\ஒரு சமயம் தெனாலி ராமனுக்குக் காய்ச்சல் ஏற்பட்டது.வெகு நாட்களாகியும் காய்ச்சல் குறையவில்லை.ராமனால் கண் விழித்துப் பார்க்கக் கூட
இயலவில்லை. அவனது நிலை கண்டு ராமனின் மனைவி மிகவும் பயந்து விட்டாள். தன் கணவனுக்கு ஏதோ தோஷம் பிடித்துள்ளது. அவனது
ஜாதகத்தைப் பார்த்துப் பரிஹாரம் செய்ய வேண்டும் என எண்ணினாள். அதனால் ஒரு புரோகிதரை அழைத்துப் பரிகாரம் கேட்டாள். அந்தப் புரோகிதர்
ஏற்கனவே ராமனால் சூடு போடப்பட்டவர். அவர் இந்த சந்தர்ப்பத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டார்.
"இவன் புரோகிதர்களுக்குச் சூடு போட்டது பெரிய பாவம்.அதனால்தான் ராமன் காய்ச்சலால் கஷ்டப் படுகிறான். இதற்குப் பரிகாரம் செய்ய
புரோகிதருக்கு நூறு பொன் காணிக்கை செலுத்தவேண்டும். பிறகுதான் குணமடைவான்." என்று கூறினார்.
ராமனின் மனைவி மிகுந்த கவலைப் பட்டாள்.அவள் புரோகிதரிடம்," ஐயா புரோகிதரே, எங்களிடம் நூறு பொன் இல்லையே.தாங்கள் கேட்கும்
தொகை எங்கள் சக்திக்கு மீறியதாக உள்ளதே.வேறு ஏதேனும் வழி சொல்லுங்கள்." என்று கூறினாள்..
புரோகிதர் சம்மதிக்கவில்லை."எப்படியாவது பொன் கொடுத்தால்தான் பரிகாரம் செய்வேன். அப்போதுதான் ராமன் எழுந்திருப்பான். விரைவில்
பொன்னைக் கொடுக்க வழி பாருங்கள். பிறகு பரிகாரம் செய்கிறேன் " என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் . ராமனின் மனைவி யோசித்தாள்.
தங்களிடம் இருக்கும் குதிரை அவள் நினைவுக்கு வந்தது. புறப்பட்ட புரோகிதரை மீண்டும் அமரச் சொன்னாள். புரோகிதர் புன்னகையுடன்
அமர்ந்தார்.
"ஐயா! எங்களிடம் ஒரு குதிரை இருக்கிறது. அதை விற்றுத் தருகிறோம். தயவு செய்து என் கணவருக்குப் பரிகாரம் செய்து அவர் தோஷத்தை
நிவர்த்தி செய்து விடுங்கள். அவர் எப்படியாவது எழுந்து பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும்." என்று வேண்டிக்கொண்டாள்.
குதிரையை விற்றுப் பொன் தருவதாகச் சொன்னதும் புரோகிதருக்கு ஆசை அதிகமாகியது. அந்தக் குதிரை இருநூறு பொன்னுக்கு விலை
போகும்.அந்தப் பொன் முழுவதையும் அடைய விரும்பிய புரோகிதர் "அப்படியானால் அந்தக் குதிரையை என்ன விலைக்கு விற்றாலும் அந்தத்
தொகை முழுவதையும் அப்படியே கொடுத்து விட வேண்டும். அதற்கு உறுதியளித்தால் நான் நல்ல முறையில் பரிகாரம் செய்கிறேன்." என்றார்.
ராமனின் மனைவியும் அதற்குச் சம்மதித்தாள்.
அதன்பிறகு புரோகிதர் ஏதோ பரிகாரம் செய்தார். சில நாட்களில் ராமன் பூரண குணமடைந்தான். அதற்குள் புரோகிதர் குதிரையை விற்றுப் பொன்
தரும்படி பலமுறை கேட்டுவிட்டார். அவரின் நச்சரிப்புத் தாளாமல் ராமன் குதிரையை விற்றுத் தரச் சம்மதித்தான்.
ஒருநாள் ராமன் தன் குதிரையுடன் ஒரு பூனையையும் கூட்டிக் கொண்டு சந்தைக்குப் புறப்பட்டான். எங்கே ராமன் தன்னை ஏமாற்றிவிடுவானோ என
எண்ணிய புரோகிதரும் அவனுடன் புறப்பட்டார்.
ராமன் வைத்திருந்த குதிரை நல்ல அரேபியக் குதிரை. நல்ல விலைக்குப் போகும். அந்தப் பணம் முழுவதையும் புரோகிதருக்குக் கொடுக்க அவன்
விரும்பவில்லை. சந்தையில் ராமன் குதிரைக்குப் பக்கத்தில் பூனையை நிற்க வைத்தான்."பூனையின் விலை இருநூறு பொன். குதிரையின் விலை
ஒரு காசு."என்று கூறினான்." பூனையை வாங்குபவருக்கே குதிரையைக் கொடுக்க முடியும்." என்ற நிபந்தனையையும் விதித்தான்.
குதிரையை வாங்க விரும்பியவர் பூனைக்கும் சேர்த்து இருநூறு பொன்னும் ஒரு காசும் கொடுத்தார். பூனையை விற்ற இருநூறு பொன்னைத் தான்
வைத்துக் கொண்டு குதிரையை விற்ற ஒரு காசை புரோகிதரிடம் கொடுத்தான் ராமன்.
புரோகிதரால் ஒன்றும் பேசமுடியவில்லை. தன்னுடைய பேராசையினால் விளைந்த நஷ்டத்தை எண்ணி வருந்தினார். ராமனின் அறிவாற்றலை
அவரால் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
Congratulations on completing 50 posts. Wish to see 500th post from you in a couple of years.
பதிலளிநீக்கு