ஞாயிறு, 10 நவம்பர், 2013

113. பழமொழிக் கதைகள்.--ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு.

ஓர் ஊரில் ஒரு சிவன் கோவில் இருந்தது.கணபதிசர்மா என்று ஒரு அந்தணர் அந்தக் கோவிலில் பூஜை செய்து வந்தார். அவருக்குப் பல ஆண்டுகளாகக் குழந்தை பாக்கியம் கிட்டவில்லை. தினமும் இறைவனை மனமுருகப் பிரார்த்தித்து வந்தார்.அவர் மனைவியும் விரதங்கள் தானங்கள் என்று செய்து வந்தாள்.ஆனாலும் இவர்களுக்குப் பிள்ளையில்லை.
    வீட்டில்  இருக்கையில் ஒரு மாலைவேளையில் கணபதியின் மனைவி முன் ஒரு  சிறிய குட்டி கீரிப்பிள்ளை வீட்டுக்குப் போகத் தெரியாமல் நின்றது. அதைப் பார்த்த அந்தணர் மனைவி  அதற்குப் பாலும் சோறும் வைத்தாள் .பசியுடன் இருந்த அந்த கீரி பாலைப் பருகிப் பசியாறியதும் அங்கேயே படுத்துக் கொண்டது.
சிலநாட்களில் அந்தக் கீரிப் பிள்ளை அந்த வீட்டின் செல்லப் பிள்ளையானது.கணபதிசர்மாவும் அவர் மனைவியும் அந்தப்
பிள்ளையைத் தங்கள் சொந்தப் பிள்ளையாகவே நினைத்து வளர்த்து வந்தனர்.
சுமார் இரண்டு வருடங்கள் ஓடிவிட்டன.இப்போது கணபதிசர்மாவுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தை பிறந்திருந்தது.
அந்தக் குழந்தையைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தனர் கணவனும் மனைவியும்.கீரிப்பிள்ளையும் அக்குழந்தையுடன் சேர்ந்து வளர்ந்து வந்தது.
ஒருநாள் கணபதிசர்மா கோவிலில் பூஜைக்குப் போயிருந்தார்.வீட்டில் சமைப்பதற்குத் தண்ணீர் இல்லை என்று குடத்துடன் ஆற்றுக்குக் கிளம்பினாள்  அவர்மனைவி
             ஆற்றுக்குப் புறப்படுமுன் கீரியிடம் "குழந்தை தொட்டிலில் தூங்குகிறான்.பத்திரமாகப் பார்த்துக் கொள்.நான் சீக்கிரம் வந்துவிடுகிறேன்."என்று சொல்லிவிட்டு வேகமாக நடந்தாள்.

              அவள் சென்ற சற்று நேரத்தில் கீரிப் பிள்ளையும் தொட்டிலின் கீழேயே அமர்ந்து கொண்டது.கணபதிசர்மாவும் பூஜையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வந்தார்.அதே நேரம் குடத்தில் நீர் மொண்டு கொண்டு அவர் மனைவியும் வீட்டின் முன் நின்றாள். இருவரும் வீட்டின் முன் நின்ற கீரிப்பிள்ளயைப் பார்த்துத் திடுக்கிட்டனர்.
                அவர்கள் செல்லமாக வளர்த்த கீரிப்பிள்ளை வாயில் ரத்தம் ஒழுக நின்றிருந்தது.மிகவும் பரபரப்பாக இங்குமங்கும் அலைந்து கொண்டு இருந்தது.இவர்களைப் பார்த்ததும் அதன் பரபரப்பு அதிகமானது.வாயில் ரத்தம் ஒழுக நின்ற கீரியைப் பார்த்து கணபதியின் மனைவி தன குழந்தையைக் கடித்துக் கொன்றுவிட்டது என்ற முடிவு செய்தாள்."ஐயோ என் குழந்தையைக் கொன்று விட்டதே" என்று அலறினாள்..
                  இந்த வார்த்தைகளைக் கேட்ட கணபதிசர்மா "என் குழந்தையைக் கொன்று விட்டாயா, நீயும் ஒழிந்து போ"என்ற படியே அருகே நின்றிருந்த மனைவியின் இடுப்பிலிருந்த குடத்தைப் பிடுங்கி கீரியின் மேல் போட்டார்.விசுக்கென்ற சத்தத்துடன் அது நசுங்கித் தன உயிரை விட்டது.

                கணவன் மனைவி இருவரும் வீட்டுக்குள் ஓடிப்பார்த்தனர்.குழந்தை தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது.அப்பாடா என்று இருவரும் மகிழ்ச்சிப் பெருமூச்சு விட்டனர்.உடனே கீரியின் நினைவு வந்தது.அதன்வாயில் எப்படி ரத்தம் வந்தது என்று சுற்றிப் பார்த்தபோது தொட்டிலின் மறுபக்கம் ஒரு பெரிய நாகப் பாம்பு இறந்து கிடந்தது.அது இரண்டு மூன்று துண்டாகக் கிடந்தது.

                இப்போதுதான் கணபதிசர்மாவிற்குப்  புரிந்தது.
"ஐயோ' என்ன காரியம் செய்துவிட்டேன்.என்குழந்தையைக் கடிக்கவந்த நாகத்தைக் கொன்று விட்டு அதைச் சொல்லத்தானே வாயிலில் வந்து நின்றது அந்தக் கீரிப்பிள்ளை.
ஆத்திரப்பட்டு என் செல்லப் பிள்ளையை நானே கொன்று விட்டேனே "என்று புலம்பி அழுதான்.
 "ஐயோ நான் தான் அவசரப்பட்டு குழந்தையைக் கொன்று விட்டாயே என்று அலறினேன்.அதனால்தானே நீங்கள் கீரியைக் கொன்றீர்கள் நான் தான் தவறு செய்தவள் "என்று அழுதாள் அவர் மனைவி.
ஆண்டாண்டு  காலம் அழுதாலும் மாண்டார் மீண்டு வருவாரோ.அவர்கள் அவசரப் பட்டதற்கு உரிய தண்டனை அடைந்துவிட்டனர்.
'ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போல் இவர்களின் இந்த செயல் அமைந்து விட்டது. எனவே இந்தக் கதை மூலம் எப்போதும் அவசரமோ ஆத்திரமோ படாமல் நிதானமாக ஒரு செயலைச் செய்யவேண்டும் என்னும் அறிவுரையை நாமும் கற்றுக் கொண்டோம் அல்லவா.




--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

5 கருத்துகள்:

  1. தெரிந்த கதையேயாயினும் குழந்தைகளுக்கு ஏற்ப தாங்கள் சொல்லியுள்ளவிதம் அழகோ அழகு. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    தங்கள் தளத்தில் ஏதோ பிரச்சனை எனக்கு. வெகு நேரமாக பின்னூட்டம் இட்டதை அனுப்பவே முடியவில்லை. நகராமல் சண்டித்தனம் செய்து வருகிறது. இதுவாவது போகுமோ போகாதோ அடியேன் அறியேன்,

    பதிலளிநீக்கு
  2. அருமையான நீதிக்கதை! பகிர்வுக்கு நன்றி!

    பதிலளிநீக்கு