திங்கள், 12 மே, 2014

ஒரு அன்னையின் உள்ளம்.

இன்று அன்னையர் தினம். இந்த நாளில் ஒரு அன்னையின் மனம் எத்தகையது என்பதை  இதிகாச நிகழ்ச்சியின் மூலம் காணலாம்.
               
பாரதப் போரின்  முடிவுநாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.துரியோதனன் தான் தோற்பது உறுதி என முடிவு செய்து விட்டான். வருத்தமும் அவமானமும் கொண்டு கவலையே உருவாகக் காட்சியளிக்கிறான்.அப்போது துரோணரின் மகன் அஸ்வத்தாமன் அங்கு வருகிறான்.கவலையோடிருக்கும் தன மன்னனைப் பார்க்கிறான். கனிவோடு அருகே வந்து பேசுகிறான்.
"மன்னா,  கலங்கவேண்டாம். அந்தப் பாண்டவப் பதர்கள் வெற்றிக் களிப்போடு இருப்பார்கள். அவர்களைக் கண்டதுண்டமாக என் வாளுக்கு இரையாக்கிவிட்டு வருகிறேன்." என்றான்.

"உன்னால் முடியுமா?"

"முடித்துவிட்டு வந்து  பேசுகிறேன்."

நள்ளிரவு நேரம். கையில் வாளுடன் அஸ்வத்தாமன் அந்தக் கூடாரத்துள் நுழைந்தான் பாண்டவர்களைத் தேடிக் கொண்டே வந்தான்.பஞ்சபாண்டவருடன் ஆறாவதாக அங்கு சயனித்திருந்த கிருஷ்ணனுக்கு திடீரென வியர்த்தது.அவன் தருமனை எழுப்பினான். 

"தர்மா, உன் சகோதரரை எழுப்பு. நாம்  சற்று வெளியே சென்று படுப்போம். இந்த இடம் காற்றே இல்லாமல் மிகவும் அசௌகரியமாக இருக்கிறது.
வா, சீக்கிரம்." அவன் பதிலுக்கு காத்திருக்காமல் வேகமாக பின்பக்கம் நோக்கி நடக்கத் தொடங்கினான் கண்ணன். தம்பிமாரை எழுப்பிய தருமன் அவர்களை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனைப் பின் தொடர்ந்தான்.வேறு வழியாக அவர்களை வெகு தூரம் அழைத்துச் சென்ற கண்ணன், இங்கேயே இரவினைக் கழிப்போம். இது சற்று சுகமான தூக்கத்தைத் தரும் இடமாக இருக்கிறது. என்று சொன்னவாறே கொட்டாவி விட்டபடி அமர்ந்தான். அவனைத் தொடர்ந்து அனைவரும் அங்கேயே படுத்துக் கொண்டனர்.

பொழுது புலர்ந்தது.அஸ்வத்தாமன் குருதி படிந்த கத்தியுடன் துரியோதனன் முன் வெற்றிக்  களிப்போடு நின்றான்.
மகிழ்ச்சியுடன் அவனை வரவேற்ற துரியோதனன் பாண்டவர் மடிந்தார்கள் என அட்டகாசமாகச் சிரித்தான்.
"அஸ்வத்தாமா, இது எப்படி நடந்தது சொல்.அனைவரையும் எப்படிக் கொன்றாய்?அந்த உன் வீரக் கதையைச் சொல் என் காது குளிரக் கேட்கிறேன்."
 
"மன்னா, நான் அவர்களின் கூடாரத்துள் புகுந்தபோது அறையில் யாருமில்லை ஆனால் அடுத்த அறையில் படுத்திருந்த இளம் பாண்டவர்கள் அனைவரையும் கொன்றுவிட்டேன்.  உபபாண்டவர்களைக் கொன்று பாண்டவ வம்சமே இல்லாமல் செய்து விட்டேன்." என மகிழ்வுடன் வாளைத் தூக்கிக் காட்டினான்.

துரியோதனனுக்கு தூக்கிவாரிப் போட்டது."என்ன, இளம் பாண்டவர்களைக் கொன்று விட்டாயா?அவர்கள் என்ன பாவம் செய்தார்கள் அவசரப்பட்டு இப்படி ஒரு காரியத்தைச் செய்து விட்டாயே ! என் கண் முன் நில்லாதே போ "என்று வெறுப்புடனும் வருத்தத்துடனும் கூறிவிட்டு அகன்றான்.

அதேசமயம் குழந்தைகளைப் பார்க்க வந்த பாஞ்சாலி கை வேறு கால் வேறாகக் கிடக்கும் தன ஐந்து புத்திரர்களையும் பார்த்துக் கதறினாள்.அவளைத் தேற்ற வகை தெரியாது அனைவரும் துயரமே வடிவாக நின்றனர்.அப்போது கண்ணன், அவளுக்கு சமாதானம் கூறினான். 
"அம்மா திரௌபதி, இந்தக் காரியத்தைச் செய்தவன் அஸ்வத்தாமன்.அவனை உன் முன்னே நிறுத்தி உன் கண் முன்னாலேயே அவன் தலையை வெட்டும் வீரன் அர்ச்சுனன் இருக்க நீ கலங்காதே."

 இந்தச் சொல்லைக் கேட்டு அர்ச்சுனன் கோபாவேசத்தோடு,"கண்ணா, அந்த பேடியைக்  கொன்று அவன் தலையைக் கொண்டு வந்து திரௌபதியின்  காலடியில் வீசுவேன் ஆனால் உன் சொல்லுக்காக அவனை உயிருடன் பிடித்து வந்து இங்கு நிறுத்துவேன்.அனைவரின் முன்னும் அவனுக்குத் தண்டனை தருவேன்." என்று கூறியவன் தன் காண்டீபத்துடன் புறப்பட்டான்.

அர்ச்சுனனின் வீரத்திற்கு முன் அஸ்வத்தாமன் ஒரு பொருட்டா! விரைவிலேயே அர்ச்சுனனுக்கு அஸ்வத்தாமன் அடிமையானான். குருதி கொப்பளிக்கும் உடலுடன்  அவனை திரௌபதியின் முன் நிறுத்தினான் அர்ச்சுனன்.
"இப்போது சொல் பாஞ்சாலி. இவனையும் உன் புத்திரர்களைப் போலவே கண்ட துண்டமாக வெட்டட்டுமா, அல்லது தலையைத் தனியே எடுத்து வீசட்டுமா?"
பாதி உயிர் போன நிலையில் நின்றிருந்த அஸ்வத்தாமனைப் பார்த்தாள்  திரௌபதி. அப்போது அவளுக்கு அஸ்வத்தாமனின் உருவம் தெரியவில்லை.அவனைப் பெற்ற  தாயின் உருவம்தான் கண்ணுக்குத் தெரிந்தது. தன துயரத்தை அடக்கிக் கொண்டு கூறினாள் 
"இவனைக் கொல்வதால் மாண்டுபோன என் மக்கள் மீண்டும் வருவார்களா?பெற்ற பிள்ளையை இழந்த ஒரு தாயின் உள்ளமும் வயிறும் எப்படித் துடிக்கும் என்பதை நானறிந்தபின்னும் இன்னொரு தாய்க்கு அத்தகைய நிலையைத் தர நான் விரும்பவில்லை. இவனை விட்டு விடுங்கள் இவன் செய்த பிழைக்கு இவன் தாய்க்கு  ஏன் தண்டனை தரவேண்டும்? 

அவள் சொல்லுக்குக் கட்டுப்பட்ட அர்ச்சுனன் அச்வத்தாமனின் தலையில் இருந்த மணியைப் பிடித்து அறுத்தான் தலைமுடியை அலங்கோலப் படுத்தி விரட்டிவிட்டான்.ஒரு தாயின் அன்பு உள்ளத்தால் அஸ்வத்தாமனின் உயிர் அன்று பிழைத்தது.

ஒரு அன்புத்தாயின் உயர்ந்த உள்ளத்தை இதிகாசம் நமக்குப்  படம் பிடித்துக்  காட்டுகிறது.

-- 
ருக்மணி சேஷசாயி 
Rukmani Seshasayee
ப்ளாக் : http://chuttikadhai.blogspot.com  :: http://rukmaniseshasayee.blogspot.com 

5 கருத்துகள்:

 1. தாயுள்ளத்தைப்பற்றி எடுத்துச்சொல்லும் அருமையான புராணக்கதை. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 2. தான் பெற்ற துன்பத்தை இன்னொரு தாய் அனுபவிக்கக் கூடாது என்று நினைக்கும் தாய் உள்ளம் கொண்டவளாக இருந்திருக்கிறாள் திரௌபதி. இது தான் உண்மையான தாய் உள்ளம்.

  பதிலளிநீக்கு
 3. அன்னையர் தினம் அன்று அன்னையின் பெருமை சொல்லும் ஒரு சிறப்பான கதை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 4. Respected Madam,

  நமஸ்காரங்கள், வணக்கம்.

  VGK-16 ஜாதிப்பூ - சிறுகதை விமர்சன்ப்போட்டியில் பரிசினை வென்றுள்ளதற்குப் பாராட்டுக்கள் + நல்வாழ்த்துகள். இதோ அதற்கான இணைப்பு:

  http://gopu1949.blogspot.in/2014/05/vgk-16-equal-prize-winners-list-1-of-3.html

  அன்புடன் கோபு [VGK]

  பதிலளிநீக்கு