பண்டரிபுரத்துக்கு அருகே ஒரு சிற்றூர். அவ்வூரில் மாதவராவ் என்ற பெரியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மனைவி ரத்தினாபாய் என்ற மாதரசி. அவர்களுக்குப் பல ஆண்டுகளாக மகப்பேறு இல்லாதிருந்தது. திருப்பதி சீனிவாசனை வேண்டிக்கொண்டனர் தம்பதிகள். ஏழுமலையான் தயவால் அவர்களுக்கு ஓர் அழகிய ஆண்மகன் பிறந்தான். அவனுக்கு சீனிவாசன் என்றே பெயரிட்டு அருமையாக வளர்த்தனர். தக்க வயதில் அவனுக்கு ஒரு லேவாதேவிக் கடை வைத்துக் கொடுத்து வியாபாரம் தொடங்கி வைத்தனர். லக்ஷ்மி பாய் என்ற பெண்ணையும் மணம் முடித்து வைத்தனர்.சீனிவாசன் இசைக் கலையிலும் கல்வி கேள்விகளிலும் வல்லவனாக இருந்தான்.
அதேபோல் அவனது லோபித்தனமும் அதிகமாகவே இருந்தது. வட்டிக்கடையில் வியாபாரம் வளர வளர சீனிவாசனின் பேராசையும் வளர்ந்தது.
அதிக வட்டி வட்டிக்கு வட்டி என்று வாங்கலானான். அவனது பெற்றோரின் மறைவுக்குப் பின் பூஜை ,பஜனை அன்னதானம் எல்லாம் மறைந்து போயின. எப்போதும் பணம் பணம் என்று அவன் சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது. லக்ஷ்மிபாய் ஒன்றும் செய்ய இயலாதவளாக இருந்தாள். கண்ணீர் விடுவதைத் தவிர கருணை உள்ளம் கொண்ட அந்த மாதரசிக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை.
ஓராண்டு கழிந்தது. லக்ஷ்மி பாயிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருக்மணிபாய் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தாள். பெண் குழந்தை பிறந்த பின்பும் சீனிவாசனின் குணம் மாறவில்லை.
ஓராண்டு கழிந்தது. லக்ஷ்மி பாயிக்கு ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்தது. ருக்மணிபாய் என்று பெயரிட்டு அருமையாக வளர்த்து வந்தாள். பெண் குழந்தை பிறந்த பின்பும் சீனிவாசனின் குணம் மாறவில்லை.
ஒருநாள் அந்தக் கிராமத்து வீதியில் ஒரு கிழவர் சீனிவாசனின் வீட்டைத் தேடிக்கொண்டு வந்தார். எதற்கு என்று கேட்டவர்களிடம் "கொஞ்சம் பணஉதவி வேண்டும் அவர் பணக்காரர் அல்லவா. அதுதான் அவரைத் தேடி வந்தேன்." என்றார். அனைவரும் கிழவரைப் பார்த்து "ஐயோ பாவம்" என்று பரிதாபப் பட்டனர் .கிழவர் சீனிவாசனின் வட்டிக்கடையைத் தேடிச்சென்று அவன் முன் நின்றார். அவரது பஞ்சைக் கோலத்தைக் கண்ட சீனிவாசன் இவரிடம் என்ன இருக்கப் போகிறது என்று நினைத்தவர்" யாரையா நீர்? என்ன விஷயம்?" என்றார்.
கிழவர் தன் வேஷ்டியில் முடிந்து வைத்திருந்த ஒரு எலுமிச்சம் பழத்தைக் கொடுத்து ஆசிகூறினார். "ஓஹோ வியாபாரம் என்று நினைத்தேன் யாசகமா? இங்கு ஒன்றும் கொடுப்பதற்கு இல்லை போய் வாரும்" என்று குனிந்து எழுதத் தொடங்கினார்.கிழவர் விடாக் கண்டராக நின்றார். "என் மகனுக்கு உபநயனம செய்விக்கவேண்டும்.ஓராயிரம் வராகன் கொடுத்தால் உங்களுக்குப் புண்ணியமாகப் போகும்" என்று கெஞ்சினார். ஒன்பது கோடிக்கு அதிபதியான சீனிவாசன் நவகோடி நாராயணன் என்று பாராட்டப்பட்டவன் தன்னிடம் பைசாகூட இல்லை என்று கடுமையாகப் பேசி அவரை வெளியில் பிடித்துத் தள்ளிவிட்டான். மக்கள் அவரைப் பார்த்துப் பரிதாபப் பட்டனர். லோபகுணமும் பேராசையும் உள்ள இவனா தருவான்.என்று பேசிக்கொண்டனர்.
கிழவர் விடுவதாயில்லை.தள்ளாடியபடியே அவரது வீட்டினுள் நுழைந்தார். வீட்டினுள் ஒரு முதியவர் வருவதைப் பார்த்த லக்ஷ்மிபாய் அவரை வரவேற்று வணங்கினாள். அவளிடம் தான் அவள் கணவனிடம் பட்ட அவமதிப்பைப் பற்றிச் சொல்லி வருந்தினார். "அம்மா! உன் கணவர் என்னை விரட்டி விட்டார். நீயாவது என்துயரைப் போக்குவாயா? என் மகனுக்கு உபநயனம் செய்து வைக்கவேண்டும். அதற்கு ஆயிரம் வராகன் வேண்டும்.அதைக் கொடுத்து உதவி செய்வாயா அம்மா?"
அவரது வேண்டுதலைக் கேட்ட லக்ஷ்மிபாய் மனம் உருகினாள். தன்னிடம் பணம் இல்லையே என்று வருந்தினாள். ஆனாலும் அந்த ஏழைப் பிராமணருக்கு உதவ வேண்டும் என்று எண்ணினாள். தன் தாய் வீட்டுச் சொத்தான தன் மூக்குத்தியைக் கழற்றிக் கொடுத்தாள். "பெரியவரே! என் மூக்குத்தியைத் தந்துள்ளேன். இது இரண்டாயிரம் வராகன் பெறும். என் கணவருக்குத் தெரிந்தால் ஆபத்து. அதனால் வேற்றூருக்குச் சென்று விடுங்கள்." என்றபோது பெரியவர் மிகவும் மகிழ்ச்சியுடன் அதைப் பெற்றுக் கொண்டு அவளை ஆசீர்வதித்தார்.
பின்னர் வேகமாக நடந்து சீனிவாசனின் கடையை அடைந்தார்.
மீண்டும் வந்துவிட்ட முதியவரைக் கோபத்துடன் பார்த்தான் சீனிவாசன். ஆனால் மிகவும் அலட்சியத்துடன் அவன் முன் அமர்ந்து கொண்டார் முதியவர். தனது கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டி,"இதன் விலை என்ன சொல். இதற்குரிய விலையைக் கொடு." என்றார் அதிகாரமாக.
மூக்குத்தியைத் திரும்பத் திரும்பப் பார்த்த சீனிவாசனுக்கு சந்தேகமாக இருந்தது. தன் மனைவியின் மூக்குத்திபோல இருக்கிறதே என்று நினைத்தார். கொஞ்ச நேரம் அமர்ந்திருங்கள் எனச் சொல்லிவிட்டு தன் வீட்டினுள் நுழைந்தான் சீனிவாசன். திடீரென்று வந்துள்ள கணவனைப் பார்த்துத் திகைத்தாள் லக்ஷ்மிபாய்.
அவளைப் பார்த்த சீனிவாசன் "லக்ஷ்மி, உன் மூக்குத்தியைக் கொண்டுவா." என்றவுடன் நடு நடுங்கிவிட்டாள் லக்ஷ்மி. என்ன செய்வது என்று அறியாமல் துளசி மாடத்தின்முன் சென்று வேண்டிக்கொண்டாள். "தாயே,கணவருக்குத் தெரியாமல் காரியம் செய்து விட்டேன். இப்போது என்னைக் காப்பது உன் பாரம் அம்மா. இல்லையேல் என் உயிரை எடுத்து விடு." என்று மனமுருக வேண்டிக்கொண்டாள்.அப்போது அவள் முன் இருந்த பஞ்சபாத்திரத்துள் அவளது மூக்குத்தி மின்னியது. அதைக் கையில் எடுத்துக் கொண்டு தேவிக்கு நன்றி சொல்லிவிட்டு கணவரிடம் ஓடோடி வந்து அந்த மூக்குத்தியைக் கொடுத்தாள் லக்ஷ்மிபாய். அதைப் பார்த்த சீனிவாசனுக்கு ஆச்சரியம் தாங்கவில்லை.அது அவளுடைய மூக்குத்தி அன்று. அதைவிட உயர்ந்த வைரம். அத்தகைய வைரத்தை அவன் அதுநாள் வரை வாங்கியதே இல்லை. தன் மனைவியிடம் இந்த மூக்குத்தி ஏது. என்னிடம் உண்மையைச் சொல் என்று கேட்டான். லக்ஷ்மி பயத்துடன் தான் ஒரு பிராம்மணருக்குத தன் மூக்குத்தியை தானமாகக் கொடுத்த செய்தியைச் சொன்னாள் .பின் இறைவனை வேண்ட அவன் பாத்திரத்துள் மூக்குத்தியைப் போட்ட செய்தியையும் கூறினாள். அதைக் கேட்ட சீனிவாசன் "லக்ஷ்மி அந்த பிராமணர் கடையில் உட்கார்ந்து இருக்கிறார். வா இருவரும் அவரை சேவிக்கலாம் என்று சொல்லி மனைவியையும் அழைத்துக் கொண்டு அந்த மூக்குத்தியை எடுத்துக் கொண்டு கடைக்கு ஓடினார். அங்கே அந்தக் கிழவரையும் காணோம். அவன் பூட்டிவிட்டுச் சென்ற பெட்டியில் இருந்த மூக்குத்தியையும் காணோம். வந்தவன் இறைவனே என்பதைப் புரிந்துகொண்டான் சீனிவாசன். மெய் மறந்து நெஞ்சுருக "என்னை ஆட்கொள்ள வந்த தெய்வமே!ஒரு முறை காட்சி தரமாட்டாயா? என்று ஏங்கித் தவித்தது அவனது உள்ளம்.
அன்று வரை தான் செய்த தவறுகளையெல்லாம் எண்ணிப் பார்த்து வெட்கியது அவன்உள்ளம். இனி இறைவனின் சேவை தவிர வேறொன்றும் தன் வாழ்வில் கிடையாது என்று முடிவு செய்துகொண்டான் சீனிவாசன். இறைவனின் பேரருள் அவன் உள்ளத்தை முழுவதுமாக மாற்றி விட்டது.
சீனிவாசனின் மனமாற்றம் ஊர்முழுவதும் பரவியது. இறைவனின் கருணையை எண்ணிப் புகழலாயினர். சீனிவாசனின் பெட்டியில் இருந்த செல்வமனைத்தும் கோவில் குளம் சத்திரம் நந்தவனம் வேத பாடசாலை எனப் பலவகையாக உருவெடுத்தன.
செல்வமனைத்தையும் தானம் செய்த சீனிவாசன் தன் கையில் தம்பூரி மீட்டியவாறு தெருவில் இறங்கி நடந்தான். கற்புக்கரசியான லக்ஷ்மிபாயும் அவன் மக்களும் உடன் நடந்தனர். செல்வமனைத்தையும் இறைவன் பணிக்கே செலவிட்டு அதே ஊரில் உஞ்சவிருத்தியை மேற்கொண்டான் சீனிவாசன். இசையில் வல்லவனான சீனிவாசன் பல பாடல்களை இயற்றினான். ஒருமுறை திருப்பதி சென்று இறைவனை வணங்கி அவன் மீது பாடல் புனைந்து வாழ்ந்தான். அப்போது அங்கிருந்த புரந்தரி என்ற தாசியின் இல்லத்தில் விருந்தினராகத் தங்கினர்.
ஒருநாள் நடுஇரவில் புரந்தரி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு வீணையை ஏந்திக் கொண்டு வெளியே சென்றாள். விடிந்தபின் இல்லம் வந்தாள்.மறுநாளும் அப்படியே சென்றாள். அடுத்தநாள் அவள் செல்லும்போது அவளை வழிமறித்து அவள் செல்லும் இடத்தைப் பற்றிக் கேட்டான் சீனிவாசன் .கோயிலுககுச் சென்று இறைவன் முன் பாடுவதாகவும் இறைவன் தம்முன் ஆடுவதாகவும் கூறவே தானும் வருவதாகக் கூறினான்.
புரந்தரியும் அவனை உடன் அழைத்துச் சென்றாள். ஒரு தூண் மறைவில் நிற்க வைத்து இறைவனுடன் ஆடியும் பாடியும் மகிழ்ந்த அந்தக் காட்சி அற்புதமாக இருந்தது சீனிவாசனுக்கு.இறைவன் மறைவிலிருந்த சீனிவாசனை அழைத்து ஆசி கூறினார்.அவர் பாதங்களில் வீழ்ந்து எழுந்து பேச நா எழாது நின்றான் சீனிவாசன்.
அவனை புரந்தரியிடமே ஞானோபதேசம் பெறச் சொல்லி புரந்தரதாஸ் என்று பெயரிட்டு பாடல்களை இசைக்குமாறு அருள் செய்து மறைந்து போனான்.
அன்று முதல் வாய் ஓயாது பாடல் இசைத்தவண்ணம் இருந்தார் புரந்தரதாசர். இறைவன் இவர் வாழ்க்கையில் பல அற்புதங்களை நிகழ்த்தியுள்ளான்.தாசர் தம் வாழ்நாளில் சுமார் நான்கு லக்ஷத்து எழுபத்து ஐந்தாயிரம் பாடல்கள் பாடியுள்ளார். இவை தாசர் பதங்கள் எனவும் தேவர் நாமா எனவும் போற்றப் படுகின்றன. தாசர் முக்தியடைந்த நன்னாளை ஹம்பி க்ஷேத்திரத்தில் இன்றும் கொண்டாடுகின்றனர்.
புரந்தரதாசர் நாரதரின் அவதாரம்.நாரதரைப் பூலோகத்தில் பிறவி எடுக்கச் செய்து அவரைத் தடுத்தாட்கொண்டு தாசருக்கு உபதேசித்தது போல நமக்கெல்லாம் உபதேசிக்கிறான் இறைவன். மனிதன் எத்தனை தவறுகள் செய்தாலும் அவன் மனம் திருந்தி தெய்வ வாழ்க்கையைப் பெறமுடியும் என்ற உண்மையை நாம் உணர்ந்து தவறு செய்திருந்தால் திருத்திக்கொண்டு நல்லமுறையில் வாழவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக