செவ்வாய், 18 டிசம்பர், 2018

பாட்டி சொன்ன கதைகள்

                                   6.ஆமையும் முயலும் 
                           ஒரு காட்டில் கரடி நரி யானை முயல் முதலிய பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்தக் காட்டின் நடுவே  பெரிய குளம் ஒன்று இருந்தது.எல்லா மிருங்களும் அந்தக் குளத்தில்தான் தண்ணீர் குடித்துவிட்டுப் போய்க் கொண்டிருந்தன.அந்தக் குளத்தில் இருந்த  மீன்களுடன் ஒரு ஆமையும் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது 
                           ஒருநாள் அந்த ஆமை கரையில் நடந்து கொண்டிருந்தது.அதை அங்கு நீர் குடிக்க வந்த ஒரு முயல் பார்த்தது ஆமை மெதுவாக நகர்ந்து நகர்ந்து செல்வதைப் பார்த்து 
அந்த முயலுக்குச் சிரிப்பு வந்தது.ஆமையைப் பார்த்து கேலியாகக் கேட்டது முயல்.
"ஆமையாரே, இவ்வளவு வேகமாகச் சென்றால் நீர் நினைத்த இடம் போய்ச் சேர  எத்தனை நாட்கள் பிடிக்கும்? ஏன்  நடக்கிறீர் பேசாமல் நீந்திக் கொண்டிருக்க வேண்டியதுதானே?"
"முயலாரே நீர் வேகமாக ஓடுகிறீர் என்று கர்வம் கொள்ளாதீர்.நினைத்ததை முடிக்க மனம்தான் வேண்டும். "
"என்ன ஆமையாரே என் ஓட்டமும் உம நடையும் ஒன்றாகுமா? மனம் இருந்தால் மட்டும் போதுமா?"
" சரி நமக்குள் என் போட்டி ?"
ஆமையாரே,தப்பிக்கப் பார்க்காதீர். வேண்டுமானால் ஓட்டப் பந்தயம் வைப்போம்.மனம் இருக்கும் உங்களால் வெற்றி பெற முடியுமா பார்க்கலாம்."
ஆமைக்குப் புரிந்தது.முயல் வம்புக்கிழுக்கிறது என்று.
"சரி பார்க்கலாம் என்று பதில் சொல்ல,முயல்
" எங்கே எப்போது?யார் நடுவர்?அதையும்நீங்களே சொல்லுங்கள்."என்றது முயல் கர்வமாக.
அப்போது அங்கே ஒரு நரி நீர் குடிக்க வந்தது.இவர்களின் உரையாடலைக் கேட்டு அருகே வந்தது.
"ஆமையாரே, கவலைப் படாதீர்கள் நானே நடுவராக இருக்கிறேன்.நாளை காலை நண்பர்கள் அத்தனை போரையும் கூட்டி வருகிறேன்.இருவருக்கும் சம்மதமா?"என்றபோது ஆமையும் முயலும் சரி என்றன
மறுநாள் காலை வனத்திலிருக்கும் விலங்குகள்  எல்லாம் அங்குள்ள பெரிய ஆலமரத்தின் அடியில் கூடிவிட்டன.ஆமையும் வந்து நின்றிருந்தது.சற்று நேரம் கழித்து மெதுவாக கர்வத்துடன் முயல் வந்து சேர்ந்தது.
என் வேகத்துக்கு  ஆமையின் வேகம் ஈடாகுமா?நாந்தான் ஜெயிக்கப்போகிறேன்.பாவம் இந்த ஆமை.என்று எண்ணியபடியே வந்து நின்றது.நரியார் நடுவே வந்து பேசியது.
"இப்போது நான் கையை அசைத்தவுடன் இருவரும் ஓடவேண்டும்.
இந்தக் குளத்தைச் சுற்றிவிட்டு வந்து சேர வேண்டும்.குளத்தைச்சுற்றியிருக்கும் ஆலமரம் அரசமரம் புளியமரம் புங்கமரம் நான்கு மரங்களையும் சுற்றிவரவேண்டும் இந்த நான்கு மரங்களிலும் நான் சொல்லும் அடையாளத்தைப் போடவேண்டும்.ஆமை  இந்தக் கரியால் கோடு  போடணும் முயல் இந்த சுண்ணாம்புக் கட்டியால் கோடு போடவேண்டும்.இருவரும் வந்து சேர்ந்தபின் நான் சென்று பார்த்து வருவேன்.பிறகு தீர்ப்புச் சொல்லுவேன்" என்று சொல்லி ஒரு கரித்துண்டையும் சுண்ணாம்புக் கட்டியையும் ஆமையிடமும் முயலிடமும் கொடுத்தது.அதை அலட்சியமாக வாங்கி கொண்டது முயல்.
நரி கையைஅசைத்தவுடன் இரண்டும் ஓடத்  தொடங்கின முயல்  முதலிலிருந்த ஆலமரத்தில் ஒரு கோடு போட்டு விட்டு மெதுவாக நடந்தது. அடுத்துவந்த அரசமரத்திலும் கோடு போட்டு விட்டு ஆமைக்காகத் திரும்பிப் பார்த்தது.ஆமை வரும் சுவடையே காணோம்.அடுத்துவந்த புளியமரத்தில் கோடு போட்டு விட்டு மெதுவாக நடந்து கடைசி மரமான புங்க மரத்திற்கு வந்தது. அங்கு நின்று மீண்டும் திரும்பிப் பார்த்தது. ஆமை  வருவதாகத் தெரியவில்லை.
                   முயல் புங்கமரத்து நிழலில் நின்றது அருகே நிறைய புல்லும்  இலந்தைப் பழங்களும்  கண்ணில் படவேமுயலுக்குப் பசிக்கத் தொடங்கியது. அந்தப் பழங்களை சுவைத்து உண்ணத்  தொடங்கியது. பசி அடங்கியவுடன் மரத்து நிழலில் சுகமாக உறங்கியது.சற்று நேரத்தில் அங்கு வந்த ஆமை முயல் உறங்குவதைப் பார்த்தது. தன வழியே வேகமாக நடக்கத தொடங்கியது. 
                    எல்லைக் கோட்டை நெருங்கிய ஆமையைப் பார்த்து எல்லா மிருகங்களும் ஓ.. ஓ எனக் கூச்சலிட்டுக் குதித்தன.இந்த சத்தத்தைக் கேட்ட முயல் தூக்கத்திலிருந்து விழித்தது.ஆமை தன்னைத் தாண்டிவிட்டதை அறிந்து வேகமாக ஓடிவந்தது ஆமை கோட்டைப் பிடிக்கும்  அதே நேரம் முயலும் ஆமையுடன் வந்து சேர்ந்தது.
                   இரண்டும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன.மிருகங்கள் நரியார் என்ன தீர்ப்பு சொல்லப் போகிறார் என்று ஆவலுடன் காத்திருந்தன.நரியார்,"இரண்டு பேரும் ஒன்றாகவே வந்துள்ளீர்கள் ஆனால் தீர்ப்பு சொல்லுமுன் நன்கு  சோதித்து விட்டுச் சொல்கிறேன் சற்றுநேரம் காத்திருங்கள் " என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டது.குளத்தைச் சுற்றிவிட்டுச்  சற்றுநேரத்தில் வந்து சேர்ந்தது.
நரியார் கனைத்தபடி சொல்லத்தொடங்கினார்.'நண்பர்களே,முயல் ஆமை இருவரும் ஒன்றாகவே வந்துள்ளார்கள்.அதனால் இருவரும் வென்றார்கள் என்று சொல்வேன் என்றுதான் நினைப்பீர்கள்.ஆனால் நான்கு  மரங்களையும் சோதித்தபோது ஆமை நான்கு மரங்களிலும்  கோடு போட்டுள்ளது ஆனால் முயல் மூன்று மரங்களில்தான் கோடு போட்டுள்ளது. கடைசி மரமான புங்க மரத்தில் கோடு போடவில்லை அதனால் 
விதிப்படி ஆமைதான் வென்றது."
இந்த தீர்ப்பைக் கேட்டபிறகுதான் முயலுக்குத் தான் மரத்தடியில்  உறங்கியதும் அவசரமாக ஓடி வந்ததும் தவறு எனப் புரிந்தது.
ஆமை முயலைப்   பார்த்தது.முயல் தலை கவிழ்ந்து நின்றிருந்தது.ஆமை நட்புடன், "நண்பா, கவலைப் படாதே இது நமக்கொரு பாடம்.நாம் எந்த இலக்கை அடைய நினைக்கிறோமோ அதில்தான் கவனமாக இருக்கணும்.இடையில் வேறு விஷயத்தில் கவனம் கூடாது.நீ இடையில் தூங்கி விட்டாய்.அதனால் நான் ஜெயித்தேன்.நாம் இருவரும் என்றும் நண்பர்களே." என்று நட்புக்கரம் நீட்டவே முயலும் புன்னகை புரிந்தது.இதைப் பார்த்து எல்லா மிருகங்களும் மகிழ்ச்சி ஆரவாரமிட்டபடி கலைந்து சென்றன.
நாம் செய்யும் காரியத்தில் எப்போதும் கவனம் வேண்டும் என்பதைப்  புரிந்து கொள்ள வேண்டும் 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

--
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

2 கருத்துகள்: