சோழநாட்டை மனுநீதிச் சோழன் என்ற மன்னன் ஆண்டு வந்தான்.நீதி வழுவாது ஆட்சி செய்து வந்த மன்னனை மக்கள் தங்கள் உயிரினும் மேலாக மதித்து வாழ்ந்தனர். மனுநீதிச் சோழன் வெகு நாட்களாக மக்கட்பேறு இல்லாமல் வாடினான். இறைவனது அருளால் அழகே உருவான ஒரு மகன் பிறந்தான்.மன்னனும் மக்களும் மனம் மிக மகிழ்ந்தனர். வீதி விடங்கன் என்னும் பெயரிட்டு அருமையுடன் வளர்த்து வந்தான் மன்னன். வீதிவிடங்கன் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்தான். அறிவிலும் நற் பண்புகளிலும் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.குறித்த வயதில் மன்னர் அவனுக்கு யானை ஏற்றம் குதிரைஎற்றம் தேர் ஓட்டுதல் வாட்பயிற்சி ஆகிய கலைகளைக் கற்பித்தார். எல்லாக் கலைகளையும் நன்கு கற்றுத் தேர்ந்தான் வீதிவிடங்கன்.
நீதி தவறாத மன்னன் மனுநீதிச் சோழன். நாட்டு மக்கள் மன்னனான தன்னை எந்தவிதத் தடையும் இன்றி நேரில் காணவேண்டும் என்று சிந்தித்தான்.
அதற்காக சபை கூட்டி ஆலோசனை செய்தான். மக்கள் அனைவரும் மகிழும்படி ஒரு காரியம் செய்தான். தன் அரண்மனை வாயிலில் ஒரு பெரிய மணியைக் கட்டி வைத்தான். மன்னனைக் காண விரும்பி வருபவர் யாராயினும் அந்த மணியை அடித்து ஒலி எழுப்பினால் மன்னன் நேரிலே வந்து குறைகளைக் கேட்பார். நேரில் கேட்டுக் குறைகளைக் களைவார்.என்று பறையறைவித்தார். மக்கள் தங்கள் மன்னனின் எளிமை கண்டு மகிழ்ந்ததோடு அவனைப் போற்றிப் புகழ்ந்தனர். காட்சிக்கு எளியனாக உள்ள மன்னனை யார்தான் விரும்பமாட்டார்கள்.
ஆண்டுகள் கடந்தன. மனுநீதிச் சோழனால் கட்டப் பட்ட அந்த ஆராய்ச்சி மணியை யாரும் அடிக்கவேயில்லை. மக்கள் எந்தக் குறையும் இன்றி நாட்டில் வாழ்ந்து வந்தனர். காலம் ஒரே மாதிரி செல்லுமா. சோதனை மன்னன் மகன் வீதிவிடங்கன் உருவில் வந்தது.
ஒருநாள் மாலைவேளை வீதிவிடங்கன் உல்லாசமாக தேரில் ஏறி நகரைச் சுற்றி வந்தான். அதே வேளையில் ஒரு கன்றுக்குட்டியும் தெருவில் துள்ளிக் கொண்டு வந்தது. உல்லாசத்தின் உச்சியில் இருந்த இளவரசன் அதைக் கவனிக்காமல் அக்கன்றின்மேல் தேரை ஏற்றிவிட்டான். கன்றும் அங்கேயே விழுந்து தன் உயிரை விட்டு விட்டது. மகிழ்ச்சியோடு இருந்த கன்றின் மரணத்திற்குக் காரணமாகிவிட்டோமே என்று மதிமயங்கி அங்கேயே அக்கன்றின் அருகிலேயே அமர்ந்து விட்டான் இளவரசன். மன்னன் மீதிருந்த அன்பாலும் அவன் மகன் இந்நாட்டின் ஒரே வாரிசு என்ற எண்ணத்தாலும் யாரும் இச்செய்தியை மன்னனுக்குச் சொல்ல விரும்பவில்லை.
மக்கள் சொல்லாவிட்டாலும் அக்கன்றின் தாயான பசு கண்களில் நீர்சோர அங்குவந்து தன் கன்றைத் தன் நாவால் நக்கிக் கொடுத்தது. பின் வேகமாக அங்கிருந்து அகன்றது. மக்களும் அப்பசுவின் பின் சென்றனர்.அது எங்கு செல்கின்றது என யாருக்கும் தெரியவில்லை. அதை அறிந்துகொள்ளும் பொருட்டே அதன் பின்னே கூட்டமாகச்சென்றனர். அப்பசு மன்னன் கட்டியிருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றைப் பிடித்துபெரும் ஒலி எழுமாறு அடித்தது.
அந்தப்புரத்திலிருந்த மன்னன் திடுக்கிட்டான். மந்திரி பிரதானியர் புடைசூழ ஓடிவந்தான் வாயிலுக்கு. ஒரு மனிதனை எதிர்பார்த்து வந்த அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தன் நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லை என்று இறுமாந்திருந்த மன்னனுக்கு இது பேரிடியாக இருந்தது. என்ன நடந்தது எனக் கேட்டபோது யாரும் எதுவும் பேசாது நின்றனர். மன்னன் அந்தப் பசுவின் பின்னே நடந்து சென்றான். அப்பசு மன்னனைத் தன் கன்று இறந்து கிடந்த இடத்திற்கு அழைத்துச் சென்று தன் நாவால் தான் ஈன்ற கன்றினை நக்கிக் காட்டியது. மன்னன் அக்காட்சியைக் கண்டு கண்கள் கலங்க நின்றான்.பின் கண்கள் சிவக்க மந்திரியாரைப் பார்த்து "இப்பாவ்த்தைச் செய்தவன் யாவன்? உடனே அவனை என்முன் கொணர்ந்து நிறுத்துங்கள் " எனக் கட்டளையிட்டான். அனைவரும் அமைதியாயிருந்தனர்.
"நீங்கள் கூறாவிட்டால் நீதி தவறிய மன்னனாக நான் ஆவேன். அவ்வாறு நான் உயிர் வாழ விரும்பவில்லை.என் உயிரை நான் மாய்த்துக் கொள்வேன்." என்ற மன்னனைத் தடுத்து நிகழ்ந்த நிகழ்ச்சியைக் கூறித் தானே குற்றவாளியென மன்னன் முன் தலைகுனிந்து நின்றான் வீதிவிடங்கன். ஒருநிமிடம் நிலைகுலைந்துபோன சோழன் சற்றே சிந்தித்தான்.இறந்துபோன கன்றை உயிர்ப்பிக்க இயலாது.ஆனால் உயிருக்கு உயிரைத் தரலாம். அத்துடன் அந்த தாய் படும் வேதனையை இந்தக்குற்றம் செய்தவனின் தாயும் அனுபவித்தலே சரியான தண்டனையாகும்.
என்று முடிவு செய்தான்.
உடனே ஒரு மன்னனாக நின்று சேவகருக்குக் கட்டளையிட்டான். "உடனே தேரைப் பூட்டுங்கள். அந்தக் கன்று நின்ற இடத்தில் வீதிவிடங்கனை நிறுத்துங்கள்.அவன் மீது தேரை ஏற்றிக் கொல்லுங்கள். தவறு செய்தவன் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்." என்று கூறினான்.ஆனால் அவன் கட்டளையை யாரும் ஏற்க முன்வரவில்லை. வருங்கால மன்னனை நாட்டின் இளவலைக் கொலை செய்ய யாரும் விரும்பவில் லை .
.மனுநீதி தவறாத மாமன்னன் மனுநீதிச் சோழன் தானே தேரின் மீது ஏறி அமர்ந்தான்.வீதிவிடங்கனைத் தேர்க்காலில் இட்டு த தேரைச் செலுத்தத் தொடங்கினான்.தேரும் வேகமாக ஓடத் தொடங்கியது. மந்திரி முதலியோர் செய்வதறியாது திகைத்து நின்றனர்.மக்களோ தங்கள் நிலைமறந்து அலறிக் கூக்குரலிட்டனர். எதையும் கவனத்தில் கொள்ளாத சோழமன்னன் தேரை விரைவாகச் செலுத்தினான்.
என்ன அதிசயம்? தேர் வீதிவிடங்கனின் அருகே வந்து நின்று விட்டது. அங்கே கண்ணீர் சோர நின்றிருந்த பசுவும் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த கன்றும் மாயமாய் மறைந்தன. அனைவரும் திகைத்து நின்றனர்.
விண்ணிலிருந்து ஒரு அசரீரியின் குரல் கேட்டது. "சோழ மன்னா! தேவேந்திரன் சபையில் உனது நீதியின் சிறப்பைப் பற்றிய சர்ச்சை எழுந்தது. உன் நீதியின் சிறப்பை அறியவே தேவேந்திரனாகிய நானும் எமதர்மனும் பசுவாகவும் கன்றாகவும் வந்தோம். உன் நேர்மையும் நீதிவழுவாத் தன்மையும் கண்டு மகிழ்ந்தோம். பல்லாண்டு புகழோடு வாழ்வாயாக." என்று வாழ்த்தி மறைந்தது.மன்னன் மனம் மகிழ்ந்து தன் மகனை அணைத்துக் கொண்டு உச்சி மோந்தான்.
நீதி என்று வரும்போது துலாக் கோல்போல் இருந்து நீதிவழங்கிய சோழ மன்னனை நம் வாழ்நாளில் என்றும் மறக்க இயலாதல்லவா!.
Romba nalla needhi kadhai
பதிலளிநீக்குthank you for your comment.
பதிலளிநீக்குanbudan rukmani seshasayee.
yeppotho padichathai ippothu asaipoduvathu mathiri irunthathu thanks mam
பதிலளிநீக்குmikka nandri.
பதிலளிநீக்குrukmani seshasayee.
nam padikka vendiya kathai ethu........
பதிலளிநீக்குmikka nandri.
நீக்கு