திங்கள், 17 பிப்ரவரி, 2014

மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.

117. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
                             
                                              மங்களபுரி மன்னன் சூரசேனன் நாட்டு மக்கள் மீது மிகுந்த அன்பு காட்டி நாட்டை சிறப்பாக ஆண்டு வந்தான்.மக்களும்  தங்கள் மன்னனை உயிருக்கும் மேலாக  எண்ணி வாழ்ந்து  வந்தனர். செண்பகபுரி மன்னன் சிவபாலன் சூரசேனன் மீது பொறாமை கொண்டு அவன்மீது படையெடுத்தான்.ஆனால் சூரசேனனை வெல்ல முடியாததால் தோற்று ஓடினான்.
அடிக்கடி படையெடுத்து தொல்லை கொடுத்துவந்த சிவபாலனை அடக்க எண்ணிய சூரசேனன் அவன் மீது படையெடுத்தான்.ஆனால்சரியான  பயிற்சியும்  படைபலமும் இல்லாததால் தோற்று நாட்டை விட்டு காட்டுக்குள் ஓடி மறைந்து வாழ்ந்தான்.ஆனாலும் அடிக்கடி வீரர்களைத் திரட்டி
செண்பகபுரியுடன் போரிட்டு வந்தான்.எப்படியாவது   தன தாய்நாட்டை மீட்டுவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் படைதிரட்டிவந்தான் சூரசேனன்.
ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியைத் தழுவி ஓடினான்.                                                   ஒருநாள்  களைப்புடன் காட்டுக்குள் நடந்து கொண்டிருந்தான் சூரசேனன்.தனக்குள் எண்ணிக் கொண்டே நடந்தான்.
" பல  முறை போராடியும் சிவபாலனை வெல்ல இயலவில்லையே.என் படையும் பெரிதாகத்தானே இருக்கிறது. என்ன காரணம் புரியவில்லையே."
               என்று    நடந்தபடி சிந்தித்தவனுக்கு  காட்டுக்குள் வெகு தொலைவு வந்தது கூடத் தெரியவில்லை. களைப்புடன் ஒரு பாறையில் அமர்ந்தான்.பசிவேறு வயிற்றைக் கிள்ளியது.சற்றுத் தொலைவில் ஒரு குடிசை வீடு தென்பட்டது.
                 ஆவலோடு அந்த வீட்டுக்கு சென்று சற்றுத் தொலைவில் நின்றபடி "அம்மா" என அழைத்தான்.அந்த வீட்டுக்குள்ளிருந்து  எழுபது வயதுள்ள ஒரு மாது வெளியே வந்தார்.அவரிடம்
"அம்மா.மிகுந்த களைப்பாக இருக்கிறேன். எனக்குப் பசிக்கிறது ஏதேனும் கொடுத்து உதவினால்  மிகுந்த நன்றியுள்ளவனாக இருப்பேன்."
என்று சொல்லி அங்கேயே ஒரு மரத்தடியில் அமர்ந்து கொண்டான்.
"ஐயோ பாவம்! இரப்பா வருகிறேன்.ஏழையின் வீட்டில் களிதான் இருக்கிறது.
அதையே தருகிறேன்.தின்று பசியாறு."என்றவள் உள்ளே சென்று ஒரு தட்டில்  சூடானகளியை வைத்து அதில் சூடான குழம்பையும் ஊற்றிக் கொண்டு வந்து கொடுத்தாள்.
              நல்ல பசியோடிருந்த சூரசேனன் அதை வாங்கி தன ஐந்து விரல்களாலும் களி உருண்டையை அழுத்தினான். நல்ல சூடாக இருந்த களி  அவன் கையை நன்கு சுட்டு விட்டது "ஹா! ஹா!" வெனத் தன கையை உதறியபடி விரல்களை வாயிலும் வைத்துக் கொண்டான்.

              இதைப் பார்த்து அந்தப் பாட்டி சிரித்தாள். அத்துடன்
"ஏனப்பா நீ களி  தின்பது எங்கள் மன்னன் சூரசேனர் படையெடுப்பது போல் இருக்கிறது."
இதைக் கேட்டு சூரசேனன் ,"என்னம்மா சொல்கிறீர்கள்?நீங்கள் சொல்வது புரியவில்லையே." என்றான் ஆவலாக.
" பின்னே என்னப்பா, களியை அதைச் சுற்றிலும் ஓரமாகவே தின்று வந்தால் குறைந்து கொண்டே வரும் முழுவதும் ஆறிக்கொண்டே வரும்.சீக்கிரம் சாப்பிட்டு முடிக்கலாம்,அதைவிட்டு நடுவில் கைவைத்தால் சுடாதா?"
என்றாள்  சிரித்தவாறே.
               
"இதற்கும் மன்னரின் படையெடுப்பிற்கும் என்ன சம்பந்தம்?"
          
  "புரியவில்லையா, படையெடுத்து எல்லையில் இருக்கும் நாடுகளைப் பிடித்தபின்னரே தலைநகரில் நுழையவேண்டும் அப்போதுதான் பகைவரின் படைபலம் குறையும் நமக்கும் வெற்றி கிடைக்கும்." என்றாள்  புன்னகையுடன்.

             பாதி தின்றவுடன் களியை அப்படியே வைத்த சூரசேனன் உடனே புறப்பட்டான்.         
"தாயே, தங்கள் அறிவுரைக்கு நன்றி. இப்போதே செல்கிறேன் நீங்கள் சொல்லியபடியே போராடி வெற்றி வாகை சூடி உங்களை சந்திக்கிறேன்
.வருகிறேன்."
அவளை வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டான்.

ஒரு சிறு படையுடனேயே தலைநகரின் சுற்றியிருந்த கிராமங்களைப் பிடித்த சூரசேனன் விரைவில் சிவபாலனின் தலைநகரையும் கைப்பற்றினான்.தனக்குக் கப்பம் கட்டச் செய்து தன நாட்டில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தான்.
உடனே காட்டுக்குச் சென்று அந்த மாதரசியை அழைத்து வரச்சொல்லி ஆணையிட்டான்.அவளுக்குப் பொன்னும் பொருளும் தந்து தன மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்துக் கொண்டான்.

மூத்தோர் சொன்ன சொல் என்றும் பயன்படக்கூடியது என்பதை நாம் என்றும் மறவாதிருக்க வேண்டும்.


 

7 கருத்துகள்:

 1. ஆகா...! ஒரு களி சாப்பிட கொடுத்து, அனைத்தையும் உணர்த்தி விட்டார்களே...!

  அருமை அம்மா... வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. தலைப்பு முதலில் ஆங்கிலத்தில் வருகிறது... பிறகு தமிழில் மாற்றுகிறீர்கள் அம்மா... தீர்வு :

  பதிவு எழுதும் பக்கத்தில் --> வலது புறம் Post setttings என்று இருக்கும்... பதிவு எழுதி வெளியிடுவதற்கு முன் PermaLink என்பதை சொடுக்கி Custom Permalink என்பதை தேர்வு செய்தால், அங்கு ஒரு கட்டம் கிடைக்கும்... அங்கு (எடுத்துக்காட்டு : இந்தப் பதிவு) mooththor-sol-vaarththai-amirtham என்று எழுதி விட்டு, பிறகு done என்பதையும் சொடுக்கி விட்டு, ஒரு முறை preview பாருங்கள்... பதிவை வெளியிட வேண்டாம்... close செய்யுங்கள்... பிறகு அதே பதிவை மறுபடியும் திறந்து, ஒருமுறை நாம் இட்ட Permalink சரியாக உள்ளதென்றால், Publish தான்... நன்றி அம்மா...

  பதிலளிநீக்கு
 3. ”மூத்தோர் சொல் என்றும் வேதம்” என்பதை உணர்த்திய கதை..

  பதிலளிநீக்கு
 4. களிபோல களிப்பளிக்கும் இனிமையான நீதிக்கதை. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம்... உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

  அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

  அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

  வலைச்சர தள இணைப்பு : மூத்தோருக்கு மரியாதை

  பதிலளிநீக்கு