திங்கள், 30 ஆகஸ்ட், 2010

45th story.பக்த பிரகல்லாதா.

    
                                             பக்த பிரகல்லாதா.
இறைவன் நம்மைக்காக்க ஓடிவரவேண்டுமெனில் நாம் அவனிடம் காட்டும் பக்தியே சிறந்த வழி. அத்தகு பக்தியை மிகச் சிறிய வயதிலேயே காட்டி இறைவனான நாராயணனை தனக்காக இறங்கி வரச் செய்தவன் பிரகல்லாதன்.  இவனது தந்தையே ஹிரண்யகசிபு என்ற அசுர குல மன்னன். இவன் சாகா வரம் வேண்டி பிரம்மாவை நோக்கிக் கடுந்தவம் புரிந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா இவன் முன் காட்சியளித்தார். ஹிரண்யகசிபு தான் சாகாதிருக்கும்படி வரம் கேட்டான்.ஆனால் பிரம்மா அவ்வாறு வரம் தர இயலாது நீ எப்படியெல்லாம் சாகக்கூடாது என விரும்புகிறாயோ அப்படியே வரம் தருவேன் என்றார். அதன்படி நீரிலும் நிலத்திலும் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் மனிதனாலும் மிருகத்தாலும் அசுரனாலும்  பகலிலும் இரவிலும் எந்தவகையான ஆயுதத்தாலும் நான் மரணமடையக் கூடாது என வரம் கேட்டான். பிரம்மாவும் அப்படியே தந்தேன் எனக் கூறி மறைந்தார்.மிக்க மகிழ்ச்சியுடன் அரண்மனை திரும்பினான் ஹிரண்யகசிபு.
அங்கே தன் மனைவி கயாது இந்திரனுக்குப் பயந்து ஆசிரமத்தில் மறைந்து வாழ்வதை அறிந்து கடுங்கோபம் கொண்டான். அத்துடன்  தனக்கு மகன் பிறந்திருப்பதை அறிந்து மிக்க மகிழ்ச்சியும் கொண்டான்.
மனைவி மகனுடன் அரண்மனை திரும்பி சிறப்பாக விழா கொண்டாடினான். அதைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரையும் சிறைபிடித்தான். நவகிரஹங்களையும் தனக்கு அடிமைகளாக்கினான்.
சாகாவரம் பெற்றதால் தானே இறைவன் எனக் கூறிக்கொண்டான்.இனி எல்லாக் கோயில்களிலும் தனது உருவச் சிலையே வைக்கப்பட்டு அதற்கே அபிஷேக ஆராதனைகள் செய்யப்படவேண்டுமென ஆணை பிறப்பித்தான். ஈரேழு  பதினான்கு உலகங்களுக்கும் தானே அதிபதி என்று மிகவும் கர்வத்துடன் இருந்தான்.
அவன் மகன் பிரகல்லாதன்  ஐந்து வயது பாலகனானான். கல்வி பயில்வதற்காக ஆசிரமத்திற்கு அனுப்ப முடிவு செய்தான் ஹிரண்யன்.
அசுரகுரு சுக்ராச்சாரியாரின் புதல்வர்கள் சண்டா அம்ர்கர் என்ற இருவரிடமும் தன புதல்வனை அனுப்பிவைத்தான். அவர்களிடம் கல்வி பயிலும் போது ஆசிரியர் " ஓம் நமோ ஹிரண்யாய நமஹா" என்று கற்பித்தார். ஆனால் ஹரியே இறைவன் என்று கூறிய பிரகல்லாதன் "ஓம் நமோ நாராயணாய நமஹா" என்றுஅனைவருக்கும்   
போதித்தான். ஆசிரியர் ஹிரண்யகசிபுவின் ஆணைக்கு அஞ்சினர்.எவ்வளவு சொல்லியும் பிரகல்லாதன் "ஹரியே இறைவன்" எனக் கூறி வந்தான்.
நாட்கள் கழிய தன மகனின் கல்வி பற்றி அறிய விரும்பினான் ஹிரண்யன். பிரஹல்லாதனை அரண்மனைக்கு வரவழைத்தான்.அன்புடன் மகனைத் தன் தொடை மீது அமர்த்திக் கொண்டான்.மகனைக் கொஞ்சிய ஹிரண்யன்" மகனே! உலகிற்கெல்லாம் தலைவன் யார்?" எனக்கேட்டான். தன் மகன் வாயால் "தாங்களே தலைவர்" எனக் கூறுவதைக்  கேட்க விரும்பினான் ஹிரண்யன்.
சற்றும் தயங்காத பிரகல்லாதன் "ஹரியே உலகிற்கு தெய்வம். அவரே சகலமும் ஆவார்." எனக்கூறக்கேட்ட ஹிரண்யன் மிகுந்த கோபம் கொண்டான்.பலவிதமாகக்  கேட்டும் அவன் மாறாமல் அதையே கூறினான்.ஹிரண்யகசிபுவின் கோபம் எல்லை மீறியது."இவனை யானைக் காலில் வைத்து அழித்து விடுங்கள் " என ஆணை இட்டான்.
அதன்படி . பிரகல்லாதனை தரையில் உட்காரவைத்து யானையை ஏவினர் காவலர். ஆனால் அந்த யானை வணங்கி அவனைத் தன் முதுகில் ஏற்றிக் கொண்டு அரண்மனை சென்றடைந்தது.
அனைவரும் ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.ஹிரண்யன் மிகவும் கோபம் கொண்டான்."இவனை நடுக்கடலில் வீசிவிட்டு வாருங்கள்" என ஆணை பிறப்பித்தான்.
நடுக்கடலில் வீசப்பட்ட பிரகல்லாதனை மகாலட்சுமி பாதுகாப்பாகக் கரை சேர்த்தாள். மீண்டும் பிரகல்லாதன் அழுது கொண்டிருந்த தன் தாயிடம் வந்து சேர்ந்தான். கயாது மகனைக் கட்டி முத்தமிட்டாள்.
இதைக் கேள்வியுற்ற ஹிரண்யன் மனைவி மூலமாக மகனுக்கு உபதேசம் செய்யச் சொன்னான். இறைவன் நாமத்தைத் தவிர வேறு  பெயரை கூற மறுத்துவிட்டான் பிரகல்லாதன்.
சிலநாட்கள் கழிந்தன. இப்போதாவது மகன் மனம் மாறியிருப்பானா 
என ஆசையுடன் மகனை அழைத்தான் ஹிரண்யன். ஆனால் எப்போதும் போல் நாராயண நாமத்தையே உச்சரித்தான் பிரகல்லாதன்.
மிகவும் கோபம் கொண்ட ஹிரண்யன் அவனை  மலையுச்சியிலிருந்து வீசுமாறு உத்தரவிட்டான்.
காவலர் அதேபோல் மலையுச்சியிலிருந்து வீசினர். பிரகல்லாதன் கீழே விழுமுன் அவனை மகாலட்சுமி தாங்கிக் கொண்டாள். காவலர் அரண்மனை வந்து சேரும் முன்னே பிரகல்லாதன் அரண்மனை அடைந்தான்.
ஹிரண்யகசிபு திகைத்தான். இவனை ஒவ்வொரு முறையும் காப்பாற்றும் ஹரி எங்கே ஒளிந்திருப்பான் எனத் தேட முனைந்தான்.
கடைசி முறையாக தன் மகனுக்கு ஆலகால விஷத்தைக் கொடுக்குமாறு கயாதுவிடமே கொடுத்தான். தாயே மகனுக்கு விஷத்தைக் கொடுப்பதா எனத துடித்தாள் கயாது.
ஆனால் மன்னனின் ஆணையை மீறமுடியாமல் அழுதுகொண்டே விஷத்தைக் கொடுத்தாள் கயாது.
தன் மகன் கையில் விஷக் கிண்ணத்தைக் கொடுத்தவள் மயங்கி விழுந்தாள்.
புன்னகையுடன் நாராயணன் நாமத்தைக் கூறிக் கொண்டே ஆலகால விஷத்தைப் பருகினான் பிரகல்லாதன்.என்ன ஆச்சரியம் அந்த பயங்கரமான விஷம் அவனுக்கு அமுதம்போல ஆகியது. இதைக் கண்ட ஹிரண்யன் மிகவும் கோபத்துடன் "உன் ஹரி கோழை போல மறைந்து நின்று உன்னைக் காப்பாற்றுகிறானே,அவனை நேரில் வரும்படி சொல். அனைத்து உலகங்களுக்கும் அவன் தலைவனா நான் தலைவனா பார்க்கிறேன்" என்று கர்ஜித்தான். 
"எங்கேயடா உன் ஹரி? எங்கே மறைந்துள்ளான்?" 
"அவர் எங்கும் இருப்பார்.எல்லா இடங்களிலும் நிறைந்திருப்பார்."
ஹிரண்யன் ஒவ்வொரு இடமாகக் காட்டி இங்கே இருப்பானா என்றபடியே கேட்டுக் கொண்டே வந்தான். கடைசியில் ஒரு தூணைக் காட்டி இங்கே இருப்பானா என்று கேட்டான் ஹிரண்யன்.
"ஹரி தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்."
கைகளைக் குவித்தபடி கூறினான் பிரகல்லாதன். பெருஞ் சிரிப்புடன் அந்தத் தூணைத்  தன் கதாயுதத்தால் ஓங்கி அடித்தான் ஹிரண்யன்.பெருஞ்சத்தத்துடன் தூணைப் பிளந்து கொண்டு பயங்கர சிங்க முகத்துடன் நரசிங்க உருவத்தில் நாராயணன் குதித்தான்.
அந்த உருவத்தைப் பார்த்தவுடன் ஹிரண்யன் "பலே மகனே! நான் வெகு நாட்களாகத் தேடிக் கொண்டிருந்த ஹரியைக் காட்டிக் கொடுத்தாயடா"என்று கூறி தன் கதையைத் தூக்கி ஹரியை அடித்தான். மறுகணம் அந்த கதாயுதத்தை இரண்டாக ஒடித்து வீசினான் ஹரி. அப்போது மாலை நேரம். நரசிங்கம்ஹிரன்யனைத  தன் கரங்களில் தூக்கிக் கொண்டு வாயிற்படியில் அமர்ந்தான் அவனைத் தன் மடியில் வைத்துக் கொண்டு தன் இரு கரங்களிலும்  உள்ள கூறிய நகங்களால் ஹிரண்யனின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த குடலை அள்ளி மாலையாகப் போட்டுக் கொண்டான்.
ஹிரண்யகசிபு வதம் செய்யப் பட்டான்.
அவன் பிரம்மாவிடம் கேட்ட வரத்தின் படியே பகலும் இரவுமற்ற மாலை நேரத்தில் மனிதனும் மிருகமும் அல்லாத நரசிங்க உருவத்தில் வீட்டின் உள்ளேயும் வெளியேயும் இல்லாது வாயிற்படியில் நிலத்திலும் நீரிலும் இல்லாது மடியில் ஆயுதங்கள் ஏதுமின்றி கை நகங்களால் அவனை சம்ஹாரம் செய்தான் நாராயணன்.
.கோபத்தின் உச்சத்தில் இருந்த நரசிங்கத்தை தேவர்கள் மலர் மாறி பொழிந்தும் ஸ்தோத்திரங்கள் செய்தும் குளிர்வித்தனர். ஆயினும் சினம் தணியாத ஹரியை பிரகல்லாதன் அருகே சென்று பிரார்த்தனை செய்தான்.அவனை அருகே பார்த்தபின் சினம் தணிந்து அருள் பார்வை பார்த்தான் ஹரி. பிரகல்லாதனை மடியில் வைத்து ஆசி வழங்கினான்.
பல ஆண்டுகள் நாட்டை ஆண்டபின் வைகுண்டம் வருவாயாக என அருளி மறைந்தான். பிரகல்லாதன் இளம் சிறுவனாக  இருந்தாலும் இறைபக்தியில் சிறந்திருந்த காரணத்தால் இறைவன் வரிசையில் வைத்துப் போற்றப் படுகிறான். இவனே கலியுகத்தில் மகான் ஸ்ரீ ராகவேந்திரராகப் பிறவி எடுத்து பக்தியையும் தர்மத்தையும் உலகில் பரப்பியவன்.

1 கருத்து: