சிவந்த கண்களைப் பெற்றிருந்ததால் சோழ மன்னன் செங்கணான் எனப் பெயர் பெற்றிருந்தான்.இவனை வரலாறு கோச்செங்கணான் என்று கூறும்..பெரும் வீரனாக இருந்ததோடு சிறந்த சிவ பக்தனாகவும் இருந்தான்.
ஒரு முறை சேர மன்னன் கணைக்கால் இரும்பொறைக்கும் கோச்செங்கனானுக்கும் போர் மூண்டது.
இருவரும் பெரும்படை கொண்டு போரிட்டனர்.மலைகள் போல் யானைகள் இருதிறத்தில் இருந்தும் மோதிக் கொண்டன. பல நாட்கள் போர் நீண்டது. சோழனின் பெரும்படையை சேரனின் படைகள் வீரத்துடன் எதிர்த்தன.ஆயினும் கடைசியில் சேரன் தோல்வியைத் தழுவினான்.
கோச் செங்கணான் அவனைக் கைது செய்து குணவாயில் கோட்டம் என்னும் இடத்தில் சிறையில் அடைத்தான். சிறைப்பட்ட கணைக்கால் இரும்பொறை சற்றும் அஞ்சாது நிமிர்ந்து நின்றான்.பகைவனுக்குத் தலை வணங்க மறுத்தான்.அஞ்சாது பேசினான்.நாட்கள் கழிந்தன.
சிறைப்பட்ட சிங்கம்போல் சிறையில் அடைபட்டிருந்தான் இரும்பொறை.
ஒருமுறை சேரனுக்கு சிறையில் தாகமெடுத்தது.நீர் வேண்டும் என்று சிறைக்காவலரைக் கேட்டான்.
கூப்பிட்ட குரலுக்கு உடனே ஆயிரம் பேர் வரக்கூடிய நாடாளும் மன்னனின் குரலுக்கு அந்த சிறைக் காவலர் செவி சாய்க்கவில்லை.காலம் நீட்டித்துப் பின் நீர் கொணர்ந்து கொடுத்தனர்.
அவர்களது அலட்சியத்தை பார்த்து மிகுந்த அவமானப் பட்டான் கணைக்கால் இரும்பொறை.
அந்த நீரைப பருகாமல் தாகத்தால் வாடித் தன் உயிரை மாய்த்துக் கொண்டான்.
அவன் இறக்குமுன் ஒரு பாடலை எழுதி விட்டு இறந்தான்.
"குழவி இறப்பினும் ஊன்தடி பிறப்பினும்
ஆள் அன்று என்று வாளில் தப்பார்"
என்று தொடங்கும் பாடல்தான் அது.தமிழனின் மானத்தின் பெருமையை காட்டக்கூடிய இப்பாடல் புறநானூறு என்னும் நூல் தொகுப்பில் உள்ளது.இதன் பொருள், குழந்தை இறந்து பிறந்தாலும்
வெறும் மாமிசப் பிண்டமாகப் பிறந்தாலும் அதனை வாளால் கீறி மார்பில் வீரத் தழும்பை உண்டாக்கித்தான் புதைப்பர்.அப்படிப்பட்ட வீர மரபில் உதித்த மன்னனான நான் சிறையில் காவலரின் அலட்சியமாகக் கொணர்ந்த இந்த நீரைப் பருகி உயிர் வாழ்வதோ" என்று ஒரு பாடலைப் பாடி உயிர் நீத்தான்.
இந்த வரலாறு பொதிந்த பாடல் இலக்கியச் சான்றாக இருந்து தமிழரின் மானத்தின் உயர்வையும் மானம் இழந்து உயிர் வாழாமை என்ற சிறப்பையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறதன்றோ.
வள்ளுவரின்
"மயிர்நீப்பின் வாழாக் கவரிமான் அன்னார்
உயிர்நீப்பர் மானம் வரின்."
என்ற குறளின் பொருளையும் நமக்கு நன்கு உணர்த்துகிறதன்றோ?
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
குறளுக்கு ஏற்ற நல்ல கதை ! நன்றி அம்மா !
பதிலளிநீக்கு