தொலைவில் தெரிந்த ஒரு வீட்டை நோக்கிச் சென்றனர் . சகோதரர்கள் இருவரும் அந்த வீட்டின் வாயிலில் சென்று நின்றனர். உள்ளிருந்து பெரும் வெளிச்சம் தெரிந்தது.உள்ளே ஏதோ யாகம் நடப்பதைப் போல நெருப்பு எரிந்து கொண்டிருந்தது.
வாயிலில் நின்றபடியே சஞ்சயன் அழைத்தான்."ஐயா, யார் உள்ளே இருக்கிறீர்கள்?" இரண்டு மூன்று முறை அழைத்தபின்" உள்ளே வாருங்கள்" என்று ஒரு கட்டைக் குரல் கேட்டது.இருவரும் மெதுவாக உள்ளே நுழைந்தனர்.
அங்கே அவர்கள் கண்ட காட்சி அவர்களை ஆச்சரியப் படுத்திற்று.ஒரு மனிதன் ஜடாமுடியும் தாடியுமாக இருந்தவன் தன் கையில் ஒரு செடியை வைத்துக் கொண்டு அதை நெருப்பில் காட்டிக் கொண்டிருந்தான். அந்த செடியிலிருந்து சொட்டுச் சொட்டாக நீர் வடிந்து கீழே எரியும் நெருப்பில் விழுந்து கொண்டிருந்தது.
அவன் தன் வேலையை நிறுத்தாமல் "உங்களுக்கு என்ன வேண்டும்?"என்றான் கடுமையான குரலில்.
சஞ்சயன் "ஐயா, நாங்கள் ரத்தினபுரியைச் சேர்ந்தவர்கள்.அனாதைகள். தாங்கள் அடைக்கலம் தரவேண்டும்.யாரேனும் குருவை நாடிப் பிழைப்பதற்காக நாங்கள் அலைகிறோம்."என்றான் பணிவாக.
"அப்படியானால் எனக்குத் துணையாகப் பணி செய்யுங்கள். உங்களுக்கு நான் பிறகுதான் வித்தைகளைக் கற்றுத் தருவேன்."என்றுகூறி ஒரு கிண்ணத்திலிருந்து உணவு வகைகளை எடுத்துச் சாப்பிடக் கொடுத்தான்.
இப்படியே சில நாட்கள் சென்றன.எப்போதும் அந்த மனிதன் நெருப்பின் முன் அமர்ந்து செடியை நெருப்பில் காட்டிக் கொண்டே இருப்பதைப் பார்த்த சஞ்சயன் எப்படியாவது இந்த ரகசியத்தைத் தெரிந்து கொள்ளவேண்டும் என நினைத்தான்.கொஞ்சம் கொஞ்சமாக அந்த மனிதனின் மனதில் தன் சேவையால் இடம் பிடித்தான்.
தம்பியை முரடனாகக் காட்டிக் கொள்ளச் சொன்னதால் அவனை விட சஞ்சயன் நல்லவன் என்று முடிவு செய்தான் அந்த மனிதன். ஒரு மந்திரவாதி என்பதைக் கண்ணாடி மூலமாகக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.
யாருமில்லாத அந்த காட்டுக்குள் தனக்கு பணிசெய்ய இருவர் வந்தது அந்த மந்திரவாதிக்கு மிகவும் வசதியாக இருந்தது.எனவே அவர்களைத் தனக்கு சீடர்களாக வைத்துக் கொண்டான்.துர்ஜயன் செய்யும் தவறுகளைக் கண்டிப்பதோடு நிறுத்திக் கொண்டான்.ஆனால் சஞ்சயனுக்குச் சில பொறுப்பான பணிகளைக் கொடுத்தான்.
ஒரு அமாவாசை தினம் வந்தது.மந்திரவாதி சஞ்சயனைப் பார்த்து "சஞ்சயா, என் பெற்றோருக்குத் தர்ப்பணம் கொடுத்து பல ஆண்டுகளாகின்றன.இப்போது நீங்கள் இருவரும் இருப்பதால் அந்த தர்ப்பணம் கொடுத்து வர விரும்புகிறேன்."என்றான்.
சஞ்சயன் "அப்படியே குருவே. நான் தங்களுடன் துணை வருகிறேன். இங்கே தம்பி பார்த்துக் கொள்வான்" என்றான்.
துர்ஜயனை நம்பாத மந்திரவாதி துர்ஜயனை உடன் வருமாறு சொல்லிவிட்டு சஞ்சயனை அந்தச் செடியை விடாமல் நெருப்பின் முன் பிடித்துக் கொள்ளச் சொன்னான்.
பிறகு துர்ஜயனுடன் தொலைவில் உள்ள ஆற்றை நோக்கிச் சென்றான்.அவர்கள் கண் மறைந்ததும் சஞ்சயன் அந்தச் செடியைக் கீழே வைத்துவிட்டு அந்த இடத்தை சோதனை செய்யத் தொடங்கினான்.பலமூலிகை, எலும்பாலான உருவங்கள், மட்பாண்டங்கள் இவற்றோடு சிறு சிறு கல் பொம்மைகளும் இருந்தன.
திடீரென சஞ்சயனுக்கு மந்திரவாதி வந்துவிட்டால் என்ன செய்வது என்ற அச்சம் தோன்றவே அவன் என்ன செய்கிறான் என்பதை அறிய விரும்பினான்.தன் கையிலிருந்த கண்ணாடியைப் பார்த்து அதில் தன் குரு என்ன செய்கிறார் எனக் கேட்டுப் பார்த்தான்.
பார்த்தவுடன் திடுக்கிட்டான்.அதில் தன் தம்பி துர்ஜயனை ஒரு கல் பொம்மையாக ஆக்கித் தன் மடியில் கட்டிக்கொள்வதையும் அவனது உடல் நடுங்குவதையும்,அவன் வேகமாக அங்கிருந்து வருவதையும் பார்த்தான்.உடனே பழையபடி செடியைத் தன் கையில் வைத்துக் கொண்டு அமர்ந்து விட்டான் சஞ்சயன்.
கோபத்துடன் உள்ளே நுழைந்த மந்திரவாதி "அடேய், சஞ்சயா, ஏனடா செடியைக் கீழே வைத்தாய்? உன்னால் என் தவத்துக்கு குறை ஏற்பட்டுவிட்டதே.ஓடு இனியும் என்முன் நில்லாதே."என்று விரட்டி விட்டான்.
"ஐயா, என் தம்பி..."
"அவன் நீரோடு போய் விட்டான். அவனை இனி நீ பார்க்க இயலாது. போய்விடு இங்கிருந்து.இல்லையேல் சபித்துவிடுவேன்."என்றபோது இவனை என்ன உபாயத்தால் வெல்வது என்ற சிந்தனை வயப்பட்டவனாகத் தலைகுனிந்து வெளியேறினான் சஞ்சயன்.
அவன் மனம் மட்டும் தம்பியின் பிரிவால் மௌனமாக அழுது கொண்டிருந்தது.கால் போன போக்கில் நடந்து ரத்தினபுரியை அடைந்தான்.வருத்தத்துடன் இரத்தினபுரி ராஜவீதியில் நடந்துகொண்டிருந்தான்.ஊர் மக்கள் ஆங்காங்கே நின்று பேசிக்கொண்டிருப்பதைக் கண்டான்.என்னவென்று விசாரித்தபோது பல ஆண்டுகளாக அழுது கொண்டிருந்த ராஜகுமாரி சில நாட்களுக்கு முன் ஒரு நாழிகைப் பொழுது அழுகையை நிறுத்தி சிரித்தாள். மீண்டும் அழத் தொடங்கிவிட்டாள். மன்னர் இது எப்படி நடந்தது எனத் தெரியாமல் தவிக்கிறார்.ஊர் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தான்.
சஞ்சயன் சிந்தித்தான்.சடாரென அவனுக்கு நினைவுக்கு வந்தது.மந்திரவாதியின் கையிலிருந்த அந்தச் செடிக்கும் இளவரசி அழுவதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கவேண்டும் என நினைத்தான்.ஏனெனில் சஞ்சயன் ஒரு நாழிகைப் பொழுது அந்தச் செடியைக கீழே வைத்த அதே நேரம்தான் இளவரசி இங்கே அழுகையை நிறுத்தியிருக்கிறாள்.என்பதைப் புரிந்து கொண்டான்.உடனே மன்னனைச் சந்திக்க அரண்மனை சென்றான்.மன்னனைக் கண்டு தான் எப்படியும் ஒரு மாதத்திற்குள் இளவரசியின் அழுகையை நிறுத்துவதாகக் கூறிப் புறப்பட்டான்.
தன்னுடன் நான்கு வீரர்கள் மட்டும் போதும் என்று சொல்லி அவர்களுடன் ஒரு ரிஷி போல வேடமணிந்து புறப்பட்டான் சஞ்சயன்.அவர்கள் அனைவரும் மந்திரவாதி இருக்கும் இல்லத்தின் அருகே காட்டுக்குள் தங்கினர். சஞ்சயன் மட்டும் கமண்டலத்துடன் நதிக்குப் போவதுபோல் மந்திரவாதியின் வீட்டுக்குள் சென்றான்.இடத்தைவிட்டு எழாத மந்திரவாதி" யார்நீ இங்கு ஏன் வந்தாய்?" என்று இரைந்தான்.
"குழந்தாய் உனக்கு உன் ஆயுளைப் பற்றக் கூறவே நான் வந்தேன்." என்றான். மந்திரவாதி பெரிதாக நகைத்தான்.
"என்ன, ஏன் ஆயுளைப் பற்றியா?"
"ஆம் மகனே, உனக்கு இன்னும் சிறிது நேரத்தில் ஆயுள் முடியப் போகிறது."
"இதோ பார் உன் தலை இப்போது உருளப் போகிறது." என்றபடியே இடது கையால் கத்தியை வீசினான்.ஆனால் காட்டில் அம்மை கொடுத்த வாளால் அதைத் தடுத்தான் சஞ்சயன்.மந்திரவாதி திடுக்கிட்டான். தன் மந்திரசக்திவாய்ந்த வாளைத் தடுத்த அந்த சன்னியாசியை எதிர்க்க எழுந்து நின்றான்.
தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த மந்திரவாதியிடமிருந்து குனிந்து தப்பிய சஞ்சயன் அந்தச் செடியைக் கையில் எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினான்.ஒரு கையில் செடியும் மறுகையில் மந்திர வாளுமாக ஓடிய சஞ்சயனைப் பின் தொடர்ந்து ஓடினான் மந்திரவாதி.ஆனால் தங்களின் மறைவிடத்திற்கு சென்று தன் வீரர்களுடன் சேர்ந்து கொண்டான் சஞ்சயன். அந்தச் செடியைக் கீழேவைக்காமல் தன் மடியில் இருந்த கண்ணாடியை எடுத்துப் பார்த்தான். "கண்ணாடியே இந்தச் செடியைப் பாதுகாப்பாக எங்கே வைப்பது என்பதைக் காட்டு" என்றபடி கண்ணாடியைப் பார்த்தான்.
கண்ணாடிக்குள் அருகே இருந்த ஆறு தெரிந்தது. சற்றும் தாமதிக்காத சஞ்சயன் இரண்டு வீரர்களுடன் ஆற்றை நோக்கி வேகமாகச் சென்றான்.தூரத்தில் வந்து கொண்டிருந்த மந்திரவாதி தன் கையைச் சுழற்றி ஏதோ முணு முணுத்தான்.ஆனால் அவன் அவசரத்தில் தன் மந்திரக் கொலைக் கொண்டு வர மறந்து விட்டான். அதனால் அவனது மந்திரம் எதுவும் பலிக்கவில்லை.சற்றும் தாமதிக்காத சஞ்சயன் அந்தச் செடியை ஆற்றில் தூக்கி எறிந்தான்.
அதைப் பார்த்த மந்திரவாதி" ஐயோ என் தவமெல்லாம் போயிற்றே. நூறு பேரைப் பலியிட்டு மகாசக்தியைப் பெற எண்ணினேனே.என் கனவும் தவமும் போச்சே.உன்னை என்ன செய்கிறேன் பார்" என்றபடி சஞ்சயன் மீது பாய்ந்தான். அதற்குள் உடன் வந்திருந்த வீரர்கள் அவனைப் பாய்ந்து பிடித்துவிலங்கிட்டனர்.
அவனையும் இழுத்துக் கொண்டு அவன் தங்கியிருந்த வீட்டுக்கு வந்தனர்.சஞ்சயன் அவனது வீட்டைச் சோதனை போட்டான் எல்லாவற்றையும் தூக்கி வீசினான். வேகம் வேகமாகத் தன் தம்பியைத் தேடினான்.மந்திரவாதியோ சிரித்தான்."உன் தம்பிதான் நீரோடு போய் விட்டானே அவனை இங்கு ஏன் தேடுகிறாய்" என்று திமிறுடன் பேசினான்..
மறைவாகச் சென்ற சஞ்சயன் கண்ணாடியை எடுத்து தம்பியைப் பற்றிக் கேட்க அது ஒரு பெட்டியைக் காட்டிற்று.மிகவும் கஷ்டப்பட்டுத் தேடி அந்தப் பெட்டியைக் கண்டு பிடித்தான் சஞ்சயன்.அதைத் திறந்தபோது தொண்ணூற்று ஒன்பது பொம்மைகள் அந்தப் பெட்டிக்குள் இருப்பதைக் கண்டான்.
செடியும் முழுவதும் வாடியபின் சஞ்சயனைச் சேர்த்து நூறு பேராக பலி கொடுக்க எண்ணியருந்தான் அந்த மந்திரவாதி என்பதைப் புரிந்து கொண்டான்.அப்போதுதான் அவனுக்கு மேலும் பல சக்திகள் கைகூடும் என்ற செய்தியையும் அறிந்தான்.
இந்த தொண்ணூற்று ஒன்பது பேரும் உயிர் பெற என்ன வழி என்று மந்திரக் கண்ணாடியைக் கேட்க அது மந்திரவாதியின் மந்திரக்கோலைக் காட்டிற்று.அது எரியும் நெருப்புக்குக் கீழே இருப்பதைக் காட்டவே குடம் நீரைஎடுத்து நெருப்பை அணைத்தான்.அதே சமயம் மந்திரவாதி உயிரற்றுக் கீழே விழுந்தான்.அந்த மந்திரக் கொலை எடுத்துத் தன் தம்பிமீது தட்டவே அவன் உயிர் பெற்று எழுந்தான். தம்பியைக் கட்டிக் கொண்டு மகிழ்ச்சியில் திளைத்தான்.பின் தொண்ணூற்று ஒன்பது அரசகுமாரர்களும் உயிர் பெற்று எழுந்து சஞ்சயனை வணங்கினர்.
பின்னர் அனைவரும் ரத்தினபுரியை அடைந்தனர்.ரத்தினாங்கியும் தன் அழுகையை நிறுத்தி ஆனந்தமாக சிரிக்கத் தொடங்கி விட்டாள்.
வெற்றி பெற்று வரும் சஞ்சயனையும் பிற அரசகுமாரர்களையும் வரவேற்க மன்னன் ரத்தினவர்மன் காத்திருந்தான்.
இதற்குள் வெற்றிச் செய்தியை சஞ்சயனின் தந்தை சத்திய சீலருக்கு அறிவித்து சஞ்சயன் ரத்தினாங்கி இருவரின் திருமணத்திற்கு வரும்படி தூதுவரை அனுப்பிவிட்டான் ரத்தினவர்மன்.
வெற்றிவிழாவும் பட்டமேற்பு விழாவும் ஒன்றாக நடந்தது.இரத்தினபுரிக்கு மன்னனாக சஞ்சயனும் சத்தியபுரி மன்னனாக துர்ஜயனும் பட்டமேற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். அத்துடன் இவர்களின் நல்லாட்சியால் நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர்.இந்த மகிழ்ச்சிக்குக் காரணமான சஞ்சயனின் நல்ல பண்பையும் வீரத்தையும் பாராட்டி மகிழ்ந்தனர்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshayee.blogspot.com
ஒ தொடர்கதையா....??
பதிலளிநீக்குஅதான் போன பதிவில் தலைகால் புரியவில்லை, அருமையான கதை பாட்டி வாழ்த்துக்கள்...!!!!!!!
நல்ல கதை... நன்றி.
பதிலளிநீக்குமிகவும் அருமையாக இருக்கு மேடம் கதை.நன்றி பகிர்வுக்கு.
பதிலளிநீக்குபுதிய பதிவரான நான் தங்களின் கதைகளை விரும்பி படிப்பேன். தங்களின் சேவைக்கு எனது வாழ்த்துக்கள். மிக்க நன்றி!
பதிலளிநீக்கு