புதன், 7 அக்டோபர், 2020

சிறுவர்க்குச் சிறுகதைகள் 1 

                                  வெற்றி தரும் அறிவு  

ஒரு ஊரில் ஒரு சிறுவன் வாழ்ந்து வந்தான்.அவனுக்கு இரண்டு கால்களும் நடக்க முடியாதபடி சிறுத்துப் போயிருந்தன.அவன் பெற்றோர்  இருவருக்கும் வயதானதாலும் வறுமை காரணமாகவும் கண்கள் சரியாகத்  தெரிவதில்லை. மூவரும் ஒரு குடிசையில் வாழ்ந்து வந்தனர்.ஆனால் நடக்க முடியாத தங்கள் மகனுக்கு நடராஜா என்று பெயர் வைத்து அன்போடு அழைத்து வந்தனர்.

      தினமும் தங்கள் மகனை ஒரு கூடையில் அமரவைத்து சுமந்து  கொண்டு கோயில் வாசலுக்கு வருவார்கள் அங்கு அமர்ந்து கொள்வார்கள்.கோயிலுக்கு வருபவர்கள் தரும் பொருளையும் கோயிலில் தரும் பிரசாதத்தையும் வைத்துக் கொண்டு காலம் கழித்தார்கள்.

       தினமும் கோயில் வாசலில் அமர்ந்து கொண்டு நடராஜன் கோபுரத்தையே பார்த்துக் கொண்டு இறைவனை தியானித்தபடி இருப்பான்.கிட்டத்தட்ட தவம் என்றே சொல்லலாம்.இப்படியே சில ஆண்டுகள் ஓடிவிட்டன.

இப்போது சிறுவன் நடராஜன்  வாலிபனானான்.அவனது பெற்றோருக்கு கண்கள் சுத்தமாகக் குருடாகி விட்டன.ஆனாலும் பசிக்கிறதே என்ன செய்வது.குடிசை வாசலில் அமர்ந்து கொண்டு வருபவரிடம் கையேந்தியபடி அமர்வார்கள். இரக்க குணமும் தயாள சிந்தையும் கொண்டவர்கள் போடும் சிறிய பொருளை வைத்துக் கொண்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்து வாழ்ந்து வந்தனர்.

           ஒருநாள்.அன்று பௌர்ணமி. முழுநிலவு பளீரென்று ஒளிவீசிக் கொண்டிருந்தது.இரவு வெகு நேரம் ஆகியிருந்தது.குடிசை வாயிலில் அமர்ந்து கொண்டிருந்த நடராஜன் அந்த நிலாவையே பார்த்துக் கொண்டிருந்தான்.அவன் மனம் கற்பனை செய்தது.

பெரிய மாளிகையின் மேல்மாடம்.நடராஜன் கால்களை வீசி நடை போட்டுக் கொண்டிருந்தான்.அருகே அவன் மனைவி தன மகனுக்கு தங்கத்  தட்டில் பால்சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். நடராஜனின் பெற்றோர் குழந்தைக்கு நிலவைக் காட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.அந்த இன்பகரமான சூழலை நினைத்தபடி அங்கேயே உறங்கி விட்டான்.

          நடுஇரவு.அவன் இத்தனை நாட்களாக கோபுரத்தைப் பார்த்து செய்த தவத்துக்குப் பலன் தர இறைவன் திருவுளம் கொண்டார்.நடராஜனின் கனவில் தோன்றி பக்தா, உன் பக்திக்கு மிக்க மகிழ்ச்சி.உனக்கு வரமளிக்கவே வந்தோம்.வேண்டும் வரம் கேள்."என்றபோது உடல் நடுங்க வாய் குழற கைகூப்பி நின்றான் நடராஜன்.

          "தயங்காதே, நீ வேண்டும் வரம் கேள்."

நடராஜன்"இறைவா ,முதலில் என் "       என்று இழுத்தான்.

குறுக்கிட்ட இறைவன்,"அப்பனே, நிறுத்து முதல் இரண்டு என்பதெல்லாம் கிடையாது.ஒரே வரம்தான் தரமுடியும் எதுவேண்டுமோ கேள்."என்றார்.

நடராஜன் சற்றே யோசித்தான்."ஸ்வாமி, மேல்மாடத்தில் என்மனைவி என் மகனுக்குத் தங்கத்  தட்டில் சோறு ஊட்டும்போது அதை  என் பெற்றோர் மகிழ்ச்சியுடன் பார்ப்பதைஅங்கே  நடைபயிலும் நான் கண்டு மகிழவேண்டும்."

இந்த வரத்தின் மூலம் செல்வம் சமூக அந்தஸ்து பெற்றோருக்குப் பார்வை தனக்கு கால்கள் என்ற எல்லா வரங்களையும் ஒரே வரத்தில் கேட்டு விட்டான் நடராஜன்.ஒரு நிமிடம் இறைவன் திகைத்தார் பின்னர் கடகடவென சிரித்தார்."அப்பனே உன்திறமையை சோதித்தேன் நீ வென்றுவிட்டாய்.நீ நினைத்தபடி வரம் தந்தோம்." என்று கூறிய இறைவன் மறைந்தார்.

சமயோஜித அறிவு இருந்தால் யாரையும் வென்று விடலாம்.என்ற உண்மையை தன கனவு மூலம் அறிந்து கொண்டான் நடராஜன். இனி அவன் தன்  இயலாமையை மறந்து  விட்டு அறிவு பூர்வமாக சிந்தித்து வாழ்வில் முன்னேறும் வழியைத் தேடுவான் அல்லவா?அதில் அவன் வெற்றியும் பெறுவான் என்று நம்புவோம்.








2 கருத்துகள்: