பரிமளம் என்னும் ஒரு சிறுமி இருந்தாள் அவளுக்கு பத்து வயதுதான் இருக்கும்.அவள் அப்பா வங்கியில்
பெரிய பதவி வகித்து வந்தார்.அத்துடன் பரிமளம் அவரின் செல்லப் பெண்.எனவே அவள் கேட்டதையெல்லாம்
வாங்கித் தருவார்.
அவளும் தேவையற்றதைக் கேட்காமல் தனக்கு எது தேவையோ அதை மட்டும் கேட்டுப் பெறும்
குணமுடையவளாக இருந்தாள்.அதனால் இந்த அவளின் நல்ல குணத்தை அறிந்திருந்த அவளின் தந்தை அவள்
எது கேட்டாலும் காரணம் கேட்காமல் வாங்கித் தருவார்.
ஒருமுறை பொங்கல் பண்டிகை வந்தது.பரிமளத்திற்கு அவள் அப்பா பட்டுப் பாவாடை வாங்கித் தருவதாகச்
சொல்லி கடைக்கு அழைத்துச் சென்றார்.ஆனால் கடைக்குச் சென்றதும் பரிமளம் தனக்கு ஒரு பட்டுப்
பாவாடைக்குப் பதில் மூன்று சாதாரணப் பாவாடை வாங்கித் தருமாறு கேட்டுக் கொண்டு அதேபோல்
வாங்கிவந்தாள்.
தன மகள் பட்டுப் பாவாடை கட்டிப் பார்க்க ஆசைப்பட்ட அவளின் அம்மா பரிமளத்தைக் கடிந்து கொண்டார்.
ஆனால் புன்னகையையே பதிலாகத் தந்து விட்டு அந்த உடைகளை வாங்கிச் சென்று விட்டாள் பரிமளம்.
மறுநாள் பொங்கல் பண்டிகையன்று பரிமளத்தின் பள்ளித் தோழிகள் அவள் வீட்டுக்கு வந்தனர்.அவர்களை உபசரித்து அமரச் சொல்லி பொங்கல் வடை கரும்பு பணம் முதலியன கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பினாள் பரிமளம்.அவளுடன் படிக்கும் வள்ளிக்கு தான் வாங்கிவந்த உடைகளில் ஒன்றைக் கொடுத்தாள் . வள்ளியின் முகத்தில் அப்போது தோன்றிய மகிழ்ச்சியையும் நன்றிக் கண்ணீரையும் கண்டு பரிமளத்தின் பெற்றோரே மனம் நெகிழ்ந்தனர்.
அவளது இந்தப் பண்பைப் பார்த்து அவளின் பெற்றோர் மிகவும் பெருமைப் பட்டனர்.மகளின் இயற்கையான உயர்ந்த பண்பைக் கண்டு அவர்கள் மனம் மகிழ்ச்சியடைந்தது.பரிமளமும் தன பெற்றோர் தனக்குத் துணையாக இருப்பதை உணர்ந்து மிகவும் மகிழ்ந்தாள்.
இவளது இந்த உதவும் பண்பை தனக்கு சாதகமாகப் பயன் படுத்திக் கொள்ள நினைத்தாள் ஜோதி என்ற பள்ளித் தோழி.
அவள் அடிக்கடி தன உறவுக்காரப் பெண் ஒருத்தி மிகவும் கஷ்டப் படுவதாகக் கூறி பரிமளத்திடம் உதவி பெற்று வந்தாள். எப்போதும் முகம் சுளிக்காமல் அவள் கேட்ட உதவிகளைச் செய்து வந்தாள் பரிமளம்.
இவளின் தோழிகளில் ஒருத்தி ஜோதியின் கெட்ட எண்ணத்தை அவளிடம் கூற அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளாத பரிமளம் 'எப்படியோ யாருக்கோ உதவி செய்யணும் அப்பிடின்னு நினைக்கிறாள் இல்லையா?அந்த நல்ல குணம் இருக்கு இல்லையா? அதுபோதும் எனக்கு.' என்று சொல்லிவிட்டு தொடர்ந்து உதவிகள் செய்து வந்தாள் .ஏதேனும் தேவைப் பட்டால் இப்போதெல்லாம் சில சிறுமியர் பரிமளத்திடம் கேட்காமல் ஜோதியிடம் கேட்டுப் பெறத் தொடங்கினர்.
நல்ல உள்ளம் படைத்த பரிமளம் எப்படியோ பிறருக்கு உதவ முடிந்தால் போதும் என்று வழக்கம்போல ஜோதிக்கு உதவி செய்து வந்தாள்.
ஒருமுறை ஜோதி 'ஒரு ஏழைப் பெண்ணின் வீடு தீப்பற்றிக் கொண்டது நாம் ஏதேனும் உதவணும் பரிமளா' என்று கூறி நிறைய உடைகள் கொஞ்சம் கணிசமான பணம் வேண்டும் என்று கேட்டுப் பெற்றாள். பரிமளமும் தன தந்தையாரிடம் கேட்டு வாங்கிவந்து ஜோதியிடம் கொடுத்தாள்.
பல நாட்களாக சேமித்த பணம் ஜோதியிடம் இருந்தது.பணம் சேர சேர ஜோதியின் ஆசையும் அதிகமாயிற்று. ஏழைக்கு வேண்டும் என்று கேட்டுப் பெற்ற உடைகளைக் கூட ஜோதி கடையில் விற்றுப் பணமாக்கிக் கொண்டாள்
அந்தப் பணத்தை மறைத்து வைத்துக் கொள்வதிலும் இன்னும் பணம் சேர்ப்பதிலும் கவனமாக இருந்ததால் ஜோதிக்கு படிப்பில் கவனம் குறைந்தது.
அரையாண்டுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது.அன்று தேர்வு எழுத ஜோதி பள்ளிக்கு வரவில்லை.காரணம் கேட்டபோது அவள் தந்தையாரை காவலர் பிடித்துச் சென்றதாகக் கூறினார்கள்.அவர் ஒரு கடையில் கணக்கெழுதும் வேலையில் இருந்தார். அங்கு பணம் திருட்டுப் போய் விட்டதாகவும் ஜோதியின் வீட்டில் அந்தப் பணம் கண்டெடுக்கப் பட்டதாகவும் கூறினார்கள்.
அதனால் அவரைக் கைது செய்து காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்று விட்டார்கள் காவலர்கள்
அது என்பணம் என்று ஜோதி எவ்வளவு சொல்லியும் அதை நம்பவில்லை காவல் அதிகாரி.
இந்த செய்தி காதில் விழுந்தவுடன் பரிமளம் தன தந்தையை அழைத்துக் கொண்டு காவல்நிலையம் சென்றாள்..
அங்கே அழுதுகொண்டு நின்றிருந்த ஜோதியையும் அவள் தாயாரையும் பார்த்து ஆறுதல் கூறினாள்
தன்னுடன் இரண்டு தோழிகளையும் அழைத்து வந்திருந்தாள் பரிமளம்.
நேரே காவல் அதிகாரியிடம் சென்றாள்
அவரை வணங்கினாள் அவர் என்னம்மா?என்றதும் பேசத் தொடங்கினாள்
"ஐயா, நாங்கள் ஜோதியுடன் படிக்கிறோம்.அவர்கள் வீட்டில் நீங்கள் கண்டெடுத்த பணம் நாங்கள் சேர்த்த பணம்.கொஞ்ச நாள் முன்னேதான் ஒரு விபத்தில் சிக்கிய பெண்ணுக்கு உதவ நாந்தான் ஆயிரம் ரூபாய் வரை என் தகப்பனாரிடம் கேட்டுக் கொடுத்தேன்.அதனால் அது திருட்டுப் பணம் இல்லை.நாங்கள் சேர்த்த பணம். அத்துடன் ஜோதிதான் பலருக்கும் உதவி செய்கிறாள் அதனால் அவளிடமே இந்தப் பணத்தையும் கொடுத்து ஏழைக்கு உதவுமாறு சொன்னேன்.எங்கள் தந்தையாரையும் கேட்டுப் பாருங்கள்."
பரிமளத்தின் துணிவான பேச்சைக் கேட்டு காவலர் மனம் மாறினார்.ஜோதியின் தந்தையாரை விடுவித்து அனுப்பினார்.அத்துடன் ஏழைகளுக்கு உதவும் நற்பண்புடைய ஜோதியையும் பாராட்டினார்.
தவறு செய்து வந்த ஜோதியை புகழேணியில் ஏற்றிவிட்டாள் பரிமளம்.
கண்களில் நீருடன் நன்றிப் பெருக்குடன் பரிமளத்தின் கைகளைப் பிடித்துக் கொண்டு கண்ணீர் விட்டாள் ஜோதி.
மறுநாள் பள்ளிக்கு வந்த பரிமளத்தை சூழ்ந்து கொண்ட பிற தோழிகள் "உன்னை ஏமாற்றிப் பணம் பறித்துவந்த ஜோதிக்கு நீ நல்ல பெயரைத் தேடித் தந்து விட்டாயே பரிமளா "என்ற போது பரிமளம் சிரித்தாள்
"அவள் நல்ல குணம் உங்களுக்குத் தெரியவில்லை.எவ்வளவு கஷ்டப் பட்டு சேமித்திருக்கிறாள்.
இதேபோல எல்லோருக்கும் சேமிக்கும் குணம் வளரவேண்டும் என்கிற எண்ணத்தை எல்லோரும் கற்றுக் கொள்ளுங்கள் யாரிடமும் உள்ள நல்லதைப் பார்க்கணுமே தவிர குறைகளைப் பார்க்கக் கூடாது.
அந்த வகையில் ஜோதி ஒரு நல்லபெண்" என்று கூறியதை அனைவரும் ஒப்புக் கொண்டாலும்
" நீ எல்லோரிடமும் உள்ள நல்லதையே பார்க்கிறாய் பரிமளா, உனது இந்த பண்பும் எங்களுக்கு வேண்டும்" என்று சொன்னதைப் புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள் பரிமளம்.
ஜோதி பள்ளிக்கு வந்ததும் நேரே பரிமளத்திடம் சென்றாள் அதுவரை அவளை ஏமாற்றிச் சேர்த்த பணத்தை பரிமளத்திடம் சேர்த்தாள் .
"என் குற்றத்தையும் குறையையும் பாராமல் அதிலும் நிறைவைப் பார்த்த உன் நல்ல குணம் தெரியாமல் தவறு செய்துட்டேன்.என்னை மன்னிச்சுடு. இனிமேல் நாம் ரெண்டு பெரும் சேர்ந்து மற்றவருக்கு உதவி செய்வோம்.முதலில் இந்தப் பணத்தைத் தலைமையாசிரியரிடம் கொடுத்து ஏழைப் பிள்ளைகளுக்குத் தேவையானதை வாங்கித் தரச் சொல்வோம் வா"என்று பரிமளத்தின் கையைப் பற்றிக் கொண்டு ஓடினாள் ஜோதி..
" குணமநாடி குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்க கொளல் "
என்ற வள்ளுவரின் கருத்தமைந்த பண்பை பரிமளத்திடமிருந்து நாமும் கற்றுக் கொள்வோம்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
/// எப்படியோ யாருக்கோ உதவி செய்யணும் அப்பிடின்னு நினைக்கிறாள் இல்லையா?அந்த நல்ல குணம் இருக்கு இல்லையா? அதுபோதும் எனக்கு. ///
பதிலளிநீக்கு/// யாரிடமும் உள்ள நல்லதைப் பார்க்கணுமே தவிர குறைகளைப் பார்க்கக் கூடாது. ///
இந்த குறளுக்கு சரியான... மிகச் சரியான கதை அம்மா...
வாழ்த்துக்கள்...
படித்து வரும்போதே, இந்தக் கதை இந்தக் குரலை மையப்படுத்திதான் சொல்லப்படுகிறது என்பதை மிக அழகாக புரிய வைத்துவிட்டார் இந்தப் பாட்டி. குழந்தைகளுக்கு காலத்தால் அழியாத குறள் மட்டுமல்ல.. ருக்மணி பாட்டியின் குறள் பற்றிய விளக்க கதையும் என்றும் பேசப்படும் ஒருநாள்.. இவ்வளவும் எளிமையாக புரியவைக்கும், குரளுக்கு கதை சொல்லும் பாட்டியின் குரல் எங்கும், என்றும் பேசப்படும் நாள் என் கண்முன் இப்போதே விரிகிறது. வாழ்க அவரின் இவ்வறம்.
பதிலளிநீக்குஎவ்வயதானாலும், அவ்வயதில், தன வாழ்க்கையை ஓர் அர்த்தமுள்ளதாக்கும் இப்பாட்டியை நினைக்கும்போது, எனக்கு நினைவுக்கு வரும் ஒரு குறள்
தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் றோன்றாமை நன்று
- இதற்கு ஓர் உதாரணம் இந்த ருக்மணி பாட்டி.
எல்லாவற்றிலும், எல்லோரிடத்தும் நல்லதையே காணும் ஒரு சிறுமி வாழ்க்கையை மிக அழகாக விளக்கி விட்டாள். இந்தக் கதை சுட்டிகள் மட்டுமல்ல, பெரியவர்களும் படித்து தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களை சொல்லுகிறது.
பதிலளிநீக்குஅர்த்தம் செறிந்த திருக்குறள்; அதை எளிமையாக விளக்கும் அர்த்தம் செறிந்த கதை!
வாழ்த்துகள் ருக்மிணி!
எல்லோரிடத்தும் இருக்கும் நல்லதை மட்டுமே காண வேண்டும்.... கெட்டதை விட்டு விட வேண்டும்....
பதிலளிநீக்குநல்ல கதை மூலம் குறளைப் புரிய வைத்த உங்கள் பகிர்வு நன்று.
இந்த இடுகையையும் கொஞ்சம் பாருங்கள் நண்பர்களே!!! http://www.valaitamil.com/thirukkural.php
பதிலளிநீக்குநீங்க நிறைய டிவி தொடர் பார்ப்பீங்களா?
பதிலளிநீக்குஉங்கள் கதையில் அதற்கான அத்தனை அம்சங்களும் உள்ளன.
1. திருக்குறள் என்பது சிறுவர்களுக்கானது என்பது தவறான கருத்து.
2. உங்களின் கதையை சிறுவர்களுக்கு சொல்ல முயற்சித்திருக்கிறீர்கள். (அதில் சீரியல் நெடி)
3. திருக்குறள் ஒவ்வொரு மனிதனுக்குமான தெளிவான வழிகாட்டுதல் ஆகும்.
4.இன்றைய அன்றாட வாழ்க்கையில் மனிதர்கள் பற்பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.அது போன்ற உண்மையான சம்பவங்களை நீங்கள் குறிப்பிட்டு, அதற்கு திருக்குறளை நீங்கள் ஒப்பிட்டால், படிப்பவர்களும் அதை வெறும் கதை என்று பாராமல் நமது வாழ்க்கைக்கான வழிகாட்டுதலாகப் பார்ப்பார்கள்.
5. மேலும் உங்களை பாராட்டி எழுதியிருப்பவர்களும் பெரியவர்களே, யாரும் சிறு பிள்ளைகள் அல்ல.
6. இன்றைய நடைமுறை வாழ்க்கைக்கு ஏற்றார் போல் திருக்குறளை ஓப்பிட்டால் அனைவருக்கும் அது பயனுள்ளதாக இருக்கும்.
" உங்களுடைய முயற்சிக்கு எனது பாராட்டுகள். ஆனால், உங்களின் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும்.(கண்டிப்பாக)"
கதையை கற்பனை செய்யாதீர்கள்,
நிஜ வாழ்விலிருந்து எடுங்கள்,
நன்றி!
G.S. மதன்