திங்கள், 5 ஜூலை, 2010

37th story. pagaivarkku aruliya panbaalan.

                                                                 பகைவற்கு அருளிய பண்பாளன்.
திருக்கோவிலூரைச் சேர்ந்த பகுதி சேதிநாடு என்று அழைக்கப் பட்டது. அந்நாட்டை மலாடர் குடியிற் பிறந்த மலையமான் காரி என்பவன் ஆண்டுவந்தான். இவன் மலாடர் கோமான் என மக்களால் அழைக்கப்பட்டான்.  மக்களிடம் பாசமும் இறைவனிடம்  பக்தியும் கொண்டு நன்முறையில் அரசாட்சி புரிந்து வந்தான். சிவனிடத்தில் பேரன்பும் சிவனடியார்களிடம் பெருமதிப்பும் கொண்டிருந்தான். சிவனடியார்கள் எவராயினும் அவர் நன்முறையில் உபசரிக்கப்பட்டார். சிவாலயங்கள் அனைத்தும் நன்முறையில் பரிபாலனம் செய்யப்பட்டன.
மன்னன் வீரத்திலும் குறைந்தவனல்லன். இவனை வெல்ல எண்ணிப் போரிட்ட அரசர்களைஎல்லாம் வெற்றி கொண்டு பெரு வீரனாகத் திகழ்ந்தான்.
அண்டை நாட்டு மன்னனான முத்தநாதன் மலையமானிடம் பெரும் பொறாமை கொண்டிருந்தான். எப்படியும் அவனை வீழ்த்தி அவன் நாட்டைக் கைப்பற்ற எண்ணம் கொண்டு செயல் பட்டான் .பெரும் படை கொண்டு தாக்கினான். ஆனால் படு தோல்வி அடைந்து ஓடினான்.மலையமானைவஞ்சனை செய்து வீழ்த்த எண்ணம் கொண்டான்.சிவனடியார்கள் மீது பேரன்பு கொண்ட இவனை வீழ்த்த சிவனடியார் வேடமே சிறந்தது என முடிவு செய்தான்.
அதன்படி ஒரு சிவனடியார்போல் மேனியெங்கும் திருநீறு பூசி உத்திராக்ஷ மாலையணிந்து தலையை முடிந்து கொண்டு அரண்மனைக்குள்  நுழைந்தான். அவன் கையில் ஒரு புத்தகக் கட்டும் அதனுள் ஒரு கத்தியும் மறைத்து வைத்துக் கொண்டு வந்தான்.மலாடர் அரண்மனைக்குள் சிவ்னடியார் எங்கும் எப்போதும் செல்லலாம் என்று ஆணை பிறப்பித்திருந்ததால் முத்தநாதன் தயக்கமின்றி உள்ளே நுழைந்தான். அந்தப்புரம் வரை சென்ற முத்தநாதனை வாயிலில் நின்ற தத்தன் என்ற மெய்க்காப்பாளன் தடுத்தான்.
"அடிகளே, வணக்கம். எமது மன்னர் ஓய்வு எடுத்துக்கொண்டுள்ளார். இது அனைவரும் உறங்கும் நேரமல்லவா?தயவு செய்து தாங்களும் ஓய்வு எடுத்துக் கொண்டு அதிகாலைவரலாமே?"அடக்கத்துடன் கூறிய தத்தனை கோபத்துடன் பார்த்தான் சிவனடியார் வேடதாரி முத்தநாதன்.
"யாருக்கும் கிட்டாத ஆகம நூல் ஒன்றைக் கொண்டு வந்துள்ளேன்.சிவபக்தனான மன்னனுக்கு  உபதேசமசெய்யவந்துள்ளேன்.காலதாமதம் செய்யாமல் மன்னனை எழுப்பு.அல்லது என்னை உள்ளே போகவிடு" என்றபடியே உள்ளே நுழைந்தான் முத்தநாதன்.
அவனைத் தடுக்க இயலாதபடி மன்னனின் கட்டளை தடுத்ததால் தத்தன் செய்வதறியாமல் நின்றான்.
உறக்கம் கலைந்த மன்னன் வேகமாக எழுந்தான். மஞ்சத்தினருகே சிவனடியார் நின்றிருப்பதைக் கண்டு அவரை வணங்கினான். 
"வரவேண்டும் சுவாமி, ஆசனத்தில் அமருங்கள். " என்று உபசரித்தான்.
"சுவாமி இந்த இரவு நேரத்தில் வந்துள்ளீர்களே, ஏதேனும் அவசரகாரியமா சுவாமி. தயங்காமல் கூறுங்கள் எதுவாயினும் செய்யக் காத்திருக்கிறேன்" முத்தநாதன் கபடமாகச் சிரித்தான். 
"மலாடர் கோமானே! எவருக்கும் கிட்டாத ஆகமநூல் ஒன்று எமக்குக் கிட்டியது.அந்தச் சிவத்தின் வாயாலேயே உரைக்கப்பட்டது.அதை உனக்கு உபதேசிக்கவே வந்தேன். இதற்கு நேரம் தேவையா மன்னா?"
"இல்லை சுவாமி. இல்லை. நான் பெரும் பேறு பெற்றேன். தங்கள் வாயாலேயே எனக்கு உபதேசம் செய்யுங்கள் சுவாமி."என்றபடியே முத்தனாதனின் காலடியில் கை கட்டி வாய் புதைத்து அமர்ந்து கொண்டான் மன்னன்.
முத்தநாதன் "இங்கு உன்னையும் என்னையும் தவிர வேறு யாரும் இருத்தல் ஆகாது. உன் மனைவியை அனுப்பிவிடு."என்றான் கபடமாக.
மன்னனின் அருகே நின்ற மகாராணி குறிப்பறிந்து அவ்விடம் விட்டு அகன்றாள். ஆனால் வாயிலில் நின்றிருந்த தத்தன் மட்டும் தன் கவனம் முழுவதையும் முத்தனாதனிடமே வைத்திருந்தான்.
தனிமையில் விடப்பட்ட முத்தநாதன் தன் முன் மன்னனை மண்டியிட்டு அமரச் சொன்னான். இமைக்கும் நேரத்தில் தன் புத்தகக் கட்டினுள் வைத்திருந்த குறுவாளை எடுத்து மன்னனின் உடலில்  பாய்ச்சி விட்டான்.
அதே நேரம் உள்ளே பாய்ந்துவந்த தத்தன் தன் உடைவாளை ஓங்கி முத்தநாதனை வெட்டத் துணிந்தான்.உயிர் நீங்கத் துடித்துக் கொண்டிருந்த மன்னன் அவனைத் தடுத்து "தத்தா அவர் நம்மவர்.அவரைக் கொல்லாதே."என்றார்.
கண்ணீருடன் அவரைத் தாங்கிக் கொண்ட தத்தன் "அரசே! நான் என்ன செய்ய வேண்டும்?"என்று கேட்டான்.
"சிவனடியார் வேடம் தாங்கி வந்தாலும் அவர் நமக்கு அந்தச் சிவமே. எனவே அவரை பத்திரமாக எந்த ஊறும் இன்றி நம் நாட்டு எல்லை வரை சென்று விட்டு வா. நீ வரும் வரை என் உயிர் பிரியாது." என்று கட்டளையிட்டார்.
அவரின் கட்டளையை சிரமேல் தாங்கிய தத்தன் முத்தநாதனை அழைத்துச் சென்றான். வழியில் தமது அரசருக்கு முத்தநாதன் இழைத்த தீங்கை அறிந்த மக்கள் பொங்கி எழுந்தனர்.ஆனால் தத்தன் அவர்களிடம் தமது அரசரின் கட்டளையை எடுத்துக் கூறித  தடுத்தான்.அதனால் முத்தநாதன் எந்த த துன்பமும் இன்றி த தன் நாடு அடைந்தான்.
தத்தன் வேகமாக அரண்மனை சென்று மன்னன் முன் நின்றான்."அரசே! முத்தநாதனை பத்திரமாக விட்டு வந்தேன்." இச்சொற்களைக் கேட்ட மன்னன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது.
"தத்தா! எனக்குப் பேருதவி செய்துள்ளாய்.உனக்கு என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்"என்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான். அவன் உயிர் இறைவன் திருவடிநிழலை அடைந்தது.
இத்தகு அன்புள்ளமும் சிவனிடத்திலும் அவன் அடியார்களிடத்திலும் மலாடர் கோமான் கொண்ட பக்தியினால் அவன் அறுபத்து மூன்று நாயன்மார் வரிசையில் வைத்து போற்றப் படுவது நியாயம்தானே.மெய்யடியார்மீது இவன் காட்டிய பரிவின் காரணமாக இம்மன்னன் மெய்ப்பொருள் நாயனார் என்ற திருநாமம் கொண்டு சிறப்பிக்கப் பெற்றார்.
பகைவனுக்கும் அருளும் பேரன்பு கொண்டதால் நாயன்மார்களின் வரிசையில் நின்று நிலைபெற்ற புகழைப் பெற்றார்.பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே பகைவனுக்கருள்வாய் என்று மகாகவியும் பாடினார். 
"இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண  
நன்னயம் செய்து விடல்."  என்று வள்ளுவரும் கூறியுள்ளார். நம் உள்ளத்திலும் இத்தகு கருணையை நாம்  வளர்த்துக் கொள்ளவேண்டும்.அதுவே நாம் நல்ல மனிதர்கள் என்பதன் அடையாளமாகும்..


















2 கருத்துகள்:

  1. ருக்மணி அம்மா என் மகளுக்கு தினம் ஒரு கதை சொல்வதாக சொன்னாலும் சொன்னேன் ,தினம் கதைகள் சொல்ல சொல்ல பெரிய கதை பஞ்சமே வந்து விட்டது,உங்கள் பக்கம் சமீப காலமாகத் தான் வாசிக்கிறேன்,என் மகளுக்கு சொல்லக் கதைகளுக்குப் பஞ்சமில்லை இனி ,நன்றி அம்மா.
    இன்றைக்கு மலையமான் காரி என்ற மெய்பொருள் நாயனார் கதை தான் சொல்லப் போகிறேன்,கதைக்கு கதையும் ஆயிற்று நீதியும் சொன்னது போலாயிற்று.

    பதிலளிநீக்கு
  2. vanakkam rukmani amma, ananda vikadan mulamaga ungal valaithalam patri therinthu konden. mikavum arumaiyaha ullathu. ipothu en pasangaluku thinamum neethi kathaigal solla mudikithathu. mikka nandri amma. athodu ithai enakku arimugappaduthiya ananda vikadanukkum...

    பதிலளிநீக்கு