கிருஷ்ண தேவ ராயருக்கு பழங்கள் என்றால் மிகுந்த விருப்பம். ஒரு பெரிய பழத்தொட்டத்தையே பராமரித்து வந்தார். அந்தத் தோட்டத்துப் பழங்களை மிகவும் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். அந்தத் தோட்டத்தைக் கண்ணும் கருத்துமாகப் பராமரித்து வந்தார் .மாம்பழம், அன்னாசி, பப்பாளி,கொய்யா எனப் பலவகைப் பழ மரங்களை அந்தத் தோட்டத்தில் வளர்த்து வந்தார் .எப்போதும் அத்தோட்டத்தில் பழங்கள் பழுத்துத் தொங்கிக்கொண்டே இருக்கும்.ஒரு நாள் தோட்டக்காரன் தோட்டத்தில் பழுத்த பழங்களைக் கொண்டு வந்து ராயர் முன் வைத்தான். அப்போது தெனாலிராமன் மன்னருடன்உரையாடிக்கொண்டு இருந்தான். எனவே அப்பழங்களில் சிலவற்றை மன்னர் ராமனுக்கும் கொடுத்தார். அவற்றை ராமன் தன் வீட்டுக்கு எடுத்து வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். அந்த சமயம் ராமனின் மைத்துனன் ஊரிலிருந்து வந்திருந்தான். அவனுக்கும் சில பழங்களை ராமன் சாப்பிடக் கொடுத்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனின் மைத்துனன் பெயர் மல்லையா. அவன் ராமன் கொடுத்த பழங்களைச் சாப்பிட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தான்.
ராமனிடம் அவன் "அத்தான், இதுபோன்ற ருசி மிகுந்த பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதே இல்லை. ஏது இந்தப் பழங்கள்?" என்று விசாரித்தான்.
"இது நமது அரசருக்குச் சொந்தமான தோட்டத்திலிருந்து பறித்த பழங்கள். மன்னர் இவற்றை மிகவும் கவனமாகப் பாதுகாக்கிறார். இன்று நீ செய்த அதிருஷ்டம் எனக்குக் கிடைத்த பழங்களை உண்ணும் பேறு பெற்றாய்."என்று பதிலளித்தான் ராமன்.
"அத்தான், ஊரில் அப்பா,அம்மா, இன்னும் மற்றவர்களுக்கும் இதைக் கொண்டு போய்க் கொடுத்தால் மிகவும் மகிழ்வார்கள். இன்று இரவு யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் பழங்களைப் பறித்துச் செல்கிறேன்."
ராமன் பதறினான்."அடப்பாவி! கெடுத்தியே குடியை. அப்படியேதும் செய்து விடாதே. மாட்டிக்கொண்டால் மரண தண்டனை நிச்சயம். பிறகு உன்னை அந்த ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது. நல்லபடியாய் ஊர் போய்ச் சேர்." என்று எச்சரித்தான்.
ஆசை வெட்கமறியாது பயமும் அறியாது என்பதற்கிணங்க மல்லைய்யாவை ஆசை பிடித்துத் தள்ளியது. இரவு நேரம். அனைவரும் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். மல்லையா மெதுவாக எழுந்தான். யாரும் அறியா வண்ணம் அரசரின் பழத் தோட்டத்திற்குள் நுழைந்தான். பழங்களைப் பறித்து மூட்டையாகக் கட்டி கொண்டு மெதுவாக நடந்தான். ஆனால் இலைகளின் ஓசையால் காவலர் விழித்துக் கொண்டு மல்லைய்யாவைப பிடித்துக் கொண்டு போய் மன்னர் முன் நிறுத்தினர். கையும் களவுமாகப் பிடிபட்ட மல்லையாவுக்கு மன்னர் மரண தண்டனை விதித்தார். இதையறிந்த ராமனும் அவன் மனைவியும் ஓடிவந்தனர்.
இவர்களைப் பார்த்தவுடன் கிருஷ்ண தேவராயர் "ராமா! நீ உன் மைத்துனனைக் காப்பாற்ற வந்துள்ளாய். ஆனால் நீ சொன்னபடி நான் சத்தியமாகச் செய்யப் போவது இல்லை."என்றார்.
ஒரு நிமிடன் சிந்தித்த ராமன் "தங்கள் சத்தியத்தை கண்டிப்பாகக் காப்பாற்றுவீர்களா அரசே?" என்றான்.
"சத்தியமாக. உன் சொல்படி நான் செய்யவே மாட்டேன்."
"அப்படியானால் என் மைத்துனனை கொன்று விடுங்கள் அரசே!"
கிருஷ்ண தேவராயர் திகைத்தார். ராமன் சொல்வது போல் செய்வது இல்லை என வாக்களித்து விட்டாரே! எனவே மல்லைய்யாவை விடுதலை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை மன்னருக்கு. மல்லைய்யாவை விடுதலை செய்தார். தன் சொல்லையே தனக்கு சாதகமாகப பயன்படுத்திக் கொண்ட ராமனின் திறமையைப் பாராட்டினார் மன்னர்.
ஒருநன்மை ஏற்படுமானால் எந்த ஒரு சொல்லையோ செயலையோ நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதே உண்மையான அறிவு என்பதை இந்தக் கதையிலிருந்து அறியலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக