்றிச் சுற்றி வந்தாள் 
கனகா இட்டலிப்  பானையைத் திறக்கும் நேரம் வேகமாக அருகில் வந்தவள் ஆவியின் வேகம் தாங்காமல் மறுபக்கம் தாண்டினாள்  அங்கே இருந்த மாவுப் பாத்திரத்தில் கால்பட மாவு உருண்டது நீரோடு கலந்து ஓடியது அருகே இரு ந்த வாளி நீரும் உருண்டது.
இவற்றோடு சேர்ந்து சுதாவும் உருண்டவள் அலறி கொண்டே இருந்தாள் அங்கிருந்தவர்கள் அத்தனைபேரும் திக்பிரமை பிடித்து நின்றுவிட்டனர்.லதா ஓடிச் சென்று அக்காவைத் தூக்கி வீட்டு வாசலில் அமர வைத்தாள் .
ஒவ்வொருவரும் அவள் அவசரத்தால் ஏற்பட்ட நஷ்டத்தைச் சொல்லித் திட்டித்  தீர்த்தனர். ஆனால் பொறுமையாக அவள் முகத்தைக்  கழுவி அவளை சமாதானப் படுத்தினாள்  லதா.
ஏதாவது மிஞ்சுமா என்று தேடி ஏமாந்த கனகா,"ஒன்னய பதறாதே பதறாதேன்னு எத்தினி வாட்டி சொல்லியிருக்கேன் இப்படி மொத நாளே ஒன்  பதட்டத்தால ஒண்ணுமில்லாம ஆக்கிட்டியே.என்று வருந்தினாள்.
மெதுவாக அவள் அருகே வந்த சுதா, "அம்மா, மன்னிச்சுக்கம்மா. இனிமே அவசர படமாட்டேம்மா, என்றவள் அவள் மடியில் அமர்ந்து மெதுவாக "அம்மா, மூஞ்சி எரியுதும்மா, என்றவள் விக்கி விக்கி அழத் தொடங்கினாள்.
அப்போதுதான் அவள் முகத்தைப் பார்த்தவள்கனகா பதறிப் போனாள் சுதாவை அழைத்துக் கொண்டு  வைத்தியர் வீட்டுக்கு ஓடினாள்.
                                               கருமை படர்ந்து விட்ட சுதாவின் முகம் வைத்தியரின் கடும் முயற்சியால் சற்றே நிறம் மாறிவந்தது.
மூன்று மாதங்கள் கழிந்தபின்னரே சுதாவின் முகம் பழைய நிலைக்கு திரும்பியது. அதுவரை சுதாவும் எங்கும் வெளியே செல்ல வெட்கப் பட்டுக் கொண்டு வீ ட்டிலே அடைந்து கிடந்தாள்.அவளுடைய வேண்டாத குணங்கள் அவளைவிட்டு நீங்க மூன்று மாதங்கள் தேவைப் பட்டது.
கனகாவும் அடிக்கடி பதறாத காரியம் சிதறாது என்று சொல்லிச் சொல்லி அவளின் பொறுமையை வளர்த்தாள் இப்போது மிகவும் பொறுமைசாலியான சுதாவைப் பார்த்து லதாவும் மிகவும் மகிழ்ந்தாள்.










ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee







2 கருத்துகள்:

  1. நல்லதை நன்கு நயம்படச் சொல்லும் நல்லதொரு கதை.

    ’பதறாத காரியம் சிதறாது’ என்பதை பட்டு அறிந்துகொண்டாள் சுதா.

    பகிர்வுக்கு நன்றிகள், மேடம்.

    பதிலளிநீக்கு