செவ்வாய், 17 நவம்பர், 2020

கண்ணன் பாடல்  

பல்லவி 

கண்ணன் என்னும் போதிலே என்  

எண்ணம் முழுதும் இனிக்குதே.   (கண்ணன்)

அனுபல்லவி 

கண்ணன் குழலோசையில் -புவி 

வண்ண மயமாய்த் தோணுதே      (கண்ணன்)

சரணம் -1

வெண்ணை பால் தயிரிலே அவன் 

கள்ள கதைகள் தெரியுதே 

எள்ளத்தனை போதிலும் -என் 

உள்ளம் மறந்து போகுமோ               (கண்ணன்)

சரணம் -2 

அன்னை தாய் யசோதையின் 

அன்பில் மயங்கி கிடந்தவன் 

ஆயர்பாடி தன்னையே  தன் 

அகத்துள் வைத்துக் காத்த அந்த (கண்ணன் )

                ---------------------------------

சனி, 10 அக்டோபர், 2020

                               ஐயப்பன்  பாடல்.

பல்லவி 

ஐயப்பா சாமி ஐயப்பா -ஐயப்பா 

சரணம் ஐயப்பா 

அனுபல்லவி 

அய்யப்பா உனையென்றும் மறவோம் அய்யா 

மெய்யப்பா நீயே துணை என்றும் அய்யா.--(ஐயப்பா )

சரணம்-1

பாதங்கள் நொந்தாலும் உன் பாதம் பணிவோம் 

பலகாதம் நடந்தே  உன்பதம் காண வருவோம் 

கால் கைகள் துவண்டாலும் உனைப்பற்றி நடப்போம் 

துணைநீயே எனக் கொண்டோம் துணையாக வருவாய்.-(அய்யப்ப)

சரணம்-2

கருமலை ஏறிட துணையாக வருவாய் 

அழுதாவில் மூழ்கிட இணையாக இருப்பாய் 

பதினெட்டுப் படியேறி உனைக்காண  அருள்வாய் 

பதியே   அருள்நிதியே  இனி எனக்கேது குறையே -(ஐயப்பா )

------------------------------------------------------------------------------------------------------------------


புதன், 7 அக்டோபர், 2020

சிறுவர்க்குச் சிறுகதைகள் 1 

                                  வெற்றி தரும் அறிவு  

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாதபடி சிறுத்துப் போயிருந்தன.அவன் பெற்றோர்  இருவருக்கும் வயதானதாலும் வறுமை காரணமாகவும் கண்கள் சரியாகத்  தெரிவதில்லை. மூவரும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் நடக்க முடியாத தங்கள் மகனுக்கு நடராஜா என்று பெயர் வைத்து அன்போடு அழைத்து வந்தனர்.

      தினமும் தங்கள் மகனை ஒரு கூடையில் அமரவைத்து சுமந்து  கொண்டு கோயில் வாசலுக்கு வருவார்கள் அங்கு அமர்ந்து கொள்வார்கள்.கோயிலுக்கு வருபவர்கள் தரும் பொருளையும் கோயிலில் தரும் பிரசாதத்தையும் வைத்துக் கொண்டு காலம் கழித்தார்கள்.

       தினமும் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு நடராஜன் கோபுரத்தையே பார்த்துக் கொண்டு இறைவனை தியானித்தபடி இருப்பான்.கிட்டத்தட்ட தவம் என்றே சொல்லலாம்.இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது சிறுவன் நடராஜன்  வாலிபனானான்.அவனது பெற்றோருக்கு கண்கள் சுத்தமாகக் குருடாகி விட்டன.ஆனாலும் பசிக்கிறதே என்ன செய்வது.குடிசை வாசலில் அமர்ந்து கொண்டு வருபவரிடம் கையேந்தியபடி அமர்வார்கள். இரக்க குணமும் தயாள சிந்தையும் கொண்டவர்கள் போடும் சிறிய பொருளை வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்து வாழ்ந்து வந்தனர்.

           ஒருநாள்.அன்று பௌர்ணமி. முழுநிலவு பளீரென்று ஒளிவீசிக் கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.குடிசை வாயிலில் அமர்ந்து கொண்டிருந்த நடராஜன் அந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மனம் கற்பனை செய்தது.

பெரிய மாளிகையின் மேல்மாடம்.நடராஜன் கால்களை வீசி நடை போட்டுக் கொண்டிருந்தான்.அருகே அவன் மனைவி தன மகனுக்கு தங்கத்  தட்டில் பால்சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். நடராஜனின் பெற்றோர் குழந்தைக்கு நிலவைக் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த இன்பகரமான சூழலை நினைத்தபடி அங்கேயே உறங்கி விட்டான்.

          நடுஇரவு.அவன் இத்தனை நாட்களாக கோபுரத்தைப் பார்த்து செய்த தவத்துக்குப் பலன் தர இறைவன் திருவுளம் கொண்டார்.நடராஜனின் கனவில் தோன்றி பக்தா, உன் பக்திக்கு மிக்க மகிழ்ச்சி.உனக்கு வரமளிக்கவே வந்தோம்.வேண்டும் வரம் கேள்."என்றபோது உடல் நடுங்க வாய் குழற கைகூப்பி நின்றான் நடராஜன்.

          "தயங்காதே, நீ வேண்டும் வரம் கேள்."

நடராஜன்"இறைவா ,முதலில் என் "       என்று இழுத்தான்.

குறுக்கிட்ட இறைவன்,"அப்பனே, நிறுத்து முதல் இரண்டு என்பதெல்லாம் கிடையாது.ஒரே வரம்தான் தரமுடியும் எதுவேண்டுமோ கேள்."என்றார்.

நடராஜன் சற்றே யோசித்தான்."ஸ்வாமி, மேல்மாடத்தில் என்மனைவி என் மகனுக்குத் தங்கத்  தட்டில் சோறு ஊட்டும்போது அதை  என் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பார்ப்பதைஅங்கே  நடைபயிலும் நான் கண்டு மகிழவேண்டும்."

இந்த வரத்தின் மூலம் செல்வம் சமூக அந்தஸ்து பெற்றோருக்குப் பார்வை தனக்கு கால்கள் என்ற எல்லா வரங்களையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டான் நடராஜன்.ஒரு நிமிடம் இறைவன் திகைத்தார் பின்னர் கடகடவென சிரித்தார்."அப்பனே உன்திறமையை சோதித்தேன் நீ வென்றுவிட்டாய்.நீ நினைத்தபடி வரம் தந்தோம்." என்று கூறிய இறைவன் மறைந்தார்.

சமயோஜித அறிவு இருந்தால் யாரையும் வென்று விடலாம்.என்ற உண்மையை தன கனவு மூலம் அறிந்து கொண்டான் நடராஜன். இனி அவன் தன்  இயலாமையை மறந்து  விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து வாழ்வில் முன்னேறும் வழியைத் தேடுவான் அல்லவா?அதில் அவன் வெற்றியும் பெறுவான் என்று நம்புவோம்.
ஞாயிறு, 20 செப்டம்பர், 2020

murugan paadal

                      ஸ்ரீ முருகன் பாடல்  

பல்லவி 

மலைமீது விளையாடும் மால்மருகா புள்ளி 

மயில் மீது விரைந்தோடி வா முருகா -(மலை )

அனுபல்லவி 

எழில் தெய்வ மகளுடனும் குறவள்ளி துணையுடனும் 

எளியேன் என் குறைதீர்க்க வாமுருகா -(மலை)

சரணம் -1

குன்றேறி நின்ற எங்கள் திருக்குமரா -பறங்

குன்றத்தில் காக்கின்ற அருட்குமரா 

பழமுதிர்சோலையின் மணவாளா -சுவாமி 

மலைதன்னில் அருள்கின்ற தவசீலா -(மலை)

சரணம்-2

கனி தந்து அவ்வைக்கு அருள்செய்தாய் -மாங்

கனிக்காக உலகத்தை வலம் வந்தாய் 

கன்னல்  தமிழாக உருவெடுத்தாய் -எங்கள் 

கந்தா நீ அழகன் எனப்பெயர் கொண்டாய் (மலை)

                                -----------------------------


வியாழன், 20 ஆகஸ்ட், 2020

chuttikadhai.blogspot.com

 மாணவச் செல்வன் 

Inbox
x

Rukmani Seshasayee rukmani68sayee@gmail.com

18 Aug 2020, 13:24 (2 days ago)
to rukmani68sayee.avva

அனைவரும் ஒன்றும் புரியாமல் ஆசிரியர் பின் சென்றனர்.அனைவரையும் நிற்கச் சொன்ன துரோணர் துரியோதனனை மட்டும் அழைத்துக் கொண்டு மரத்தின் மறுபக்கம் சென்றார்.அங்கு தரையில் ஒரு மந்திரத்தை எழுதிக் காட்டி படிக்கச் சொன்னார்.துரியோதனனும் அந்த மந்திரத்தைப் படித்துவிட்டு குருவைப் பார்த்தான்."இப்போது ஒரு அம்பை இந்த மரத்தின் உச்சியைப் பார்த்து விடு" என்று கட்டளையிட்டார்.
துரியோதனனும் ஒரு அம்பை எடுத்து மரத்தை நோக்கி விட்டான்.என்ன ஆச்சரியம் அந்த அம்பு எங்கு மறைந்ததோ ஆனால் மரத்தின் ஒவ்வொரு இலையிலேயும் ஓட்டை விழுந்திருந்தது.
"துரியோதன, இந்த அஸ்திரத்தை நீ படைக்களத்தில் பிரயோகித்தால்  ஆயிரக்கணக்கான வீரர்களை இது  பலிவாங்கும் "
துரியோதனனுக்கு ஒரே மகிழ்ச்சி.அர்ச்சுனனுக்குத் தெரியாத ஒரு அஸ்திர பிரயோகம் தனக்கு மட்டும் தெரிந்து விட்டது என அறிந்து மிக்க மகிழ்ச்சி கொண்டான். மிக்க நன்றி குருவே என்று அவர் கால்களில் பணிந்தான்.
                  அனைவரையும் அழைத்துக் கொண்டு ஆற்றுக்குப் போனார் துரோணர்..சற்று நேரத்தில் அங்கு வந்த அர்ச்சுனன் அவரிடம் மேலாடையை பணிவுடன் அளித்தான்.அனைவரும் நீராடிப் புறப்பட்டனர்.
வரும் வழியில் அதே ஆலமரத்தடிக்கு வந்தனர். துரோணர் சற்று நின்று அந்த மரத்தை நிமிர்ந்து பார்த்தார்.துரியோதனனும் பார்த்தான்.என்ன ஆச்சரியம் ஒரே ஓட்டை இருந்த இலைகளில் இப்போது இரண்டாவது ஓட்டை விழுந்திருந்தது.இது எப்படி சாத்தியமாயிற்று.குரு  தனக்கு மட்டும்தானே இந்த அஸ்த்திரத்தைக்  கூறினார். சற்றே சந்தேகத்தோடு அவரைப் பார்த்தான் துரியோதனன்.
அப்போது துரோணர் அர்ச்சுனனைப் பார்த்தார்.அவரை வணங்கிய அர்ச்சுனன்,"ஸ்வாமி தங்களின் வஸ்த்திரத்தை எடுத்துக் கொண்டு நான் வரும்போது இந்த ஆலமரத்தடியில் பல காலடித் தடங்களைப்பார்த்தேன் அதோடு இரண்டு பேரின் காலடிகள் மட்டும் தனியே போயிருப்பதைப் பார்த்து அதன் பின் சென்றேன்.அங்கே ஒரு மந்திரம் கீழே எழுதியிருப்பதைப் பார்த்தேன் அதோடு மரத்திலுள்ள ஆயிரக் கணக்கான இலைகளிலும் ஓட்டை விழுந்திருப்பதையும் பார்த்தேன்.
இது ஏதோ அஸ்திரம்தான் என்று புரிந்து கொண்டேன்.அதை நானும் பிரயோகித்துப் பார்த்தேன்."
"அப்படியானால் என் மேலாடையைக் கீழே வைத்துவிடட்டாயா?"
"இல்லை குருவே, இந்த மேலாடையை  ஆகாயத்தில் தூக்கிப் போட்டேன் அது மேலே சென்று திரும்பி கீழே விழுவதற்குள் இந்த அஸ்திரத்தைப் பிரயோகித்துவிட்டேன் தங்களின் உத்தரீயமும் கீழே விழாமல் கைகளில் தாங்கி கொண்டேன்.என் அஸ்திர பிரயோகம்தான் இலைகளில் இரண்டாவது ஓட்டை.முதலில் இருக்கும் ஒட்டையைப் போட்டவர் யாரென்று அறியமாட்டேன் ஸ்வாமி.".
மாணவர்களே பார்ப்பதையெல்லாம் குற்றமில்லாமல் கற்று மனதில் நிறுத்திக் கொள்பவனே உண்மையான மாணவன் தனக்கு உகந்தவை என்று தேர்ந்தெடுத்துக் கற்றுக் கொள்ளும் 
பண்பு யாரிடத்தில் உள்ளதோ அவனே உண்மையான மாணவச் செல்வன்.அர்ச்சுனன் உண்மையான மாணவன்.அவன் திறமைசாலி என்பதற்கு இதைவிடச் சான்று தேவையில்லை " என்று முடித்தவர் துரியோதனனைப் பார்த்து ஆசிரியர் காட்டிய வழியைப் பின்பற்றி தாங்களாகவே முனைந்து கற்பதே அறிவு. இதை உணர்ந்து கொண்டாயா துரியோதன "என்றார் துரியோதனனும் அதை ஒப்புக் கொண்டவன்போல் தலைகுனிந்து நின்றான்.
ராமசாமி கதையை முடித்தார்.
"தெரிந்து கொண்டாயா பாலு.ஆசிரியர் சொல்லிக் கொடுப்பார். அதை  நல்ல முறையிலே மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்து கொள்ளவேண்டியது மாணவன்  கடமை.அவனைத்தான் மாணவச் செல்வன் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் புரிந்ததா?"என்றவாறு படுத்துக்க கொண்டார். "சரிப்பா நானும் இனி அருச்சுனனைப் போலவே படிப்பேன். எல்லாவற்றையும் புரிந்துகொண்டு அறிவை வளர்த்துக் கொள்வேன்."என்றான் உறுதியோடு.


 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

ஞாயிறு, 16 ஆகஸ்ட், 2020

 மாணவச்  செல்வன் 


             பள்ளிக்கூடத்தில் கொடுத்த மதிப்பெண் பட்டியலைத் தன அப்பாவிடம் காட்டியபடி நின்றான் பாலு. அதைப் பார்த்த ராமசாமி சற்றே கோபம் கொண்டார்.பாலுவை கோபமாகப் பார்த்தார்.சிணுங்கியபடியே பேசினான் பாலு.

"அந்த வாத்தியாரு நல்லாவே சொல்லிக் குடுக்கலேப்பாஅதான் "என்றவனை இடைமறித்துப் பேசினார்."ஏண்டா நீ கவனிக்காமே வாத்தியாரு மேலே பழி போடாதே உனக்கு முன்னாலே நூறு மார்க் வாங்கியவனுக்கெல்லாம் வேறே வாத்தியாரா பாடம் சொன்னாரு இல்லேல்ல."

தலைகுனிந்து நின்றான் பாலு."சரி சரி கவனித்து ப் படி.அடுத்தமுறை நல்ல மார்க்கோட வா.".என்றவர் வெளியே சென்று விட்டார்.

அன்று இரவு படுத்தபடி அப்பாவுடன் பேச்சுக்கு கொடுத்தான். அப்பா ஒரு கதை சொல்லுங்கள் என்றான்.

 ராமசாமியும் படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தார்.அவர் கதைசொல்லப்போவதை அறிந்துகொண்ட பாலுவின் தம்பியும் அருகே வந்து அமர்ந்து கொண்டான்.

கதைசொல்ல ஆரம்பித்தார் வீராசாமி.மஹாபாரதத்தில் பாண்டவர்கள் அஞ்சுபேர் கௌரவர்கள் நூறுபேர்.இவங்க எல்லாருக்கும் துரோணர் அப்படிங்கற முனிவர்தான் பாடம் சொல்லித் தருகிற வாத்தியார்.பாண்டவர்களுக்கு தருமன் மூத்தவன். கௌரவர்களுக்குத் துரியோதனன் மூத்தவன்.இ ந்த துரியோதனனுக்கு அருச்சுனன் மேல பொறாமை.ஏன்னா வில்வித்தையில் அவன் ரொம்பக் கெட்டிக்காரனா இருக்கறதால.அதோட பங்காளிகளான பாண்டவர்கள் அஞ்சுபேரையும் கௌரவர்களுக்குப் பிடிக்காது.அருச்சுனன் கெட்டிக்காரனா இருப்பதற்கு ஆசிரியர் காரணம்னு அவர்மேல் கூட துரியோதனனுக்கு கோபம்இருந்தது..இது துரோணருக்கும்  தெரியும். ஆனாலும் இளவரசர்கள் ஆயிற்றே ஒன்றும் சொல்ல முடியாதே.

இந்த எண்ணத்தைத் துரியோதனனிடம் எப்படியாவது நீக்க வேண்டுமே என்று நினைத்தார்.அதற்கு காலம் வந்தது.ஒருநாள் அதிகாலை நேரம் தன நூற்று ஐந்து மாணவர்கள் புடைசூழ துரோணர் ஆற்றுக்கு குளிக்கப் போனார்.எல்லோரும் நடந்து போய்க்  கொண்டிருக்கும் பொழுது துரோணர் திடீரென நின்றார்.  .மாணவர்கள் அவர்பின் நின்றனர்.அவர்  பார்த்து,"அர்ச்சுனா, என் மேலாடையை ஆசிரமத்திலேயே .விட்டு .விட்டேன். நீ சென்று அதை எடுத்து .வா "என்று கூறவே அர்ச்சுனனும் உடனே புறப்பட்டான் 

அவனைத் தடுத்து நிறுத்தியவர் "அர்ச்சுனா, என் உத்தரீயத்தை வழியில் எங்கும் கீழே வைக்கக்  கூடாது."என்று கூறினார்.அர்ச்சுனனும் அப்படியே ஸ்வாமி என்றவன் வேகமாக  ஆசிரமம்  நோக்கிச் சென்றான். 

அவன் சென்ற பின் மற்றவர்களை நோக்கி அருகே   வளர்ந்து நின்றிருந்த பெரிய ஆலமரத்தின் அருகே வரச்  சொன்னார்.

வியாழன், 25 ஜூன், 2020

vinayagar paadal

                                     பல்லவி 
வினையைத தீர்க்கும்  விக்ன  விநாயகனே 
வேண்டும் வரம் தரும் வேத முதல்வனே        (வினை)
                                   அனுபல்லவி 
வளமுடன் நலமும்வாழ்வும்   உயர்வும் 
வளரும்படியாய் வரந்தனை அருள்வாய்    (வினை)

                                       சரணம்-1
வேதவ்யாசரின் வேண்டுதல் ஏற்றாய் 
பாரதம் எழுதி ஒற்றைக்கொம்பன் ஆனாய் 
காவிரி விரைந்திட சாகசம் புரிந்தாய் 
யாவரும் பணிந்திட  தத்துவம் ஆனாய்     (வினை)
                                    சரணம்-2
சந்திரன் சாபம் நீங்கிடச் செயதாய் 
சங்கரன் மைந்தனே சங்கடம் தீர்ப்பாய் 
ஐந்து கரத்தனே  ஆதிமுதல்வனே 
வந்து பணிந்தோம் வாழ்த்தி அருள்வாய்  (வினை)
                     ---------------------------------------ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com 

வெள்ளி, 20 மார்ச், 2020

வியாழன், 5 டிசம்பர், 2019

குறள் வழிக்கதைகள்

குறள் --"எனைத்தானும்  நல்லவை கேட்க அனைத்தானும் 
                ஆன்ற பெருமை தரும் "
                            ராசாத்தி சமையல்செய்துகொண்டிருந்தாள்.அப்போது அவள்மகன்     அகிலன்  வேகம் வேகமாக குளித்துவிட்டு உடைமாற்றிக் கொண்டிருந்தான்.அப்போது அவன் தந்தை ராஜவேலு  உரக்க அழைத்தார்.
"அகிலா, குளித்தாயிற்றா?வா அம்மாவைக் கூப்பிடு.நேரமாகுது பார்"
   அகிலன் வெறுப்புடன் முணுமுணுத்தான்.
ராஜாத்தியும், 'வாடா, உங்கப்பாவுக்குக் கோவம் வரப்போகுது "
என்றபடியே அடுப்பை  அணைத்துவிட்டு ராஜவேலு முன்னால்  வந்து அமர்ந்தாள் .
     அகிலனும் உம்மென்ற முகத்துடன் வந்து அவர்முன் அமர்ந்தான்.
புன்னகை மாறாத முகத்துடன் "அகிலா, நேத்து படிச்ச திருவாசகத்தை ச் சொல்லு"என்றபடியே திருவாசகம் நூலைப் பிரித்தார்.
தட்டுத் தடுமாறி யபடி "அம்மையே  அப்பா "என்று தொடங்கி இசையுடன் சொல்வதைக் கேட்டுத தலையசைத்தார்.
 ராசாத்தியையும் உடன் பாடச்  சொன்னார்.
அவர்கள் பாடிமுடித்தவுடன் அடுத்தபாடலைக் கூறலானார்.
அதைத் தொடர்ந்து ராசாத்தியும் அகிலனும் பாடினர்.அரைமணிநேரம் ஆனதும் கற்பூரம் காட்ட ராசாத்தியும் அகிலனும் அதைக் கண்களில் ஒற்றிக் கொண்டனர் 
அவர் கொடுத்த ஒரு வாழைப் பழத்தைப் பெற்றுக் கொண்டவன் வேகமாக வெளியே சென்றான் அவனைத் தொடர்ந்து ராசாத்தியும் சமையலறைக்குள் நுழைந்தாள் 
அவளை பின்பற்றிய அகிலன் "ஏம்மா, அப்பா இப்படி தினமும் போரடிக்கிறாரு .இந்தப் பாட்டுகளைப் படிக்காட்டி என்ன?"
என்று அம்மாவின் காதைக் கடித்தான்.
அதைக் கேட்டபடி வந்த ராஜவேலு,"இந்த வயசிலே நல்ல விஷயங்களைக்  கத்துக்கணும் கடவுளை பற்றிய அறிவும் நமக்கு வேணும் அகிலா.இதுதான் காலத்துக்கும் நமக்குத் துணை நிக்கும்."
என்றார்.
ராசத்தியும் "சரி சரி இந்தா சாப்பிட்டுப்புட்டு ஸ்கூலுக்குப்புறப்படு " என்றபடி இட்டிலிகளைத் தட்டில் வைத்தாள் 
                  ராஜவேலுவுக்கு இறைபக்தி அதிகம்.தினமும் பூஜை செய்வதையும் தேவாரம் திருவாசகம் பாடல்களை இசையோடு பாடுவதையும் வழக்கமாகக்  கொண்டிருந்தார்.தன்னுடன் தன மனைவியையும் மகனையும் சேர்ந்து பாடச்  சொல்வார்.
ராசாத்திக்கு என்ன வேலை இருந்தாலும் அதை  நிறுத்தி விட்டு     பூஜை நேரம் வந்து அமர்ந்து விட வேண்டும்.  
தினமும் பதிகங்களைக் கேட்டுக் கேட்டு ராசாத்திக்கும் அகிலனுக்கும் மனப்பாடமாகி விட்டது.
                  அன்று பள்ளிக்கூடத்தில திடீரென அதிகாரி வந்து விட்டார்.பள்ளிக்கூடமே அமர்க்களமாக இருந்தது.ஆசிரியர்கள் அங்குமிங்குமாக சென்று மாணவர்களை சீர்ப்படுத்திக் கொண்டிருந்தனர்.தலைமை ஆசிரியர் பிற்பகலில் மாணவர்களை கூட்டி 
  அமரச்சொன்னார்.அந்தக் கூட்டத்தில் அதிகாரியும் தலைமை ஆசிரியரும்வந்து அமர்ந்தனர்.சலசலவென்று பேசிக் கொண்டிருந்த மாணவர்கள் .அமைதியாயினர்.அதிகாரி தலைமை ஆசிரியரிடம் ஏதோ கூறினார்.அவரும் தமிழ் ஆசிரியரிடம் காதில் கூறினார். தமிழாசிரியர் கையைப் பிசைந்து கொண்டார்.ஒரு நிமிடம் இரண்டு மூன்று ஆசிரியர்கள் கூடிப்பேசினர்.
அவர்கள் பேசியது அங்கே அமர்ந்திருந்த அகிலனின் காதில் விழுந்தது.சற்றே தயங்கியவன்  எழுந்து .நின்றான்.என்ன என்பது போல் ஆசிரியர் பார்த்தார்.
"அய்யா,  நான் பாடுகிறேன் ஐயா "என்றான் மெதுவாக."
மிக்க மகிழ்ச்சியுடன் அவனைப் பற்றி இழுத்துக் கொண்டு மேடைக்குப் போனார் அவன் வகுப்புத் தமிழாசிரியர்.
ஒலிபெருக்கி முன் சென்று நின்று "அம்மையே அப்பா" என்று தொடங்கி இசையோடு பாடி முடித்தான்.வந்திருந்த அதிகாரி மகிழ்ச்சியுடன் தலையை அசைத்து ரசித்தார்.தனக்குப் போர்த்திய பொன்னாடையை அகிலனுக்குப் போர்த்தி அவன் முதுகில் சபாஷ் என்று தட்டிக் கொடுத்தார்.மேடையை வீட்டுக் கீழே இறங்கியபோது  அனைவரும் கைதட்டி பாராட்டினர்.
           தமிழாசிரியரும் இன்னும் இரண்டு மூன்று ஆசிரியர்களும் அவனைத் தட்டிக் கொடுத்தபோது பெருமையில் பூரித்துப் போனான் அகிலன்.
  வீட்டுக்கு ஓடிவந்தவன் அம்மா என்று கூவியபடியே உள்ளே வந்தான்.அம்மாவைப் பார்த்து இன்னைக்கு ...என்றவனை இடைமறித்தாள் ராசாத்தி."நீ வருமுன்னயே செய்தி எனக்கு வந்துடிச்சி ..நல்லா பாடுனியாமே ரொம்ப .சந்தோஷமா இருக்குப்பா."
தன பையிலிருந்த பொன்னாடையை எடுத்த அம்மாவின் மீது போர்த்தினான் அகிலன்.
           அப்போது உள்ளே நுழைந்த ராஜவேலு,"என்ன அகிலா, பள்ளிக்கூடத்துல திருவாசகம் பாடினியாமே.உங்க வாத்தியாரைப் பார்த்தேன்.அதிகாரி ரொம்ப பக்திமானாம் அவரு பிள்ளைகளை திருவாசகம் பாடச்  சொல்லிக் கேட்டாராம். அப்பதான் நீயாவே பாடறேன்னு சொன்னியாமே.ரொம்ப சந்தோஷப பட்டாரு."
"ஆமாப்ப்பா, எனக்கு பொன்னாடையே போர்த்தி அதிகாரி தட்டிக் கொடுத்தாருப்பா.வாத்தியாக்குங்க கூட  பாராட்டினாங்கப்பா."
"பார்த்தியா நல்ல விஷயம் அப்படீன்னு நான் சொன்னேனில்லையா  அதுதான் உனக்கு இவ்வளவு பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கு.இதைத்தான் வள்ளுவரும் சொல்லியிருக்காரு.'
"அது என்னங்க வள்ளுவர் சொன்னது?"
                  "எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் 
                  ஆன்ற பெருமை தரும்"

"அப்படீன்னா?"
"அதாவது எவ்வளவு நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவு  
பெருமையும் கவுரவமும் கிடைக்கும்.இப்போ எவ்வளவு பெருமை கிடைச்சிருக்கு.பார்த்தியா?"
"ஆமாம்ப்பா, எனக்கு இப்போதான் புரியுதுப்பா."
  மறுநாள் காலையில் மகிழ்ச்சியுடன் பூஜைக்கு வந்து அமர்ந்தான் அகிலன்.


ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com