திங்கள், 1 ஆகஸ்ட், 2011

70-சோதிடம் தந்த பரிசு

முற்காலச் சேரர்களில் புகழ் பெற்றவன் சேரலாதன். முதலாம்  நூற்றாண்டின் கடைசியில் சேர நாட்டை ஆண்டவன். நாட்டை விரிவாக்கி வளமிக்கதாகஆக்குவதற்கு அரும்பாடு பட்டவன்.அது  தமிழகத்தில் சேர சோழ பாண்டியர்களின் ஆட்சி நடைபெற்று வந்த காலம்.
அப்போது திருமணப் பருவத்தில் இருந்த சேரலாதன் சோழ மன்னன் மகள் நற்சோணை என்பவளை மணந்து இல்லறத்தையும் இனிதே நடத்தி வந்தான். இவனுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.மன்னர் பரம்பரைக்கே உரிய கல்வி கேள்வி கலைகளில் சிறந்து வீரமும் பண்பும் உடையவராய்த் திகழ்ந்தனர்.மன்னன் சேரலாதன் தன் மக்கள் இருவரையும் கண்ணின் மணிகள் எனப்  போற்றி வந்தான். ஆண்டுகள் உருண்டன.

ஒரு நாள் அரியணையில் மன்னன் சேரலாதன் அமர்ந்திருந்தான்.அவனருகே இளவல்கள் மூத்தவன் செங்குட்டுவன் இளையவன் இளங்கோ இருவரும் அமர்ந்திருந்தனர். வீரமும் வலிமையையும் கொண்டவனாக முதல் மகனும் அறிவு ஒளிரும் கண்களுடன் இரண்டாவது மகனும் அமர்ந்திருந்ததைப் பார்த்துப் பார்த்து மகிழ்ந்தான் சேரலாதன். நாட்டு மக்களும் தங்களின் இளவரசர்களைப் பார்த்துப் பூரித்திருந்தனர்.
அப்போது காவலன் ஒருவன் வந்து மன்னனை வணங்கி நின்றான்.என்ன என்பது போலப் பார்த்தான் மன்னன்.
"அரசே! சோதிடர் ஒருவர் தங்களைக் காண வந்துள்ளார்."
"வரச்சொல்"
உள்ளே நுழைந்த சோதிடர் மன்னனை மிகவும் பணிவோடு வணங்கினார்.
"வாருங்கள் சோதிடரே. அமருங்கள்" மந்திரியார் அவரை அவரது ஊர் பெயர் சோதிடத்தில் அவருக்குள்ள அனுபவம் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு சேரர் அரண்மனையை அவர்  நாடிவரக் காரணம் யாது எனவும் வினவினார்.
"மன்னர் பெருமானே. தங்கள் பிள்ளைகள் பிறந்த நேரத்தை அறிய நேர்ந்தது.அது பற்றி இளவரசர்களின் எதிரகாலம் பற்றிக் கூறிச் செல்லவே நான் வந்தேன்."
மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை "கூறுங்கள்" என்று  சொன்னான்.
"அரசே தங்களின் மக்களில் மிகவும் புகழ் பெறப் போகிறவர் தங்களின் இளைய மகனே. அவரே இந்த மண்ணை ஆளப் போகிறார்."
மன்னன் திகைத்தான். மக்கள் பதறினர். மூத்தவன்  செங்குட்டுவன் நிலைகுலைந்தான். இளங்கோ சோதிடரை வெறுப்புடன் பார்த்தான். 
மந்திரியாரோ மூத்தவன் இருக்க இளையவன் மன்னனாவதா அது எப்படி நடக்கும்? என்ற வினாவைக் கண்களில் ஏற்றிமன்னனைப் பார்த்தார்.
சேரலாதன் செங்குட்டுவனின் முகத்தைப் பார்த்தான்..அதில் தோன்றிய ஏமாற்ற உணர்ச்சியையும் அவன் தன் தம்பியை வெறுப்புடன் பார்த்த பார்வையையும் கவனித்தான்..
அந்த இடத்தின் அமைதியைக் குலைத்தபடி எழுந்தான் இளங்கோ.
"சோதிடரே, உமது சோதிடம் பொய்யாகும்படி இப்போதே நான் என் முடிவைக் கூறுகிறேன். இந்த அரியணை மீது எனக்கு சற்றும் உரிமையில்லை என்பதை இந்தச் சபை அறியக் கூறுகிறேன்."
சேரலாதன் முகத்தில் சற்றே நிம்மதி தோன்றியது.ஆனால் அதைக் குலைக்கும் வண்ணமாக  செங்குட்டுவன் பேசினான்.
"நீ வேண்டாமென்றாலும் நாளை உன் மக்கள் உரிமை கோரலாமல்லவா?"
சபையோர் பேச்சு மூச்சற்று அமர்ந்திருந்தனர். அப்போது யாரும் எதிர் பாரா வண்ணம் 
இளங்கோ ஆசனத்தை விட்டு எழுந்தான்."அண்ணா! என்மீது சந்தேகமா? இருங்கள் இதோ வருகிறேன்" என்றவன் உள்ளே சென்றான். சற்று நேரத்தில் அங்கு ஒரு துறவி தோன்றினார். ஆம்.இளங்கோதான் தலையை மழித்து காவி உடுத்தி துறவியாக சபையின் முன் தோன்றினான்.
அனைவரும் திடுக்கிட்டனர். ஆனால் அமைதியாகப்  பேசினான் இளங்கோ.
"தந்தையே, என்னை மன்னியுங்கள். இவ்வுலக வாழ்வில் எனக்குப் பற்றில்லை. இந்த சோதிடர் மீதும் சினம் கொள்ள வேண்டாம்.நான் துறவறம் ஏற்க இவர் ஒரு கருவி அவ்வளவே. என்னை வாழ்த்தி எனக்கு விடை கொடுங்கள்." 
இப்போதுதான் செங்குட்டுவனின் சகோதரபாசம் தலை தூக்கியது.
"தம்பி, என்னை விட்டு எங்கே போகிறாய்? என்னை மன்னித்து விடடா"
"கலங்கவேண்டாம் அண்ணா, நீங்கள் நினைக்கும்போது நான் அரண்மனைக்கு வருவேன்"
மகிழ்ச்சியுடன் தொடங்கிய சபை துயரத்துடன் முடிந்தது.
இப்போது செங்குட்டுவன் மன்னனாக பட்டமேற்றுள்ளான். மதுரை சென்று திரும்பியுள்ள புலவர் பெருமான் சீத்தலைச் சாத்தனாருடனும் பட்டமகிஷியுடனும் சில மெய்க்காப்பாளர் சூழ மலைவளம் காணப் புறப்பட்டான் செங்குட்டுவன். புலவருக்கு ஒரு துணை இருந்தால்தான் அங்கு பேச்சும் சுவையாக இருக்கும் என எண்ணிய செங்குட்டுவன் மறவாமல் தம்பி இளங்கோவையும் உடன் அழைத்துச் சென்றிருந்தான்.

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையும் செழிப்பும் கண்களைக் கவர்ந்தன.இளைப்பாற ஓரிடத்தில் அமர்ந்தான் மன்னன்.மூலிகைகளின் வாசமும் வாசனைப் பொருள்களின் மணமும் மனதை மயக்கக் கூடியவையாக இருந்தன.
அந்த ரம்யமான சூழலில் சில  காட்டுவாசிகள் மன்னனைப் பணிந்தனர்.தேன், மான், புலித்தோல், வாசனைத் திரவியங்கள் எனப் பலவகைப் பொருள்களைக் காணிக்கையாக மன்னன் முன் இட்டு வணங்கி எழுந்தனர்.
அவர்கள் முகங்களில் ஏதோ கலவ ரம் தெரிந்தது.காரணம் கேட்ட மன்னனுக்கு அவர்களின்  தலைவன் பதிலளித்தான்.
"சாமி, மகாராசா, நேத்து ஒரு பொண்ணு மலப்பக்கமா நின்னுச்சுங்க. அப்ப ஒரு பெரிய தேரு ஆகாயத்திலேருந்து அதும் பக்கத்தில நின்னுச்சுங்க. தேருல இருந்து ஒரு அழகான பையன் வந்து அந்தம்மாளைக் கைபிடிச்சு உக்காத்தி வச்சுகிட்டு ஆகாயத்தில பறந்து போயிட்டான்."
செங்குட்டுவன் ஆச்சரியத்துடன் பார்த்தான்.அருகே இருந்த சீத்தலைச் சாத்தனார் புன்னகை புரிந்தார்.
"மன்னா, இவர்கள் கண்டது உண்மையே. கற்புக்கரசி கண்ணகியை இவர்கள் பார்த்திருக்கிறார்கள். அவளை அவள் கணவன் கோவலன் கையைப் பற்றி விண்ணுலகுக்கு அழைத்துச் சென்ற காட்சி தான் இவர்கள் கண்முன் நிகழ்ந்துள்ளது."
இவ்வார்த்தைகளைக் கேட்ட மன்னனும் மற்றையோரும் ஆவலுடன் கண்ணகியின் கதையைக் கூறுங்கள் என்றனர். 
கூத்தனாரும் கண்ணகி கதையைச் சுருக்கமாகக்  கூறினார்.
 கதையைக் கேட்ட மன்னன் செங்குட்டுவன் "சாத்தனாரே, அருமையான இந்தக் கற்பரசியின் கதையை வருங்காலம் அறியும்படி ஒரு காப்பியமாகப் படைத்துவிடுங்கள். " என்று வேண்டிக்கொண்டான்.
கூத்தனாரோ அதை மறுத்து"மன்னா, என்னினும் தமிழறிவும் புலமையும் மிக்கவரான இளங்கோ அடிகளே அதைச் செய்ய ஏற்றவர். அவரே இந்த காப்பியத்தை இயற்றட்டும்." என்று காப்பியம் எழுதும் பணியை இளங்கோவிடம் ஒப்படைத்தார்.  
தம்பியைத் திரும்பிப் பார்த்தான்  மன்னன் .
"மன்னவன் பணியென்றால் மறுப்பேதுமில்லை" என்று கூறி அப்பணியைத் தானே ஏற்றுக் கொள்வதாக இசைந்தார் அடிகள். 
அப்போது மாடலன் என்ற மறையோன் தென்னாட்டு மன்னர்களின் வீரத்தைப் பற்றி வடநாட்டு மன்னர்களான கனகரும் விஜயரும் இகழ்ந்து பேசியதைக்  கேட்டதாகக் கூறினார். 
இதைக் கேட்ட செங்குட்டுவன் கண்கள் சிவந்தன உதடுகள் துடித்தன.
"அடிகளாரே, நமது வீரத்தை இகழ்ந்த அந்த வீணர்களின் தலையில் இமயத்தின் கல்லேற்றி கங்கையில் நீராட்டி அக்கல்லில் கண்ணகிக்குச் சிலை வடித்துக் கோவில் எழுப்புவோம்.இப்போதே படை வடக்கு நோக்கிப் புறப்படும் 
நான் வீரப் போரைக் கவனிக்கிறேன் அடிகளே, நீர் சொற்போரைக் கவனியுங்கள். "
இரண்டு நிகழ்ச்சிகளும் விரைவிலேயே நடந்து முடிந்தன.
ஆனால் காலப் போக்கில் கண்ணகியின் கற்கோவில் மறைந்து விட்டது.இளங்கோ இயற்றிய சொற்கோவில் ஆன சிலப்பதிகாரம் என்ற நூல் தமிழன்னையின் கால் சிலம்பு எனும் அணிகலனாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அது ஒலிக்கும் குரல் தமிழின் பெருமை மட்டுமல்ல இளங்கோவின் பெருமையையும்தான். ஒரு சோதிடம் நமக்கு சிலப்பதிகாரம் என்னும் அழியாச் செல்வத்தைப் பரிசாகக் கொடுத்துள்ளது என்று நாம் பெருமைப் பட்டுக் கொள்ளலாம் அல்லவா?




ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshayee.blogspot.com 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக