பாட்டி சொல்லும் கதைகளைப் படிக்கும் அன்பு நெஞ்சங்களுக்கு ஒரு வார்த்தை.குழந்தைகளுக்காக தமிழ்ப் பாடல்களும்,கதைகளும், தமிழ் பயில
i pod, iphone, applications இருக்கிறது.www.haviga.com <http.www.haviga.com> என்ற தளத்தில் பாட்டி சொன்ன கதைகளில் பாட்டியே கதை சொல்வதைக்
கேட்கலாம். இந்த தளத்திற்கு விஜயம் செய்யவும்.
உங்கள் அன்புப் பாட்டி,
ருக்மணி சேஷசாயி.
விதியையும் வெல்லலாம்.
வீரப்பன் என்பவர் ஒரு தொழிலாளி. அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர்.பெரியவன் சிவா. இளையவன் சங்கரன்.சிவா நல்ல ஆரோக்யமான உடலுடன் அழகாக இருந்தான். ஆனால் சிறியவன் சங்கரன் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க இயலாதவனாக இருந்தான்.எப்போதும் தனியாக அமர்ந்து ஆகாயம் மரங்கள் பறவைகள் என வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பான்.அதிகமாகப் பேசமாட்டான்.
எப்போதும் தனியாக ஒரு அறையில் அமர்ந்து கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி இருப்பான்.எப்போதாவது அவனைப் பார்க்க நேர்ந்தால் வீரப்பன் கடுகடுவென முகத்தை வைத்துக் கொள்வார். ஏதேனும் பேச நினைத்தால் கூட சங்கரன் அவர் முகத்தைப் பார்த்து பயந்து பேசாமல் வெளியே பார்த்துக் கொண்டு அமர்ந்து விடுவான்.
ஒருமுறை சங்கரனுக்குப் பிறந்த நாள் வந்தது.அன்று அப்பா கோபமாக,எ' இவன் பிறக்கவில்லையென்று யார் அழுதாங்க?ஒன்றுக்கும் உபயோகமில்லை. தன்னையே பார்த்துக் கொள்ள துப்பில்லை" என்று திட்டிவிட்டுப் போய்விட்டார்.ஆனால் அம்மாதான் மனம் கேட்காமல் சங்கரனுக்குப் புதுச் சட்டை வாங்கிவந்து போட்டு தலைவாரிவிட்டு அவனுக்கு இனிப்பும் ஊட்டிவிட்டார்கள்.அப்போது சங்கரனின் மனம் மிகவும் மகிழ்ச்சி அடைந்தது.
அந்தப் பிறந்த நாள் சங்கரனின் வாழ்வில் மறக்கமுடியாத நாள்.அவன் மாமா அவனுக்கு ஒரு வண்ணம் தீட்டும் பெட்டியைக் கொண்டுவந்து பரிசாகக் கொடுத்தார். அதிலிருக்கும் வண்ணங்களைக் கண்டு சங்கரன் மிகவும் மகிழ்ந்தான்.கைக்குக் கிடைத்த தாள்களில் எல்லாம் அவனுக்குத் தோன்றிய படங்களை வரைந்து தள்ளி மகிழ்ந்தான். பொழுது போகாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன் இப்போது நேரம் போதாமல் வரையும் வேலையில் ஆழ்ந்து போனான்.
அவன் இருந்த அறை முழுவதும் தாள்கள் சிலசமயங்களில் அவன் அப்பா வீரப்பன் இதென்னடா குப்பை என்று திட்டிவிட்டுச் செல்வார்.ஆனாலும் ஏதோ பொழுதைக் கழிக்கட்டும் என்று பேசாமல் இருந்து விடுவார்.அவனுடைய வரையும் ஆர்வத்திற்கு தூண்டுகோலாக இருந்தவன் அவன் அண்ணன் சிவாதான்.தினமும் பள்ளியில் இருந்து வந்தவுடன் தன தம்பியுடன் சேர்ந்துதான் டீ அருந்துவான். சங்கரும் தன அண்ணனுக்காகக் காத்திருப்பான். இருவரும் ஒருவர்மேல் ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர்.
அன்றும் பள்ளி விட்டு ஓடிவந்த சிவா தன தம்பி வரைந்த ஓவியங்களை எடுத்துக் கொண்டு அதே தெருவில் வசித்த ராதா டீச்சர் வீட்டுக்குப் போனான். அவர்களிடம் அத்தனை ஓவியங்களையும் கொடுத்தான்.அதைப் பார்த்த டீச்சர் மிகவும் மகிழ்ந்தார்.ஒருவாரம் கழிந்ததும்தான் அவர்கள் ஏன் அந்த ஓவியங்களைக் கேட்டார்கள் என்று புரிந்தது.சிவா படித்த பள்ளியில் கலைப் பொருள் கண்காட்சி ஒன்று நடத்துவதாக ஏற்பாடாகியிருந்தது.அந்த சமயம் ஒரு அறை முழுவதும் சங்கரனின் ஓவியங்களுக்கு அழகாக தலைப்புகளைக் கொடுத்து வரிசைப் படுத்தி காட்சிக்கு வைத்திருந்தனர்.அதைப் பார்த்த அனைவரும் அந்த ஓவியங்களைப் பாராட்டினர்.
பள்ளிவிழாவுக்கு வந்திருந்த பிரமுகர் அந்த ஓவியங்களைப் பாராட்டியதோடு சிறுவர்களுக்கான கலைப் போட்டி டில்லியில் நடக்கிறது அதற்கு இந்த ஓவியங்களில் சிறந்ததை அனுப்புமாறு ஆலோசனை கூறினார். ராதா டீச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு அப்படியே செல்வதாக வாக்களித்ததோடு அடுத்த நாளே ஐந்து சிறந்த ஓவியங்களை அனுப்பிவைத்தார். அத்துடன் பள்ளியில் அந்த ஓவியங்களைப் பார்ப்பவர்கள் தங்களால் இயன்ற காசுகளைத் தருமாறு ஒரு உண்டியலும் வைத்திருந்தார்.பதினைந்து நாட்களில் அந்த உண்டியலில் கிட்டத்தட்ட நாலாயிரம் ரூபாய்கள் சேர்ந்திருந்தன.
அன்று மாலையே ராதா டீச்சர் அந்தத் தொகையை எடுத்துக் கொண்டு சிவாவுடன் அவர்களின் இல்லம் நோக்கிச் சென்றார். ஏதோ படத்தை வரைந்து கொண்டிருந்த சங்கரன் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சியுடன் அதைக் காட்டினான்.அவனுடன் வந்திருக்கும் டீச்சரைப் பார்த்து வெட்கத்துடன் தலைகுனிந்து கொண்டான்.
ராதா டீச்சர் வீரப்பனையும் அவர் மனைவி தேவானையையும் அழைத்து அவர்களிடம் பேசினார்.
"ஐயா, உங்கள் மகன் மிகுந்த திறமைசாலி. அவனுடைய படங்கள் டில்லிக்குப் போயிருக்கின்றன. கட்டாயம் அவன் திறமைக்குப் பரிசு கிடைக்கும்.அவனை இன்னும் நீங்கள் ஊக்கப்படுத்தினால் சிறந்த ஓவியனாக வளருவான். இதோ அவனுடைய படங்களுக்கான வெகுமதி இந்தப் பணம். இதைவைத்து அவனுக்கு மரக்கால்களைப் பொருத்துங்கள்.நானும் உதவி செய்கிறேன்.அவனை உலகின் சிறந்த மனிதனாகத் தலை நிமிர்ந்து நிற்கச் செய்யலாம். அதோடு அகவனைப் பெற்ற நீங்களும் பெருமைப் படலாம்."
.துயரமும் மகிழ்ச்சியும் கலந்த குரலில் தேவானை பேசினார்." அம்மா, இத்தனை நாள் நாங்கள் செய்த பாவம். அவன் விதி இதுன்னு இருந்தோம். ஆனா நீங்க சொன்ன பிறகுதான் அவனும் நல்லா வருவான்னு எங்களுக்குத் தெரியுதும்மா.உங்களுக்குத்தான் நாங்க நன்றி சொல்லணும்." என்று டீச்சரின் கரங்களைப் பற்றிக் கண்களில் ஒத்திக் கொண்டாள் தேவானை.
வீரப்பன் ஏதும் பேசத் தோன்றாமல் கண்களில் நன்றியும் மகிழ்ச்சியும் கலந்த நீர் நிறைய சங்கரனை அணைத்துக் கொண்டார்.
அடுத்தமாதமே அந்த ஊர் பிரமுகர்கள் ஒன்று கூடி பரிசுப் பொருள்களுடன் சங்கரனைத் தேடிவந்ததும் அவனுக்கு டில்லிக்கு வரச்சொல்லி அழைப்பு வந்திருப்பதும் விழாவில் குடியரசுத் தலைவரின் கையால் அவன் பரிசு பெறப் போவதையும் அறிந்த போது வீரப்பனால் நம்பவே முடியவில்லை. சாதாரணத் தொழிலாளியான தனக்கு இத்தனை மதிப்பா என மகிழ்ந்து போனார்.
இப்போது சங்கரன் செயற்கைக் கால்களுடன் தனக்கென ஒதுக்கப்பட்ட தனியறையில் நின்று கொண்டு தூரிகை பிடித்து வரைந்து கொண்டு இருக்கிறான்
அவனைத் தேடி பத்திரிகைக்காரர்களும் சினிமாப் படம் எடுப்பவர்களும் பணத்தைக் கொட்டிப் படம் வேண்டுமென்று கேட்டுத் தவம் கிடக்கின்றனர்.
விதியையும் வெல்லலாம் எனத் தனக்குள் சொல்லிக் கொண்ட வீரப்பன் பெருமையுடன் தன மகனைப் பார்த்தார்.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும்
உண்மைதானே.வள்ளுவர் கூறும் பொன்மொழி நம் வாழ்க்கைக்கு எத்தனை சிறந்த வழிகாட்டி! தன்னால் ஏதும் இயலாதென்று தயங்கி தளர்ந்து இராமல் முயற்சி செய்தால் வாழ்வில் பெருமை பெறலாம் என்ற உயந்த அறிவுரைநாம் அனைவரும் முக்கியமாக வளரும் இளைய சமுதாயம் உணரவேண்டும்.
ருக்மணி சேஷசாயி
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com :: http://rukmaniseshasayee.blogspot.com
சிறப்பான கதை. மாற்றுத் திறனாளிகளுக்குள் ஒளிந்து கொண்டிருக்கும் இது போன்ற திறமைகளை வெளிக் கொணர்வது பெற்றோரின் கடமை.....
பதிலளிநீக்குமற்ற தளத்திலும் சென்று உங்கள் குரலில் கதை கேட்கிறேன் - மாலையில்...
ரொம்ப நாளாயிற்றே என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். கதை சொல்லுவதில் பிஸியாக இருந்தீர்கள் என்று தெரிகிறது.
பதிலளிநீக்குஎன் பெண்ணுக்கு நீங்கள் குறிப்பிட்ட தளங்களின் இணைப்புகளை அனுப்பி உள்ளேன் - உங்கள் குரலில் என் பேரன் கதை கேட்க!
ரொம்பவும் அனுசரணையான அண்ணன் தம்பி! படிக்க ரொம்ப நிறைவாக இருந்தது இந்தக் கதை!
நல்லதொரு பகிர்வு...
பதிலளிநீக்குநீங்கள் கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கிறேன்...
நன்றி அம்மா...
மனம் கவர்ந்த படைப்பு! பகிர்விற்கு நன்றி! திறமை அறிந்து ஊக்கப்படுத்தினால் உயர்வு நிச்சயம் என்பதை உணர்த்தியதும் அருமை!
பதிலளிநீக்குவலைச்சர அறிமுக வாழ்த்துக்கள்...
பதிலளிநீக்கு