வெள்ளி, 9 ஜூலை, 2010

38th story.kural koorum kadhai.

               ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
                செத்தாருள் வைக்கப் படும்.

வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. பள்ளிக்கூடம் விட்டவுடன் வீடு வந்து சேர்ந்துவிடும் குமரன் அன்று வெகு நேரமாகியும் வந்து சேரவில்லை.அவன் தாயார் கோமதிக்குக் கவலையாக இருந்தது. இந்த மழையில் எங்கே சென்று மாட்டிக்கொண்டானோ என்று தவித்தவாறு காத்துக் கொண்டிருந்தாள். நல்லவேளையாக காலையில் பள்ளிக்குச் செல்லும்போதே குடை எடுத்துப் போகச் சொன்னது நல்லதாப் போச்சு என்று சற்று ஆறுதல் அடைந்தாள்.
லேசாக இருட்டத் தொடங்கிய நேரம் உடம்பு முழுதும் நனைந்தவனாக உள்ளே நுழைந்தான் குமரன். அவனைப் பார்த்தவுடன் "அப்பாடா வந்துவிட்டாயா" என்று ஆறுதல் அடைந்த கோமதி "மொதல்ல உன் சட்டையை மாத்து.உடம்பை நல்லா தொடைச்சிக்கோ.தலையை நல்லா ஈரம் போகத் போகத் துவட்டு" என்றவள் அவனுக்காக டீ போட உள்ளே போனாள் கோமதி.
உடையை மாற்றிக் கொண்டு  அமர்ந்த குமரன் அம்மா கொடுத்த டீயை ருசித்துக் குடித்தான். கோமதியும் அவனைப் பார்த்தவாறே அவன் அருகே அமர்ந்திருந்தாள் .டீயைக் குடித்து முடித்த குமரன் கோப்பையைக் கீழே வைத்தான்."அம்மா, நான் லேட்டா வந்ததுக்காக என்னை மன்னிச்சுடு அம்மா.என்ன நடந்ததுன்னு சொல்றேன்."
"சொல்லுப்பா.என்ன நடந்தது?"
"பள்ளிக்கூடம் விட்டவுடன் வழக்கம்போல்தான் நான் வீட்டுக்கு வந்துகொண்டு இருந்தேன். வரும் வழியில் ஒரு சின்னப்பொண்ணு இரண்டாம் வகுப்பில் படிக்கிறாளாம் பள்ளிச் சுவர் ஓரமா நின்னு அழுதுகொண்டிருப்பதைப் பார்த்தேன்.ரொம்பப் பாவமா இருந்துதும்மா. அந்தப் பெண்ணைக் கொண்டுபோய் அவங்க வீட்டிலே விட்டுட்டு வந்தேன். போன பிறகுதான் அது என் பிரண்டு சோமுவின் வீடுன்னு தெரிஞ்சுது.அந்தப் பெண் அவன் தங்கச்சிதான்னும்  அப்புறம்தான் தெரிஞ்சுதும்மா."
"அப்படியா"என்று தன் மகனைப் பெருமையுடன் பார்த்தாள் கோமதி.
குமரன் தொடர்ந்து பேசினான்."அங்கே போனா, சோமுவின் வீட்டுச் சுவர் மழைக்கு இடிஞ்சு விழுந்துடிச்சு. சோமுவும் அவங்கம்மாவும் இருந்த சாமானையெல்லாம் எடுத்து பத்திரப் படுத்தி வெச்சாங்க. நானும் அவங்க கூட இருந்து உதவி பண்ணிட்டு வந்தேம்மா. அதுதான் லேட்டாயிடுச்சு."
என்று சொன்ன குமரனை அன்புடன் தலையைக் கோதிவிட்டாள் அம்மா.
"நீ நல்லதுதான் செய்திருக்கே.நேத்து நீ ஒரு குறள் படிச்சியே நினைவிருக்கா?"
"ஆமாம்மா. இன்னைக்கி எங்க தமிழ் வாத்தியார் கூட அந்தக் குறளைத்தான் ஒப்பிக்கச் சொன்னார். அர்த்தமும் சொல்லச் சொன்னார். நான் நல்லாச் சொன்னேன்னு அத்தனை பெரும் கை தட்டினாங்கம்மா."
"அப்படியா. அந்தக்குறளை இப்பச் சொல்லு."
  " ஒத்தது அறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் 
    செத்தாருள் வைக்கப் படும்."
"பலனை எதிர் பார்க்காமல் உதவி செய்து வாழ்பவனே உயிர் வாழ்பவனாவன். அவ்வாறு செய்யாதவன் உயிரற்றவனாகவே கருதப் படுவான்.அப்படின்னும் பொருள் சொன்னேம்மா."
"அதுதான் நீ உயிருள்ளவன்னு நிரூபிச்சுட்டு வந்திருக்கே. அந்த உன் நல்ல செயலுக்காக நானும் உனக்குக் கை தட்டுகிறேன் குமரா" என்றபடியே கோமதி பலமாகக் கைதட்டினாள்.
அம்மாவின் பாராட்டைக் கேட்டு மனமகிழ்ந்து அவளைக் கட்டிக் கொண்டான் குமரன். இனி எப்போதும் எந்தப் பலனும் எதிபாராமல் மற்றவர்க்கு உதவி செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்து கொண்டான்.
குமரனின் முடிவை நாமும் பின்பற்றலாமல்லவா!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக