புதன், 13 ஏப்ரல், 2011

65th தன் கையே தனக்குதவி

தன் கையே தனக்குதவி.
ஒரு கிராமத்தில் கந்தசாமி  என்பவர் வசித்து வ்ந்தார்.அவருக்கு வடிவேலு என்ற ஒரு மகன் இருந்தான். அவ்வூரில் பத்தாம் வகுப்புப் படித்து வந்தான்.

அவர்களுக்கு அந்த ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. கந்தசாமி அந்த நிலத்தில் பயிரிட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது வடிவேலுவும் பயிரைப் பாதுகாக்க வயலுக்குச் செல்வது வழக்கம்.அந்த வருடம் நல்ல மழை பெய்ததால் கந்தசாமியின் நிலத்தில் நல்ல விளைச்சல் கண்டிருந்தது. தினமும் காலைவேளையில் தன் மகன் வடிவேலுவை அழைத்துக் கொண்டு விளைந்து கதிர் முற்றிய பயிரைப் பார்த்துச் செல்வார். வடிவேலுவும் பயிர் பற்றிய கேள்விகளை அவரிடம் கேட்பான் கந்தசாமியும் மகிழ்ச்சியுடன் அவனது கேள்விகளுக்குப் பதிலுரைப்பார்.

      தினமும்வயல் வரப்பில் நின்று இவர்கள் பேசிக்கொண்டு இருப்பார்கள். அந்த வயலில் விளைந்த பயிர்களுக்கிடையே ஒரு குருவி கூடு கட்டித் தன் குஞ்சுகளை வளர்த்து வந்தது. தினமும் அப்பாவும் மகனும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கும் அந்தக் குஞ்சுகள். மாலையில் வீடு திரும்பும் தங்களின் தாயிடம் வடிவேலுவும் கந்தசாமியும் பேசிக்கொண்டதைச் சொல்லும்.

      அன்று தாய்க் குருவி வழக்கம்போல இரை தேடப் புறப்பட்டது. புறப்படும் முன் தன் குஞ்சுகளிடம் அப்பாவும் மகனும் பேசிக் கொள்வதைக் கவனித்துத் தன்னிடம் கூறும்படிக் கூறிவிட்டுச் சென்றது. வழக்கம்போல கந்தசாமி தன் வயலுக்கு வந்து பார்வையிட்டார். 

      அந்த வயல் முழுவதும் கதிர் முற்றித் தலை சாய்ந்திருந்தது. கந்தசாமி தன் மகனைத் திரும்பிப் பார்த்தார்.
"வேலு, நம்ம வயலில் கதிர் முற்றித் தலை சாய்ஞ்சிடுச்சு. இனிமேல் அறுவடை செய்திடலாம். நீ நாளைக்கு நம்ம கதிரை அறுக்க ஆளுங்களைக் கூட்டி வந்துடு." என்று கூறியபோது வடிவேலுவும் "சரி அப்பா" என்று கூறினான். 

அன்று மாலையில் தங்களின் தாய்க் குருவி வந்தவுடன் குஞ்சுகள் கீச் கீச்சென்று கத்தித் தங்களின் அச்சத்தைத் தெரிவித்தன. செய்தி என்ன என்று கேட்டபோது குஞ்சுகள் அழுது கொண்டே அறுவடை நடக்கப் போவதைத் தெரிவித்தன.

அந்தத் தாய்க் குருவியோ சற்றும் அலட்டிக் கொள்ளாமல் தன் குஞ்சுகளுக்கு தைரியம் கூறிற்று."குழந்தைகளே, நிலத்துக்கு உரியவர் தன் மகனிடம் தானே சொல்லியிருக்கிறார். நீங்கள் பயப்படாமல் இருங்கள்."

சமாதானம் கூறிய தாய்க் குருவி மீண்டும் மறுநாள் இரைதேடப் புறப்பட்டது.அன்றும் கந்தசாமி வயலுக்கு வ்ந்தார்.
தன் மகனைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்."வேலு, நாளைக்கு நீயே போய் ஆட்களை அறுவடைக்குக் கூட்டிவா." என்று கடுமையாகக் கூறினார்.அவனும் "சரி அப்பா" என்று அச்சத்துடன் பதிலளித்தான்.

அன்று மாலை வழக்கம்போலத் தாய்க்குருவி தன் கூட்டிற்கு வந்தது. அன்றும் கந்தசாமியும் வடிவேலுவும் பேசிக் கொண்டதைக் கூறின குஞ்சுகள்.அவற்றைப் பார்த்துத் தாய்க் குருவி "பயப்படாதீர்கள். அவர் அறுவடை செய்ய மாட்டார். அவர் அறுவடை செய்வதாகத் தெரிந்தால் நான் வீடு மாற்றிவிடுவேன்." என்று கூறித் தைரியமாக இருக்கும்படிக் கூறியது தாய்க் குருவி.

மறுநாள் காலையும் இரைதேடப் புறப்பட்டது தாய்க் குருவி. வழக்கம்போல கந்தசாமி என்ன பேசுகிறான் என்பதைக் கேட்டுத் தன்னிடம் கூறும்படி கூறிச் சென்றது தாய் குருவி. அன்று கந்தசாமி வடிவேலுவுடன் வராமல் தனியே வ்ந்தார். கதிர்கள் படுத்துக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கோபம் கொண்டார்.

பின் தனக்குள் பேசிக் கொண்டார்."சே, என்ன பையன் இவன். ஒரு ஏற்பாடும் செய்யாமல் விட்டு விட்டானே. இனி அவனை நம்பிப் பயனில்லை.நாமே களத்தில் இறங்கவேண்டியதுதான்." என்று புலம்பியவாறே வீடு நோக்கி நடந்தார்.  

மாலையில் வீடு திரும்பிய தாய்க் குருவியிடம் குஞ்சுகள் முறையிட்டன. நாளைக்கு அவரே களத்தில் இறங்கப் போகிறார். இச் செய்தியைக் கேட்ட தாய்க் குருவி" நான் வேறு இடம் பார்த்து வரும் வரை பத்திரமாக இருங்கள். நாம் வேறு வீடு கட்டிக்கொண்டு போய்விடலாம்." என்று கூறிச் சென்றது.

இப்போது வேறு வீட்டுக்குக் குடிவந்து விட்டது அந்தக் குருவிக் குடும்பம். அப்போது அந்தக் குருவிக் குஞ்சுகளில் சற்று கெட்டிக்காரக் குஞ்சு கேட்டது."அம்மா, மூன்று நாட்களாக இடம் மாற்றாத நீ இப்போது மட்டும் ஏன் மாற்றினாய்." 

"அதுவா, மூன்று நாட்களாக அந்த முதலாளி மற்றவர் உதவியை நாடினார். அதனால் அவர் வேலை நடக்காது என்று தெரிந்து  கொண்டேன். ஆனால்  இப்போது தானே அந்த வேலையைச் செய்வதாகக் கூறியபோது இனி அந்தவேலை முடிந்துவிடும் எனப் புரிந்து கொண்டேன். இனியும் நாம் அங்கிருப்பது நமக்கு ஆபத்து அதனால் வேறு பாதுகாப்பான இடத்தைத் தேடி வந்துவிட்டேன்."

"அம்மா, தன் கையே தனக்குதவி என்பதை அந்தப் பெரியவர் இப்போது புரிந்து கொண்டிருப்பார் இல்லையா?" என்று கூறிச் சிரித்தது அந்தப் பொல்லாத புத்திசாலிக் குருவி.

தாய்க் குருவியும் சிரித்தபடியே "அவர் புரிந்து கொண்டாரோ இல்லையோ நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்"என்று கூறித் தன் குஞ்சுகளை அணைத்துக் கொண்டது.

















ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com