புதன், 28 அக்டோபர், 2009

டில்லி அரசரை வென்ற கதை

ஒருமுறை டில்லி அரசர் பாபர் தெனாலிராமனின் திறமையைக் கேட்டு அவனை நேரில் காண விரும்பினார்.  அவனது திறமையைச் சோதிக்க விரும்பினார். .எனவே தெனாலிராமனை டில்லிக்கு அனுப்புமாறு விஜய நகரத்திற்கு ஓலை அனுப்பினார்.


கிருஷ்ணதேவ ராயரும் தெனாலிராமனை அழைத்து " இதோ பார் ராமா! இங்கே எப்படியோ உன் திறமையைக் காட்டி எங்களைச் சிரிக்க வைக்கிறாய். ஆனால் அதுபோல் பாபரிடம் நடக்காது. உன் திறமை அவரிடமும் பரிசு பெறுவதில்தான் உள்ளது. அவரிடம் நீ பரிசு பெற்று வந்துவிட்டால் நானும் உனக்குப் பரிசு தருவேன் உன்னைத் திறமைசாலி என்றும் ஒப்புக்கொள்கிறேன். இல்லையேல் உனக்குத் தண்டனை தப்பாது. தெரிகிறதா!" என்று எச்சரித்து அனுப்பினார்.


டில்லி வந்து சேர்ந்த தெனாலிராமன் பாபரின் அரண்மனைக்குச் சென்றான். சபையில் தான் செய்யும் அகடவிகடத்திற்கு யாரும் சிரிக்காதது கண்டு திகைத்தான். எவரும் சிரிக்கக் கூடாது என பாபர் முன்னரே கட்டளை இட்டிருப்பார் என யூகித்தான். இந்தச் சூதினை எப்படியும் முறியடிப்பது என முடிவு செய்து கொண்டான். மறுநாள் முதல் ராமன் அரண்மனைக்குச் செல்வதை நிறுத்திக் கொண்டான். பாபர் ராமன் சொல்லாமலேயே நின்று விட்டானே சரியான தோல்விதான் அவனுக்கு என மகிழ்ந்தார்.


ஒருநாள் பாபர் தன் மந்திரியுடன் உலாவச் சென்றார். வழக்கம்போல அரண்மனைச் சேவகன் ஒருவன் சில பொன்முடிப்புகளைச் சுமந்து வந்தான். மன்னர் குதிரையை மெதுவாக நடத்திச் சென்று கொண்டிருந்தார். பாதை ஓரத்தில் முஸ்லிம் கிழவர் ஒருவர் தள்ளாடியபடியே ஏதோ செடிகளை நட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தார். அவரருகே சென்று தன் குதிரையை நிறுத்தினார்." பெரியவரே! இந்தத் தள்ளாத வயதில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?"


" நல்ல மாங்கன்றுகளை நட்டுக் கொண்டிருக்கிறேன்." இதை அவர் மிகவும் சிரமப் பட்டுக் கூறினார்.


" ஏன் ஐயா! இந்தத் தள்ளாத வயதில் உமக்கு ஏன் இந்தத் தொல்லை! அத்துடன் இது காய்த்துப் பின் பழுத்து அந்தப் பழத்தை நீர் உண்ணப் போகிறீரா? " என்று சிரித்தார்.


" அரசே! நாம் உண்ணும் மாங்கனிகள் நம் முன்னோர் நட்டதுதானே! அவர்கள் மரங்களை நட்டதால் தானே நாம் இன்று மாங்கனிகளை உண்ணுகிறோம்! அவர்கள் நடாமல் இருந்திருந்தால் நமக்கு ஏது மாம்பழங்கள்?


எனவே வரும் தலைமுறையினர் உண்ணவே இம்மரங்களை நான் நடுகிறேன்"


"ஆஹா! சரியான பதில். நல்லவிளக்கம். மிக்க மகிழ்ச்சி." உடனே மந்திரியார் ஒரு பொன் முடிப்பைப் பரிசாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட கிழவர் சிரித்தார். " அரசே! அல்லா பெரியவர். எல்லோருக்கும் மரம்


பழுத்தபிறகே பலன் தரும். ஆனால் பாபரின் ஆட்சியில் மரம் நட்டவுடனே பலன் கொடுத்து விட்டதே!"


பாபர் மனம் பெரிதும் மகிழ்ந்தது. "ஆகா! சரியாகச் சொன்னீர்கள் பெரியவரே!" என்றபடியே மந்திரியைப் பார்க்க அவர் இன்னொரு பொன்முடிப்பை அளித்தார். அதையும் பெற்றுக்கொண்ட பெரியவர், "அரசே! இந்த மாங்கனிகள் பழுத்துப் பின் பலனளிப்பது ஆண்டுக்கு ஒருமுறைதான். ஆனால் தங்களின் மேலான குணத்தினால் நட்டவுடனே இருமுறை எனக்குப் பலனளித்து விட்டது. என்னே அல்லாவின் கருணை?"


என்றார். "நன்றாகச் சொன்னீர்கள் பெரியவரே! " என்று கூறியவர் மீண்டும் ஒரு பொன் முடிப்பையும் அளித்தார். பின் மந்திரியைப் பார்த்து "மந்திரியாரே! சீக்கிரம் இங்கிருந்து சென்று விட வேண்டும். இல்லையேல் சாதுர்யமாகப்பேசி நம் பொக்கிஷத்தையே காலிசெய்து விடுவார் இந்தப் பெரியவர்." என்று வேடிக்கையாகச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் பாபர்.


" சற்று நிற்க முடியுமா அரசே?" என்று சொன்ன பெரியவர் தன் தாடி மீசையைக் களைந்து விட்டுத தெனாலி ராமனாக நின்றார். பாபர் திகைத்தார். சற்று நேரத்திற்குள் மூன்று பரிசுகளைப் பெற்றவன் தெனாலி ராமனா?


தெனாலி ராமன் பணிவுடன் கூறினான். "அரசே, மன்னிக்கவேண்டும். எங்கள் மன்னர் கிருஷ்ண தேவ ராயர் தங்களிடம் நான் பரிசு பெற்று வரவேண்டும் எனக் கட்டளையிட்டு அனுப்பினார். இன்று அவரது கட்டளைப் படியே தங்களிடம் பரிசுகளைப் பெற்று விட்டேன். இனி ஊர் திரும்பத் தாங்கள் அனுமதி அளிக்க வேண்டும்."


"தெனாலி ராமா! உண்மையிலேயே நீ திறமைசாலிதான். உங்கள் மன்னருக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவி. நாளைக்கு அரச மரியாதையையும் பெற்றுக் கொண்டு விஜயநகரம் செல்லலாம்." என்றார் அரசர். பின் மகிழ்ச்சியுடன் அரண்மனைக்குத் திரும்பினார்..


வெற்ற்யுடன் ஊருக்கு வந்து சேர்ந்த தெனாலி ராமனைப் பார்த்த கிருஷ்ணதேவ ராயர் நடந்தவைகளைக் கேட்டறிந்தார். தான் சொன்னபடியே தெனாலி ராமனுக்குப் பல பரிசுகளையும் கொடுத்தார். தன் நாட்டின் கௌரவத்தைக் காப்பாற்றிய ராமனை மன்னரும் மக்களும் போற்றிப் புகழ்ந்தனர்.

திங்கள், 19 அக்டோபர், 2009

அதியமானின் நட்பு

கடையேழு  வள்ளல்களில்  அதியமானும்  ஒருவன்.  இவனது  இயற்பெயர்   நெடுமான் அஞ்சி  எனப்படும். இவன்  அதியமான் எனவும்  வழங்கப் பட்டான்.  அதிகை  என்ற  ஊரில்  வாழ்ந்திருந்து  பின்னர்  சேர நாட்டில்  குடி ஏறியவனாக இருத்தல்  வேண்டும்.  அதனால்  அதிகமான்  எனவும்  வழங்கப்பட்டான்  எனவும்  கூறுவர்.  இம்மன்னனின்   தலைநகரம்  'தகடூர்'.  இது  தற்போது  தர்மபுரி  என  வழங்கப்படுகின்றது.   ஒளவையார்  இம்மன்னனைப்  பற்றி  பல பாடல்களைப்  பாடியுள்ளார்.  இப்பாடல்கள்  மூலம்  இவனது  கோடை,  வீரம்  வள்ளல்தன்மையினைப்  பற்றித்  தெரிந்து  கொள்ளலாம்.  பல  வரலாற்றுச்  செய்தியினையும்  தெரிந்து  கொள்ளலாம்.

ஒரு  முறை  தொண்டைமான்  என்னும்  மன்னன்  அதியனுடன்  போருக்குத்  தயாரானான்.  அதியன்  அமைதியை  விரும்பினான்.  அதியனுக்காக   ஒளவையார்   தூது  சென்றார்.  ஒளவையாரை  வரவேற்ற  தொண்டைமான்  தனது  படைக்  கலங்களைக்  காட்டிப்  பெருமைப்  பட்டுக்  கொண்டான்   அவனது  கர்வத்தை  ஒடுக்கவும்  அதியனின்  வீரத்தைத்  தெரிவிக்கவும்  பாடல்  ஒன்றைப்  பாடினார்  ஒளவையார்.
'இவ்வே  பீலியணிந்து  மாலை  சூட்டிக்
 கண்திரழ்  நோன்காழ்  திருத்தி  நெய்யணிந்து                                                                                                                     கடியுடை  வியனகரவ்வே,  அவ்வே
பகைவர்க்  குத்திக் கோடுனுதி சிதைந்து
கொல்துறைக்  குற்றிலமாதோ '..............................
.......................'   இப்பாடல்   மூலமாக  தொண்டைமானின்  படைக்  கலங்கள்  போர்க்களத்தைப்  பாராததால்  புதியதாக   நெய்யணிந்து  மாலை  சூட்டிக்  கொண்டிருப்பதாகவும்,      ஆனால்  அதியனின்  படைக்  கலங்களோ  எப்போதும்  போர்க் களத்திலேயே  இருந்து  பகைவரைக்  குத்திக்  கிழிப்பதால்  முனை  முரிந்து
கொல்லன்  உலைக் களத்திலே  கிடக்கின்றன.'  என்று  பாடியதைக்  கேட்ட  தொண்டைமான்  தன்னைப்  புகழ்வது  போலப்  பழித்தும்  அதியனைப்  பழிப்பது  போலப்  புகழ்ந்தும்  பாடியதைப்    புரிந்து  கொண்டு  போரை நிறுத்தி 
சமாதானம்   செய்து  கொண்டான்..


மற்றொருமுறை  அதியனுக்குத்  திரை  செலுத்தாதவரைத்  தேடிச் சென்று  அதியனின்  வாள்  திறம்   வேலின் உறுதி  யானைப்  படையின்  வீரம்  பற்றி  எடுத்துக்  கூறி  அவர்களைத்  திறை  செலுத்தும்படி  செய்தார்.   பின்னர் மலாடர் கோமானுடன்போரிட்டு  வென்ற  செய்தியைப்  புகழ்ந்து  பாடி  மகிழ்ந்தார்.  இவ்வாறு  அதியன்  மீது  கொண்ட  அன்பால்  அவன்  மீது  பலபாடல்களைப்  பாடி  மகிழ்ந்த  ஒளவையார்  ஒரு  முறை  அதியனைக்  காணச்  சென்றார்.  புலவர்களின்  வழக்கப்படி  பரிசிலை  நாடிச்  சென்றார்.  பல  நாட்கள்  அதியனின்  அரண்மனையில்  விருந்தினராய்  இருந்தார்.  



அதியன்  பரிசில்  தராமல்  காலம் தாழ்த்தினான். ஒளவையார்  மீது  கொண்ட  பேரன்பால்  பரிசில்  கொடுத்து  விட்டால்  அவர்  தன்னைப்  பிரிந்து  சென்று  விடுவார்  என்று  எண்ணியே  காலம்  தாழ்த்தினான்.  ஒளவையார்  'ஒரு  நாள்  பழகினாலும்  பலநாள்  பழகினாலும்  முதல்  நாள்  போலவே  என்றும்  அன்பு  செலுத்துபவன்  அதியன்.  அவன்  பரிசில்  தராவிடினும்   யானையின்  கொம்பிடை  வைத்த  உணவு  எப்படி  யானைக்குத்  தப்பாதோ  அதுபோலத்  தப்பாமல்  அவனது  பரிசில்  நமக்குக்  கிட்டும்.  மனமே  வருந்தாதே. அவன்  வாழ்க'  என  வாழ்த்திவிட்டுப்  புறப்பட்டார்.  இதனைக்  கேள்வியுற்ற  அதியன்  ஓடோடி  வந்து  ஒளவையாரிடம் மன்னிப்புக்  கேட்டுக்கொண்டு  பரிசிலைக்  கொடுத்தான்.  இப்பாடல்  மூலமாக  புலவர்கள்  ஒரு இடத்தில்  தங்காதவர்கள்  என்று  தெரிந்து  கொள்ளலாம்.  அத்துடன்  ஒளவையார்  மீது  அதியன்  கொண்டுள்ள  அன்பையும்   இந்நிகழ்ச்சி  காட்டுகிறது.  அதியமான்  ஒளவையாரிடம்  கொண்ட  அன்பினை  எடுத்துக்  காட்டும்  நிகழ்ச்சிகளிலேயே  மிகச்  சிறந்த  நிகழ்ச்சி  ஒன்று  உண்டு.  அதுதான்  நெல்லிக்கனி  அளித்த  செயல்.  அதியன்  மிகவும்  பாடுபட்டுப்  பெற்ற  நெல்லிக்கனி.  அதனை  உண்டவர்  நீண்ட  நாள்  வாழ்வார்கள்  என்னும்  சிறப்பினைப்  பெற்றது  அக்கனி.  அத்தகு  கனியைத்   தான்  உண்ணாது  ஒளவைக்குக் கொடுத்தான்  அதியன்.  


ஆதலால்  அக்கொடையை   நினைத்து  ஒளவையார்  நீ  சிவ பெருமானைப்  போல வாழ்வாயாக  என  வாழ்த்தினார். தன்னைப்  போல  மன்னர்  பலர்  தோன்றுவர்.  ஆனால்  ஒளவையாரைப்  போலப்  புலவர்கள்  சிலரே  தோன்றுவர்  எனவே  அவர்   நீண்ட  நாள்  வாழ்ந்து  தமிழுக்குத்  தொண்டு  செய்ய  வேண்டும்  என்ற  எண்ணத்தினால்  ஒளவையாருக்கு  இக்கனியைக்  கொடுத்தான்  அதியன்.  அத்துடன்  அக்கனியின்  சிறப்புக்களை  மறைத்து  ஒளவையார்  அக்கனியினை  உண்ட  பிறகே  அதன்  சிறப்புக்களை பற்றிக்  கூறினான்   .எனவே  அவனது  அன்புள்ளம்  புலனாகிறது   அதியனின்  வீரத்தை  முதலில்  கூறிப்  பின் வாழ்த்துகிறார்.அப்பாடல்,
'.............................
...........................
பால்புரை  பிறைநுதல்  பொலிந்த  சென்னி
நீல மணிமிடற்று  ஒருவன்  போல
மன்னுக  பெரும  நீயே  தொனனிலைப்
பெருமழை  விடரகத்து  அருமிசை  கொண்ட 
சிறியிலை  நெல்லித்தீங்கனி  குறியாது
ஆதல்  நின்னகத்து  அடக்கிச்
சாதல்  நீங்க  எமக்கு  ஈத்தனையே.'  என்ற  பாடல்  அதியமான்  ஒளவையார்  மீது  கொண்ட  நட்பையும்  அன்பையும்  புலப்படுத்துகிறது.

வியாழன், 8 அக்டோபர், 2009

நல்லோர் சேர்க்கை நலம் தரும்

மாலை நேரம் இருட்டிவிட்டது.மழைக்காலம் வேறு. குளிர் காற்று அடிக்கத் தொடங்கிவிட்டது. சோமுவின் பாட்டி சோமுவின் வரவிற்காகக் காத்திருந்தார்.நன்றாக இருட்டிய பின்பே சோமு வீடு திரும்பினான். பாட்டி வருத்தத்துடன் பேசியதைக் கூட அவன் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இரவு நேரம் வழக்கம்போல் பாட்டியின் அருகே படுத்துக் கொண்ட சோமு "பாட்டி, கதை சொல் பாட்டி."என்றான்."என் கேள்விக்குப் பதில் சொல். பிறகு நல்ல கதை சொல்கிறேன் " என்றார் பாட்டி. "ம்" என்றான் மெதுவாக."ஏன் இன்று இருட்டிய பிறகு வீட்டிற்கு வந்தாய்?' என்னிடம் அதற்காக எந்த காரணத்தையும் சொல்லவில்லையே! ஏன் "என்றார். சோமு தயங்கியவாறே "பாட்டி, என்வகுப்புப் பையன் புதிதாகச் சேர்ந்தவன் என்னை விளையாட வெகு தூரம் அழைத்துப் போய் விட்டான். நான் வேண்டாமென்றுதான் சொன்னேன். 




அவன் கேட்கவில்லை அதோடு யாரிடமும் சொல்லாதே என்று சொல்லிவிட்டான் பாட்டி" என்றான் மெதுவாக. பாட்டி அவனைத் தடவிக் கொடுத்தார். "சோமு நண்பர்கள் இருப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் நல்ல பண்பு உடையவர்களா என்று ஆராய்ந்து பார்த்த பிறகு தான் நட்புக் கொள்ளவேண்டும்.""அதனால் மட்டும் என்ன பயன் பாட்டி?" " உனக்கு ஒரு கதை சொல்கிறேன். நல்லோர் சேர்க்கை எத்தனை நல்லது என்று உனக்கே புரியும்." சோமு ஆவலுடன் கதை கேட்கத் தயாரானான். பாட்டி குரலைச் சீர்படுத்திக் கொண்டு சொல்லத் தொடங்கினார்.-- 'ஒருமுறை நாரதர் நாராயணனிடம் ஒரு கேள்வி கேட்டார். நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன் ஏற்படும்? நாராயணன் பதில் சொன்னார். நாரதா! பூவுலகில் அதோ தெரியும் மரத்தடியில் ஒரு பசு சாணமிட்டுள்ளது. 

அதில் ஒரு புழு நெளிந்து கொண்டிருக்கிறது. அதனிடம் சென்று இக்கேள்வியைக் கேள். என்று சொல்லி அனுப்பி விட்டார். நாரதனுக்கு சந்தேகம் இருந்தாலும் நாராயணன் சொல்வதால் பூவுலகிற்கு வந்து அந்தப் புழுவைச் சந்தித்தார். ஏ புழுவே! நல்ல சான்றோருடன் சேர்வதனால் என்ன பயன்? புழு நாரதரைத் தன் தலையைத் தூக்கிப் பார்த்துவிட்டு தன் உயிரை விட்டுவிட்டது. பதறியபடியே மீண்டும் நாரதர் நாராயணனிடம் வந்தார். இறைவ! அந்தப புழு தன் உயிரை விட்டு விட்டதே! என்றார். புன்னகை புரிந்த நாரணன், சரி, அதோ அந்த மரத்தில் ஒரு கிளி குஞ்சு பொரித்துள்ளது. அந்தக் குஞ்சினிடம் சென்று கேள். என்று நாரதரை அனுப்பி வைத்தார். நாரதர் மீண்டும் பூவுலகம் வந்து கிளியிடம் வந்து நின்றார். கிளியிடம் தன் கேள்வியைக் கேட்டார்.



புழுவைப் போலவே கிளியும் நாரதரைப் பார்த்து விட்டு தன் உயிரை விட்டு விட்டது. அதைப் பார்த்த நாரதர் நாராயணா! என்று பதறியபடியே வைகுண்டத்தை அடைந்தார். அதே எழில் கொஞ்சும் புன்னகையுடன் பள்ளி கொண்டிருந்த நாராயணன் ஒன்றுமே அறியாதவர் போல் பேசினார். உன் கேள்விக்கு விடை கிடைத்ததா நாரதா? என்றார். சுவாமி நாராயணா! இது என்ன சோதனை! அந்தக் கிளியும் தன் ஜீவனை விட்டு விட்டதே! சரி இப்போது அந்நாட்டு மந்திரியின் வீட்டில் ஒரு பசு கன்று ஒன்றை ஈன்றிருக்கிறது. அதனிடம் சென்று கேள். உன் கேள்விக்கு இப்போதாவது விடை கிடைக்கிறதா பார்ப்போம். என்றார். நாரதரும் தயங்கியவாறே அந்தப் பசு இருக்குமிடம் தேடி வந்து சேர்ந்தார். புதிதாகப் பிறந்திருந்த அந்தக் கன்று மெதுவாக எழுந்து ஓடத் தொடங்கியிருந்தது. அங்குமிங்கும் ஓடியாடும் அழகிய கன்றினிடம் தன் கேள்வியைத் தயக்கத்துடனே கேட்டார் நாரதர். தன் ஓட்டத்தை நிறுத்தி விட்டு நாரதரைப் பார்த்தது அந்தக் கன்று. உடனே அதன் உயிர் பிரிந்தது. நாரதருக்கு ஒன்றும் புரியவில்லை. இந்தக் கேள்வியில் ஏதோ பொருள் உள்ளது. 


இறைவன் நம்மையும் சோதிக்கிறார் என எண்ணியபடியே மீண்டும் வைகுண்டம் வந்தார். நாராயணனை வணங்கி நின்றார். நாராயணா! இது என்ன சோதனை! இந்தக் கன்றும் உயிர் விட்டுவிட்டதே! என் கேள்விக்கு விடையே கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. இனி நான் யாரிடமும் சென்று இந்தக் கேள்வியைக் கேட்க மாட்டேன். என்றார் தலை குனிந்தவாறே. இந்தமுறை உன் கேள்விக்கு விடை கிடைத்து விடும். காசி ராஜனுக்கு ஒரு மகன் பிறந்துள்ளான். அவனிடம் சென்று இக் கேள்வியைக் கேள். என்றவுடன் நாரதர் அலறி விட்டார். நாராயணா! என்ன சோதனை. காசிராஜன் மகனுக்கு ஏதேனும் ஊரு விளைந்துவிட்டால் அந்த மன்னன் என்னை விட்டு விடுவானா ? என்ன பரீக்ஷை இது சுவாமி? என்று அச்சப்பட்டார். ஆனாலும் இறைவனின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் காசி நகர் நோக்கிச் சென்றார். அங்கு நகரமே கோலாகலமாக இருந்தது.


பல ஆண்டுகளுக்குப் பிறகு மன்னனுக்கு மகன் பிறந்ததில் மன்னன் மிகவும் மகிழ்ந்திருந்தான். நாரதர் யார் கண்ணுக்கும் படாதவாறு தன் உருவத்தை மறைத்துக் கொண்டார். நேரே பாலகன் படுத்திருந்த தொட்டில் அருகில் சென்று நின்றார். அவரைக் கண்டவுடன் பிறந்த குழந்தை சிரித்தது. அதன் அருகில் சென்று நின்றார் நாரதர். உங்கள் சந்தேகம் என்ன கேளுங்கள் நாரதரே என்றது குழந்தை. நற்பண்புகளுடன் கூடிய நல்லோரைக் காண்பதனால் என்ன பயன்,சான்றோர் சேர்க்கையால் நாம் அடையும் பயன் யாது? நாரதரே! முதலில் நான் ஒரு புழுவாகப் பிறவி எடுத்திருந்தேன். உங்கள் தரிசனம் கிடைத்தது. உடனே அந்தப் பிறவி எனக்கு நீங்கியது.அடுத்து கிளியாகவும் அதன் பின் பசுங்கன்றாகவும் பிறந்தேன். அப்போதும் தங்களின் தரிசனத்தால் அந்தப் பிறவிகளும் நீங்கப்பெற்றேன். இப்போது அரசன் மகனாகப் பிறக்கும் பாக்கியம் பெற்றேன். இப்போதும் தங்களின் தரிசனம் கிடைக்கப் பெற்றுள்ளேன்.ஒவ்வொரு முறையும் சான்றோராகிய தங்களின் தரிசனத்தால் எனது பிறவி உயர்ந்து கொண்டே சென்று இன்று மன்னன் மகனாகப் பிறக்கும் தகுதியை அடைந்துள்ளேன். இப்பிறவியும் நீங்கி இறைவனடி சேரும் பெரும் பேறு கிட்டிவிட்டது. தங்களுக்கு என் நன்றி. வருகிறேன் நாரதரே! என்றபடியே அக்குழந்தையும் கண்களை மூடிக்கொண்டது. நாரதர் நேரே நாராயணனிடம் வந்து சேர்ந்தார்.நாராயணா! சான்றோர் சேர்க்கை நன்மையையும் உயர்வையும் தரும் என்ற உண்மையைப் புரிந்து கொண்டேன். என்றார்.'" அதனால்தான் நல்லவர்களோடு சேர்ந்தால் நமக்கு நன்மை கிட்டும் என்று சொன்னேன்.என்றார் பாட்டி.


சோமுவும் இன்று எங்கள் ஆசிரியர் கூட செய்யுளில் இதைத்தான் சொன்னார்கள் பாட்டி.என்றான். அப்படியா? என்ன அது? சொல் பார்ப்போம்.

"நல்லாரைக் காண்பதுவும் நன்றே 
நலமிக்க நல்லார் சொல் கேட்பதுவும் நன்றே
நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே
அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று."

அழகாக சோமு சொல்லிய பாடலைக்கேட்டு பாட்டி மகிழ்ந்தாள்.சோமு எப்போதும் ஒருவரை நல்லவன் என்று தெரிந்து கொண்ட பிறகு நட்புக்கொள். தெரிந்ததா?சோமுவும் மகிழ்ச்சியுடன் படுத்துக் கொண்டான்.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

கபிலரின் நட்பு

பாண்டிய நாட்டின் தலைநகராகத் திகழ்ந்தது மதுரை மாநகர். இந்நகரின் கிழக்குப் பகுதியில் உள்ளது வாதவூர் என்னும் சிற்றூர். இச்சித்ரூரில் பிறந்தவர் தான் கபிலர் என்னும் செவி வழிச் செய்தி நிலவுகின்றது. 'புலனழுக்கற்ற அந்தணாளன் ' எனச் சங்கத்துச் சான்றோரால் பாராட்டப் பெற்றவர்.

வாதவூர் என்பது தென்பறம்பு நாட்டைச் சார்ந்தது. பறம்பு நாட்டை வேள்பாரி என்ற மன்னன் ஆண்டு வந்தான்.வேள்பாரியின் பால் மாறாத அன்பு கொண்ட கபிலர் பாரியின் உயிர் நண்பனாக அவனுடனேயே வாழ்ந்து வந்தார்.அன்பும் பண்பும் கொண்ட அந்தணராகிய கபிலர் பெரும் புலமை பெற்றவர்.பாரியின் அவைக்களப் புலவராகவும் திகழ்ந்தார்.செந்தமிழ்ப் பாக்கள் இயற்றும் சிறப்பு காரணமாக வேந்தர் பலரையும் இவர் சென்று கண்டு பரிசில் பெறுவதும் உண்டு.

ஒருமுறை சேர நாட்டை நாடிச் சென்றார். அப்போது அந்நாட்டை ஆண்டவன் செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் மன்னன்.அவனைச் செந்தமிழால் சிறப்புச் செய்தார் கபிலர்.அவரது பாடலின் சிறப்பைக் கேட்டு வியந்த மன்னன் கபிலருக்கு நூறாயிரம் காணம் பொன் கொடுத்ததுடன் "நன்றா" என்னும் குன்றின் மீது ஏறி நின்று தன் கண்ணிற் கண்ட இடமெல்லாம் புலவருக்குக் கொடுத்தான். பிற்காலத்தில் இவ்விடம் " நணா" என மருவியது. இதனைச் சூழ்ந்த பகுதிகள் கபிலருக்குக் கொடுக்கப் பட்டமைக்குச் சான்றாக அங்கே கபிலக் குறிஞ்சி என்ற ஊர் இன்னும் உள்ளது.

கபிலரது பாடல்களில் குறிஞ்சி நில வர்ணனைகளே மிகுந்து காணப் படுகின்றன. மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி எனப்படும் . மலையும் அருவியும், சுனையும் தேனடையும், பலாவும் இவர் பாடல்களில் அழகு சேர்ப்பன. இவ்வாறு குறிஞ்சி நிலத்தைப் பலபடப் பாடிய திறத்தால் "குறிஞ்சிக்குக் கபிலன்" என்ற பெயரையும் பெற்றார்.

ஆரிய நாட்டு மன்னன் பிரகத்தன் என்பான் சேர மன்னன் செல்வக் கடுங்கோவின் சிறந்த நண்பன். இவனது துணையால் கபிலரின் நட்பைப் பெற்றான். தமிழில் காணப்படும் அகப்பொருள் நலத்தை அறிய விரும்பிய பிரகத்தன் அதனை விளக்கிக் கூறுமாறு கபிலரைக் கேட்டான். அவனுக்காக கபிலர் எழுதிய நூல் "குறிஞ்சிப் பாட்டு" எனப்பட்டது. இந்த நெடும் பாட்டு தமிழகத்தின் ஒழுக்கத்தின் மாண்பினை எடுத்துக் கூறுவதாக அமைந்துள்ளது.

ஒருமுறை காட்டின் வழியே நடந்து செல்லும் கபிலர் வழியில் ஆண் பன்றி நின்று கொண்டிருப்பதைக் காண்கிறார்.அவரது கற்பனை விரிவடைந்து பாடலாக வருகிறது. அப்பாடலின் கருத்து, " தன் குட்டிகளோடு பெண் பன்றி படுத்திருக்கிறது. அவற்றை வேட்டுவரும் அவரது நாய்களும் அணுகாதவாறு வெருட்டி ஓட்டியது ஆண் பன்றி. பின்னர் தனது பெண் பன்றியையும் அதன் குட்டிகளையும் வேறிடத்தில் சேர்த்து விட்டுக் காவலாக வழியிலேயே நின்று கொண்டிருந்தது. அதனைப் பார்த்த வேட்டுவன் " படைமறவரோடு அஞ்சாது போரிடும் தன் தலைவனைப் போல் அதன் செயல் இருப்பது கண்டு அதனைக் கொல்லாது விட்டுச்சென்றான்." என்ற கருத்தமைந்த பாடல் இவரது குறிஞ்சி பாடும் திறமைக்குச் சான்றாகும்.இவரது உயிர் நண்பன் வேள்பாரி மூவேந்தரின் வஞ்சனையால் இறந்து பட்டான். அவன் பிரிவுக்குப் பெரிதும் வருந்திய கபிலர் பாரியுடன் தானும் உயிர் விடத் துணிந்தார்.ஆனால் பாரியின் வேண்டுகோள் காரணமாக அச்செயலைக் கபிலர் செய்யாது விடுத்தார். பாரியின் மக்கள் அங்கவை சங்கவை என்ற இரண்டு பெண்களையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு பல மன்னர்களையும் நாடிச் சென்றார். மூவேந்தரின் பகைக்கு அஞ்சியோ யாது காரணம் பற்ற்யோ எந்த அரசரும் அம மகளிரை மணந்து கொள்ள முன் வரவில்லை. கபிலர் எத்துணை முயன்றும் அவரது முயற்சி பயன் தரவில்லை. முடிவில் மலையமான் நாட்டுத் தலைநகர் திருக்கோவலூரை அடைந்தார்.அங்கே வாழ்ந்த பார்ப்பனர் ஒருவரிடம் பாரியின் மக்களை அடைக்கலப் படுத்தினார்.பார்ப்பனரிடத்திலுள்ள பொருட்கும் உயிர்கட்கும் எவ்விதத் தீங்கும் செய்தலாகாது என்பது அந்நாளைய முறை.அத்துடன் பெண் கேட்டு அதுவே காரணமாகப் போரிடுவதும் இல்லை. இதனை நன்கறிந்திருந்த கபிலர் பாரியின் மக்களை பார்ப்பனரிடம் அடைக்கலப் படுத்தித் தன் பெருஞ்சுமையை விளக்கிக் கொண்டார்.

உயிர் நண்பன் பாரியின்றி இந்நிலவுலகத்தில் வாழ்வதையே பெருஞ்சுமையாகக கருதினார் கபிலர். பாரியின்றி வாழும் கபிலர் உயிரற்ற உடல்போல் உணர்ந்தார்.இம்மையில் பிரிந்து விட்ட பாரியை மறுமையில் இணைந்து வாழ விருப்பம் கொண்டவரானார்.தென் பெண்ணை ஆற்றுக் கரையில் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணா நோன்பிருந்து உயிர் விட்டார் கபிலர். அப்போது அவர் பாடிய பாடலில் பாரியின் மறைவுக்கு அவர் வருந்திய வருத்தமும் நண்பனின் பிரிவால் அவர் பட்ட துயரமும் நன்கு புலனாகும்." மாவண் பாரி ! என்னை நீ பலகாலம் பேணிக் காத்தாய். அது போழ்து ஏன் உயிர் நண்பனாக இருந்தாய்.ஆனால் நீ இவ்வுலகை விட்டுப் பிரியுங்கால் என்னை உன்னுடன் வரவிடாது "இங்கேயே இருந்து பின் வருக" என்று கூறிச் சென்று விட்டாய். இனியும் உன்னைப் பிரிந்து என்னால் தனித்து வாழ இயலாது. இப்பிறவியில் நம்மை நட்பால் சேர்ந்து வாழச் செய்த நல்லூழ் மறுமையிலும் உன்னுடன் வாழும் வாழ்வை ஈவதாக!" என்று பாடி மறைந்தார்.இன்றும் கோவலூர் அருகே கபிலக்கல் ஒன்று இருக்கிறது.அது கபிலரின் வடக்கிருந்த செய்தியைக் கூறிக்கொண்டிருக்கிறது. நட்பு என்றதும் வேள்பாரி கபிலரின் நட்பு நமக்கு நினைவுக்கு வரும் அளவிற்கு வாழ்ந்து மறைந்தவர் கபிலர். இவரது குறிஞ்சிப் பாட்டு நூல் தவிர ஐங்குறுநூறு என்னும் நூலில் குறிஞ்சித்திணை பற்றிய நூறு பாடல்கள் பாடியுள்ளார்.

இவையேயன்றி அகம் புறம் பதிற்றுப் பத்து கலித் தொகை குறுந்தொகை நற்றிணை பத்துப்பாட்டு நூல்களிலும் இவரது பாடல்கள் இடம்பெற்றுள்ளன.புலவர் வரிசையில் கபிலருக்குத் தனிச் சிறப்பிடம் உண்டு என்பதில் ஐயமில்லை.

புதன், 26 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - இரண்டாம் பகுதி

நேரமாகிவிடவே சந்திரன் தானே தனக்கு வேண்டிய பொருட்களைச் சேகரித்துக் கொண்டு தன்னையும் தயாரித்துக் கொண்டான். குறிப்பிட்ட நேரம் வந்தது.மேடையில் பல மாணவர்கள் தங்கள் தங்கள் திறமையைக் காட்டிக் கொண்டிருந்தனர். இதோ ஆசிரியர் சந்திரனின் பெயரை அறிவித்துவிட்டார். பேனா ரிப்பேர் செய்பவன்போல வேடம் புனைந்திருந்த சந்திரன் மேடையில் ஏறித் தன் திறமையை வெளிப் படுத்தி நடித்தான்.அடுத்தவன் சரவணன்.

அழகாக உடையணிந்து ரோஜா மலர் ஒன்றைத் தன் சட்டைப் பையில் குத்திக் கொண்டு நேருவாக வேடம் புனைந்தவன் மேடையேறினான். பொறாமையே உருவான சந்திரன் சரவணன் வருவது தெரியாதவன் போல் சட்டெனத் திரும்புவது போல் பாசாங்கு செய்து தயாராகத் திறந்து வைத்திருந்த இங்கி புட்டியை அவன் மீது சாய்த்து விட்டான். ஒரு கணம் திகைத்து நின்றான் சரவணன். தன் மீது சிந்தியிருந்த மையைக் கூர்ந்து நோக்கினான். அதற்குள் ஆசிரியர் அவன் பெயரை இரண்டு முறை அழைத்து விட்டார்.சந்திரன் "சாரி, சரவணா!, தெரியாமல் கொட்டிவிட்டது."என்று மெதுவாகக் கூறிவிட்டு நகர்ந்தான். அவன் உள்ளம் இனி எப்படி சரவணன் மேடை ஏறுவான்? என்று மகிழ்ச்சி கொண்டது. சரவணன் அருகில் நின்ற ராமுவின் காதில் ஏதோ கூறவே அவன் நீதிபதியாக வந்தவரிடம் ஓடிப் போய்ப் பேசிவிட்டு வந்தான்.

உடனே ஆசிரியர் தலையசைத்து அனுமதித்ததும் சரவணன் மேடை மீது ஏறினான்.பாரத மாதாவாக வேடமணிந்து வந்திருந்த மாணவன் கையிலிருந்த மூவர்ணக் கொடியைத் தன் கையில் ஏந்திக் கொண்ட சரவணன்,மேடை மீது நின்று திருப்பூர் குமாரனாக வீர வசனம் பேசி தடியடி பட்டவனாகக் கையில் கொடியுடன் தள்ளாடித் தள்ளாடி நடந்தான். கடைசியில் கொடியைக் கீழே விடாமல் பிடித்துக் கொண்டே மேடையில் சாய்ந்தான். அவன் திறமையைக் கண்ட மாணவர் கூட்டம் முழுவதும் பலத்த கரவொலி எழுப்பித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டது.சற்று நேரத்தில் நீதிபதி எழுந்து நின்று அறிவிக்கத் தொடங்கினார்."மாணவர்களே!உங்கள் திறமையைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமையும் மகிழ்ச்சியும் அடைந்தோம். யாருக்கு முதல் பரிசு கொடுப்பது என்று திகைக்கும் அளவிற்கு நன்றாக நடித்தீர்கள். பேனா வியாபாரியாக வந்த மாணவனுக்குத்தான் முதல் பரிசு தரவேண்டுமென நாங்கள் முடிவு செய்திருந்தோம்.ஆனால் கடைசியாக வந்த மாணவன் சரவணன் நேருவாக நடிக்க வந்தவன் தன் மீது தவறுதலாக சிகப்பு மை கொட்டிவிட்டதால் திருப்பூர் குமாரனாக நடிக்கப் போவதாகச் சொல்லியனுப்பினான்.

தவறு நேர்ந்து விட்ட போதும் அதற்காகக் கலங்காமல் அதையே மாற்றித் தன் திறமையை வேறு வழியில் வெளியிட்ட அச் சிறுவனின் சமயோசித அறிவைப் பாராட்டுவதோடு முதல் பரிசையும் அவனுக்கே அளிக்க முடிவு செய்துள்ளோம். சரவணனுக்கு முதல் பரிசும் சந்திரனுக்கு இரண்டாம் பரிசும் அளிக்கிறோம்."என்று கூறிய போது அனைவரும் சரியான தீர்ப்பு எனப் பாராட்டி மகிழ்ந்தனர்.தன் தவறுக்கு தண்டனை கிடைத்ததை உணர்ந்து கொண்ட சந்திரன் சரவணனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டான்.அன்று முதல் பொறாமையைத் தன் மனத்திலிருந்து ஓட்டி விட்டு நல்ல நண்பனாகத் திகழ்ந்தான்.

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

நல்ல தீர்ப்பு - முதல் பகுதி

சரவணன் மிகவும் கெட்டிக்காரன். நன்றாகப் படிப்பவன். படிப்பில் மட்டுமல்லாமல் நாடகம் இசைப் போட்டி, பேச்சுப் போட்டி,போன்ற பிற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு நிறையப் பரிசுகளைப் பெற்றிருக்கிறான். அந்த ஆண்டும் எல்லாப் போட்டிகளையும் வைப்பதற்காக தமிழாசிரியரும் பிற ஆசிரியர்களும் ஈடுபட்டிருந்தனர் . சரவணனின் வகுப்பில் சந்திரன் என்று ஒரு மாணவன் படித்து வந்தான்.அவன் எப்போதும் பெருமை பேசிக்கொண்டே இருப்பான். அதனால் அவனை அனைவரும் சவடால் சந்திரன் என்றே அழைப்பார்கள்.வழக்கம்போல் தன் சவடால் வார்த்தைகளை அள்ளிவிட்டுக் கொண்டிருந்தான் சந்திரன்." இந்த ஆண்டு மாறு வேடப் போட்டியில் எனக்குத்தான் முதல் பரிசு கிடைக்கும். வேறு யாராலும் ஜெயிக்க முடியாது.

" என்று கர்வமாகப் பெசிவந்தான். அவன் நண்பர்கள் அதை வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர் .ராமுவுக்கு மட்டும் சந்திரனின் பேச்சு வெறும் சவடாலாகப் பட்டது. "டேய் சந்தர்! வெறும் சவடால் விடாதே! சரவண னை மாறு வேடப் போட்டியிலே யாராலும் ஜெயிக்க முடியாது.""சரவணன் என்னடா! அவனுக்கும் மேலே யார் வந்தாலும் அய்யாதான் ஜெயிப்பாரு. தெரியுமா!" " டேய், டேய்! எப்படிடா ஜெயிப்பே?"பலரது குரல்கள் அவனைச் சூழ்ந்து கொள்ள அவன் அந்த இடத்துக் கதாநாயகனானான்."அதெல்லாம் சொல்ல மாட்டேன். ஜெயிச்ச பிறகு சொல்றேன்." ஏமாற்றமடைந்த மாணவர்கள் கசமுசவென்று பேசியவாறே கலைந்து சென்றனர்.போட்டிகளுக்கான நாளும் வந்தது. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போட்டியாக நடந்து கொண்டிருந்தது. வழக்கம்போல சரவணன் பலபோட்டிகளில் முதல் பரிசு பெற்றான். மறு நாள் மாறுவேடப்போட்டி என அறிவித்தாய் விட்டது. சவடால் சந்திரன் நிலை கொள்ளாமல் தவித்தான். ஆனால் எப்போதும் முதல் பரிசு வாங்கும் சரவணனோ மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் இருந்தான். சரவணனைப் பார்க்கும் போதெல்லாம் சந்திரன் பற்களைக் கடித்தான்."இரு, இரு, மாறு வேடப் போட்டியிலே உன்னை மண்ணைக் கவ்வ வைக்கிறேன்." என்று மனதுக்குள் கருவினான். ஆனால் சரவணன் என்ன வேடம் போடப் போகிறான் என்பதை அறிய மிகவும் ஆவலாக இருந்தான். அதனால் அவனிடம் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தான்." சரவணா! நாளைக்கு மாறுவேடப் போட்டியிலே நீயும் கலந்து கொள்கிராயல்லவா?""ஆமாம், நீயும்தானே கலந்து கொள்கிறாய்?""ஆமாம் சரவணா! ஆனால் என்ன வேடம் போடறது அப்பிடின்னுதான் யோசிக்கிறேன். நீ என்ன வேடம் போடப் போகிறாய்?" அப்போது ராமு குறுக்கே வந்தான்."டேய் சந்திரா! யாரு கிட்டேயும் என்ன வேடம்னு கேக்கக் கூடாது. நீயா வேடம் போட வேண்டியதுதான்."சரவணன் மென்மையாகச் சிரித்தான்."ராமு! பரவாயில்லை. நமக்குள்ளே என்ன இருக்கு! நான் போடப்போற வேடம் நம் மாந்தருள் மாணிக்கம் நேரு மாமாவின் வேடம். சந்திரா! நீயும் நல்ல வேடமாகத் தேர்ந்தெடுத்துக் கொள். பரிசு உனக்கே கிடைக்க நான் வாழ்த்தறேன்." என்றான் சரவணன்.சவடால் சந்திரனின் மனதில் மெதுவாக ஒரு திட்டம் உருவானது. இப்போது அவன் மனதில் " நான் ஜெயிக்காவிட்டாலும் பரவாயில்லை.

இந்த சரவணன் ஜெயிக்கக் கூடாது" என்ற எண்ணமே நிறைந்திருந்தது.பொழுது புலர்ந்தது. அன்று மாலைதான் மாறுவேடப் போட்டி நடை பெறப் போகிறது. இதுவரை தனக்கு உதவி செய்வதாகச் சொல்லியிருந்த மேக் அப் மேனாகப் பணியாற்றும் சந்திரனின் மாமா வரவில்லை. அவர் வந்து தனக்கு ஒப்பனை செய்வார் என்ற எண்ணத்தில் தான் தன் நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்தான். இது வரை அவர் வராதது அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.

சனி, 15 ஆகஸ்ட், 2009

சுபாஷ் சந்திர போஸ்

இந்திய துணைக் கண்டத்தின் சுதந்திர வரலாறு உலக வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. இந்த வரலாற்றின் நாயகர்களாக விளங்கியவர் பலராவர். அவர்களுள் படை நடத்தி வீரத்தின் வேகத்தை ஆங்கிலேயருக்குக் காட்டியவர் நேதாஜி எனப்பெயர் பெற்ற சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.



பாரத நாட்டின் சுதந்திர வீரராகவும் வீரத்தின் விளைநிலமாகவும் திகழ்ந்தவர், பாரதத்தின் மணியாகவும் விளங்கியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஆவார்.1897 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் 28 ஆம் நாள் கல்கத்தாவில் ஜானகி நாதிர் போஸுக்கும் பிரபாவதி தேவிக்கும் மகனாகப் பிறந்தார். தனது கல்லுரிப் படிப்பை கல்கத்தாவில் படிக்கும்போதே வெள்ளையர்களை அவர்களின் அதிகாரத்தை எதிர்க்கும் உணர்வைத் தன் உள்ளத்தில் வளர்த்து வந்தார்.



இவரது நாட்டுப் பற்றை ஒரு சிறு நிகழ்ச்சி மூலம் அறிந்து கொள்ளலாம். இவரது வகுப்பில் பாடம் நடத்தும் பேராசிரியர் ஓர் ஆங்கிலேயர். அவர் ஒரு நாள் வகுப்பறையில் இந்தியர்களையும் இந்தியக் கலாச்சாரத்தையும் இழிவாகப் பேசினார். தேசீய உணர்வு மிகுந்த சுபாஷ் அவரை ஆசிரியர் என்றும் பாராமல் நன்கு அடித்து விட்டார். அவர் உள்ளத்தில் ஆங்கில ஆட்சியை இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும் என்ற எண்ணம் வேரோடி இருந்தது. அவர்களை விரட்ட இந்தியர்களுக்குப் படைப் பயிற்சி தேவை என முடிவு செய்தார். அதனால் இவர் கடற்படைப் பயிற்சியும் பெற்றார். தன் மேல்படிப்புக்காக இவர் லண்டன் சென்றிருந்த போது கவிக்குயில் சரோஜினி தேவி, சித்தரஞ்சன்தாஸ் போன்றோரின் பேச்சுக்களைக் கேட்டார். அதனால் இவரது விடுதலை வேட்கை மேலும் வளர்ந்தது. இந்தியாவில் இந்தியரின் நிலையை நன்கு உணர்ந்து கொண்டார். நாட்டு மக்களின் உள்ளத்தில் மேல்படிப்பான i சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டியதன் அவசியத்தைப் புரிந்து கொண்டார். மேல் படிப்பான ஐ.சி.எஸ். தேர்வு எழுதாமலேயே பாரதநாட்டுக்குத் திரும்பினார்.



கல்கத்தா திரும்பியவுடன் 1921 -ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதன் மூலம் அரசியலில் பிரவேசம் செய்தார். மோதிலால் நேரு, சி.ஆர்.தாஸ் ஆகியோரின் சுயராஜ்யக் கட்சிக்காக இவர் உழைத்தார். விவசாயிகளின் நலனுக்காகவும் இவர் பாடுபட்டார். நாட்டின் இளைஞர்களின் நலனே இவர் கருத்தாக இருந்தது. இளைஞர்களின் எழுச்சி மிக்க தலைவராக விளங்கினார் சுபாஷ் சந்திர போஸ். இவரது பேச்சுக்களும் செயல்களும் ஆங்கில அரசின் கவனத்தை ஈர்த்தன. இவர் ஏற்படுத்திய இளைஞர் கட்சியின் வளர்ச்சியும் இவர் தனது பத்திரிகையான ' பார்வர்ட்' ல் எழுதிய கட்டுரைகளும் ஆங்கில அரசாங்கத்தின் ஆத்திரத்திற்கு வித்திட்டன. இதைக் காரணம் காட்டி இவரைச் சிறை பிடித்தது ஆங்கில அரசு. அக்காலத்திய அரசியல் கைதிகளுக்குக் கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனை தரப்பட்டது. அலிபூர் சிறையிலும் பின்னர் பர்மாவில் உள்ள மாண்டலே சிறையிலும் அடைக்கப்பட்டார். இங்குதான் திலகர் பெருமானும் அடைக்கப் பட்டிருந்தார். - இச்சிறை மிகவும் கொடுமை வாய்ந்தது. விஷ ஜந்துக்களும் சுகாதாரமின்மையும் சரியான உணவின்மையும் இவரது உடல்நிலையை மிகவும் மோசமாக்கியது .சிறையில் பல இன்னல்களை அனுபவித்தபின் விடுதலையானார்.



இவர் காந்தி இர்வின் ஒப்பந்தத்தையும் ஒத்துழையாமை இயக்கத்தையும் ஏற்றுக்கொள்ளவில்லை. வன்முறைக்கு வன்முறையாலேயே தீர்வு காண விழைந்தார். துப்பாக்கி ஏந்தி போராடித்தான் வெள்ளையரை விரட்ட முடியும் என்பதில் தளரா நம்பிக்கை கொண்டிருந்தார். கல்கத்தா நகரில் இவரது செயல்களைக் கண்காணித்து வந்த வெள்ளையர் அரசு இவரை மீண்டும் கைது செய்தது. இவர் எழுதிய கட்டுரைகளும் நடத்திய ஊர்வலங்களும் அரசுக்கு எதிரானவை என்று காரணம் சொல்லப்பட்டது. வெளிநாடுகளில் இருந்து பாரத விடுதலைக்கு படை திரட்ட முற்பட்டார் சுபாஷ். டோக்கியோவில் ராம்பிகாரி கோஷ் உதவியுடன் இந்திய விடுதலை லீக் அமைக்கப்பட்டது. சுபாஷ் இந்த மாநாட்டில் கலந்து கொள்ள டோக்கியோ சென்றார். ஜப்பானின் தலைநகர் டோக்கியோவிலிருந்து வானொலி மூலம் இந்திய மக்களின் உள்ளங்களில் எல்லாம் சுதந்திரக் கனல் மூளும்படி வீர உரை ஆற்றினார். மக்களைப் படை திரட்டிப் போருக்கு எழுமாறு குரல் எழுப்பினார். இந்தியப் படைக்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றார். மக்கள் இவர் மீது கொண்ட அன்பும் மதிப்பும் காரணமாக இவரை ' நேதாஜி' என்று அழைத்தனர்.



சிங்கப்பூர் வந்தடைந்த நேதாஜி பெரும் அணிவகுப்பினை நடத்தியதோடு பெரும் படையும் திரட்டினார்.1943 ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் இடைக்கால அரசினை அமைத்தார். கொரில்லாப்படை என்று புதிய போர்ப்படையை நிறுவி அதற்கு காந்திஜி, அசாத், நேருஜி என்று பெயரிட்டார். பர்மாவிலிருந்து அஸ்ஸாம் வழியாக இப்படை இந்தியாவுக்குள் நுழைந்தது. ஆங்கிலப்படையை எதிர்த்து பெரும்படை கொண்டு தாக்கியது. உள்ளத்தில் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடினார் நேதாஜி. பெரும்படை திரட்டி உறுதியுடன் போராடியபோதும் எதிர்பாராவகையில் இவ்வுலக வாழ்வை நீத்தவர் நேதாஜி அவர்கள். பகைவரான ஆங்கிலேயருக்கு எதிராகப் படை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது பாங்காக்கிலிருந்து பார்மோசாவிற்குச் சென்றார். அவர் சென்ற விமானம் நொறுங்கி விழுந்தது. இந்தியாவின் வீரத்திலகமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் என்ற உயர்ந்த மனிதர் இந்திய புரட்சித் தலைவராக விளங்கிய மாபெரும் வீரத்தியாகி தன் இன்னுயிரை இம்மண்ணுக்காக அர்ப்பணித்தார். வீரம் என்ற சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர் சுபாஷ் சந்திர போஸ். அவர்தம் நினைவு பாரத மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

செவ்வாய், 11 ஆகஸ்ட், 2009

கூனனை ஏமாற்றிய கதை - தெனாலி ராமன் கதைகள்

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்தி விட்டான் என்ற குற்றச் சாட்டு அரசவைக்குக் கொண்டு வரப்பட்டது. தெனாலிராமனின் எந்த சமாதானத்தையும் அரசர் கேட்கத் தயாராக இல்லை. இராமனுக்குத் தண்டனையை அளித்து விட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுருவும் மன்னனைத் தூண்டி விட்டார்.

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இக்குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாதுஎன்று சொல்லி ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார் மன்னர் .ராஜகுரு தண்டனையைக் கூறினார்.

" கழுத்து வரை தெனாலிராமனை மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார். மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார். ஆணையை சிரமேற்கொண்ட காவலர்கள் தெனாலிராமனை இழுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்றனர். வழியில் இராமன் அவர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். ஆனால் ராஜகுரு காவலர்களை எச்சரித்து தெனாலிராமன் ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள் என்று கூறியிருந்தார். இந்த எச்சரிக்கை காரணமாக காவலர்கள் எதுவும் பேசாமல் நடந்தனர்.

ஊருக்கு எல்லையில் காடு இருந்தது. அங்கே ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர். மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான். சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது.
"அய்யா!" தெனாலிராமன் பெருங் குரலெடுத்துக் கூவி அழைத்தான். அந்த மனிதன் ராமனின் குரல் கேட்டு மெதுவாக அச்சத்துடன் அருகே வந்தான். அவனைப் பார்த்த ராமன் "பயப்படாதீர்கள். அருகில் வாருங்கள்."என அழைத்தான். வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்து விட்டு ராமனின் முகத்தருகே அமர்ந்தான்.
"யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் ஒரு வண்ணான் மூட்டை சுமந்து சுமந்து அவன் முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான். சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா பார்க்க ஆசையாக இருக்கிறது" என்றான்.

கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான். அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து , தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான். தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

திங்கள், 10 ஆகஸ்ட், 2009

நஷ்டத்தை லாபமாக்கிய குதிரை - thenaali raaman kadhai

தெனாலிராமன் ஒரு முறை சந்தைக்குச் சென்று ஐம்பது நாணயங்கள் கொடுத்து குதிரை ஒன்று வாங்கி வந்தான்.அதில் ஏறி சவாரி செய்யப் பழகிக் கொண்டிருந்தான். ஒருநாள் அரசர் தன் விலை உயர்ந்த குதிரை மேல் ஏறிக் கொண்டு இராமனையும் உடன் வருமாறு அழைத்தார்.

தெனாலிராமனும் தன் குதிரை மீது ஏறிக் கொண்டு மன்னருடன் உலாவப் புறப் பட்டான். அரசரின் குதிரை அழகாக நடை போட இராமனின் குதிரையோ தளர்ந்த நடை போட்டது. கிருஷ்ணதேவராயர் இந்தக் குதிரையைப் பார்த்து கடகடவெனச் சிரித்தார். இராமனையும் கேலி செய்தார். " இராமா! போயும் போயும் இந்த வற்றிப் போன தொத்தல் குதிரைதானா உனக்குக் கிடைத்தது. இதனை வைத்துக் கொண்டு நீ எப்படி சவாரி செய்யப் போகிறாய்? என் குதிரையைப் பார். எப்படி ஓடுகிறது?" இராமனுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வந்து விட்டது." அரசே! இந்தக் குதிரை பயன்படுவது போல உங்கள் குதிரை கூடப் பயன் படாது." என்று தன் குதிரையைப் பற்றி மிக உயர்வாகப் பேசினான். மன்னருக்குக் கோபம் வந்தது." என்ன இப்படிச் சொல்கிறாய்? இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?" "


வேண்டுமானால் பாருங்கள். உங்கள் குதிரையால் செய்ய முடியாததை என் குதிரையைச் செய்ய வைக்கிறேன்.""அப்படியா சொல்கிறாய்? நூறு பொன் பந்தயம் கட்டுகிறேன். செய் பார்க்கலாம்."என்று பேசியவாறு மெதுவாக வந்து கொண்டிருந்தனர் இருவரும் . அப்போது குதிரைகள் இரண்டும் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்தன. கீழே பார்த்தால் பயங்கர சுழல். ராமன் சட்டென்று குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். பாலத்தின் ஓரத்திற்குக் குதிரையைக் கொண்டு போனான். அரசர் திகைத்தார். ராமன் தன் குதிரையை "தொபுகடீர்" என்று நீருக்குள் தள்ளி விட்டு விட்டான். அரசர் பதறினார்."இராமா!, என்ன இது, ஏன் இப்படிச் செய்தாய்? "" அரசே! என் குதிரை செய்தது போல உங்கள் குதிரை செய்ய முடியுமா? உங்கள் ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரையால் செய்ய முடியாததை என் குதிரை செய்து விட்டது பாருங்கள்."

ஆயிரம் பொன் மதிப்புள்ள குதிரை மட்டுமல்ல, அரசரின் நண்பனாகவும் பழகிய அறிவுள்ள குதிரை அது. அதை இழக்க அரசர் விரும்புவாரா? பந்தயத்தில் சொன்னபடி நூறு பொன் நாணயங்களைக் கொடுத்தார் அரசர்."இருந்தாலும் ஒரு உயிரைக் கொல்வது தவறில்லையா இராமா?" என்றார் அரசர் வருத்தத்தோடு. "அரசே!, நோய்வாய்ப்பட்டு வயோதிக நிலையில் இருக்கும் இந்தக் குதிரையை யாரும் இனி வாங்க மாட்டார்கள்.


இது இறந்தால் எனக்கு ஐம்பது நாணயங்கள் நஷ்டம். இப்போது எனக்கு நூறு பொன் கிடைத்து விட்டது. அத்துடன் அந்தக் குதிரையைப் பராமரிக்கும் பராமரிக்கும் செலவும் குறைவு. குதிரைக்கும் துன்பம் நீங்கி விட்டது.எனவேதான் இப்படிச் செய்தேன்.என் குதிரையின் உயிர் நஷ்டம் எனக்கு இரு மடங்கு லாபமாயிற்று. " என்றான். மன்னரும் அதை ஒப்புக்கொண்டு தெனாலிராமனின் சாமர்த்தியத்தைக் கண்டு வியந்தார்.

புதன், 5 ஆகஸ்ட், 2009

தெனாலி ராமன் வித்தைக்காரனை வென்ற கதை

தெனாலி ராமன் கிருஷ்ணதேவராயரின் புகழைக் கேள்விப் பட்டு அவரைக் காண்பதற்காக விஜயநகரத்தை நோக்கிப் புறப்பட்டான். பல நாட்கள் அவ்வூரில் தங்கி முயற்சித்தும் அரசரைக் காண இயலவில்லை. எப்படியாவது அரசரைப் பார்த்து விடுவது என்று முயற்சித்துக் கொண்டே அவ்வூரிலேயே தங்கியிருந்தான். தினமும் அரண்மனைக்குப் போவதும் திரும்பி வருவதுமாக இருந்தான்.

ஒருநாள் வித்தைகள் செய்து வேடிக்கைகள் செய்து காட்டும் செப்படி வித்தைக்காரனைச் சந்தித்தான். அவனும் அரசரிடம் தன் வித்தைகளைக் காட்டிப் பரிசு பெரும் எண்ணத்துடன் இருப்பதைப் புரிந்து கொண்டான். அவனுடனேயே தானும் ஒரு வித்தைக்காரனைப்போல. சேர்ந்து கொண்டான். அரசர் கிருஷ்ணதேவராயர் முன்னிலையில் வித்தைக்காரன் செப்படி வித்தைகளைச் செய்து காட்டி அனைவரையும் மகிழ்வித்தான். அரசரும் அவன் செய்து காட்டிய வித்தைகளால் மிகவும் மகிழ்ந்து ஆயிரம் பொன் பரிசளித்தார்.

ஆனால் அவன் அந்தப் பரிசைப் பெறுமுன்பாகவே இராமன் "அரசே! இவனை விட வித்தையில் வல்லவனான நான் இருக்கிறேன். நான் செய்யும் வித்தையை இவனால் செய்ய முடியுமா என்று கேட்டுப் பாருங்கள். பிறகு பரிசு யாருக்கு என்று முடிவு செய்யுங்கள் " என்றவாறு முன்னால் வந்து நின்றான்.

அரசருக்கு மிக்க மகிழ்ச்சி. போட்டி என்று வந்து விட்டாலே அது மிகவும் சுவை யுடையதாகவே இருக்குமல்லவா? எனவே ' உன் வித்தைகளையும் காட்டு ' என்று அனுமதி வழங்கினார் மன்னர். செப்படி வித்தைக்காரனுக்கு ஒரே கோபம். "உனக்கு என்னென்ன வித்தைகள் தெரியும். செய்து காட்டு. நீ செய்யும் அத்தனை வித்தைகளையும் நான் செய்து காட்டுகிறேன்."என்று சவால் விட்டான். அனைவரும் ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். தெனாலிராமனோ பதட்டம் ஏதுமின்றி முன்னால் வந்து நின்றான்."அய்யா! எல்லா வித்தைகளையும் செய்யவில்லை. ஒரே ஒரு வித்தை மட்டும் செய்கிறேன். அதுவும் கண்களை மூடிக்கொண்டு செய்கிறேன். நீங்கள் கண்களைத் திறந்து கொண்டு அதே வித்தையைச் செய்து காட்டுங்கள். உங்களால் முடியாவிட்டால் அரசர் தரும் ஆயிரம் பொற்காசுகளில் பாதியை எனக்குத் தந்து விட வேண்டும்."என்றான்.

வித்தைக்காரனோ வெகு அலட்சியமாக "ப்பூ, நீ கண்ணை மூடிக்கொண்டு செய்யும் வித்தையை நான் கண்களைத் திறந்துகொண்டே செய்ய வேண்டும் அவ்வளவுதானே? நீ செய்து காட்டு" என்றான். உடனே இராமன் அரசரை வணங்கி விட்டுக் கீழே அமர்ந்தான். தன் கை நிறைய மணலை வாரி எடுத்துக் கொண்டு மூடிய தன் கண்கள் நிறைய கொட்டிக் கொண்டான். அனைவரும் கை தட்டி ஆரவாரம் செய்து சிரித்தனர். மன்னரும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். பிறகு இராமன் தன் கண்களிலிருந்து மணலைத் தட்டிவிட்டுவிட்டு வித்தைக்காரனைப் பார்த்து "இந்த வித்தையை நீர் உம கண்களைத் திறந்து கொண்டே செய்து காட்டுங்கள்" என்றான். வித்தைக்காரனால் எப்படி முடியும்? " நான் தோற்றுப் போனேன். என்னை மன்னித்து விடுங்க" ளென்று தலை குனிந்து நின்றான். மன்னர் மகிழ்ந்து இராமனை அழைத்து அவனைப் பற்றி அறிந்து கொண்டார்.பிறகு " தெனாலி ராமகிருஷ்ணா! உன் புத்தி சாதுர்யத்தை மெச்சினேன். நீ சொன்னபடி ஐநூறு பொற்காசுகளைப் பெற்றுக் கொள் " என்றார்.

இராமன் "அரசே! இந்த வித்தைக்காரன் வித்தை காட்டுவதில் தனக்கு மிஞ்சியவர் யாருமில்லை என்று பேசிக் கொண்டிருந்தான். அவன் கர்வமாகப் பேசியதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை உணர்த்தவும் அவன் கர்வத்தை அடக்கவும் நான் இவ்வாறு செய்தேன். நான் வித்தைக்காரன் என்று போய் சொன்னதற்கு என்னை மன்னியுங்கள். ஆயிரம் பொன்னையும் அவருக்கே அளியுங்கள்." என்று கேட்டுக் கொண்டான்.

அரசர் கிருஷ்ணதேவராயர் மனம் மகிழ்ந்து இராமன் சொன்னபடியே வித்தைக்காரனுக்கு ஆயிரம் பொற்காசுகளையும் பரிசாக அளித்தார்.. பின்னர் தெனாலி இராமனுக்கும் பரிசளித்து அவனைத் தன் ஆஸ்தான விகடகவியாக அமர்த்திக் கொண்டார்.