வியாழன், 6 மே, 2010

எல்லா உயிரும் நம் உயிரே.


 சிபிச்சக்ரவர்த்தி  என்று ஒரு சோழ அரசன் இருந்தான். மக்களிடத்தில்  மட்டுமல்லாமல் அனைத்து உயிர்களிடத்தும் மிக்க அன்பு பாராட்டி வாழ்ந்து வந்தான். அவனது ஆட்சியில் மனிதர்கள்  விலங்குகள் பறவைகள் என எல்லா உயிரினங்களும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தன. மன்னன் தனது நாட்டில் யாருக்கும் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.
     
       சோழ மன்னனின் புகழ் நாடெல்லாம் பரவியிருந்தது. இந்தச் செய்தி  தேவருலகிற்கும் எட்டியது. இந்திரன் சும்மா  இருப்பானா?  சிபிச்சக்ரவர்த்தியை  பரீட்சை செய்து பார்க்க முடிவு செய்தான். அக்னி என்ற தேவனுடன் பூவுலகிற்கு வந்து சேர்ந்தான்.

              ஒருநாள் மாலை நேரம். சிபி அரண்மனை மேல்மாடத்தில் உலவிக்கொண்டு இருந்தார். அப்போது பறவை ஒன்று உயிருக்குப் பயந்து கிரீச்சிடுவது போல் சத்தம் வந்தது. திடுக்கிட்டுத் தலையை உயர்த்தி ஆகாயத்தைப் பார்த்தார். அங்கே ஒரு வல்லூறு ஒரு புறாவைத் துரத்திக் கொண்டு செல்வதையும் உயிருக்குப் பயந்து புறா கத்தியபடி பறப்பதையும்
கண்டார்.
       
      இன்னது செய்வது என அறியாது திகைத்தபடி நின்றிருந்த சிபியின் முன் அவர் காலடியில் வந்து விழுந்தது அந்தப் புறா.. அதைக்கையில் எடுத்து அன்புடனும் ஆதரவுடனும் தடவிக்  கொடுத்தார் சிபிச்சக்ரவர்த்தி.  மிகுந்த நடுக்கத்துடன் அவர் கையில் தஞ்சம் புகுந்தது  அந்தப் புறா.
       
       சற்று நேரத்தில் அதைத் துரத்திவந்த வல்லூறும் அங்கு வந்து அரசர் முன் அமர்ந்தது.அதைக் கண்டு திகைத்த சிபி தன் கையில் இருந்த புறாவைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். வல்லூறு வாய் திறந்து பேசியது.
  
     "அரசே! இந்தப் புறா எனக்குச் சொந்தம்.  இதை என்னிடம் கொடுத்துவிடுங்கள்."          

மன்னன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.மீண்டும் வல்லூறு அரசனிடம் பேசியது."இந்தப் புறா இன்று எனக்கு உணவாகும். நான் பசியால் தவிக்கிறேன்."
அதை சிபி அன்புடன் பார்த்தான்."ஏ! பறவையே உன் பசிக்காக இந்த சாதுவான பறவையை உனக்கு உணவாகத் தரமாட்டேன். "

"அப்படியானால் என் பசிக்கு என்ன வழி அரசே?"


சக்ரவர்த்தி சற்று நேரம் சிந்தித்தான்.ஊனுக்கு ஊனைத்தான் தரவேண்டும். வேறு உயிர்களையும் துன்புறுத்தக் கூடாது. என்ன வழி என் சிந்தித்தான். சற்று நேரத்தில் முகம் மலர்ந்தான்.


"உனக்கு உணவாக என் மாமிசத்தையே தருவேன் உண்டு பசியாறுவாய்."என்று சொன்னவன் காவலரை அழைத்தான். ஒரு தராசு கொண்டு வரச் சொன்னான்.ஒரு தட்டில் புறாவை வைத்தான்.அடுத்த தட்டில் தன் உடலிலிருந்து மாமிசத்தை அரிந்து வைத்தான்.என்ன ஆச்சரியம்! எவ்வளவு தசையை அரிந்து வைத்தாலும் புறாவின் எடைக்கு சமமாகவில்லை. எனவே சிபிச்சக்ரவர்த்தி தானே அந்தத் தராசில் ஏறி அமர்ந்தான். தட்டு சமமாகியதும் மன்னன் மகிழ்ந்தான்.



"ஏ  பறவையே இப்போது நீ என் தசையை உனக்கு உணவாக்கிக் கொள்."என்றவுடன் அங்கிருந்த வல்லூறும் புறாவும் மறைந்தன.



அங்கே தேவ அரசனான இந்திரனும் அக்னியும் நின்றனர்.
"சிபிச் சக்ரவர்த்தியே! உமது நேர்மையையும் கருணை உள்ளத்தையும் பரிசோதிக்கவே நாங்கள் பறவையாக வந்தோம்.உமது உள்ளம் புரிந்தது.உலகம் உள்ளளவும் உமது புகழ் நிலைப்பதாக. நீர் பல்லாண்டு வாழ்க" என வாழ்த்தி மறைந்தனர்.அழகிய உடலை மீண்டும் பெற்ற மன்னன் பல்லாண்டு புகழுடன் வாழ்ந்தான்.

3 கருத்துகள்:

  1. அன்புள்ள பாட்டி அவர்களுக்கு,
    இக் கதை அருமையாக இருந்தது.
    இனிப்பாகவும் இருந்தது.நான் ஆர்வமாகப் படித்தேன்.
    நன்றி, நிறைய கதைகள் எழுதுக.

    பதிலளிநீக்கு
  2. பாட்டி,என் பெயரை எழுத மறந்து விட்டேன்.
    என் பெயர் ஆர்.ரோஹித்.

    பதிலளிநீக்கு
  3. திருமதி. ருக்மனி அவர்களுக்கு வணக்கம். என்மகனுக்கு இவ்வளவு தமிழ் தெரியும் என்பது இன்றுதான் எனக்கே தெரிந்தது. அதுமட்டுமல்ல அவனே தட்டச்சும் செய்துவிட்டு என்னைக் கூப்பிட்டு கண்பித்ததும் மிக மகிழ்ந்தேன். என் பெயர் வராதா? எனக் கேட்டான் அதுதான் மறுபடியும் பெயர் எழுதச் சொன்னேன். அவன் ஆர்வமாக படிக்கும் பக்கம் தங்கள் கதைகள். நன்றி.

    பதிலளிநீக்கு