வீர மகளிர்--1
ஒக்கூர் என்னும் ஊரில் மாசாத்தியார் என்பவர் வாழ்ந்து வ்ந்தார். ஒக்கூரில் பிறந்தமையால் ஒக்கூர் மாசாத்தியார் என அழைக்கப் பட்டார். சங்க காலத்து நல்லிசை மெல்லியலாருள் மாசாத்தியாரும் ஒருவர். பறந்து சென்று இரை தேடும் பறவைகள் போல நாடு விட்டு நாடு சென்று வள்ளல்களை நாடிப் பரிசில் பெற்று வாழும் இயல்புடையோர் புலவர் பெருமக்கள். தமக்கெனத் தமியர் உண்ணாது பிறர்க்கு அளித்து உண்டு பொருள் தேவைப் படும்போது மன்னர்களை நாடிச் செல்வது இவர்களின் பண்பு.
அதுபோன்ற ஒரு சமயத்தில் மாசாத்தியார் பொருள் வேண்டிப் புறப்பட்டார். வெகு தொலைவு நடந்து சென்று ஒரு நாட்டின் பெரு நகரம் ஒன்றில் நுழைந்தார். அது சமயம் அந்த நாடு அண்டை நாட்டுடன் போரில் ஈடுபட்டிருந்தது. ஊரின் நிலையைப் பார்த்தபடியே ஒரு மறக்குடி மங்கையின் வீட்டினுள் நுழைந்தார் புலவர் பெருமாட்டி.
அங்கு இவர் கண்ட காட்சி இவரது உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. பெருமிதம் அடையச் செய்தது. நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் எத்தகையது என எண்ணி எண்ணி மகிழத் தக்கதாக இருந்தது.
அவர் கண்ட அக்காட்சியை வியந்து ஒரு பாடலாகப் பாடினார் புலவர் பெருமாட்டி. இத்தகு பாடல்களே நமக்கு இலக்கியச் சான்றாக விளங்கி பண்டைய வரலாற்று நிகழ்ச்சிகளை நமக்கு அறிவிக்கின்றன. அம்மங்கையின் வீரத்தைக் கூறும் இப் பாடல் புறநானூறு என்னும் நூலில் உள்ளது.
அப்பாடல் இதோ.
"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே.
மூதின் மகளிர் ஆதல் தகுமே.
மேனாளுற்ற செருவிற்கிவள் தன்னை
யானை எரிந்து களத்தொழிந்தனனே
நெருநல் லுற்ற செருவிற் கிவள்கொழுனன்
பெருநிரை விலக்கி ஆண்டுப் பட்டனனே.
இன்றும் செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து உடீஇப்
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கென விடுமே."
இப்பாடல் மூலம் அந்த வீர மங்கையின் செயல் நமக்குக் கண்முன் காட்சியாகக் காணக் கிடைக்கின்றது. ஒரு மறக்குடி மங்கையின் வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகக கூறப்படுகிறது.
என்னே இவள் துணிவு.இவள் மறக்குடியில் பிறந்தவள் எனக் கூறல் தக்கதே. முன்னாளில் நிகழ்ந்த போரில் இவளது தந்தை யானையைக் கொன்று தானும் இறந்தான். இவள் கணவனோ ஆநிரைகளைப் பகைவர் கொள்ளாதவாறு விலக்கி போர்க்களத்தே மாண்டான். இன்றும் போர்ப்பறை ஒலி கேட்டது.
இவளது முகத்தில் மறத்தீ கிளர்ந்து எழுந்தது. தனக்கு ஒரேமகன் இவன்எனவுமஎண்ணவில்லைஅம்மாதரசி.வினை முடித்தற்கு தன் மகனை அனுப்புவது என முடிவு செய்தாள். தன் மகனை அருகே அழைத்து
அவன் தலையில் எண்ணெய் பூசி இழுத்து முடித்தாள். அரையில் தூய வெண்ணிற ஆடையை எடுத்து உடுத்தினாள்.
அம்மகன் கையில் கூர்மையான வேலோன்றைத் தந்தாள்.
அவன் முகத்தை நோக்கினாள் "மகனே! உன் தந்தையும் தனையரும் போர்க்களத்தே பொருது மாண்டனர். நம் மறக்குலப் பெருமையை நிறுவினர். நீயும் அவர்போன்று போருக்குச் செல்க " என அனுப்பி வைத்தாள்.
இக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த மாசாத்தியார் மனத்துள் வியந்து பாராட்டினார். அக்காட்சியை பாடலாக வடித்து அழியாப் புகழை அம்மங்கை அடையும்படி செய்தார். நம் நாட்டு மறக்குடி மகளிரின் வீரம் நாம் அறிந்து போற்றத் தக்கது அன்றோ!.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com : email : rukmani68sayee@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக