சனி, 15 ஆகஸ்ட், 2009

சுபாஷ் சந்திர போஸ்

இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.



பாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளைநிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார்.



இவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில் மேல்படிப்பான i சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். தேர்வு எழுதாமலேயே பாரதநாட்டுக்குத் திரும்பினார்.



கல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர் ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார்.



இவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராம்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர்.



சிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார்.1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவி அதற்கு காந்திஜி, அசாத், நேருஜி என்று பெயரிட்டார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை கொண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடியபோதும் எதிர்பாராவகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மோசாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

4 கருத்துகள்:

  1. பாட்டிம்மா!
    உங்கள் வலைப்பூவினை எங்கள் தளத்தில் வாரமொரு வலைப்பூ பகுதியில் இவ்வாரம் அறிமுகம் செய்துள்ளோம் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.
    முடியுமானால், தயவு செய்து 4tamilmedia@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்குத் தொடர்பு கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகின்றோம்.
    நன்றி

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் அம்மா, நண்பர் சுரேஷ் குமாரின் அறிமுகத்தில் உங்கள் பதிவைக் குறித்து அறிய நேர்ந்தது. சிறிய வயதில் என் பாட்டியும் தாத்தாவும் எனக்குச் சொன்ன கதைகளாலேயே எனக்கும் ஓரளவுக்கு எழுதக் கைவந்திருக்கிறது என்று எண்ணுகிறேன். பாட்டிகள் கதை சொல்லித் தூங்குகிற சுகம் இன்னொரு தலைமுறை காணுமா என்று தெரியவில்லை. கதை கேட்பதன் சுகம் அறிந்தவன் என்பதால் என் குழந்தைக்கும் (பிறந்து இப்போது தான் மூன்று மாதங்களாகிறது) கதைகள் சொல்ல வேண்டும் என்ற ஆசை பிறந்திருக்கிறது. உங்களைப் போன்றவர்களிடம் கேட்பதைத்தான் எங்கள் குழந்தைகளுக்குச் சொல்ல முடியும். தொடர்ந்து சொல்லுங்கள் அம்மா.

    நன்றிகளுடன்,
    விஜய்கோபால்சாமி

    பதிலளிநீக்கு
  3. @விஜய்கோபால்சாமி,

    நன்றி , தொடர்ந்து ப்டிக்கவும்

    பதிலளிநீக்கு
  4. All the best for ur job...
    pl check the birth date of subashji, in wikepedia it is clearly mentioned jan 23,1897 but u have written feb 28,1897....

    Nellai srithar, Mumbai
    vizhithezhuiyakkam.blogspot.com

    பதிலளிநீக்கு