Saturday, January 9, 2010

குரு பக்தி

துரோணர்  என்ற  முனிவர்  ஒருவர்  இருந்தார். அவர்  அரசகுமாரர்களான   பஞ்ச பாண்டவர்களுக்கும்   கௌரவர்களான   துரியோதனன்  முதலான  நூற்றுவருக்கும் குருவாக    இருந்தார். அவர்களுக்கு   வில்   வித்தை யை   சிறப்பாகக்   கற்பித்து   வந்தார்.  வில்   வித்தையில்  அர்ஜுனனை    விடச்  சிறந்தவர்  எவருமில்லை   எனக்கூறும்படி   செய்வதாகச்   சபதம்   செய்திருந்தார்.   இதனால்   துரியோதனனுக்குக்   கோபமும்   பொறாமையும்   அர்ஜுனன் மீது  ஏற்பட்டிருந்தது.  இயல்பாகவே  அர்ஜுனன்  வில்லில்  அம்பை  ஏற்றி   எய்வதில்    மிகவும்  சிறந்தவன்.  அதனால்  துரோணர்  அர்ஜுனனிடம்  தனி  அன்பு  கொண்டிருந்தார்.

ஒரு  நாள்  துரோணர்  தன்  மாணவர்களுக்காகக்  காத்திருந்தார்.  அப்போது  ஓர்  ஏழைச்சிறுவன்  வந்து  துரோணரைப்   பணிந்து  நின்றான்.
அவனை  ஆசிர்வதித்தார்  துரோணர்.
"யாரப்பா நீ?  எங்கு  வந்தாய்?"

"குருவே!,  நான்  தங்களிடம்  வில் வித்தை   பயிலவேண்டும்  என  விரும்புகிறேன்.  பலநாட்களாகத்  தங்களைத்  தேடித்  திரிந்தேன்.  இன்றுதான்  தங்களின்  தரிசனம்  கிடைத்தது.  என்னைத்  தங்கள்  மாணாக்கனாக  ஏற்றுக்   கொண்டு  அருள்  செய்ய  வேண்டும்" 

"என்ன  கேட்டாய்?  உன்னை  மாணவனாக   ஏற்றுக்கொள்ள  வேண்டுமா?    நான்  அரச  குடும்பத்தாருக்கு  மட்டுமே  கற்பிப்பவன்.  உன்னைப்  போன்ற  ஏழைச்  சிறுவனுக்குக்  கற்பிக்க  மாட்டேன்.  அரசகுமாரர்கள்  வரும்  நேரம்  நீ  போய்  வா.  உனக்கேற்ற  ஆசானைத்  தேர்ந்தெடுத்துக்  கொண்டு  வித்தையைக்  கற்றுக்கொள். என்  பூரண  ஆசி  உனக்கு."
 கைகளை  உயர்த்தி  ஆசி  வழங்கிவிட்டு  துரோணர்  அங்கிருந்து  சென்று  விட்டார். மண்டியிட்டு  அமர்ந்திருந்த  அந்த  வேடுவச்  சிறுவன்  கண்களில்  நீர்  பெருக  நின்றான்.  அவனது  பல  நாள்  ஆசை  நிறைவேறாமல்  போனது  பற்றி  மிகவும்  வருந்தினான்.  எங்கே  துரோணர்  பாதங்களை  வைத்திருந்தாரோ  அந்த  இடத்திலிருந்து  மண்ணை  அள்ளிக்  கொண்டான்.  துரோணர்  சென்ற  திசை  நோக்கி  வணங்கினான்.
விடுவிடுவெனத்  தன்  இருப்பிடம்  நோக்கி    நடந்தான். 

இல்லம்  சேர்ந்த  அச்சிறுவன்  மண்ணைக்  குழைத்து  துரோணரைப்  போன்ற  ஒரு  சிலையைச்  செய்து  வைத்துக்  கொண்டான். அந்தச் சிலையின்  முன்னால்  நின்று கொண்டு  வணங்கினான்.  பின்னர்  தனது  பயிற்சியைத்  தொடங்கினான்.  துரோனரையே   தனது  குருவாக  மானசீகமாக  வரித்துக்  கொண்டான்.  விரைவிலேயே  சிறந்த  வில்  வீரனாக  ஆனான்.

நாட்கள்  கடந்தன. ஒரு  நாள்  துரோணரும்  அவரது  மாணாக்கரான  நூற்று  ஐய்வரும்   காட்டுவழியே   சென்று  கொண்டிருந்தனர்.  அப்போது  அந்தவழியில்   இரண்டு  காட்டுப்பன்றிகள்  ஒன்றோடு  ஒன்று  மோதிக்கொண்டு  சண்டையிட்டுக் கொண்டு  இருந்தன.அப்போது "  அர்ஜுனா!     இப்பன்றிகளைக்   கொல்"  எனக்கட்டளையிட்டார்  குரு.
அர்ஜுனன்  திகைத்தான். " ஒரே  பாணத்தினால்  இரண்டு  உயிர்களை  ஒரே  சமயத்தில்  கொல்ல  முடியுமா? குருவே,  அப்படிப்பட்ட  கலையை  நீங்கள்  இன்னும்  எனக்குக்  கற்பிக்கவில்லையே."  இதற்குள்  இரண்டு  பன்றிகளும்  வெகு  உக்கிரமாகப்  போரிட்டுக்  கொண்டு  வழியை  அடைத்துக்  கொண்டு  இருந்தன.  அப்போது  எங்கிருந்தோ  அம்புகள்  வந்து  ஒரே  அடியில்  இரண்டு  பன்றிகளையும்  வீழ்த்தியது.  பன்றிகள்  இரண்டும்  ஒரே  சமயத்தில்  வீழ்ந்து  இறந்தன.   இதைப்  பார்த்த  அர்ஜுனன்  திகைத்து  நின்றான்.  தன்  குருவை  சந்தேகத்தோடு  பார்த்தான்.  "தன்னினும்  சிறந்த  வில்வீரன்  ஒருவன்  உள்ளான்.  அவன்  விட்ட  பாணமே  இதற்குச்  சாட்சி.  இந்தக்கலையை  அறிந்தவர்  துரோணர்  ஒருவரே.  இன்று  மற்றொருவர்  உள்ளார்  எனில்  இதைக்  கற்பித்தவர்  தனது  குருவே. "  இவ்வாறு  அர்ஜுனன்  எண்ணம்  ஓடிற்று.

அப்போது  வில்லும்  கையுமாக  அங்கு  வந்தான்  அன்று  வந்த  வேடுவச்  சிறுவன்.  துரோணரைக்  கண்டதும்  மண்டியிட்டு  வணங்கினான்.

"ஏ  சிறுவனே!  உனக்கு  இக்கலையைக்  கற்பித்தவர்  யார்?  உன்  குரு  யார்?"  சற்றே  கோபமாகக்  கேட்டார்  துரோணர்

"தாங்கள்தான்  எனது  குருநாதர். தினமும்  நான்  உங்கள்  முன்னிலையில்தானே  பயிற்சி   மேற்கொள்கிறேன்."

"பொய் சொல்லாதே!   ராஜகுமாரர்களைத்  தவிர  நான்  யாருக்கும்  கற்பித்ததில்லை. உண்மையைச்  சொல்."

"என்னுடன்  வாருங்கள்."  என்று  அழைத்த  சிறுவனுடன்  அனைவரும்  அவன்  இல்லம்  சென்றனர்.  காட்டின்  நடுவே   ஒரு  குடிசை.  அதன்  முன்னே  ஒரு  திறந்த  வெளியில்  நாடு  நாயகமாக  துரோணரின்  சிலை  அமர்ந்த  நிலையில்  அமைக்கப்  பட்டிருந்தது.  அச்சிலையை  வணங்கிய  சிறுவன்  "இவர்தான்  என்  குருநாதர்.  இவர்  முன்னால்தான்  நான்  பயிற்சி  செய்கிறேன்." என்றான்  பணிவோடு.

"இது  எனது  உருவம்போல்  உள்ளதே"

"ஆம்  குருதேவா. தங்களின்  பாதம்  பதித்த  மண்ணைக்  கொண்டுவந்து  அதைச்சேர்த்து  ஒரு  சிலை  செய்து  தாங்களே  அமர்ந்து  எனக்குப்  பாடம்  சொல்வதாக  நினைத்துக் கொண்டேன்.  தங்களை  என்  மனதில்  குருவாக  எண்ணிக்  கொண்டு  தினமும்  வணங்கி  வருகிறேன்."

துரோணர்  அச்சிறுவனின்  குருபக்தியே  அவனுக்கு  இத்தனை  திறமைகளும்  வளரக்காரணம்  என்பதைத்  தெரிந்து  கொண்டார்.  ஆயினும்   அர்ஜுனனுக்கு   வில்லுக்கு  விஜயன்  என்ற  பெயரைப  பெற்றுத்  தருவதாக  வாக்குக்  கொடுத்திருப்பதால்  இந்தச்  சிறுவன்  இனியும்  வில்லை  தன்  கையில்  எடுக்கக் கூடாது என  முடிவு  செய்தார். சிறுவனை  அன்புடன்  பார்த்தார்.

"சிறுவா!, உன்  பெயர்  என்ன?"

"என்  பெயர்  ஏகலைவன்.  இந்தக்  காட்டில்  வசிக்கும்  வேடுவர்  தலைவரின்  மகன்  நான்."

"உன்  திறமையைக்  கண்டு  மிகவும்  மகிழ்ந்தேன்.  குருதக்ஷிணை   தரவேண்டாமா  நீ?"

"குருவே!  எதுவேண்டுமானாலும்  கேளுங்கள். சிங்கம்  புலி  இவை வேண்டுமா?   மான்கள்  வேண்டுமா?  நொடியில்  பிடித்துவருவேன்  .உங்களுக்குக்  குருதக்ஷிணை  யாகத்  தருவேன்"

"அதெல்லாம்  வேண்டாம்.  ஏகலைவா!   நீயே  சிறந்த  மாணவன். என்பதை  நான்  ஒப்புக்கொள்கிறேன். எனக்குக்  குருதக்ஷிணையாக  உன்  வலதுகைக்  கட்டை  விரலைத்  தருவாயா?"

"தாங்கள்  எனது  குரு  என  ஒப்புக்  கொண்டதே  எனக்குப்  போதும்.   தாங்கள்  குருதக்ஷிணை  என  என்  உயிரையே  கேட்டாலும்  நான்  தரத்  தயாராக  உள்ளேன்.  பெற்றுக்கொள்ளுங்கள்."
மறுகணம்  தனது  இடது  கை  வாளால்  வலதுகை  கட்டை  விரலை  வெட்டி  ஒரு  இலையில்  வைத்து  அவர்  பாதத்தில் வைத்துப்   பணிந்து  நின்றான்  ஏகலைவன்.
மனம்  மகிழ்ந்த  துரோணர்  "ஏகலைவா!  குருபக்தி  என்ற  சொல்லுக்கு  நீயே  ஒரு  உதாரணம்.  உலகம்  உள்ளவரை  உன்  பெருமையை  இவ்வுலகம்  பேசும்." என்று  ஆசிகூறி  அங்கிருந்து  சென்றார்.  அர்ஜுனனுக்குப்  போட்டியாக  ஒருவன்  வருவதைத்  தடுத்து  விட்ட  நிம்மதி  இருந்தாலும்  ஒரு  நல்ல  வில்வீரனை  அவனது  வீரத்தை  திறமையை  அழித்துவிட்டோமே  என்ற  வருத்தமும்  துரோணருக்கு  இருந்தது.

ஆனாலும்  குருபக்தியில்  சிறந்தவன்  ஏகலைவன்  என்ற  புகழை  அவனுக்குக்  கொடுத்து  விட்டோம்  என்ற  பெருமை   துரோணருக்கு  நிம்மதியைக்  கொடுத்தது.

8 comments:

 1. கேள்விப்பட்ட கதைதான். நீங்கள் சொன்ன விதம் மிக அருமை...

  //ஆனாலும் குருபக்தியில் சிறந்தவன் ஏகலைவன் என்ற புகழை அவனுக்குக் கொடுத்து விட்டோம் என்ற பெருமை துரோணருக்கு நிம்மதியைக் கொடுத்தது.//

  இது மிக அருமை. ஏகலைவனில் கட்டை விரலை பெற்று அவனது வித்தையினை அழித்ததாய் மட்டுமே படித்த எனக்கு இந்த ஒரு கருத்து மிகுந்த நிறைவைத் தந்தது... அருமைங்க. நிறையா எழுதுங்க.

  பிரபாகர்.

  ReplyDelete
 2. மேலே இருக்கும் கருத்தை வழிமொழிகிறேன்.

  ReplyDelete
 3. இதற்கு மேலும் கதை இருக்கிறது பாட்டி ! ஏகலைவன் தனது இடது கையால் பயிற்சி மேற்கொள்வது எல்லாம் தாங்கள் எழுதவில்லை ..... தொடருங்கள்.

  ReplyDelete
 4. ஒருவன் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இராமாயணமும், மாறாக எப்படி இருக்ககூடாது என்பதற்கு மகாபாரதமும் உதாரணங்கள். பாருங்கள் ஒரு குருவிற்கு ஏற்ற மாதிரியா துரோணரின் நடத்தை இருந்தது? ஹ்ம்ம் மகாபாரதக்காலத்திலேயே இந்தளவு அயோக்யத்தனங்கள் நடந்திருக்கும்போது தற்போது உள்ள நிலவரம் ஒன்றுமேயில்லை.

  ReplyDelete
 5. ul anpodu alitha vaki kappatra etutha mudivu nantraga ullathu............
  Kayal premji

  ReplyDelete
 6. ul anpodu alitha vaki kappatra etutha mudivu nantraga ullathu............
  Kayal premji

  ReplyDelete
 7. வருகை புரிந்து கருத்துக் கூறிய அனைவருக்கும் மிக்க நன்றி.--
  ருக்மணி சேஷசாயி
  Rukmani Seshasayee

  ReplyDelete