Thursday, October 22, 2015

குறள் வழிக் கதைகள் 3. கற்றதனால் ஆய பயன். (தொடர்ச்சி) (தொடர்ச்சி)

         வாழ்த்து.
  அனைவருக்கும் எனது சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை தின வாழ்த்துக்கள். ஞானமும் நல்லறிவும் கல்வியும் சகல கலைகளும் நாமும் நம் இளைய சமுதாயமும்  பெற்றிட வாக்தேவியான கலைவாணி    நல்லாசியினை நமக்கு வழங்கட்டும்.         
அனைவருக்கும் வாழ்த்துகள்.
ருக்மணி சேஷசாயி.
-------------------------------------------------------------------------------------------------------------------------
              
              கற்றதனால் ஆய பயன் .....(தொடர்ச்சி)

 "ஆமாம் தம்பி"என்றவர் சரவணனின் தந்தையையும் அமரச் சொன்னார். இதற்குள் ரங்கசாமியைப் பார்க்க சிலர் வரவே அவர்களையும் அமரச் சொன்னார்.அவர்கள்  அமர்ந்தபின் நடந்த நிகழ்ச்சியை சொல்லத் தொடங்கினார்.,.
               
--              "பெரியவங்கல்லாம்  இருக்கீங்க நடந்ததைச் சொல்லிடறேனுங்க.ரெண்டு நாளைக்கு முன்னே ரயில் பாதை ஓரமா சுள்ளி ஓடிச்சுக் கொண்டாரப் போயிருந்தேனுங்க.அப்போ  பக்கத்துல சவுக்குத் தோப்புல மூணு பேரு ஒரு சாக்கு மூட்டிய கட்டி வச்சுகிட்டு நின்னிருந்தாங்க.அவங்கள்ள ஒருத்தன நானு அடையாளம் கண்டுகிட்டேனுங்க.அவன் யாருமில்லே. நாலு வருஷம் முன்னே ஊரைவிட்டு ஓடிப்போன எம்மவந்தானுங்க. நானு சந்தோசமா கிட்டப் போயி மவனேன்னு கூப்பிடலாமுன்னு நெனச்சப்போ அவுங்கள்ள ஒருத்தன்,
"ஏ கிழவா, இங்க வா"ன்னு கூப்பிட்டான்.எனக்குக் கோவம் வந்தாலும் அடக்கிக்கிட்டுப் பக்கத்துல  போனேன்.பயலுவ என் கையில ஒரு கடுதாசியக் குடுத்து "உங்க பண்ணையாரு சுப்பிரமணி கிட்ட குடுத்துடு"ன்னு சொன்னாங்க.

இன்னொருத்தன்,

                          "டே கிழவன் கிட்ட குடுக்கலாமா "ன்னான்.அதுக்கு என் மவன் அந்தவேலுப்பய "கிழவனுக்குப்படிக்கத்தெரியாதுடா.தைரியமாக் குடுத்தனுப்பு "ன்னு சொல்லிட்டு அந்த மூட்டயத் தூக்கிக்கிட்டு நடந்தான்.
                         மத்த பயலுகளும் "ரயில் வார நேரமாயிடுச்சுடா சீக்கிரமா வாங்கன்னு சொல்லிகிட்டே என் மவனுடனேயே வேகமா நடந்து போய்ட்டானுங்க.நானு அந்தக் கடுதாசியை மரத்துக்குப் பின்னாலே போயி மறஞ்சு  நின்னு எழுத்தக் கூட்டிக் கூட்டிப் படிச்சேன். பயபுள்ளக  
நம்ம கணேசுவைக் கடத்திக்கிட்டுப் போயி பண்ணையார் கிட்டப் பணம் கேட்டிருக்கானுவ. இதப்போயி அவருகிட்ட சொல்லுவானேன்?ரயில் பாதை ஓரமாவே வேகமா நடந்து பக்கத்துஊரு போலீஸ்
ஸ்டேஷனுக்குப் போயி வெவரத்தச் சொல்லி கடுதாசியையும் குடுத்தேன்.அவுக போலீஸ் வண்டியில என்னையும் ஏத்திகிட்டு அந்தப் பயலுக இருக்கற எடத்துக்குப் போனாங்க.என்கிட்டே ஒரு பொட்டியக் குடுத்து அவுக சொன்ன எடத்துல நிக்கச் சொன்னாங்க.அந்தப் பயலுக கிட்ட பண்ணையாரு குடுக்கச் சொன்னதா சொல்லச் சொன்னாங்க.
அப்படி நான் குடுக்கும்போது அந்த சோம்பேறிப் பசங்க மூணு பேரையும் மடக்கிப் புடிச்சிட்டாக.என் பிள்ளையப் பாத்து எனக்குத் துக்கம் வந்தாலும்," தூ பயலே நீ திருந்தவே மாட்டியா"ன்னு காரித்துப்பிட்டு வந்துட்டேன். கணேசும் கிடைச்சுட்டான். தம்பி நீ சொல்லிக்குடுத்த படிப்பு எனக்கு சமயத்துல உதவி செய்திருக்கு. அதுமட்டுமில்லே  சரவணா, பண்ணையாரு எனக்கு நெலம் எழுதிக் குடுத்திருக்காரு.இனிமே நான் சொந்த விவசாயம் செய்யப் போறேன்.
பிள்ளை குட்டி யாரும் இல்லாத எனக்கு இந்த சரவணன்தான் இனி பிள்ளை." என்றபடி சரவணனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டார் ரங்கசாமி.
"படிப்போட அருமையையும் பெருமையையும் தெரிஞ்சுக்கிட்டீங்களா எல்லாரும்?"என்று எல்லோரையும் பார்த்துக் கேட்டான் சரவணன்.அவன் வார்த்தைகளைக் கேட்டபடியே அங்கே வந்த பண்ணையார் "நல்லாப் புரிஞ்சுகிட்டோம்பா.அதனாலதான் நம்ம ஊருல ஒரு முதியோர் பள்ளி கட்டவும் ஏற்பாடு பண்ணிட்டேன்."என்றவாறு சரவணனைப் புன்னகையோடு பார்த்தார்.கணேசுவும் தன கையிலிருந்த புதுச் சட்டையை சரவணனுக்குப் பரிசாகக்  கொடுத்துவிட்டு நட்போடும் அன்போடும் சிரித்தான்.
அதைப் பெற்றுக்கொண்டு நன்றி சொன்னவன் கணேசுவைப் பார்த்து "நம்ம தமிழய்யா நமக்குக் கற்றுக் கொடுத்த திருக்குறளிலே கூட வள்ளுவரு இதைத்தானே சொல்லியிருக்காரு."என்றபோது ரங்கசாமி 
"அது என்னன்னு சொல்லுப்பா "என்றார்.
  " எண்ணென்ப  ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் 
    கண்ணென்ப  வாழும் உயிர்க்கு." என்று சரவணன் சொன்னதும் பண்ணையார்,
"ஆமாமாம் ரொம்ப சரி அவ்வையார் கூட எண்ணும்  அழுத்தும் கண்ணெனத் தகும்"  அப்படின்னு சொல்லியிருக்காங்களே" 
அதனாலதான் நம்ம ஊரிலே இனி படிக்கத் தெரியாதவங்களே இருக்கக் கூடாதுன்னு முடிவு செஞ்சிட்டேன் சரவணா "
என்றபோது சரவணனுடன் ஊர் மக்களும் பண்ணையாருக்கு நன்றி கூறினர். அங்கு கூடியிருந்த மக்கள் ரங்கசாமியின் தியாகத்தையும் அறிவையும் சமயோசித புத்தியையும் சரவணனின் சேவையையும் தமக்குள்   பேசியவாறே கலைந்து சென்றனர்.
உண்மைதானே. படிக்கும் ஆற்றல் பெற்றதால்தானே ரங்கசாமியால் ஒரு சிறுவனை மீட்கவும் கயவர்களைப் பிடிக்கவும் முடிந்தது.
வள்ளுவர் வாய்மொழி உண்மைதானே.

                                 ___________________    ​​​ 

ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
 

Sunday, October 18, 2015

குறள்வழிக் கதைகள் 3.கற்றதனால் ஆய பயன்...(தொடர்ச்சி)

. அப்படி அவன் நினைக்கவும் ஒரு
காரணம் இருந்தது.இரண்டு மூன்று முறை ரங்கசாமி பண்ணையார் மேல் கோபத்தைக்
காட்டி "அவன் மனுசனே இல்லை தம்பி. அவனுக்கு நானே சரியான தண்டனை குடுக்கப்
போறேன் பாரு." என்று சொல்வதை விளையாட்டாகவே நினைத்து சிரித்திருக்கிறான்
சரவணன்.இன்று?... ஒருவேளை கணேசனின் மறைவுக்கு இந்த தாத்தாவே காரணமாக
இருப்பாரோ.?இந்தச் செய்தியை யாரிடம் சொல்வது?ஒருவேளை இது தவறான செய்தியாக
இருந்துவிட்டால்நம்மை உண்மையுடன் நேசிக்கும் ரங்கசாமிதாத்தாவின் மனசு
என்ன பாடுபடும்?என்று எண்ணிக் கலங்கியபடியே இருந்தான் சரவணன்.

மூன்றாம்
நாள் காலை ஒரு போலீஸ் வண்டி ஊருக்குள் புகுந்தது.ஊரே திரண்டு வந்து
நின்று வேடிக்கை பார்த்தது.
முதலில் பண்ணையார் சுப்பிரமணி இறங்க அவருடன் அவர் மகன் கணேசு
இறங்கினான்.மக்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர். கணேசுவின் தாய்
ஓடிவந்து மகனைக் கட்டிக் கொண்டு அழுதாள்.பின்னாலேயே ரங்கசாமி தாத்தா
இறங்கினார்.அவர்பின் இரண்டு போலீஸ்காரர்களும் ஊரார் சிலரும் இறங்கினர்.
போலீஸ் வண்டியிலிருந்து ரங்கசாமி இறங்கியதைப் பார்த்ததும் ஊர்மக்கள்
அவர்தான் கணேசுவை
எங்கேயோ மறைத்து வைத்திருப்பார். போலீஸ் அதைக் கண்டு பிடித்திருக்கும்
என்றுகசமுசா என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

சரவணனுக்குத் தலை சுற்றியது.ரங்கசாமியா இப்படி?.இது
எதையுமே கவனிக்காத ரங்கசாமி தலை குனிந்து வருத்தத்துடன்
நின்றிருந்தார்.அவரிடம் சென்ற பண்ணையார் அவர் தோள் மீது கை வைத்து
அன்போடு வீட்டினுள்ளே அழைத்துச் சென்றார்.இதைப் பார்த்து அனைவரும்
அதிசயித்து நின்றனர்.சரவணனும் திகைத்தான்.அவன் அறிவு ரங்கசாமி எந்த
குற்றமும் செய்திருக்கமாட்டார் என அறிவுறுத்தியது

மெல்ல மெல்ல செய்திகள் வெளிவரத் தொடங்கின.
ரங்கசாமி பெரும் தியாகத்தைச் செய்துள்ளார் என்பது வரை புரிந்துகொண்ட
சரவணன் பள்ளிக்கு நேரமாகிவிட்டதால் பள்ளி சென்று விட்டான். மாலை
நேரம்எப்போது வரும் என்று
காத்திருந்தவன்போல்பள்ளிவிட்டதும்பரபரப்புடன்வீடுநோக்கி
ஓடிவந்தான்.அவனுக்கு முன்னால் ரங்கசாமிதாத்தா வீட்டில்
அவனுக்காகக் காத்திருந்தார்.சரவணனைக் கண்டதும்

"தம்பி, வாவா, உனக்காகத்தான் காத்திருக்கேன்.பசியா இருப்பே இந்தா பழம்
சாப்பிடு."என்றவர் தட்டிலிருந்த பழத்தை எடுத்துக் கொடுத்தார்.அவர் அருகே
அமர்ந்து கொண்ட சரவணன் அவரைக் கூர்ந்து பார்த்தான்.

"தாத்தா உங்க முகத்துல சந்தோஷமும் தெரியுது வருத்தமும் தெரியுது.அதோட
கணேசுவோட நீங்க ஏன் போனீங்க,எங்க போனீங்க இந்த விவரமெல்லாம் கேக்கத்தான்
ரொம்ப ஆவலோட காத்திருக்கேன் தாத்தா."

"சொல்றேன் தம்பி உன்கிட்ட விவரம் சொல்லனும்னுதான் நானும் காத்துகிட்டே
இருக்கேன்.ஏன்னா இதுக்கெல்லாம் நீயும் ஒரு காரணமா இருந்திருக்கே."
என்றார் புன்னகையுடன்.

"என்ன?நானா?"திகைத்தான் சரவணன்.

(தொடரும் )
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com ::
http://rukmaniseshasayee.blogspot.com