செவ்வாய், 20 செப்டம்பர், 2011

73- திலகாஷ்ட மகிஷ பந்தனம்.

விஜயநகர மன்னர் கிருஷ்ண தேவ ராயருக்கு ஒரு சந்தேகம் வந்தது. நமது மந்திரிகள் மிகுந்த சாமர்த்திய சாலியாக உள்ளனரா என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்தார்.அதனால் அன்று சபை கூடியதும் ஒரு வினா எழுப்பினார்.
"சபையோரே, நேற்று இரவு என் அறைக்குள் ஒரு திருடன் நுழைந்தான். அவன் என் மார்பின்மீது எட்டி உதைத்தான்.அத்துடன் அவனது இரண்டு கைகளாலும் என்னைக் கன்னத்தில் அடித்தான். அவனுக்கு என்ன தண்டனை தரலாம் என்று நீங்களே கூறுங்கள்."
"அவன் எங்கே இருக்கிறான் பிரபு?"
"அவனைக் கட்டிப் போட்டு வைத்திருக்கிறேன்."
"அவனைக் கை கால்களை வெட்டி வீசவேண்டும்.  இல்லையில்லை.அவனுக்கு  மரண தண்டனைதான் தரவேண்டும்.அவனை நகரத்து வீதியில் நிற்கவைத்து கசையால் அடிக்கவேண்டும்."
ஒவ்வொருவரும் ஆத்திரத்துடன் பேச மன்னர் புன்னகை புரிந்தார்.
அமைதியாக இருந்த அப்பாஜியைப் பார்த்து "அப்பாஜி உங்களுக்கு ஒன்றும் தோன்ற வில்லையா?"என்று கேட்டார் மன்னர்.
புன்னகையுடன் எழுந்த அப்பாஜி"மன்னா,உங்களை உதைத்த கால்களுக்கு மாணிக்கப் பரல் வைத்த தங்கக் காப்புப் போடவேண்டும்.தங்களை அடித்த கைகளுக்கு வைர வளையல் செய்து போடவேண்டும்.தங்களின் அன்புப் பிடிக்குள் நீங்கள் கட்டி வைத்திருக்கும் இளவரசன் அல்லாது இந்தக் காரியத்தைச் செய்ய வல்லவர்கள் யார் பிரபு?" என்று கூறியபோது மன்னர் " பலே அப்பாஜி பலே!",என்று மகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
"நேற்றிரவு என் மகன்தான் என்னைக் காலால் உதைத்துத் தன் பிஞ்சுக் கரங்களால் என் கன்னத்தில் அடித்து விளையாடினான்.அவனைத்தான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டேன்.அப்பாஜி சரியான பதில் அளித்துவிட்டார்."
இந்த சொல்லைக் கேட்ட சபையோர் பலத்த ஆரவாரம் செய்து மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.
அப்போது மன்னரின் சபைக்கு ஒரு புலவர் வந்திருப்பதாகக் காவல்காரன் வந்து அறிவிக்கவே,அவரை வரவேற்குமாறு அப்பாஜி கூறினார்.மிகுந்த ஆரவாரத்துடன் உள்ளே நுழைந்த அந்த புலவர்  தன்னை மிகவும் கற்றவர் எனவும் தன்னை வெல்ல யாராலும் முடியாது எனவும் அப்படி யாரேனும் தன்னை வென்று விட்டால் தான் பெற்ற பட்டங்களையும் தன் பரிசுப் பொருள்களையும் கொடுப்பதாகவும்  கூறினார்.
அவரது ஆரவாரத்தைப் பார்த்த அங்கிருந்த புலவர்கள் சற்றுப் பயந்தனர்.தாங்கள் தோற்று விட்டால் தங்களால் விஜயநகர அரசுக்குக் கெட்டபெயர் வந்து விடுமே எனத் தயங்கினர்.ராயரோ அவையில் உள்ள புலவர்களை நோக்கி 
" நம் நாட்டில் இந்தப் புலவரை வெல்ல யாரும் இல்லையா?" எனக் கேட்டார்.
 அப்போது தெனாலிராமன் எழுந்து நின்றான்."அரசே, தாங்கள் அனுமதித்தால் நான் இந்தப் புலவருடன் வாதிடுகிறேன்."
"செய் ராமகிருஷ்ணா, நம் நாட்டில் தோல்வியென்பதே வரக்கூடாது."
ராமன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டான்."ஐயா புலவரே. இப்படி வாரும்.என்னிடம் இருக்கும் இந்த நூலில் இருந்துதான் தங்களிடம் வினாக்கள் கேட்கப் போகிறேன்.எல்லா வினாக்களுக்கும் தவறாமல் தாங்கள் பதில் கூறவேண்டும் அப்படிக்கூறிவிட்டால் நீர் வென்றவர் ஆவீர்".                                                
வந்த புலவர் "அது என்ன நூல் எனத் தெரிந்தால்தானே நான் பதில் கூறமுடியும்?"என்றார் தயங்கியபடியே.
ராமன் அலட்சியமாக"திலகாஷ்ட மகிஷ பந்தனம்தானய்யா"என்று கூறியதும் அந்தப் புலவர் திகைத்தார்.
"என்னது? திலகாஷ்ட மகிஷ பந்தனமா? அப்படி ஒரு நூலை நான் படித்ததே இல்லையே."
"என்ன, இந்த நூலை நீர் படிக்கவில்லையா?என்ன புலவரைய்யா நீர்? இந்த நூலைப் படிக்காமல் உம்மை நீர் புலவர் என்று வேறு கூறிக் கொள்கிறீர்! தெரியவில்லைஎன்றால் தோல்வியை ஒப்புக் கொண்டு ஊர் போய்ச் சேரும் முதலில் இந்த நூலைத் தேடிப் படியுங்கள்."
"பிரபு, நான் இந்த நூலைப் பற்றி கேள்விப்பட்டது கூட இல்லை. என் தோல்வியை நான் ஒப்புக் கொள்கிறேன் இன்றுடன் என் பட்டங்கள் அனைத்தையும் துறந்தேன் என் பரிசுப் பொருளை இந்தத் தெனாலி ராமனுக்கே கொடுத்துவிடுகிறேன்."
என்றார் தலை குனிந்தபடியே.
"உமது பரிசுப் பொருள் எதுவும் வேண்டாம் அதை நீரே எடுத்துக் கொண்டு போய்ச் சேரும்" என்று அவரைப் போக விட்டான் தெனாலி ராமன்.
அவர் செல்வதைப்  புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த ராமனிடம் ராயர் மதுவாகக் கேட்டார்."ராமகிருஷ்ணா, அது என்ன நூல்? நான் கூட கேள்விப்படாததாக உள்ளதே?"
ராமன் புன்னகையுடன் "இதுதான் அரசே,"என்றபடி தன்னிடம் இருந்த ஒரு மூட்டையை அவிழ்த்துக் காட்டினான்.அதில் ஒரு எள்ளுச் செடியும் அதைக் கட்டிய கயிறும் இருந்தது.மன்னர் ஒன்றும் புரியாமல் என்ன இது? என்றபோது ராமன் விளக்கினான்.
"அரசே, திலம் என்றால் எள். காஷ்டம் என்றால் காய்ந்த செடி.திலகாஷ்டம் என்றால் காய்ந்த எள்ளுச் செடி.மகிஷ பந்தனம் என்றால் எருமையைக் கட்டும் கயிறு. இதோ இந்த எள்ளுச் செடிகளை கயிற்றால் கட்டியிருக்கிறேன்.
இதைச் சேர்த்துச் சொன்னால் திலகாஷ்ட மகிஷ பந்தனம்.இதைத்தான் கூறினேன். அவர் இது ஏதோ புதிய நூல் என்று பயந்து ஓடிவிட்டார்."
"கர்வத்தோடு வந்தவரை அவரது கர்வம் அடங்கும்படி செய்து விட்டாய் பலே, ராமகிருஷ்ணா,உன் சமயோசித புத்தியால் நம் சாம்ராஜ்யத்தின் பெருமையைக் காப்பாற்றினாய்.அது சரி அவர் இந்தநூலைக் காட்டும்படி கூறியிருந்தால் என்ன செய்திருப்பாய்?" என்றுகேட்டபோது ராமன் சிரித்தான்.
"அவ்வப்போது தோன்றும் யோசனைகளுக்கேற்றபடி அப்போது என்ன தோன்றுகிறதோ அதைச் சொல்லி சமாளிப்பேன் மகாராஜா.முதலில் அருகே வரும் பிரச்னையை சமாளிக்க வேண்டும்.அதுதான் என் குறிக்கோள்."
"பலே ராமகிருஷ்ணா, உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன்."என்று கூறிய மன்னர் ராமனுக்குப் பரிசளித்து மகிழ்ந்தார்.
ராமன் சமயோசிதம் நிறைந்தவன் என்றுமட்டுமே  நினைத்துக் கொண்டிருந்தனர்.இந்த செய்கையால் அவன் துணிச்சல் மிகுந்தவன் என்பதையும் அனைவரும்  புரிந்துகொண்டு அவனைப் பாராட்டினர்.










--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

5 கருத்துகள்:

  1. இந்த கதை ஏற்கனவே தெரிந்திருந்தாலும் "திலகாஷ்ட மகிஷ பந்தனம்" என்பதற்கு அர்த்தம் இப்பொழுதுதான் தெரிந்து கொண்டேன்.
    நன்றி பகிர்வுக்கு.

    பதிலளிநீக்கு
  2. "திலகாஷ்ட மகிஷ பந்தனம்"//


    நான் இது இலங்கையில் உள்ள ஒரு ஊருன்னுல்லா நினைச்சேன் ஹா ஹா ஹா ஹா இம்புட்டு அர்த்தம் இருக்கா சூப்பர் பாட்டி...!!!

    பதிலளிநீக்கு
  3. இரண்டுமே தெரிந்த கதைகள் என்றாலும், திரும்பவும் உங்கள் மொழியில் படிக்க ஆனந்தமாக இருக்கிறது. மிக்க நன்றிம்மா...

    பதிலளிநீக்கு
  4. வலைச்சரத்தில் இன்று “சிந்தனை செவ்வாய்”.

    இன்றைய பகிர்வில் [http://blogintamil.blogspot.com/2011/10/blog-post_11.html]உங்களைப் பற்றிக் குறிப்பிட்டு உள்ளேன். நேரம் இருக்கும்போது படியுங்கள்.

    நட்புடன்

    ஆதி வெங்கட்.

    பதிலளிநீக்கு