கிருஷ்ண பரமாத்மா ஆட்சி செய்து வந்த துவாரகைக்கு அருகில் இருக்கும் ஒருஅழகிய சிறிய கிராமம் டாஙகேர் என்பது. அந்த கிராமத்தில் வாழ்ந்தவர்தான் ராமதாசர் என்ற அந்தணர்.சிறந்த கிருஷ்ண பக்தர்.
இவர் அல்லும் பகலும் அந்த துவாரகைக் கண்ணனையே எண்ணி என்று அவன் அருள் கிட்டும் என ஏங்கி இருந்தார். அதனால் இவரை துவாரகா ராமதாசர் என அனைவரும் அழைத்தனர்.
ஒவ்வொரு ஏகாதசி அன்றும் துவாரகை சென்று விரதமிருந்து அன்று முழுவதும் கண்ணனையே பாடி பஜனை செய்வார்.. மறுநாள் துவாதசி அன்று ஏழைகளுக்கு தன்னால் இயன்ற அளவு உணவு தந்து பின்னர் இவர் உணவு கொள்வார்.-
காலம் சென்றது.ராமதாசருக்கு இப்போது வயதாகிவிட்டது. அவரால் முன்போல் நடந்து துவாரகைக்கு வர இயலவில்லை. அந்த நிலையிலும் இவர் ஒவ்வொரு ஏகாதசி அன்றும் தனது விரதத்தை விடாது கடைப்பிடித்து வ்ந்தார்.
ஒருமுறை அவர் தளர்ந்தவாறு கோயிலுக்குள் அமர்ந்திருந்தார்.அவர் மனத்துக்குள்
ஸ்ரீ கிருஷ்ணன் புன்னகை புரிந்தவாறு நின்றிருந்தான்.மானசீகமாக அவருடன் பேசினார் ராமதாசர்.
"கண்ணா, என் உடல் மிகவும் தளர்ந்து விட்டது. அடுத்த ஏகாதசிக்கு என்னால் இங்கு வந்து உன்னைத் தரிசிக்க இயலுமோ இயலாதோ தெரியாது. ஆனால் கண்ணா, என்னால் இயலாவிடில் நீ வந்து எனக்கு தரிசனம் தரவேண்டும்.ஒரு போதும் தவறக்கூடாது கண்ணா,"என்றவாறு இறைவனின் காலடியில் விழுந்து விம்மி விம்மி அழுதார்.
இறைவனின் நெஞ்சம் உருகியது."தாஸ,அஞ்சாதே.என்னை உங்கள் ஊருக்கு அழைத்துச் செல்" கண்ணனின் இந்த மொழியைக் கேட்ட ராமதாசர் திகைத்தார்.
"என்னால் எப்படி உன்னை அழைத்துச் செல்ல இயலும்."
"தாஸ, என்னுடைய தேர் வரும் அதில் ஏறிச் செல்லலாம்."
மகிழ்ச்சியுடன் கண்ணனுடன் தேரிலேறி டாங்கேர் வந்து சேர்ந்தார் ராமதாசர்.
கண்ணனை நடுக் கூடத்தில் இறக்கிவிட்டுத தேர் மறைந்து போனது.
மறுநாள் பொழுது விடிந்தவுடன் துவாரகையின் கோயில் கதவுகள் திறக்கப் பட்டன. ஆனால் அங்கே கண்ணனின் விக்ரகத்தைக் காணோம்.அனைவருக்கும் ராமதாசர் மேல்தான் சந்தேகம் வந்தது.
உடனே கூட்டமாக அனைவரும் டான்கேர் நோக்கிச் சென்று ராமதாசரின் வீட்டின் முன் நின்று கூச்சலிட்டனர். ராமதாசர் அமைதியாக இருந்தார்.வந்தவர்கள் தாசரின் வீட்டுக்குள் புகுந்து கண்ணனைக் கண்டனர். அவரை மீண்டும் துவாரகை எடுத்துச் செல்ல முயன்றனர்.
கண்ணன் தன்னைப் பிரிவதைப் பொறுக்காத ராமதாசர் அழுதார்.அப்போது கண்ணன்
"தாஸ,என் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்." அவர்கள் என்னை இங்கேயே விட்டுச் செல்வார்கள்."என்றான் புன்னகைத்தபடியே. ஆசையுடன் தாசர் அர்ச்சகர்களிடம் கேட்டார்.
"இறைவனின் எடைக்கு எடை பொன் தந்தால் இந்த இறைவனை எனக்குக் கொடுப்பீர்களா?"
அர்ச்சகர்கள் சிரித்தனர்."நீரோ அன்னக் காவடி.தினமும் உஞ்சவிருத்தி செய்து உண்பவர்.
இந்த இறைவனின் எடைக்கு துலாபாரமாகப் பொன் தருவாயா?" என்று கேலி பேசினர்.
அதற்குள் ஊர் மக்கள் அங்குக் கூடிவிட்டனர்.
விக்ரகத்தின் எடைக்கு எடை பொன் தருகிறாராம் தாசர், என்று மக்கள் பேசிக் கொண்டே நின்று வேடிக்கை பார்த்தனர்.அர்ச்சகர்களும் தாசரின் பேச்சைக் கேட்டு சிரித்தபடியே சம்மதித்தனர்.தாசரால் இயலாத காரியம் கண்ணனின் எடைக்குப் பொன் தருவது என நம்பினர்.
அவரின் விருப்பப்படியே தராசு நிறுத்தப் பட்டது.ஒரு தட்டில் கிருஷ்ண விக்ரகம் வைக்கப் பட்டது.'அன்று ருக்மிணி தேவியின் மெய்யன்பை நிரூபிக்க தராசில் ஏறினேன். இன்று இந்த தாசனுக்காக தராசில் ஏறுகிறேன்.'என்று சொல்வதுபோல் நகைத்தபடி நின்றிருந்தான் கண்ணன்.
ராமதாசர் வீட்டினுள் நுழைந்தார். தன் மனைவியுடன் வெளியே வந்தவர் கையில் ஒரு மூக்குத்தி இருந்தது.தாசரின் கையில் ஒன்றும் இல்லாதது கண்டு அர்ச்சகர்" தாசரே, எங்கே பொன்? என்று கேட்டனர்."
இதோ இருக்கிறது என்று தன் கையிலிருந்த மூக்குத்தியைக் காட்டினார்.பின் அதை இறைவனை எண்ணித் தராசில் இட்டார். என்ன ஆச்சரியம்! அனைவரும் வியக்கும் வண்ணம்
ஒரு மூக்குத்தியின் எடைக்குச் சமமாகக் கண்ணனின் எடை நின்றது.
மக்கள் ஆரவாரம் செய்தனர்.என்னே தாசரின் பக்தி. அவரது பக்திக்குக் கண்ணனே திருவுள்ளம் இரங்கியுள்ளான்.இவரே பரம பக்தர் என அனைவரும் அவரை வணங்கினர்.
அர்ச்சகரோ வாயடைத்து நின்றார்."தாசரே, இறைவனுக்கே இங்கு வாசிக்கத்தான் விருப்பம்போலும் .நீர் பெரும் பாக்யசாலி. உமது பக்தி உலகினருக்கு ஒரு படிப்பினையாகும்
என்று நிலத்தில் விழுந்து கண்ணனுடன் சேர்த்து தாசரையும் வணங்கினார்.
பலன் நோக்காப் பக்தியால் இறைவனையே அழைக்க முடிந்தது தாசரால்.
இவரது பக்தியும் நம்பிக்கையும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற உண்மையை நாமும் புரிந்து கொள்ள வேண்டும்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
உண்மையான பக்தியும், முழு நம்பிக்கையும் இருந்ததால் எதையும் சாதிக்கலாம் என்பதை அழகாக சொல்லி உள்ளீர்கள் அம்மா... நன்றி... வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்குஎன்னுடைய FACEBOOKல் பகிர்ந்துள்ளேன். அருமையான தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகள் தரும் உங்களை வணங்குகிறேன்.
பதிலளிநீக்குஉண்மையான பக்தியின் அருமை புரிய வைத்த கதை.... பகிர்வுக்கு நன்றிம்மா....
பதிலளிநீக்கு