வெள்ளி, 25 டிசம்பர், 2020

kal thandha maatram.

                                       கல் தந்த மாற்றம்.

 ஒரு சிறு கிராமத்தில் எட்டாம் வரையே உள்ள பள்ளிக்கூடம் இருந்தது அந்த கிராமத்துச் சிறுவர் சிறுமியர் அந்தப் பள்ளியில் தான் படித்து வந்தனர்.சோமுவும் சுதாகரும் அந்தப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் படிக்கும் சிறுவர்கள். சோமு சற்று துடுக்குக்காரன். பிறர் துன்பப பட்டால் பார்த்துச் சிரிக்கும் பண்புடையவன்.

     ஆனால் சுதாகரோ அவனுக்கு நேர்மாறானவன். பிறருக்கு உதவும் பண்புள்ளவன்.சோமுவின் குணத்தை அறிந்த பிற மாணவர்கள் அவனிடம் அதிகமாகப் பழகுவதில்லை.ஆனால் சோமுவை எப்படியும் நல்லவனாக மாற்றவேண்டும் என்பதற்காகவே அவனிடம் நட்புப் பாராட்டினான் சுதாகர்.சுதாகரிடம் நட்புடன் பழகவேண்டும் என்று நினைப்பவர்கள் கூட சோமுவின் அருகாமையில் அவனிடம் பேசவே பயப்பட்டார்கள்.

   அன்று நண்பர்கள் இருவரும் பள்ளி விட்டவுடன் பேசியவாறே நடந்து வந்துகொண்டிருந்தனர்.அப்போது சுதாகர் சோமுவின் கையைப் பிடித்து நிறுத்தினான்.அவன் ஏன் என்று கேட்குமுன் ஓடிப்போய் எதிரே கிடந்த பெரிய கல் ஒன்றைத் தூக்கி ஓரமாக வைத்தான்.அதைப் பார்த்த சோமு சிரித்தான். "ஏண்டா சுதா அதுபாட்டுக்கு வழியில கிடந்துட்டுப் போகுது அதைத் தூக்கி ஓரமா போடாட்டா என்னடா?"

"அப்படியெல்லாம் இருக்கக்கூடாது சோமு.யாராவது கவனமில்லாமே அதிலே இடிச்சுக்கிட்டா பாவமில்லே.அதனாலேதான் தூக்கிப் போட்டேன், "

"நீயொரு பைத்தியக்காரன்டா வேலெமெனக்கிட்டு பெரிய உதவி செய்யிறாராம்".என்று சொல்லிச் சிரித்தான்.

"சரி சரி வா. உனக்கே ஒருநாள் தெரியும்."என்றவாறு சோமுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு ஓடினான் சுதாகர்.

            நாட்கள் கடந்தன.ஒருநாள் திடீரென்று சோமுவின் தாத்தா பம்பாயிலிருந்து வந்திருந்தார்.வந்தவர் சோமுவுக்குப் பரிசாக சைக்கிள் ஒன்றைக் கொண்டு வந்திருந்தார்.சோமுவுக்கு ஏக சந்தோஷம் நாள் முழுவதும் அதிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.சுதாகரைக் கூட பெருமையாகப் பார்த்துக் கொண்டே சைக்கிளில் பறந்து சென்றான்.மற்ற நண்பர்கள் சுதாகரிடம் நெருங்கி "என்னடா சுதா, உன்னைக் கூட கவனிக்காமல் போகிறானே.நீதான் அவனது நெருங்கிய நண்பன்."என்றபோது சுதாகர் சிரித்துக் கொண்டே அவர்களுடன்  வேறு ஏதோ பேசிக்கொண்டு சென்றான்.

               இரவு எட்டுமணி இருக்கும். சுதாகர் படித்துக் கொண்டிருந்தான்.வாசலில் சைக்கில்மணி சத்தம் கேட்டது.சோமுதான் சைக்கிளில் போகிறான் தன வீட்டுமுன் வேண்டுமென்றே மணி அடிக்கிறான் எனப் புரிந்து கொண்டான்.மெல்லப் புன்னகைத்து விட்டுப் பாடத்தில் கவனம் செலுத்தினான்.

           சற்று நேரத்தில் தெருவில் ஒரே அமர்க்களம் ."ஓடு கார் கொண்டு வா, "இல்லை ஆம்புலன்சுக்கு போன் பண்ணு ." "தண்ணி கொண்டாப்பா," "காத்து விடுங்க"என்று பல குரல்கள்.ஓடினான் சுதாகர்.கூட்டத்தின் நடுவே அடிபட்டுக் கிடந்தான் சோமு.அவனை யாரும் நெருங்கமுடியவில்லை.அவன் அருகே சைக்கிள் உருத்  தெரியாமல் உடைந்து கிடந்தது.

ஒருவாரம் கடந்தது.சுதாகர் மெதுவாக சோமுவின் வீட்டுக்குச் சென்றான்.அவனைப் பார்த்து புன்னகையுடன் வரவேற்றான் சோமு

திடீரென்று சுதாகரின் கையயைப் பற்றிக்கொண்டு கண்களில் நீர் மல்கக்  கூறினான்.. "சுதா,ஒருவாரமா கைதி மாதிரி இருக்கேண்டா.ஏண்டா யாருமே என்னைப்  பார்க்க வரலே?"

"அது இருக்கட்டும் உனக்கு எப்படி அடிபட்டது?நீதான் சைக்கிள்  நல்லா ப்ராக்டிஸ் பண்ணியிருந்தாயே?"

"எல்லாம் உன் பேச்சைக் கேட்காததால் வந்த வினை."

"என்னடா சொல்றே?"

"ஆமாண்டா.எல்லார்கிட்டயும் சண்டை போடாதே. அன்பா இருஅப்படின்னு நீ சொல்லும்போதெல்லாம் நான் அலட்சியம் செய்தேன் அதான் என் மேலே யாருக்கும் பிரியமில்லாம போச்சு.நீ கூட என்னை  பார்க்க வரலே" என்றான் தேம்பியபடியே.

"அதெல்லாம் இல்லேடா.நீ ஆஸ்பத்திரியிலிருந்து வந்திருக்கே.உனக்கு ஒய்வு தேவை அதனாலதான் நானும் மற்ற நண்பர்களும் வரலே.உன்னைப்பற்றி 

நா ங்கள் பேசிக்கொண்டுதான் இருந்தோம். அதெல்லாம் சரி உனக்கு எப்படி அடிபட்டது?"

தலையைக் குனிந்தவாறே சொன்னான் சோமு."நான் உன் வீட்டு முன்னாலே பெல் அடிச்சுட்டு வேகமா சைக்கிளில் போய் க் கொண்டிருக்கும் பொது வழியில் ஒரு பெரிய கல் கிடந்தது. அதை எடுத்து  போடணும்னு எனக்குத் தோணி னாலும் என் பின்னால் வரும் கார் அதிலே ஏறி இறங்கும் குலுங்கும். உள்ளே இருப்பவங்க எப்படி கூச்சல் போடுவாங்கன்னு வேடிக்கை பார்க்க நினைச்சேன். அதனால சைக்கிளில் ஒரு சுற்று சுற்றிவிட்டு அதே தெருவுக்கு நான் வந்தேன் நல்லா இருட்டிடுச்சு அதே சமயம் கரண்டும் கட்டாயிடுச்சு..நான் காரைக்காணமேன்னு நினைப்பிலேயே வந்தேன்.திடீர்னு எதிரேஎதன் மேலோ  என் சைக்கிள் டமார்னு  முட்டி மோதி உருண்டது. அவ்வளவு வேகத்திலே நான் ஓட்டிவந்தேன் கண்ணைத் திறக்கும்போது கைகால் தலையிலே கட்டுப் போட்டு ஆஸ்பத்திரியில் கிடந்தேன்."

"எதிலே உன் சைக்கிள் மோதிச்சுன்னு பார்த்தியா?"

"அதாண்டா விதி.நான் தூக்கி ஓரமாய் போடாத அந்தக் கல் மேலயே  ஏறி விழுந்தேன் அதோட அருகிலேயே நின்னுக்கிட்டிருந்த காரின் பின்புறம் மோதி என் சைக்கிளும் ஒடஞ்சுது என் தலை கை  காலும் உடைஞ்சுது."

"இனிமேலாவது தெரிஞ்சுக்கோ மற்றவங்களுக்குத் துன்பம் செய்ய நினைச்சாலே கூட அந்தத் துன்பம் நமக்கே வரும்னு."

"அதுமட்டுமில்லே சுதா, மற்றவர்களிடம் அன்பாயிருந்தால்தான் நம்மிடமும் மற்றவர்கள் அன்பாயிருப்பாங்க.இந்த ஒருவாரத்தில் தனிமையாயிருக்கும்போது  நண்பர்கள் எவ்வளவு தேவைன்னு  நான் புரிஞ்சுக்கிட்டேன். இனி உன்னைப்போல எல்லாரிடமும் அன்பாயிருப்பேன்"

எல்லாம் கல் தந்த  பாடம்டா சுதா."

ரொம்ப சந்தோஷமாயிருக்கு சோமு.  உன் குணம் மாறியதைச் சொல்றேன்.

என்று சொல்லிப் புன்னகைத்தான். நண்பர்கள் இருவரும் கைகோர்த்து மனம் விட்டுச் சிரித்தனர்.

2 கருத்துகள்: